சிகிச்சை
Tuesday, September 01, 2015
Posted by கார்த்திக் சரவணன்
அவசரமாக ஊருக்குப் புறப்பட்டாக வேண்டும். அம்மாவுக்கு உடல்நிலை
சரியில்லை. போன வாரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நடுராத்திரியில் அப்பா மட்டும்
தனியாளாய் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச்சென்று சிகிச்சை அளிக்கவைத்தார். ஈ.சி.ஜி.யில
பிரச்சனை இருக்கே, எதுக்கும் ஆஞ்சியோ பண்ணிப் பாத்திருங்க என்ற டாக்டர் பதினைந்து
நாட்களுக்கு மாத்திரை மருந்துகளை எழுதிக்கொடுத்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்து
விட்டார்.
பதினைந்து நாட்களுக்கு மாத்திரை சாப்பிடட்டும், அதன்பின் ஒரு நாள்
மதுரைக்குக் கூட்டிச்சென்று ஆஞ்சியோ செய்து பார்த்துவிடலாம், தேவைப்பட்டால்
ஸ்டென்ட் வைப்பதோ பைப்பாஸ் சர்ஜரியோ செய்துவிடலாம் என்றிருந்தேன். ஆனால்
அம்மாவுக்கு வீட்டுக்கு வந்து இரண்டு நாட்களில் மீண்டும் மூச்சுத்திணறல்.
மாடிப்படி ஏறினால் கடுமையான நெஞ்சுவலி. இரண்டு நாட்களுக்கு முன் போனில் அழைத்தபோது
பதினைஞ்சு நாளுக்கெல்லாம் நான் இருக்க மாட்டேன், உடனே ஆஸ்பத்திரில சேத்திரு
என்றவரின் மனதில் இருந்த மரண பயம் காது வழியாக என் மூளையை அடைந்திருந்தது.
அப்பாவுக்கும் இதேபோல் தான். இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஒரு
மாரடைப்பு. சிகிச்சை முடிந்து வந்து மாத்திரைகளை மட்டும் எடுத்துக்கொண்டிருந்தார்.
நன்றாக ஞாபகம் இருக்கிறது. இரண்டாயிரத்து ஏழோ எட்டோ – வடபழனி கமலா தியேட்டரில்
குடும்பத்துடன் “முனி” படம் பார்த்துவிட்டு திரும்பிவந்ததும் வீட்டிலேயே நெஞ்சைப்
பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். இரண்டாவது அட்டாக் என்று
புரிந்துகொள்வதற்கு எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அப்போது வடபழனியில் தான்
தங்கியிருந்தோம். தாமதிக்காமல் ஆட்டோ ஒன்றைப் பிடித்து விஜயா ஆஸ்பத்திரியில்
சேர்த்து சிகிச்சை அளித்தோம். அப்போதைய ஆஞ்சியோவில் தெரிந்தது – பெரிதாக அடைப்புகள்
இருக்கிறதென்று. இங்கே ஒரு ஆச்சரியம் என்னவென்றால் சம்பவம் நடந்த நாளை வைத்து அந்தத் தேதியில் எந்த ஊரில் - எந்த வீட்டில் தங்கியிருந்தோம் - என்ன படம் வெளியானது என்பது கூட சில வருடங்கள் கடந்த பின்னரும் கூட பசுமரத்தாணி போல மனதில் பதிந்திருக்கிறது.
அப்போதிருந்த பணத்தட்டுப்பாடு என் கைகளைக் கட்டிப்போட்டிருந்தது.
ஆனாலும் அவசரம் என்பதால் உடனடியாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்த்தேன். கிரெடிட் கார்டுகளில் தேய்த்தும் நகைகளை அடமானம் வைத்தும் செலவு செய்ய வேண்டிய சூழல். அங்கு அவருக்கு நான்கு
ஸ்டென்ட்கள் பொருத்தினார்கள். ஒன்றின் விலை அப்போது அறுபத்தைந்தாயிரம் ரூபாய். ஒரு
லட்சம் மெடிகிளைம் இன்சூரன்ஸ் போக, ஒரு லட்சத்து அறுபதாயிரம் மட்டும்
வாங்கிக்கொண்டார்கள். அறை வாடகை, மருத்துவருக்கு, நர்ஸிங், சிகிச்சை உபகரணங்கள்,
சாப்பாடு என்று எதற்குமே பணம் வாங்கவில்லை.
