வலைப்பதிவர் திருவிழா

இந்த வருடத்தின் வலைப்பதிவர் திருவிழா புதுக்கோட்டையில் இனிதே நடைபெற இருக்கிறது. புதுக்கோட்டையில் ஏராளமான பதிவர்கள் இருக்கிறார்கள் என்பது கடந்த வருடம் மதுரையில் நடந்த பதிவர் திருவிழாவின்போது தான் தெரியும். நானும் கலந்துகொள்ள இருக்கிறேன். வருகைப் பதிவேட்டில் என் பெயரையும் எழுதிவிட்டேன்.





Yummydrives.com

திரு.சுரேஷ் குமார் அவர்கள் கடல் பயணங்கள் தளத்தின் வாயிலாக பிரபல பதிவராக அறியப்படுபவர். ஊர் ஸ்பெஷல் மற்றும் அறுசுவை பகுதிகள் மிகவும் அருமையாகவும் நிறைய தகவல்களுடனும் எழுதுவார். ஊர் ஸ்பெஷல் பகுதியை மட்டும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே என்று பல நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். இல்லை என்று மறுத்தவர் மனதில் என்ன இருந்ததோ தெரியவில்லை, கோவை நேரம் ஜீவா மற்றும் கேபிள் சங்கர் ஆகியோருடன் கூட்டாக புதிதாக ஒரு வலைத்தளம் துவங்கிவிட்டார். அதற்குப் பெயர் தான் yummydrives.com.  இந்த வலைத்தளம் மூலம் யார் வேண்டுமானாலும் சாப்பிட்ட ஹோட்டல்கள் பற்றியும் சுற்றுலா தளங்கள் பற்றியும் தகவல்களைப் பதிவாக எழுதலாம். இதுவரை இவர்கள் எழுதிய பதிவுகளிலிருந்து பல தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. நீங்களும் உங்கள் ஊரிலுள்ள பிரசித்தி பெற்ற தனித்துவமான உணவு, சுவை பற்றி எழுதுங்கள். நிகழ்ச்சியின் முழு வீடியோ:




புதுப்பிக்கப்படாத வாகன நிறுத்த ஒப்பந்தம்

வேளச்சேரி ரயில் நிலையம் மிகவும் பிசியானது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை செல்லும் பறக்கும் ரயில்கள் இங்கிருந்து தான் புறப்படுகின்றன. மதிய நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கூட்டம் அள்ளும். பத்து நிமிடத்துக்கு ஒரு ரயில் இங்கிருந்து புறப்பட்டுக்கொண்டிருக்கும். இங்குள்ள வாகன நிறுத்த ஒப்பந்தம் கடந்த ஆறாம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. தினம் கொடுக்கும் பத்து ரூபாய் மிச்சம் என்று சந்தோஷப்பட முடியாது. ரயில்வே நிர்வாகமே வாகனங்கள் தொலைந்து போனால் தாங்கள் பொறுப்பல்ல என்று எழுதி ஒட்டி வைத்திருக்கிறார்கள். ஒப்பந்தம் காலாவதி ஆவதற்கு முன் அதை உரிய முறையில் அதே ஒப்பந்ததாரருடனோ வேறு யாராவதோடோ புதுப்பிக்கவேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் கடமை அல்லவா? தினமும் ஆயிரம் வாகனங்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் ஆட்கள் இருக்கும்போதே பெட்ரோல், ஹெல்மெட் போன்றவற்றைத் திருடும் கூட்டம் உண்டு. இப்போது திருடன் கையில் சாவியைக் கொடுத்தது போல் இவர்களே இப்படி எழுதி ஒட்டிவிட்டார்கள். தினம் தினம் வண்டியை நிறுத்திவிட்டு மாலை வரும்வரை பயந்துகொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு கொடுமை என்னவென்றால் நம் மக்கள் அதான் ஆட்கள் யாரும் இல்லையே என்ற கண்ட இடங்களில் வண்டிகளை நிறுத்திவிடுகிறார்கள். ஒழுங்கீனம். பாதையை அடைத்தும் சீரான இடைவெளியின்றி நிறுத்துவதாலும் மாலை நேரங்களில் வண்டியை எடுப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. இருபது நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை எனும்போது இதில் அரசியல் தலையீடு, கமிஷன் போன்ற விஷயங்கள் இருக்குமோ என்று சந்தேகப்பட வைக்கிறது.




அகம் புறம்

பதிவர் குடந்தையூர் சரவணன் அவர்கள் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் குறும்படம் அகம் புறம். நடிப்பவர்கள் அதிகம் என்றாலும் நானும் ஒரு முக்கிய வேடத்தில் இருக்கிறேன். இந்தக் குறும்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அறிய நானே ஆவலுடன் இருக்கிறேன். நான் நடித்த ஒரே ஒரு காட்சியின் படத்தை மட்டும் இங்கே வெளியிடலாமா என்று இயக்குனரிடம் நேற்று கேட்டேன். நான் விரும்பிய படம் ஒன்றை அவரே எடுத்து நேற்றிரவு அனுப்பி வைத்தார். அந்தப்படம் இங்கே. பார்த்துவிட்டு யாரும் பயந்துவிடாதீர்கள்.





JLPT N5

ஜப்பானிய மொழித்தேர்வின் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். நான் மட்டுமல்ல, என் மனைவியும் கூடத்தான். ஜூலை மாதம் ஐந்தாம் தேதி நடந்த தேர்வின் முடிவுகள் நேற்றைக்குத்தான் வெளியானது. வகுப்பில் பலரும் தோல்வியுற்றிருக்க நாங்கள் உட்பட சிலர் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி. உடனடியாக வகுப்பாசிரியருக்கும் பதிவர் அபயா அருணா அவர்களுக்கும் விவரத்தை தெரிவித்தாயிற்று. இதுபற்றிய தனிப்பதிவு விரைவில் எழுதுகிறேன்.

நன்றி.