சில நாட்களுக்கு முன் கிராண்ட் சோழா ஹோட்டலில் மதியம் சாப்பிட்ட அனுபவத்தை எழுதியிருந்தேன்.  சென்ற வாரம் ஒரு மீட்டிங் (!?) இருந்ததால் இதே ஹோட்டலில் காலையில் சாப்பிடும் பாக்கியவான் ஆனேன். நமக்கு காலை உணவு என்றால் இட்லி அல்லது தோசைதான் பிடிக்கும் என்பதால் இட்லியுடன் கூடிய பிரேக்பாஸ்ட் சாப்பிடுவதென்று முடிவாயிற்று.  





உடன் வந்த நண்பருக்கு ஜூஸ் என்றால் மிகவும் பிடிக்கும், எனவே முதலில் அவருக்கு ஒரு மாதுளை ஜூஸ், எனக்கு ஒரு கொய்யா ஜூஸ் ஆர்டர் செய்தோம்.  மாதுளை ஜூஸ் raw extract. ஐஸ் இல்லாமல் சர்க்கரை இல்லாமல் pure ஜூஸ்.  கொய்யாப்பழ ஜூஸ் - சாரி, அது ஜூஸ் அல்ல, Guava என்ற பெயரில் பிரபல நிறுவனம் பாக்கெட்டில் அடைத்து விற்கும் ஜூஸ்.  இதுவும் கொய்யப்பழ ஜூஸ் தான், சுவையும் அருமைதான் என்றாலும் நாங்கள் எதிர்பார்த்தது ஹோட்டலில் புதிதாகத் தயாரித்து கொடுக்கப்படும் ஜூஸ்.




ஜூஸ் குடித்து முடித்தவுடன் நமக்கே நமக்கான இட்லி - மூன்று இட்லிகள், ஒரு வடை, சாம்பார், மூன்று வித சட்னிகள், பொடி, நே சகிதமாக வந்து சேர்ந்தது.  நெய்யைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றிய ஒன்று - ஒரு வெத்தலை, ஒரு பாக்குக்கு ஒரு டப்பா சுண்ணாம்பா? ம்ஹூம், எவ்வளவு தேவையோ அவ்வளவு ஊற்றிக்கொள்ளட்டும் என்று கொடுத்திருக்கிறார்கள், ஆனால் நம் மனசு சும்மா விடுமா, எல்லா நெய்யையும் ஊற்றிக் குழைக்கப்பட்ட பொடியில் இட்லியைத் தொட்டு புரட்டி வாயில் போட்டதும் - இட்லியின், பொடியின் சுவையை உணரும் முன்னரே நெய் நாக்கில் வழுக்கிக்கொண்டு தொண்டைக்குள் இறங்கியது.  அடுத்ததாக கொஞ்சம் இட்லியைப் பிய்த்து சாம்பாரில் ஒரு முக்கு, மூன்று சட்னிகளிலும் கொஞ்சம் தொட்டு வாயில் போட்டால், ஆஹா, பிரமாதம்.



நொடிப்பொழுதில் அனைத்தும் காணாமல் போனது.  அடுத்ததாக காபி. காபியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஏற்கனவே பதிவில் எழுதியிருக்கிறேன்.  அருமை. இதன் சுவை ரொம்ப நேரத்துக்கு நாக்கில் இனிக்கிறது.



பில் கொஞ்சம் அதிகம்தான்.  சொன்னால் அடிக்க வருவீர்கள்.  இட்லிக்கு மட்டும் 600 ரூபாய்.  காபி மற்றும் ஜூஸ் காம்ப்ளிமென்ட். எப்பொழுதாவது தான் செல்வதால் அந்த ambience, சுவை, தரம் ஆகியவற்றுக்காக தாராளமாக இந்த விலை கொடுக்கலாம்.


நன்றி.