இன்றைக்கு அம்மாவுக்கு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஆஞ்சியோ
பரிசோதனை செய்து பார்த்தாயிற்று. இதயத்தின் வலதுபுறம் இரண்டு பெரிய அடைப்புகளும் இடதுபுறத்தில்
மூன்று சிறிய அடைப்புகளும் இருக்கின்றனவாம். சிறிதைப் பற்றிக் கவலையில்லை, பெரிய
இரண்டுக்கு மட்டும் ஸ்டென்ட் வைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டனர் மருத்துவர்கள். இரண்டு
லட்சத்து முப்பதாயிரம் செலவாகும் என்றிருக்கின்றனர்.
அலுவலக நண்பர் ஒருவரிடம் விஷயத்தைக் கூறினேன் – அவருடைய உறவினர்
ஒருவர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வேலை செய்கிறாராம். அவரிடம் கூறி அங்கு
எவ்வளவு செலவாகும் என்று விசாரிக்கச் சொன்னேன். உடனடியாக ஆஞ்சியோ ரிப்போர்ட்டை
எடுத்துக்கொண்டு வருமாறு கேட்டார் அந்த நண்பர். நான் சென்னையில் இருக்கிறேன்
என்றும் என் தந்தை வருவார் என்றும் அவரிடம் சொல்லி உடனடியாக அப்பாவிடம் போனில்
அழைத்து மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குப் போய் குறிப்பிட்ட நண்பரைச் சந்திக்கச்
சொன்னேன். அங்கு சென்ற அவருக்கு ராஜ மரியாதை. அந்த நண்பரே நேரில் வந்து
ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.
மருத்துவரும் உடனடியாகப் பார்த்துவிட்டு இரண்டு ஸ்டென்ட்கள் வைக்கவேண்டும் என்று கூறிவிட்டார்.
வேலம்மாள் மருத்துவமனையில் வைப்பதாக சொல்லப்பட்ட அதே தரமுள்ள ஸ்டென்ட்
சுமார் ஐம்பதாயிரம் விலை குறைவாக இங்கேயே பொருத்துவதாக கூறிவிட்டார். தரத்தின்
மீது சந்தேகம் இருந்தாலும் மருத்துவர் மீதுள்ள நம்பிக்கை அந்த சந்தேகத்தை விலக்கிவிட்டது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலேயே சிகிச்சையை முடித்துவிடலாம் என்றே எனக்குத்
தோன்றியது. இரண்டு காரணங்கள் – ஒன்று ஸ்டென்ட் விலை குறைவு, மற்றொன்று வேலம்மாள்
மருத்துவமனையில் இன்சூரன்ஸ் இல்லை. முழுப்பணத்தையும் கட்டவேண்டும்.
சென்னையில் இருந்தபடியே ஒரு விஷயத்தை தொலைபேசி வாயிலாக முடித்ததில் மகிழ்ச்சி. இதுவே நான் நேரில் சென்றிருந்தால் கூட சாத்தியமா தெரியவில்லை. யார் யார் எங்கிருந்தால் பலமோ அங்கிருந்தே காரியத்தை சாதிப்பது சாலச்சிறந்தது என்று உணர்ந்த தினம் இன்று. இப்போது இன்னொரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் தீபாவளிக்கு முந்தைய வாரம். நான் அப்போது கேரள மாநிலம் கண்ணூரில் இருந்தேன். அம்மாவும் தங்கையும் கண்ணூரிலிருந்து ஊருக்குப் புறப்பட்டிருந்தார்கள். தங்கை மகளுக்கு இரண்டு வயது கூட நிரம்பியிருக்கவில்லை. மங்களூரிலிருந்து சென்னை செல்லும் மெயிலில் பாலக்காடு வரை பயணித்து அங்கிருந்து மீட்டர் கேஜில் மதுரை வரை வேறு ஒரு பேசஞ்சர் ரயிலில் பயணிக்கவேண்டும். என்னால் ஊருக்குப் போகமுடியாத நிலை. கைக்குழந்தையுடன் இருவரும் கிளம்பிவிட்டார்கள்.
