நான் ராயப்பேட்டையில் வசித்த சமயம்.  நான் இருந்த வீடு ஒரு முட்டு சந்தின் கடைசி வீடு.  நாங்கள் இருந்தது தரை தளத்தில்.  மேல் வீட்டில் வீட்டு ஓனர் இருந்தார்.  ஓனர் என்றால் ஓனர் அம்மா.  வீடு அந்த அம்மாவின் பெயரில் இருந்ததால் அவரது கணவர் ஒரு டம்மி பீசாகவே நடத்தப்பட்டு வந்தார்.  எங்கள் வீட்டுக்கு நேர் எதிரில் எங்களைப்போன்றே தரை தளத்தில் வாடகைக்கு வசிப்பவர்களும் மேல் வீட்டில் அந்த வீட்டின் ஓனரும் வசித்துவந்தனர்.  அந்த வீட்டு ஓனரும் அம்மாதான்.  அவர்களும் எங்கள் ஓனரும் சொந்தக்காரர்கள்.  இருவரும் அவரவர் வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு சத்தமாக அவரவர் வீட்டுக் கதைகளைப் பேசுவது வழக்கம்.


நிற்க, நான் இப்போது சொல்லப்போவது எதிர் வீட்டு அம்மாவைப் பற்றிய சம்பவம் தான்.  நான் அவரை எப்போதும் அம்மா என்றே அழைப்பேன், காரணம் அவருக்கும் என் வயதில் ஒரு மகன் உண்டு.  அந்த அம்மாவுக்கு சுமார் அறுபது வயது இருக்கலாம்.  அவருக்கும் ஒரு அம்மா உண்டு என்பதை அவருடன் பழகி ஐந்தாறு மாதங்கள் கழித்தே தெரிந்துகொண்டேன்.  அவருக்கு வயது எண்பதுக்கும் மேல் இருக்கும்.  கண் சரியாகத் தெரியாது, ஞாபகசக்தியும் குறைந்து விட்டது, எழுந்து நடக்க முடியும்.  சாப்பாடு என்பது ஒரு நாளைக்கு ஒரு இட்லி அல்லது ஒன்றரை இட்லி மட்டுமே, மற்றபடி அவருக்கு காபி, பால் போன்ற நீராகாரம் மட்டுமே.  வீட்டில் அந்தப் பாட்டிக்கேன்றே தனி அறை கட்டிக்கொடுத்து அவரைப் பராமரித்து வந்தார்கள்.


எங்களுக்குள் பண்டப் பரிமாற்றம் அடிக்கடி நிகழ்வதுண்டு என்பதால் என் மனைவி அவரது வீட்டுக்கும் எதிர் வீட்டு அம்மா எங்கள் வீட்டுக்கும் அடிக்கடி வருவது வழக்கமாக இருந்தது.  இப்படி ஒருமுறை அந்த அம்மா எங்கள் வீட்டுக்கு வந்தபோது என் மனைவியிடம் தன் அம்மாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் டாக்டரை அழைத்து பார்த்ததாகவும் அவர் நாடித்துடிப்பு குறைந்துகொண்டே வருகிறது, அதிகம் தாங்குவது கஷ்டமே என்று சொன்னதாகவும் வருத்தத்துடன் சொன்னார்கள்.  எப்போது வேண்டுமானாலும் "போய்விடும்" என்பதால் நாங்கள் ஒருமுறை அந்தப் பாட்டியை நேரில் பார்த்துவிட்டு வந்தோம்.  அவருக்கோ உயிர் மட்டுமே இருந்தது.

அதே நாள், நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் ஏதோ சத்தம் கேட்டு விழித்தேன்.  வெளியில் யார் யாரோ கூடி நின்று பேசும் சத்தமும் சலசலப்பும் கேட்டது.  பைக் சத்தமும் ஆட்கள் நடமாட்டமும் ஏறக்குறைய "பாட்டி போயிருச்சு" என்று உறுதிப்படுத்தின.  மணி பார்த்தேன், மூன்று தான் ஆகியிருந்தது.  சரி, விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று மீண்டும் தூங்கிவிட்டேன்.  மறுநாள் காலை சங்கு சத்தம் எங்களை மட்டுமல்ல, அந்தத் தெருவையே எழுப்பியது.  பல்லைத் தேய்த்துவிட்டு முகம் மட்டும் கழுவிக்கொண்டு நானும் என் மனைவியும் வெளியே வந்தோம், சங்கு ஊதுபவர் தன் கடமையை செய்துகொண்டிருந்தார்.  

