சார், ஒரு நிமிஷம்

கிண்டியில் ஸ்பிக் நிறுவன கட்டிடம் தெரியுமா? அதற்கு நேர் எதிரில் தான் அந்த விபத்து நடந்தது. சனிக்கிழமையன்று காலை இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது மிக அகலமான சாலை. ஸ்பிக் நிறுவனம் தாண்டி கொஞ்ச தூரம் சென்றதும் சைதாப்பேட்டைக்கு இடதுபுறமும் அடையாறுக்கு வலதுபுறமுமாக இரண்டாகப் பிரியும் சாலை. எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இடதுபுறம் திரும்ப முற்பட அருகில் வந்துகொண்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் இடித்துவிட்டார். இடித்ததில் இருவருமே நிலை தடுமாறி கீழே விழுந்தனர். மிதமான வேகத்தில் சென்றதால் அதிக அடி இல்லை. பின்னால் வந்துகொண்டிருந்த நான் சட்டென பிரேக் பிடித்து நின்றுவிட்டேன். வேகம் அதிகமாக இருந்திருந்தால் விழுந்தவர் மீதோ அவருடைய வண்டி மீதோ மோதி நானும் விழுந்திருக்கக் கூடும்.

பையன்

காலைப்பனியை உருக்கும் முயற்சியில் சூரியன் ஈடுபடத் தொடங்கியிருந்தான். ஒரு பக்கமாக திரும்பிப் படுத்திருந்த மல்லிகாவின் வயிற்றில் கைவைத்து “உள்ள என்ன பாப்பா இருக்கு?” என்றான் ராஜேஷ். “பையன்’” என்றாள். “சரி, கிளம்பு. வாக்கிங் போயிட்டு வந்திரலாம்” என்றான்.

வீடு

ஆயிற்று. இந்த பிப்ரவரி வந்தால் சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் முடியப்போகின்றது. இப்போது இருப்பது ஏழாவது வீடு. இந்த வீட்டில் இப்போது இரண்டரை வருடங்கள். இதற்கு முன் இருந்த ராயப்பேட்டை வீட்டில் நான்கு வருடங்கள் போக மூன்று வருடங்களில் ஐந்து வீடுகள் மாறியிருக்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள்.


ஒற்றைக்கால் காக்கை

ஒற்றைக்கால் காக்கை ஒன்று நெடு நாட்களாக வீட்டுக்கு வந்து செல்கிறது. காலை எட்டு மணி ஆனால் போதும், அடுப்படியின் ஜன்னலில் நின்று கரையத் தொடங்கும். சாப்பாடு வைத்தோமானால் அழகாக கொத்திக் கொத்தி சாப்பிடும். வைக்கவில்லையென்றால் கா கா என்று கரைந்து கேட்கும். அது எழுப்பும் ஒலி 'இன்னுமா ரெடியாகலை?' என்று கேட்பதுபோல் இருக்கும். எப்படியாவது போட்டோ எடுத்துவிடலாம் என்று கேமராவைக் கொண்டுசென்றால் பறந்துவிடும். அப்படி என்ன பயமோ... நேற்றைக்கு அதற்குத் தெரியாமலேயே ஜன்னல் அருகே கேமராவை வைத்துவிட்டேன். பறந்து வருவதையும் சாப்பிடுவதையும் பறந்து செல்வதையும் படமாக்கிக்கொண்டேன். சில நாட்களுக்குப் பின் அது வராமல் போகலாம். ஆனால் அந்தக் காக்கையின் நினைவுகள் இந்த ஒளிப்படம் மூலம் மனதில் நிற்கும்.


சிகிச்சை

அவசரமாக ஊருக்குப் புறப்பட்டாக வேண்டும். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. போன வாரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நடுராத்திரியில் அப்பா மட்டும் தனியாளாய் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச்சென்று சிகிச்சை அளிக்கவைத்தார். ஈ.சி.ஜி.யில பிரச்சனை இருக்கே, எதுக்கும் ஆஞ்சியோ பண்ணிப் பாத்திருங்க என்ற டாக்டர் பதினைந்து நாட்களுக்கு மாத்திரை மருந்துகளை எழுதிக்கொடுத்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்து விட்டார்.

கலர் பென்சில் 28.08.2015

வலைப்பதிவர் திருவிழா

இந்த வருடத்தின் வலைப்பதிவர் திருவிழா புதுக்கோட்டையில் இனிதே நடைபெற இருக்கிறது. புதுக்கோட்டையில் ஏராளமான பதிவர்கள் இருக்கிறார்கள் என்பது கடந்த வருடம் மதுரையில் நடந்த பதிவர் திருவிழாவின்போது தான் தெரியும். நானும் கலந்துகொள்ள இருக்கிறேன். வருகைப் பதிவேட்டில் என் பெயரையும் எழுதிவிட்டேன்.

