புதிய தலைமுறை சேனலின் “உரக்கச் சொல்லுங்கள்” நிகழ்ச்சியில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பேசுவதற்கான தலைப்பு “கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா” என்பதுதான். நான், அஞ்சா சிங்கம் செல்வின், ஆரூர் மூனா செந்தில், போலி பன்னிக்குட்டி, குடந்தை ஆர்.வி.சரவணன், ஜூபிளி நடராஜன் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் கருத்து சுதந்திரம் இல்லை என்று பேசும் குழுவில் அமர்ந்திருந்தோம். 


நிகழ்ச்சியின் இயக்குநர் (என்று நினைக்கிறேன்) முதலில் வந்து எங்களிடம் ஒரு அணிக்கு ஒரே ஒரு மைக் மட்டுமே வழங்கப்படும் என்றும் செல்போன்களை அணைத்துவிடுமாறும் அணைக்காமலிருந்தால் மைக் அருகில் வரும்போது மின்காந்த அலைகளால் சப்தம் வரக்கூடும் என்று கூறினார். எல்லாருக்கும் சம அளவில் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் ஒருவரே மைக்கை விடாமல் பிடித்துக்கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், ஒருவர் பேசி முடித்ததும் அடுத்து பேசுபவர் கை உயர்த்தி தனக்கு மைக்கை கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். மிக முக்கியமான ஒன்று - எந்தவொரு படைப்பாளியையும் படைப்பையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுப் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சி தொடங்கியது என்னவோ நல்ல முறையில் தான். எங்கள் அணியிலிருந்த ஒரு பெண்மணி, “குழந்தைகளுக்கே நாம் கருத்து சுதந்திரம் கொடுப்பதில்லை, குழந்தை ஏதாவது கேட்டால் நாம் ஷ், அதை பேசாதே, கேட்காதே என்று அதட்டி அந்தப் பருவத்திலேயே கருத்து சுதந்திரத்தை தடை செய்துவிடுகிறோம்” என்று கூறினார். அடுத்து வந்த ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாய்ப் பேச, நானும் மைக்கை வாங்கி “ஒரு நடிகரை தலையில் வைத்துக் கொண்டாடும் ரசிகர்களால் கார்ட்டூனிஸ்ட் ஒருவருடைய முகநூல் பக்கம் முடக்கப்பட்டது” என்றேன்.

எதிரணியில் இருந்தவர்கள் சமீபத்தில் ஏற்பட்ட நாவல் குறித்த சர்ச்சைகளை அங்கேயும் முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து அதே அணியிலிருந்தவர்கள் கருத்து சுதந்திரம் கொடுத்தால் எழுத்தாளர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்களா என்று பொங்கத் தொடங்கினார்கள். பின்னர் குறிப்பிட்ட படத்தில் இயக்குநர் திருநங்கைகளை தவறாக சித்திரித்திருக்கிறார் என்று வாதிட்டனர்.

ஆரம்பத்தில் எழுத்தாளரின் / இயக்குனரின் பெயரையோ நாவலின் / படத்தின்  பெயரையோ குறிப்பிடாமல் பேசியவர்கள் அடுத்தடுத்த சச்சரவுகள் தொடங்கியதும் பெருமாள் முருகன் என்றும் மாதொருபாகன் என்றும் ‘ஐ’ திரைப்படம் என்றும் தெளிவாகவே கூறி விவாதத்தைத் தொடர்ந்தனர். இந்த இடத்தில் சச்சரவு என்று ஏன் சொல்கிறேன் என்றால் மைக் வைத்துக்கொண்டு இரு அணியிலும் இரண்டு பேர் கூச்சலிட, நிகழ்ச்சி நடத்துபவர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்க, இரு அணிகளிலும் சிலர் மைக் இல்லாமலேயே மைக் வைத்திருப்பவர்களைவிட அதிக கூச்சலிட – பேசாமல் அலுவலகத்திலேயே இருந்திருந்தால் எவ்வளவோ வேலைகளை முடித்திருக்கலாமே, ஏன் தான் வந்தோமோ என்றாகிவிட்டது.

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் எதிரணியில் இருந்தவர்களில் ஒருவர் மாதொருபாகன் நாவலின் குறிப்பிட்ட ஐந்தாறு பக்கங்களை பிரதி எடுத்துவந்து எங்களிடம் இந்தப் பக்கங்களில் இருப்பவற்றை உங்களால் இந்த சபையில் உரக்கப் படிக்க முடியுமா என்றும் சவால் விட்டார். இந்த நாவலை எழுதியவரே இதற்காக மன்னிப்பும் கேட்டு, விற்காத தன் புத்தகங்களின் பிரதிகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இவ்வளவு ஏன், அதுக்கும் மேல தான் முற்றிலும் எழுத்துலகிலிருந்து விலகிக்கொண்டார். இதற்கும் மேல் எதற்காக செத்த பாம்பை அடிக்கிறீர்கள் என்று கேட்க ஆசை தான், மைக் வரவில்லை, கொஞ்சம் தயக்கமும் இருந்தது.

எழுத்தாளர் பாமரன் உள்ளிட்ட நான்கு பேர் நடுவர்களாகப் பங்கேற்றிருந்தனர். எல்லோருமே ஒரு எழுத்தாளர் ஒரு விஷயத்தை தவறாக எழுதியிருந்தால் அதற்காக அவரை அடித்து உதைப்பதோ, ஆபாசமாகத் திட்டுவதோ அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துவதோ செய்யாதீர்கள் என்று கூறினார்கள்.

நிகழ்ச்சி முடிந்து எழுந்து செல்கையில் அனைவரும் இருந்து காபி குடித்துவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். எனக்கு கொஞ்சம் வேலையிருந்ததால் உடனடியாகப் புறப்பட்டேன். என்னுடன் லிப்டில் இறங்கிய ஒருவர், “மைக்கும் தரலை, ஒரு ம...ரும் தரலை, இதெல்லாம் ஒரு புரோகிராமா? ஒவ்வொரு டீம்லயும் இருந்தவங்க பேரு, போன் நம்பர் கூட வாங்கிக்கலை” என்று என்னிடம் சொன்னார்.


அட ஆமால்ல, என் பேரு போன் நம்பர் கூட வாங்கிக்கலை. இனிமே போறதா இருந்தா ஜட்ஜா தான் வரணும், கூட்டத்தோட கூட்டமா இருந்துட்டுப் போறதுன்னா நான் வரமாட்டேன் என்று நினைத்துக்கொண்டேன்.