தம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.


தம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் திறந்திருக்கிறார்கள். ஒரு நாள் மாலையில் அலுவலகம் விட்டு வரும்போதுதான் பார்த்தேன். முழுக்க முழுக்க சீரியல் விளக்கு அலங்காரத்துடன் மேளம், நாதஸ்வரம் என்று திறப்பு விழா இனிதே நடந்துகொண்டிருந்தது. இந்தக் கட்டடத்தில் இதற்கு முன் என்ன இருந்தது என்ற கேள்வி எழ, அதைப் புறந்தள்ளிவிட்டு இந்த வாரம் இங்கு வந்து சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.

எனக்கு எப்போதும் சனிக்கிழமைகளில் அலுவலகம் விடுமுறைதான். மகளுக்கும் பள்ளி விடுமுறை. மனைவிக்கு எல்லா சனிக்கிழமைகளிலும் வேலை உண்டு. சில நேரங்களில் மட்டும் மகனுக்கும் விடுமுறை இருக்கும். இன்று மனைவி தவிர்த்து எங்கள் அனைவருக்கும் விடுமுறைதான். அதனால், மகன், மகளுடன் தம்பி விலாஸ் ஹோட்டலுக்குப் போகலாம் என்று கிளம்பிவிட்டேன்.

சரியான அமைவிடம் எங்கென்றால், அண்ணா சாலையிலிருந்து வரும்போது கத்திப்பாரா பாலத்திற்கு சற்று முன் இடப்புறம் இருக்கிறது. வாசலில் நான்கைந்து செக்யூரிட்டிகள். ஒருவர் கார் பார்க்கிங் பகுதியை கவனித்துக்கொண்டிருக்க, இரு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் பகுதிக்கு என்னை அனுப்பினார்கள். அங்கே ஒரே ஒரு வரிசையில் வண்டிகள் நின்றிருக்க, என் வண்டியை நிறுத்துவதற்கு ஓர் இடைவெளி இருக்கிறதா என்று பார்த்தேன். அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவர், “பரவாயில்லை சார். இங்கேயே விடுங்க. side lock மட்டும் போடாதீங்க” என்றார். சரியென்று வண்டியை நிறுத்தினேன்.

உள்ளே பெரிய இடம். ஓரளவு கூட்டமும் இருந்தது. இருக்கைகள் அதிக இருந்ததால் இடமும் கிடைத்தது. அங்கு வேலை செய்யும் அனைவரும் கறுப்பு நிற உடை அணிந்திருந்தார்கள். ஒருவர் வந்தார். ஆள் நம்மூர்ப் பக்கம் என்று தெளிவாகத் தெரிந்தது. “என்ன சாப்பிடுறீங்க?” என்றார். “மெனு கார்டு கொடுங்களேன்” என்றேன். மகனும் மகளும் பிரியாணியே போதும் என்றனர். மூன்று சிக்கன் பிரியாணியும், ஒரு நெத்திலி வறுவலும் கேட்டேன்.

சுமார் பதினைந்து நிமிடம் கழித்து நெத்திலி வறுவல் வந்தது. சுமாரான சுவைதான். பாதிக்கும் மேல் தண்ணீரில் மூழ்கடித்து எடுத்ததுபோல் இருந்தது. தெரியாமல் தண்ணீர் சிந்தியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். நெத்திலி காலியானது. அதன்பிறகு ஐந்து நிமிடம் கழித்துத்தான் பிரியாணி வந்தது. ஒரு பெரிய தட்டு. நடுவில் அச்சடித்த சாதம் போல் வைத்திருந்தார்கள். சீரகச் சம்பா அரிசி. தொட்டுக்கொள்வதற்கு வெங்காயப் பச்சடியுடன், கிட்டத்தட்ட சாம்பார் என்ற அளவில் பருப்பையும், சிவப்பு நிறத்தில் இனிப்பாக ஏதோ ஒன்றையும் கொடுத்தார்கள். பிரியாணியில் சூடு இல்லை. ஒரு வாய் வைத்துப் பார்த்தேன். ஏலக்காய், கிராம்பு என்று எல்லா காரவகைகளின் சுவையை மட்டும்தான் உணர முடிந்தது. சாதமும் குழைந்து, ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு மட்கிய பழைய தக்காளி சாதம்போல் இருந்தது.

இதே சீரகச் சம்பா அரிசியில் செய்யப்பட பிரியாணியை வடபழனி ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டிருக்கிறேன். ஒன்றல்ல, இரண்டல்ல. மூன்று, நான்கு என்று உள்ளே தள்ளியிருக்கிறேன். ஆனால், இதை சாப்பிட வேண்டும் என்ற விருப்பமே வரவில்லை.

