காலைப்பனியை உருக்கும் முயற்சியில் சூரியன் ஈடுபடத் தொடங்கியிருந்தான். ஒரு பக்கமாக திரும்பிப் படுத்திருந்த மல்லிகாவின் வயிற்றில் கைவைத்து “உள்ள என்ன பாப்பா இருக்கு?” என்றான் ராஜேஷ். “பையன்’” என்றாள். “சரி, கிளம்பு. வாக்கிங் போயிட்டு வந்திரலாம்” என்றான்.


அது மிதவேக நடை. இதற்கே மல்லிகாவுக்கு மூச்சு வாங்கியது. “உன்னால முடியுதா? இல்லேன்னா கொஞ்சம் மெதுவா நடக்கலாமா?” என்றான் ராஜேஷ். “பரவாயில்லீங்க, நடக்கறேன்” என்றாள் மல்லிகா. “கால் வலிக்குதுன்னா கொஞ்ச நேரம் நின்னுட்டுப் போகலாம்” என்றான். “கால் வலியெல்லாம் இல்ல, உங்க பையன் உதைக்கிறான்”. பையன் என்றதும் ராஜேஷ்க்கு முகத்தில் அவ்வளவு பிரகாசம். “அவனுக்கு டிராபிக் சத்தம் கேட்டதும் தூக்கம் கலைஞ்சிருச்சு போல, டிஸ்டர்பன்ஸ்” சிரித்தான்.


ஏற்கனவே அவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்று உண்டு. இரண்டாவதாக பிறக்கப்போவது பையன்தான் என்று அவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள். ஏன், பெயர் கூட தேர்ந்தெடுத்தாயிற்று. வெளியே சொன்னால் பலிக்காது என்று யாரோ சொன்னதால் அதை ரகசியமாகவே பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.




அதற்காக பெண் குழந்தையின் மீது பாசம் இல்லாமலில்லை. அளவுகடந்த பாசம் எப்போதுமே இருவருக்கும் உண்டு. முதல் குழந்தை ஆணா பெண்ணா என்பதில் இருவருக்குமே எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் இரண்டாவது பையன் தான் வேண்டும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து இப்போது நம்பவே ஆரம்பித்திருந்தார்கள்.


இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது அந்த நடை. புஸ் புஸ் என மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள் மல்லிகா. இன்னும் ஒரு மாதத்துக்குள் பையன் பிறந்துவிடுவான். இவர்களுடன் சேர்ந்து நானும் பையன் என்றே டைப்புகிறேன். குழந்தை பிறந்துவிடும். பையன் என்று நம்ப ஆரம்பித்தது எப்படி தெரியுமா? மல்லிகா இரண்டாவதாக கர்ப்பமாகியிருந்தபோது அவளுடைய வயிற்றில் கைவைத்து அவ்வப்போது ராஜேஷ் கேட்பான், “உள்ள என்ன பாப்பா இருக்கு?”. அதற்கு அவள் “பையன்” என்பாள். என்ன குழந்தை பிறந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள் என்றாலும் பையன் என்கிற ஆசை வளர்ந்துகொண்டுதான் இருந்தது. ஆஸ்திக்கு ஒரு பையன் வேண்டுமே!!


ராஜேஷின் அக்கா கர்ப்பமாக இருக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது. அவர் வழக்கமாகச் சென்று பரிசோதனை செய்யும் பெண் மருத்துவர் வாய் தவறி பையன் தொந்தரவு பண்றானா என்று கேட்க, அப்போதே தெரிந்துவிட்டது – பையன் தான் என்று. அதேபோல் மல்லிகாவுக்கும் ஓர் ஆசை, தன்னிடமும் வாய் தவறி சொல்லிவிடக்கூடாதா என்று. கடந்த மாதம் பரிசோதனைக்குச் சென்றபோது கேட்டேவிட்டாள். “டாக்டர், நீங்க ஒவ்வொரு தடவையும் ஸ்கேன் பண்ணும்போது உள்ள இருக்கிறது பையனா பொண்ணான்னு சொல்வீங்கன்னு ரொம்ப எதிர்பாத்துக்கிட்டிருந்தேன். இதுதான் கடைசி செக்கப். இப்பவாவது சொல்லுங்களேன்”. டாக்டர் ஒரு புன்முறுவலுடன் “தெரிஞ்சு என்ன ஆகப்போகுது? ஒண்ணும் இல்லை” என்றார். “எதுவா இருந்தாலும் சொல்லுங்க டாக்டர், பையன்னா சந்தோஷப்படப் போறதில்லை, பொண்ணுன்னா வருத்தப்படப் போறதில்லை”. “இன்னும் ஒரு மாசத்தில உங்களுக்கே தெரிஞ்சிரும்” என்று மழுப்பிவிட்டார்.