தழும்பு

இந்திய முழுவதும் கிளைகள் பரப்பியிருக்கும் அந்த நிறுவனம் அவனை திடீரென்று ஒரு நாள் கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையிலிருக்கும் தொழிற்சாலைக்கு பணி மாற்றம் செய்தது. இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த அவன் தனது வேலையை ராஜினாமா செய்துவிடலாம் என்று முடிவு செய்திருந்த சமயம் அது. அவனது அம்மா ஒரு நாள் அவனை அழைத்து உனக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றார். திருமணம் பற்றியும் மணவாழ்க்கை பற்றியும் அதிகம் அறிந்திருந்தாலும் அனுபவப்பட்டிராத அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சி இருந்தாலும் அன்றைய வயதையும் பணி நிலையையும் கருத்தில் கொண்டு இப்ப என்னம்மா அவசரம் என்று தன் தாயிடம் கூற, அவரோ அதை வழக்கமாக எல்லா வயசுப்பையன்களும் சொல்வதுபோலவே எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்.

ஷர்மிலி மிஸ்

இது தான் அவருடைய பெயர். வயசு முப்பதுக்குள் இருக்கும். மகளுக்கு கிளாஸ் டீச்சர். எல்.கே.ஜி. B செக்சன் என்று பதினைந்து நாட்களுக்கு முன்னர் பணம் கட்டியபோதே சொன்னார்கள்.

அவரை முதன்முதலில் சந்தித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. மகளை முதல் நாள் பள்ளிக்கு விடச்சென்ற அதே நாள். வகுப்புக்கு வெளியே நின்று பென்சிலால் பெயர்களை டிக் செய்துகொண்டே ஒவ்வொருவராய் உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தார். என் முறை வந்தபோது, “கற்பகாஸ்ரீ” என்றேன். “ஆர்.கற்பகாஸ்ரீ?” என்றார். “இல்லை, எஸ்.கற்பகாஸ்ரீ” என்றேன். “ஓ, ஆபிஸ்ல இனிஷியலை தப்பா எழுதிருக்காங்க. எஸ் தானே” என்று திருத்திக்கொண்டார்.

மகனையும் மகளையும் பள்ளியில் கொண்டுபோய் விடுவது மட்டுமே என்னால் சாத்தியம். மற்றபடி மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவது, பள்ளியில் நடக்கும் விஷயங்களைக் கேட்டறிவது எல்லாம் என் மனைவி தான். என்றைக்காவது அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்திருந்தால் மட்டும் அந்த வேலைகள் எனக்கானது. சிவகாமி, வித்யா, சுந்தரி, இன்னும் சிலர் என் மகன் / மகள் படிக்கும் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் என் மனைவிக்கு தோழியர். தினமும் பள்ளி முடிந்து குழந்தைகள் வரும் வரை சில நிமிடங்கள் இவர்களது அரட்டை நடக்கும். அவ்வப்போது பாடங்கள் பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும் அலைபேசி வாயிலாக பரிமாறப்படும்.

நான் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் நாட்களில் நானே தான் இருவரையும் வீட்டுக்கு அழைத்துவருவேன். பத்து நிமிடங்களுக்கு முன்னதாகப் போய்விடுவேன். காத்திருக்கும் அந்த நேரத்தில் என்னையே சில கண்கள் குறுகுறுவெனப் பார்ப்பதுபோல் இருக்கும். ஒருநாள் அவர்கள் பேசுவது கூட எனக்குக் கேட்டுவிட்டது, “ஏய், இவர்தான்டி பிரபா வீட்டுக்காரர், அப்படியா? நான் கூட யாரோன்னு நினைச்சேன்”. நான் இங்கே எழுத்து வாயிலாக அதிகம் பேசுவேனே தவிர நேரில் பூஜ்யம். புதியவர்களிடம் அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதற்கு அவ்வளவு தயங்குவேன். பழகிவிட்டால் சகஜமாகிவிடுவேன். சிறு வயதிலிருந்தே இப்படித்தான் என்பதால் மாற்றிக்கொள்ள அதிகம் முயற்சித்ததில்லை.

ஓவர் டு ஷர்மிலி மிஸ். கடந்த செவ்வாய்க்கிழமை என்று நினைவு. அலுவலகத்திலிருந்து வந்ததும் என் மகள் என்னிடம் ஓடிவந்து, “அப்பா, என்னை மிஸ் அடிச்சிட்டாங்க” என்றாள். எனக்கோ கடும் கோபம். “ஏன் அடிச்சாங்க?” என்றேன். என் மனைவியோ, “இவ என்ன செஞ்சான்னு கேளுங்க” என்றாள். “என்ன செஞ்சே?” என்றேன். “கிளாஸ்ல இடம் மாறி உக்காந்தேன்பா, அதுக்கு அடிச்சிட்டாங்க” என்றாள்.