தலைச்சேரி என்ற இடம் வரைதான் சென்றிருந்தது அந்த ரயில். வெகு நேரம் அந்த ஊரிலேயே ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் இறங்கி விசாரித்திருக்கிறார்கள். கொயிலாண்டி என்னும் இடத்துக்கு அருகில் எண்ணெய் ஏற்றி வந்த கண்டெயினர் ரயில் ஒன்று தடம் புரண்டதால் அப்போது புறப்பட்ட எல்லா ரயில்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் வழித்தடத்தை சீர் செய்த பின்னரே ரயில் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. செல்பேசி எதுவும் இல்லை. அம்மா எனக்கு ஒரு டெலிபோன் பூத்திலிருந்து அழைத்தபோது அவர்களை உடனடியாக கண்ணூருக்கே திரும்பி வருமாறு சொன்னேன். தீபாவளி சமயம் - வேறு ஒரு நாளில் டிக்கட் கிடைப்பது கடினம் என்பதால் மறுத்துவிட்டார். அப்போதைக்கு என்னால் செய்ய முடிந்த ஒரே ஒரு விஷயம் - தலைச்சேரியிலிருந்த நண்பர் ஒருவருக்கு போனில் அழைத்து நடந்ததைச் சொன்னேன். உடனடியாக காரை எடுத்துக்கொண்டு சென்ற அந்த நண்பர் ரயில் புறப்படும் வரை அங்கேயே பாதுகாப்பாக இருந்தார். இத்தனைக்கும் அவர் ஒரு கோடீஸ்வரர்.
இங்கும் ஒரு ஆச்சரியம். வருடம் மாதம் தேதி வரை உத்தேசமாகச் சொல்ல முடிகிறது. இன்னும் கொஞ்சம் அகழ்வாராய்ச்சி செய்தேனென்றால் சரியான தேதி கூட சொல்ல முடியும்.
அறுவை சிகிச்சை பற்றியோ ஸ்டென்ட் வைப்பது பற்றியோ பயம் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டு முறையாக சில வருடங்களுக்கு முன் அனுபவித்துவிட்டேன். மருத்துவமும் சிகிச்சை முறைகளும் இப்போது ஏகத்துக்கு மாறிவிட்டன. தினம் தினம் சைக்கிளுக்கு பஞ்சர் பார்ப்பது போல் ஓப்பன் ஹார்ட் சர்ஜரிகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.
ஒரு லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கிறது. மேற்கொண்டு ஆகும் பணத்தை மட்டும் கட்ட வேண்டியிருக்கும். சம்பளம் வந்துவிட்டது. கிரெடிட் கார்டு இருக்கிறது. நண்பர் ஒருவருடைய கார்டையையும் வாங்கிவிட்டேன். பில் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். விஷயம் தெரிந்த இன்னொரு நண்பரும் தானாகவே முன்வந்து தன்னுடைய கிரெடிட் கார்டைக் கொடுத்தார். தேவைப்பட்டால் பயன்படுத்துகிறேன் என்று சொல்லிவிட்டேன். இவ்வளவு ஏன், அலுவலக முக்கிய அரசியல்வாதி கூட எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேள், வங்கிக் கணக்குக்கு மாற்றித்தருகிறேன் என்றிருக்கிறார்.
என்னதான் பிக்கல் பிடுங்கல்கள் இருந்தாலும் ஒரு பிரச்சனை என்று வரும்போது ஜென்ம விரோதிகள் போல நடந்துகொள்பவர்களும் ஓடிவந்து உதவுகிறார்கள். அவர்கள் விரோதிகள் அல்லர், என் நண்பர்களே என்று உணரும் தருணம் இது. இதையெல்லாம் நான் எதற்காக இங்கே பகிர்கிறேன்? தட்டச்சு செய்து முடித்ததுமே ஒரு ஆசுவாசம் வந்துவிட்டது. நீங்கள் பொறுமையாகப் படித்துவிட்டால் கூடுதல் ஆசுவாசம். அவ்வளவே.
This entry was posted by school paiyan, and is filed under
அனுபவம்
.You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
தங்களது அம்மா நலமுடன் இருக்க எமது பிரார்த்தனைகள்
ReplyDeleteஅம்மா விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன் நண்பா...
ReplyDeleteசரியாகிவிடும் சரவணன், வேண்டிக் கொள்கிறேன்
ReplyDeleteகவலைப்படாதீங்க சகோ. உங்க அம்மா விரைவில் நலம் பெற என் பிரார்த்தனைகள்.