என்னால் இரண்டு வாய்க்கு மேல் சாப்பிட முடியவில்லை. சிக்கன் அவ்வளவு பழையதாக இருந்ததை சாப்பிடும்போது அதன் வாசனையிலேயே உணர முடிந்தது. அப்படியே வைத்துவிட்டேன். மகனும் மகளும் சாதம் மட்டும் ஓரளவு சாப்பிட்டார்கள். நெத்திலி கொண்டு வந்த தட்டில் சிக்கனை வைத்துவிட்டோம்.

இவ்வளவு பேர் வந்து சாப்பிடுகிறார்களே, மற்றவர்களுக்கு இது தோன்றவில்லையா என்று அடுத்த டேபிளைப் பார்த்தேன். அங்கு மஞ்சள் உடை அணிந்த ஓர் இல்லத்தரசி தன் உடையின் நிறத்தில் இருந்த பிரியாணியை தனது இலையில் வைத்துக்கொண்டிருந்தார். வைக்கும்போது தட்டிலிருந்தும், இலையிளிருந்தும் ஆவி பறப்பது இங்கிருந்தே என்னால் காண முடிந்தது.

அங்கிருந்த ஒரு பையனை அழைத்து, “இந்த டேபிள் அட்டண்டரைக் கூப்பிடு” என்றேன். நம்மூர்க்காரர் வந்தார். “சார், நெத்திலி இப்போ வந்திரும்” என்றார். “நெத்திலி வந்திருச்சுங்க. சாப்பிட்டு முடிச்சிட்டோம்” என்றேன். மேலும், “என்ன சார் இது? பிரியாணி ரொம்ப மட்டமா இருக்கு. சூடே இல்லை, சாதமும் நல்லா இல்லை. சிக்கனும் ரொம்பப் பழசு மாதிரி இருக்கு. நீங்களே பாருங்க, நாங்க எவ்வளவு சாப்பிட்டிருக்கோம்னு” என்று இலையையும் தட்டையும் காட்டினேன். “சரி சார், சரி சார்” என்று தலையாட்டினார்.

எனக்குக் கோபம் தலைக்கேறியது. “சரி சரின்னு தலையாட்டினா என்ன அர்த்தம் சார்?” என்றேன். “இல்லை சார். உள்ளே சொல்றேன்” என்றார். “இதை நீங்க முதல்லயே சொல்லியிருக்கணுமே. கேட்ட பிறகு சொல்றீங்க?” என்றேன். “சொல்றேன் சார். உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா?” என்றார். “ஒன்னும் வேண்டாம். நீங்க பில்லைக் கொடுங்க” என்று சொல்லிவிட்டுக் கை கழுவச் சென்றோம்.

கை கழுவிவிட்டு வந்தபோது நாங்கள் அமர்ந்திருந்த மேசையைக் காலி செய்துகொண்டிருந்தனர். ஏதோ ஓர் அவசர கதியில் எல்லா வேலைகளும் நடந்துகொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. அந்த நம்மூர்க்காரரை அழைத்துக் கடிந்துகொண்டதில் தண்ணீர் குடிக்க மறந்துவிட்டிருந்தேன். வந்து குடிக்கலாம் என்று பார்த்தால், அதற்குள் மேசையை காலி செய்துவிட்டிருந்தனர். என் விதியை எண்ணி நொந்துகொண்டிருக்கும்போது பில் வந்தது. அதிகமில்லை, அறுநூற்று சொச்சம்தான்..

எனக்கு மனம் கேட்கவில்லை. காசாளரிடம் சென்று முறையிடுவதுதான் சரியென்று பட்டது. பில்லை வாங்கிக்கொண்டு நேராகச் சென்று விஷயத்தைச் சொன்னேன். அதற்குள் எங்கிருந்தோ மேலாளர்கள் இருவர் வந்து சமாதானம் பேசத் தொடங்கிவிட்டனர். “நீங்க வேண்ணா வாங்க. உங்களுக்கு நல்ல பிரியாணியா போடச் சொல்றோம்” என்று கெஞ்சினார்கள். உண்மை – கெஞ்சினார்கள். “இல்லைங்க, அப்படியெல்லாம் வேண்டாங்க. சாப்பாடும் சரியில்ல, கவனிப்பும் சரியில்ல. நாங்க யாருமே சரியா சாப்பிடலை” என்றேன். “சார், நாங்க வேண்ணா உங்களுக்கு வேற பிரியாணி அல்லது நீங்க என்ன கேக்கிறீங்களோ அதை பார்சல் பண்ணித் தரோம்” என்று அவர்கள் இறங்கிவிட, இதற்குமேல் நாம் சண்டை பிடிப்பது சரியல்ல என்று என் கார்டைக் கொடுத்தேன்.

ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் பார்சல் வந்தது. கேட்டால்தான் கிடைக்கும் என்பது சரிதான் என்றெண்ணிப் புறப்பட்டேன். வெளியே வண்டியை எடுக்க வந்தபோது என் வண்டி முன் வரிசைக்கு மாறியிருந்தது. அதன்பிறகு இரண்டு வரிசைகளில் – மொத்தமாக மூன்று வரிசை வண்டிகள் நின்றிருக்க, என் வண்டிக்குப் பின்னால் இருந்த வண்டியில் side lock செய்யப்பட்டிருந்தது. செக்யூரிட்டி ஒருவரும் இல்லை. எருமை மாடு போன்ற அந்த வண்டியைத் தள்ளினால்தான் என் வண்டியை எடுக்க முடியும் என்ற சூழல். சிறிது நேரம் கழித்து ஒரு செக்யூரிட்டி வந்தார். “ஏங்க, எங்களை side lock பண்ண வேண்டாம்னு சொன்னீங்களே. இவங்க கிட்ட சொல்லலையா?” என்றேன். “என்ன சார் பண்றது? எல்லாரும் கேக்கறதில்லையே” என்றார். நம் கோபத்தை இவரிடம் காட்டி என்ன பயன் என்று வீட்டிற்குப் புறப்பட்டேன்.

அரைகுறை வயிறு. இருக்கும் ஒரு பிரியாணியை மூவரும் சாப்பிட்டுவிடலாம் என்றெண்ணி பார்சலைப் பிரித்தேன். அதே சூடில்லாத, குழைந்த, மட்கிய பழைய சாதம். இந்தப் பார்சல் பிரியாணியாவது நல்ல நிலையில் இருந்திருந்தால் இந்தப் பதிவே வந்திருக்காது. அப்படியே மூடி வைத்துவிட்டேன். யாரேனும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கலாம் என்றாலும் அவர்களது வயிற்றுப்போக்குக்கு நான் காரணமாகிவிட எனக்கு மனம் வரவில்லை.






அறுநூற்று சொச்சம் ரூபாய். என் பணம். நான் உழைத்து சம்பாதித்தது. நான் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் சம்பாதிப்பதற்கு எவ்வளவு அல்லல் படுகிறேன் என்பதை நான் மட்டுமே அறிந்திருக்கிறேன். உங்களுக்கும் அதேதான். என் பணத்தை எப்படிச் செலவிட வேண்டும் என்பதை நான் அறிவேன். ஆனால், இப்படியெல்லாம் செலவாகவேண்டும் என்று சில நேரங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு இப்படியொரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு.

முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள்


முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் என்றொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். நாயகன் மோகன்லால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற மத்திம வயதைக் கடந்தவர். கீழாட்டூர் கிராம பஞ்சாயத்து செகரட்டரியாக வேலை செய்கிறார். தனது மனைவி மீனாவிடமும், மகள், மகனிடமும் பாசம் காட்டாமல் எப்போதும் எரிந்து விழுகிறவர். இந்நிலையில், தன்னை வசீகரிக்கும், தான் வசீகரிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு திருமணமான பெண்ணைச் சந்திக்கிறார். அந்தப் பெண் தான் அவர் மீது மிகுந்த காதல் கொண்டிருப்பதாகக் கூற, சபலத்தில் விழுந்துவிடுகிறார். அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் ஒரு பிரச்சினை வந்துவிட, பின் மீண்டும் அந்த விஷயத்தை நினைக்காமல் தன் மனைவியை மட்டுமே நேசிக்கும் ஒரு நல்ல கணவனாக மாறிவிடுகிறார். சுபம்!

சுகன்யா


வீட்டில் ஏ.ஸி. அவ்வப்போது நின்றுவிடுகிறது. வோல்ட்டேஜ் பிரச்சினை. ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் - திடீரென்று நின்றுவிடும். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று அமைதியாக இருந்துவிட்டு பிறகு தன் பணியை செவ்வனே செய்ய ஆரம்பிக்கும். இத்தனைக்கும் டபுள் பூஸ்டர் ஸ்டெபிலைசர்தான் பயன்படுத்துகிறேன். நான் வசிக்கும் ஏரியா நண்பருடன் சேர்ந்துதான் ஏ.ஸி. வாங்கினேன். “நம்ம ஏரியா கரண்ட் பிரச்சனைக்கு டபுள் பூஸ்டர்தான் செட்டாவும்” என்று கூறியிருந்தார். அவருடைய ஆலோசனையின்படி வாங்கிவிட்டேன். ஐந்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை பிரச்சினை இருந்ததில்லை.