ஸ்ரீ சக்ரகாளி வழிபாட்டு மையம்
Sunday, October 07, 2012
Posted by கார்த்திக் சரவணன்
ஸ்ரீ சக்ரகாளி வழிபாட்டு மையம்
உலக அமைதிக்காகவும் சமாதானத்துக்காகவும் ஒரு காளி கோவில்.
இது கோவில் இல்லை, வழிபாட்டு மையம் என்றே இதன் நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர். அர்ச்சனை இல்லை, உண்டியல் இல்லை, தனிப்பட்ட எவருக்கும் சிறப்பு பூஜைகள் இல்லை, ஆனாலும் கூட்டம் அலைமோதுகிறது. காரணம் இந்த வழிபாட்டு மையத்தில் வீற்றிருக்கும் காளியின் சக்தி தான். இங்கு சென்று நாம் வேண்டினால் கண்டிப்பாக நடக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் ஐதீகம். உலக அமைதிக்காகவும் சமாதானத்துக்காகவும் ஒரு காளி கோவில்.
இந்த வழிபாட்டு மையம் எப்போது நிறுவப்பட்டது?
செப்டம்பர் 1, 2005 அன்று திரு. வைத்தியநாதன் என்பவரால் நிறுவப்பட்டது. இது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவதில்லை.
நிறுவப்பட்டதன் காரணம்?
உலக அமைதி, உலக சமாதானம் மற்றும் மனிதநேயத்தைக் காப்பாற்றுவதற்காக நிறுவப்பட்டது.
பூஜைகள் எவ்வாறு நடைபெறுகின்றன?
தினந்தோறும் காலை 8.30, 9.30, 10.00 மற்றும் 12.00 மணிக்கும் மாலையில் 5.00, 6.00, 7.00 மற்றும் 8.00 மணிக்கு தீபாரதனைகள் பூஜைகள் நடைபெறுகின்றன. தனிப்பட்ட பூஜைகள் என்று எதுவும் கிடையாது, தீபாராதனை காட்டி ஆரத்தி தட்டை அங்கேயே வைத்துவிடுகின்றனர். தட்டை வெளியே கொண்டுவந்ததும் தீபத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு தட்டில் காசுபோடும் சம்பிரதாயமெல்லாம் இல்லை. நவராத்திரி நாட்கள் மிகவும் விசேஷமாகும். இந்த ஒன்பது நாட்களும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தவிர மாசி மாத சிவராத்திரி தினத்திலும், இந்த வழிபாட்டு மையம் நிறுவப்பட்ட செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. முக்கியமாக அம்மன் அவதரித்த அஷ்டமி தினத்தில் (வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டு நாட்களும்) சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பொதுவாக தமிழிலேயே வழிபாடு நடக்கிறது. இந்த மையத்தின் நிறுவனரான திரு. வைத்தியநாதன் அவர்களே தமிழில் அம்மன் துதி பாடல்கள் பாடுகிறார்.
சிறப்பு தரிசனம் உண்டா?
நம்மூர் கோவில்களில் உள்ளதுபோல் 10 ரூபாய்க்கு சிறப்பு தரிசனம், 100 ரூபாய் கொடுத்தால் விஐபி தரிசனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னால் இடம் கிடைக்கும், பிறகு வருபவர்களுக்கு பின்னால், அதன்பிறகு வருபவர்கள் நின்றுகொண்டு தரிசனம் செய்யவேண்டும்.
பிரசாதம்?
பொதுவாக அம்மன் கோவில் என்றால் குங்குமம் கொடுப்பது வழக்கம். இங்கு பூஜைகள் அனைத்தும் முடிந்து பக்தர்கள் வெளியே செல்லும்போது மட்டுமே குங்குமம் கொடுக்கிறார்கள். மதியம் நடைசாத்தும் நேரம் மட்டும் சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் தருகிறார்கள். அதுவும் வரிசையில் நிற்க வேண்டும். சூடாகவும் சுவையாகவும் இருக்கிறது.
வேறு என்ன சிறப்பம்சங்கள்?
இந்த வழிபாட்டு மையத்தின் அருகிலேயே ஷீரடி சாய்பாபா கோவிலும் குபேரர் கோவிலும் இருக்கிறது. மேலும் இதன் அருகில் அரைக்காசு அம்மன் கோவில் ஒன்று உள்ளது.
இந்த அம்மனை நினைத்து வழிபட்டால் காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். மேலும் இந்தக் கோவிலைச் சுற்றி 108 அம்மன் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. குலதெய்வம் கோவிலுக்குப் போக முடியாதவர்கள் இங்கு சென்று வழிபட்டால் நல்லது என்று சொல்கிறார்கள்.
மேலும் ராகுதசை அல்லது
மற்ற தசைகளில் ராகு புத்தி அல்லது செவ்வாய் தசை அல்லது மற்ற தசைகளில் செவ்வாய் புத்தி நடப்பவர்களும், ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் செவ்வாய் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இங்கு சென்று வழிபடுதல் நலம்.
எங்கே இருக்கிறது?
வண்டலூரில்ருந்து இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம்
(ECR) செல்லும் வழியில் கொலப்பாக்கம் என்னும் ஊரைத் தாண்டி ரத்தினமங்கலம் என்னும் சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் அங்கு சென்றுவிட்டால் கூட்டம் வரும் முன்னரே எல்லா கோவில்களிலும் தரிசனம் முடித்துவிடலாம். நான் அங்கு மதியம் 12 மணிக்கு சென்றதால் என்னால் சக்ரகாளியைத் தவிர வேறு எந்த கோவிலுக்கும் செல்ல முடியவில்லை.
அவசியம் சென்று வழிபட வேண்டிய இடம்.
நன்றி
ஸ்கூல் பையன்..
Subscribe to:
Posts (Atom)