சில நொடி சிநேகம் முடிந்தவுடன் கோவை ஆவி என்னிடம் சொன்னார் - "பாஸ், அடுத்து நம்ம படம்தான், கண்டிப்பா நீங்க கூட இருக்கணும்" என்று.  ஏற்கனவே சில நொடி சிநேகத்தில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதால் கண்டிப்பாக இருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன். என்ன கதை என்று கேட்டபோது "காதல் போயின் காதல், நான் ஏற்கனவே ப்ளாக்ல எழுதியிருக்கும் கதை தான்" என்றார்.


வீட்டுக்கு வந்ததும் அவரது சிறுகதையைத் தேடிப்படித்தேன். குறும்படம் எடுக்கும் அளவுக்கு அந்தக்கதை என்னை ஈர்க்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். இருந்தாலும் அந்தக் கதையை screenplay-யாக எழுதி மாற்றி மாற்றி மெருகேற்றி மெருகேற்றி தந்த கடைசிக் கதையைப் படித்ததும் எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. கூடவே இன்னொன்றையும் கவனித்திருந்தேன், அது - கதையின் கிளைமாக்ஸ்.

சீனு - இவருக்குள் இப்படி ஒரு நடிகர் ஒளிந்திருக்கிறார் என்கிற விஷயமே இப்போதுதான் தெரிகிறது. இவர்தான் கதையின் நாயகனாக நடிக்கப்போகிறார் என்றதுமே இணையத்தில் ஒரு கூட்டமே அவருக்கு ரசிகர்களானார்கள். மிக அருமையாக நடித்திருக்கிறார். அதைவிட முக்கியம் - கதைக்குத் தேவையான முகபாவங்களை கோவை ஆவி இவரிடமிருந்து வாங்கியிருக்கிறார்.

மதுவந்தி - நாயகியை ஒத்திகை பார்க்கும் நாளன்று தான் சந்தித்தேன். ஒத்திகை பார்ப்பதற்கும் முன்னரே வீட்டிலேயே பயிற்சி எடுக்கத் தொடங்கியிருந்தார். அவரது ஆர்வமும் உழைப்பும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ரக்ஷித் - என் மகன். இதை தட்டச்சு செய்யும்போதே கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது. கதையில் நாயகியுடன் வருவான், காகிதத்தில் கப்பல் செய்துகொண்டிருப்பான். கிளைமாக்ஸ் - கடைசி திருப்புமுனைக் காட்சியில் கொஞ்சம் வசனம் பேசுவான். அவ்வளவே. ஆனாலும் படம் முழுவதும் அவனும் இருப்பதுபோலவே ஒரு உணர்வு இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாயகன், நாயகி உட்பட நடித்திருக்கும் அத்தனைபேருமே எந்தக் காட்சிக்கும் ஒரே முறையில் எடுத்து முடிக்கவில்லை. ஆனால் இவன் மட்டும் ஒரே முறையில் வசனம் பேசி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே அனைவரது கை தட்டலையும் வாங்கிவிட்டான்.

மிக முக்கியமான ஒன்று - பதிவர் கீதா ரங்கன். கோவை ஆவிக்கு நிகராக பின்னணியில் உழைத்திருக்கிறார். இவர் மட்டும் இல்லையென்றால் இந்தப் படம் சாத்தியப்பட்டிருக்காது. என்ன செய்தார்? ஆரம்பம் முதல் கடைசி வரை எல்லாவற்றையும் பொறுமையாக கவனித்து வேண்டிய அனைத்தையும்  செய்துகொடுத்தார். 

பதிவர் நண்பர்கள் திரு. துளசிதரன் அவர்களும் அரசன், குடந்தை ஆர்.வி.சரவணன் ஆகியோருடன் என்னுடைய ஹீரோ ரூபக் ராம் நடித்திருக்கிறார். மிக மிக முக்கியமான ஒருவர் - நான் தான். முதல் காட்சியில் முதல் வசனம் நான் தான் பேசுகிறேன். படத்தைப் பாருங்கள் - கருத்துக்களைக் கூறுங்கள்.