ReplyDeleteஇந்தியாவில் இதுபோல நட்புக்கள் உதவக்ககூடிய சாத்தியங்கள் மிக அதிகமே. நாம் செய்யவேண்டியது எல்லாம் நல்ல நட்பை சம்பாதித்து கொள்ள வேண்டியதுதான். அதற்கு நாம் யாருக்கும் எந்த நேரத்திலும் கெடுதல் செய்யமலே இருந்தால் போதும். உங்களின் நல்ல குணத்திற்கு உதவிகள் தானாவே தேடி வருகின்றது
ReplyDeleteஉங்களை நான் பதிவின் மூலம்தான் அறிவேன் ஒரு முறை மனோவின் நண்பருக்கு(மலையாளி) மனோ கேட்டு கொண்டதற்கு இணங்க நீங்கள் சென்று உதவியதை அறிந்ததும் இந்த காலத்தில் இப்படியும் ஒரு நல்லவரா என மனதில் நினைத்து அந்த நிகழ்வில் இருந்து நீங்கள் என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள்.
உங்கள் தாயார் சீக்கிரம் குணம் அடைய பிரார்த்தனைகள் வாழ்க வளமுடன்
பொறுமையாகப் படித்துவிட்டேன். கூடுதல் ஆசுவாசம் கொள். நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் நிறங்களை உணர்தல் இப்படியான இக்கட்டுகள் நேர்கையில்தான் சாத்தியமாகிறது. நானும் அனுபவபூர்வமாக உணர்ந்த விஷயம் இது. அதேபோல நீ மற்றவர்களுக்காகச் செய்வதுதான் உனக்குப் பல மடங்காகத் திருப்பிக் கிடைக்கிறது என்பதும் உண்மை. அனைவரையும் மதித்து உதவுகிற உன் பண்பு இதுபோன்ற சமயங்களில் கை கொடுத்திருக்கிறது. அன்னையார் பூரண நலம் பெற்றுத் திரும்புவார். கவலை வேண்டாம். அதற்காய் என் பிரார்த்தனைகளும்.
ReplyDeleteஅம்மா சீக்கிரம் குணம் அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நல்ல நண்பர்கள் வாய்த்திருக்கிறார்கள் உங்களுக்கு.
ReplyDelete//அதேபோல நீ மற்றவர்களுக்காகச் செய்வதுதான் உனக்குப் பல மடங்காகத் திருப்பிக் கிடைக்கிறது என்பதும் உண்மை. அனைவரையும் மதித்து உதவுகிற உன் பண்பு இதுபோன்ற சமயங்களில் கை கொடுத்திருக்கிறது. //
கணேஷின் இந்த வார்த்தைகள் உண்மை என்பதோடு உங்கள் குணத்தையும் சொல்கின்றன. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
காலத்தினார் செய்த உதவி நல்லவர்கள் நிறைந்துதான் இருக்கிறார்கள். ஆனால் பொல்லாதவர்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்கள். பொறுப்பும் உருக்கமும் நிறைந்த வார்த்தைகளால் நிரம்பியுள்ளது பதிவு.
ReplyDeleteதாயார் விரைவில் நலம் பெறுவார்
அன்னை உடல் நலம் பெற்று விடுவார் . கவலைப் படாதீர்கள்.
ReplyDeleteஉங்கள் அன்னைக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் .
பிரார்த்தனைகள் பேராபத்தையும் பின் தள்ளி விடும் என்ற
பெரிதுமோர் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சுப்பு தாத்தா
எல்லாம் சரியாகிடும் , ஒண்ணும் கவலைப்படாதீங்க
ReplyDeleteதங்களின் தாயார் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் .நல்ல நட்பு ஆயிரம் கிரெடிட் கார்டுக்கு சமம் என்ற உண்மையை உணர்த்தி விட்டீர்கள் .
ReplyDeleteஉங்கள் அம்மா விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் சரவணன்!
ReplyDeleteநல்ல நண்பர்கள் உங்களுக்கு அதிகம் என்று தெரிகின்றது! அவர்களின் அன்பும் ஆதரவும் இருக்கையில் பயமில்லை! உங்கள் அன்னை விரைவில் நலமுடன் திரும்ப இறைவனை ப்ரார்த்திக்கிறேன்! நன்றி!
ReplyDeleteதங்களின் தாயார் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்!
ReplyDeletehttp://tamil-bloglist.blogspot.in/ add your tamil blog its easy
ReplyDelete