நாங்கள் படியேறினோம், வாசலில் அம்மா தலைவிரி கோலமாய் அமர்ந்திருந்தார்.  வேறு யாரும் இருக்கவில்லை.  "பாட்டி" என்றேன், "உள்ள இருக்கா, போய்ப் பாரு" என்றார்.  உள்ளே சென்றோம், பாட்டி இருந்த அறை லேசாக சாத்தியிருந்தது.  கதவை முழுவதும் திறந்தேன், உள்ளே மரத்தாலான சாய்வு நாற்காலியில் பாட்டி படுக்க வைக்கப்பட்டிருந்தார்.  கைகளை குறுக்காக கட்டுவது, கால் பெருவிரல்களை கட்டுவது போன்றவை செய்யப்படவில்லை.  நாங்கள் அவர் அருகில் சென்று அவரையே பார்த்தபடி இருந்தோம்.

திடீரென்று அவரது கண்கள் விழித்தன.  எங்களைப் பார்த்து புன்னகை செய்ய முயற்சித்தார்.  எனக்கு ஒரு நொடி பின் முதுகில் ஜிலீர் என்றிருந்தது.  என் மனைவிக்கோ பயத்தில் ஒரு நிமிடம் மூச்சு அடைத்துக்கொண்டது.  இன்னும் சாகவில்லையா, இந்த வீட்டுக்காரர்கள் பாட்டி இறந்ததாக நினைத்து எல்லா "ஏற்பாடுகளும்" செய்துகொண்டிருக்கிறார்களா, விறுவிறுவென்று வெளியே வந்தோம், அம்மா இப்போதும் தலைவிரிகோலமாய் இருந்தார்.  "பாட்டி இன்னும் இறக்கலை, அம்மா" என்றேன்.  "என்னது?" அவருக்கோ ஆச்சரியம், "இறந்துட்டாங்கன்னு நான் சொல்லலையே" என்றார்.  "இல்ல, ஏற்கனவே பாட்டிக்கு முடியலை, வெளியில சங்கு சத்தம், இதெல்லாம் வச்சு இறந்துட்டாங்கன்னு, ஆமா நீங்க ஏன் தலையை விரிச்சுப் போட்டிருக்கீங்க" என்றேன்.  "நான் பேன் பாத்திட்டிருக்கேன்" என்றார்.

எனக்கு அப்போதுதான் நாங்கள் பல்பு வாங்கியிருக்கிறோம் என்று புரிந்தது.  வெளியே வந்து விசாரித்ததில் பக்கத்து சந்தில் ஒரு தாத்தா போய்விட்டதாகவும் அதற்காகத் தான் இந்த ஏற்பாடுகள் நடந்தன என்றும் தெரிந்துகொண்டோம்.  ஏற்கனவே டாக்டர் அதிகம் தாங்காது என்று சொன்னதும், சங்கு சத்தமும், இந்த அம்மாவின் தலைவிரிகோலமும் பாட்டி இறந்துவிட்டதாக எங்களை நம்பச்செய்துவிட்டிருந்தன.


மறுநாள் காலை, உண்மையிலேயே அந்தப் பாட்டி இறந்துவிட்டார்.  அது உண்மைதானா என்பதை அங்கே உள்ளே சென்று வெளியே வரும் பக்கத்து வீட்டாரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டோம்.  பின்னர் அவரது வீட்டுக்குச் சென்றோம்.  எங்களைப் பார்த்த எதிர் வீட்டு அம்மா, தன் தாய் இறந்த சோகம் மறந்து வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினார்.


நன்றி.