இடம் மாறி அமர்ந்ததற்காகவா அடித்தார்கள்? இதெல்லாம் ஒரு காரணமா? எனக்கு கோபம் தலைக்கேறியது. என் மகள் பிறந்ததிலிருந்து எவ்வளவோ சேட்டைகள் செய்திருக்கிறாள். அடம் பிடித்து எங்களைத் தொந்தரவு செய்திருக்கிறாள். எல்லாவற்றுக்கும் பொறுமையாகவே போயிருக்கிறேன். ஒரு நாள் கூட அவளைக் கைநீட்டி அடித்ததில்லை. ஸ்கூல் மிஸ், அதுவும் ரெண்டு மாசம் கூட ஆகலை, அதுக்குள்ளே அவருக்கு கைநீட்ட தைரியம் வந்துவிட்டதோ? அவர் அடித்தபோது என் மகள் என்ன நினைத்திருப்பாள்? இதுக்குத்தான் அம்மா அப்பா நம்மை ஸ்கூலில் விடுறாங்க போல என்று நினைத்திருக்க மாட்டாள்?

என் முகத்தில் தெரிந்த கோபத்தை என் மனைவி புரிந்துகொண்டாள். “நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க? லேசா தான் அடிச்சாங்களாம். கிளாஸ் விட்டு வெளிய வந்தவுடனேயே பாப்பா சொல்லிட்டா” என்றாள். “நீ மிஸ் கிட்ட கேக்கலையா?” என்றேன். “அவ சொன்னவுடனேயே மிஸ் நாக்கை கடிச்சிக்கிட்டாங்க, இடம் மாறி உக்காந்ததால லேசா கன்னத்தில தட்டினேன், அதை அடிச்சேன்னு சொல்றான்னு சொன்னாங்க” என்றாள். “அவங்க அப்பா கிட்ட சொல்லிராதீங்க-ன்னும் சொன்னாங்க” என்றாள் முத்தாய்ப்பாக.

எனக்கு இன்னும் டென்ஷன் தலைக்கேறியது. “செய்றதையும் செஞ்சிட்டு என்கிட்டே சொல்லாதீங்கன்னு வேற சொன்னாங்களா? நாளைக்கே என்னன்னு கேக்கறேன்” என்றேன். மன சமாதானம் ஆகவில்லை. மனைவியிடம் கடிந்துகொண்டேன், “நீ கேக்க வேண்டியதுதானே, என் பிள்ளையை அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்னு?”.


அடுத்த நாள் புதன்கிழமையன்று காலை நேரத்தோடேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன். ஷர்மிலி மிஸ் சரியாக எட்டரை மணிக்குத்தான் வகுப்புக்கு வருவார். மகளை வகுப்புக்குள் அமரவைத்துவிட்டு வெளியே காத்திருந்தேன். நேரம் சரியாக எட்டரை. வேறு ஒரு மிஸ் வந்தார். “நீங்க போங்க நான் பாத்துக்கறேன்” என்றார். “ஷர்மிலி மிஸ்” என்றேன். “அவங்க லீவு” என்றார். கொஞ்சம் ஏமாற்றத்துடன் திரும்பினேன். அடுத்த நாள் வியாழக்கிழமை இதேபோல் நேரத்தோடு சென்று வகுப்புக்கு வெளியே காத்திருந்தேன். முந்தைய தினம் வந்திருந்த அதே மிஸ். அதே கேள்வி, அதே பதில். ஒருவேளை நான் கோபமாக இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டு பள்ளிக்கு விடுப்பு எடுத்துவிட்டாரோ மனம் சந்தேகப்பட்டது. இப்படியே போனால் என் மனதிலிருக்கும் கோபம் தணிந்துவிடும், விடக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாள், வெள்ளிக்கிழமை – அன்றைக்கும் ஷர்மிலி மிஸ் வரவில்லை. இந்த முறை கேட்டேவிட்டேன். “அவங்கப்பா இறந்துட்டாங்களாம்” என்ற பதிலில் திடுக்கிட்டேன். வெகு காலமாக படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார், செவ்வாயன்று இரவு உயிர் பிரிந்துவிட்டது. திங்கட்கிழமை வந்தாலும் வருவாங்க என்றார்கள்.


இதோ, காத்திருக்கிறேன். என் மகளை ஏன் அடித்தார் என்று சண்டை போடுவதற்காக அல்ல, அவரது தந்தை இறந்த துக்கம் கேட்பதற்காக.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியாரே!!!