இருந்தாலும் தூக்கம் வராத இரவுகளில் மல்லிகா கற்பனைக் கனவுகள் கண்டுகொண்டிருப்பாள். அதே மருத்துவர் இவளுடைய வயிற்றைத் தொட்டுப்பார்த்து “பையன் நல்லா விளையாடறானா?” என்று கேட்பதாய் நினைத்துக்கொள்வாள். “ரொம்ப உதைக்கிறான் டாக்டர்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வாள்.


நடை இன்னும் தொடர்ந்துகொண்டிருந்தது. மல்லிகாவுக்கு அதிகமாகவே மூச்சு வாங்கியது. “பக்கத்துல ஏதாவது கடைல கொஞ்ச நேரம் உக்காரலாம்” என்றான் ராஜேஷ்.


“இல்லீங்க, நம்ம வீட்டுக்குப் பக்கத்துல முன்னாடி ஜெயாக்கா இருந்தாங்களே, ஞாபகம் இருக்கா?”


“தெரியலையே, எனக்கு ஞாபகம் இல்லை”


“அவங்களுக்குக் கூட அழகா குண்டா ஒரு பையன் இருப்பானே, பேர் மறந்துட்டேன். அவங்க இப்போ இங்கதான் குமரன் தெருவில இருக்காங்களாம். பாத்துட்டு வரலாமா? அந்தப் பையனையும்”


இரண்டு தெருக்கள் தான். கொஞ்சம் இளைப்பாறிய மாதிரியும் இருக்கும். நீண்ட நாள் கழித்து ஒரு நண்பரைப் பார்த்த மாதிரியும் இருக்கும். “சரி” என்றான்.


ஜெயாக்காவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. எதிர்ப்பட்ட ஒரு பெண்ணிடம் “குண்டா கொழுகொழுன்னு ஒரு பையன் இருப்பானே, அவங்க வீடு எது?” என்றுதான் மல்லிகா கேட்டாள். அவளையும் ராஜேஷையும் ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு அந்தப்பெண்மணி ஜெயாக்காவின் வீட்டை அடையாளம் காட்டினார்.


அடுத்த இரண்டு நிமிடத்தில் ஜெயாக்காவின் வீட்டை அடைந்திருந்தார்கள். பல நாட்கள் கழித்துப் பார்த்திருந்தாலும் அவர் இவர்களை செயற்கையான சிரிப்புடன் தான் வரவேற்றார். மல்லிகா இரண்டாவதாக குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாள் என்பதில் அவருக்கு ரொம்பவே மகிழ்ச்சி. “பையனை எங்கே?” என்று கேட்டதும் தான் தாமதம், அழத்தொடங்கிவிட்டார்.


“கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் நல்லாத்தாம்மா இருந்தான். திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல, பொம்பளைப் பிள்ளைக மாதிரி நடக்க ஆரம்பிச்சான். பொட்டு வைக்கிறது, பூ வைக்கிறது, பாவாடை கட்டிக்கிறதுன்னு மாறிட்டான். வெளிய போனா அவமானம்னு ஸ்கூலுக்குக் கூட அனுப்பாம வீட்டுலயே வச்சிருந்தோம். போனவாரம், அவனை மாதிரி ஆட்கள் அஞ்சாறு பேர் வந்தாங்க, உங்க பையனை நாங்க நல்லா பாத்துக்கறோம், பிச்சை எடுக்க விடமாட்டோம், தப்பான தொழில் பண்ண விடமாட்டோம்னு சொல்லி அவங்களோடயே கூட்டிட்டுப் போயிட்டாங்க” தழுதழுத்தார்.


இவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள். மீண்டும் அதே நடை தொடர்ந்தது. ஆனால் வாகன சப்தங்களையும் மீறிய நிசப்தம் இருவருக்குள்ளும் நிலவியது. வீடு வரை எதுவும் பேசவில்லை.


“வாக்கிங் போயிட்டு வர இவ்வளவு நேரமா?” என்ற தாயின் குரலைக் கூட பொருட்படுத்தாமல் கட்டிலில் போய்ச் சரிந்தாள் மல்லிகா. ராஜேஷ் வந்தான், அழுதிருப்பாளோ என்ற சந்தேகத்துடன் அவளை நோக்கினான். அவளுடைய வயிற்றைத் தடவிக்கொண்டே கேட்டான், “உள்ள என்ன பாப்பா இருக்கு?”


“பொண்ணு” என்றாள்.