வாத்தியார்! எல்லாருக்கும் எம்.ஜி.ஆர். தான் ஞாபகத்துக்கு வருவார். ஆனால் எங்களுக்கு எங்க வாத்தியார் பாலகணேஷ் தான் ஞாபகத்துக்கு வருவார். எங்களுக்கு என்றால்? நாங்கள் ஒரு ஐந்து பேர் இருக்கிறோம். பதிவர்கள் தான். பல நாட்களாக அவரை நாங்கள் வாத்தியார் என்று அழைத்தே பழக்கமாகிவிட்டது.

உத்தம வில்லன்

கொஞ்சம் தவறியிருந்தால் விழுந்திருப்பேன். மூடப்படாத டிரைனேஜ் அது. யாரோ ஒரு பெரியவர், "தம்பி தம்பி, பாத்து" என்று குரல் கொடுத்திருக்கவில்லையென்றால் உள்ளே விழுந்திருப்பேன். போனில் பேசியபடியே நடந்ததால் வந்த வினை. மூடியைக் காணவில்லை. யாரும் அங்கே நடக்காமலிருக்க மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பெரிய கற்களை வைத்து நடுவே ஒரு மரக்கிளையை செருகியிருந்தார்கள். யாரோ விஷமிகள் அவற்றை அகற்றியிருந்தார்கள். வேறு யாராவது விழுவதற்குள் ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்த வேண்டும். சுற்றிலும் தேடிப்பார்த்தேன். கல்லோ மரக்கிளையோ எதுவுமின்றி சாலையே சுத்தமாக இருந்தது. பக்கத்தில் எங்கிருந்தாவது எடுத்து வரவேண்டும். இப்போது என் போன் அடிக்கத் தொடங்கியது. நாராயணன்.

கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா?

புதிய தலைமுறை சேனலின் “உரக்கச் சொல்லுங்கள்” நிகழ்ச்சியில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பேசுவதற்கான தலைப்பு “கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா” என்பதுதான். நான், அஞ்சா சிங்கம் செல்வின், ஆரூர் மூனா செந்தில், போலி பன்னிக்குட்டி, குடந்தை ஆர்.வி.சரவணன், ஜூபிளி நடராஜன் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் கருத்து சுதந்திரம் இல்லை என்று பேசும் குழுவில் அமர்ந்திருந்தோம். 

காதல் போயின் காதல் - குறும்படம்

சில நொடி சிநேகம் முடிந்தவுடன் கோவை ஆவி என்னிடம் சொன்னார் - "பாஸ், அடுத்து நம்ம படம்தான், கண்டிப்பா நீங்க கூட இருக்கணும்" என்று.  ஏற்கனவே சில நொடி சிநேகத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதால் கண்டிப்பாக இருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன். என்ன கதை என்று கேட்டபோது "காதல் போயின் காதல், நான் ஏற்கனவே ப்ளாக்ல எழுதியிருக்கும் கதை தான்" என்றார்.

எலக்ட்ரானிக் அடிமைகள்

வேளச்சேரியிலிருக்கும் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தபோது மணி இரண்டைக் கடந்திருந்தது. அனிச்சைச் செயலாய் சல்யூட் அடித்து கதவைத் திறந்துவிட்டார் காவலாளி. உள்ளே நுழைந்ததும் முகத்திலறைந்த காற்று வெயிலில் வண்டி ஓட்டி வந்த களைப்பிற்கு இதமாக இருந்தது. வெளிர் நீல நிற சபாரி அணிந்திருந்த ஒருவர் என்னையும் என் மனைவி குழந்தைகளையும் பார்த்துவிட்டு எத்தனை பேர் சார்? என்றார். ரெண்டே முக்கால் என்று சொல்ல வாயெடுத்தவன் கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக்கொண்டு நாங்க மட்டும்தான் என்றேன். அந்த லாஸ்ட்ல போயிருங்க சார் என்றார்.

ஜீரோ பட்ஜெட்டில் ஒரு குறும்படம்

இயக்குநர் கேபிள் சங்கருடைய தொட்டால் தொடரும் திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. அவர் சில நாட்களுக்கு முன் ஒரு குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதாவது, "தொட்டால் தொடரும்" என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு நிமிடத்தில் ஒரு நல்ல கருத்துள்ள குறும்படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இதையொட்டி என் மனதில் தோன்றிய ஐடியா ஒன்றை நண்பர் ஒருவரிடம் தெரிவிக்க, அவருக்கும் இது பிடித்துப் போனது. உடனே அவர் நீயே எடு என்று கூறி தனது கேமராவையும் கொடுத்து உதவினார்.