கவிதை - காலும் அரையும்
Wednesday, March 20, 2013
Posted by கார்த்திக் சரவணன்
காலில் அரை
காது வரை என
காலம் செல்ல
காலில் அரை
கால் மணி நேரமே
என்றாகி
காலில் அரை
காலாய் வளர்ச்சியுற்று
காலே மிதமாகி
காலங்களைக் கடந்து
அரையே உருவானதே
அதுவே முழுதாய்
அதரம் கொண்டதே
அரையும் போதாமல்
காலைக் கேட்கிறதே
அழுகும் குடலும்
அலறும் சிறுநீரகமும்
அவனைக் சபிக்கிறதே
ஆபிஸ் போகும் நீ
ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரி போக
அல்லது
மயக்கத்தில் மரணம் தழுவி
மண்ணுலகம் செல்ல
கொல்லும் குடியின்
கொடும்பாவி எரி
மனதில்
கல்லும் கரையும்
கனியின் வாய்மொழி கேட்டால்
முதலில்....
---------------
வத்திக்குச்சி - சினிமா விமர்சனம்
Saturday, March 16, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வத்திக்குச்சி - சினிமா விமர்சனம்
நேற்று வெளியான தமிழ்ப்படங்கள் இரண்டு. ஒன்று பாலாவின் பரதேசி, இன்னொன்று வத்திக்குச்சி. பரதேசி பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் "அவன் இவன்" கொடுத்த அடியின் வலியே இன்னும் மறக்காத நிலையில் வத்திக்குச்சி போவதென தீர்மானிக்கப்பட்டது. ஏ ஆர் முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இரண்டாவது படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் படம் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.
படத்தின் நாயகனான திலீபன் சொந்தமாக ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். பல்லாவரம் பகுதியிலிருந்து தாம்பரத்துக்கும் வேளச்சேரிக்கும் செல்லும் அஞ்சலியை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஒரு நாள் இவர் ஏடிஎம் மில் இருந்து பணம் எடுத்துவிட்டு வெளியேறும்போது சம்பத் தலைமையிலான சிலர் கத்தி முனையில் பத்தாயிரம் ரூபாயை பறித்துவிடுகின்றனர். அவர்களைக் கண்காணித்து, அவர்களுடைய இடத்துக்கே சென்று அடித்துத் துவைத்து பறிகொடுத்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு வந்துவிடுகிறார். போதாததற்கு சம்பத்தையும் நையப் புடைத்துவிடுகிறார். இந்த விஷயம் தெரிந்தவுடன் சம்பத்தை வைத்து காரியம் சாதிக்கும் முதலாளிகளும் சம்பத்தின் நண்பர்களும் அவரை விட்டு விலகிவிடுகிறார்கள். வேலை இல்லாததால் ஏழையாகும் சம்பத் திலீபனைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறார்.
ரோட்டில் யாரோ யாரையோ கொல்வதைப்பற்றி போனில் பேசுவதைக் கேட்கும் ஹீரோ திட்டமிட்டு செய்யப்படப்போகும் கொலையை திட்டமிட்டு சமயோசிதமாக செயல்பட்டு சண்டைபோட்டு தடுக்கிறார். இதனால் பெரும் நஷ்டம் அடையும் நகை வியாபாரியான ஜெயப்பிரகாஷ் ஹீரோவைக் கொல்லத்துடிக்கிறார்.
ஒரு பெரிய பணக்காரரின் மகனைக் கடத்தத் திட்டமிடும் ஜெகன் தலைமையிலான கும்பலுக்கு ஹீரோ முட்டுக்கட்டையாக இருக்க ஹீரோவைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறார் ஜெகன்.
ஆக மொத்தத்தில் ஹீரோவை மூன்று கும்பல் கொல்லத் துடிக்கின்றன. அந்த மூன்று கும்பல் அவரை எப்படிக் கொல்லத் திட்டமிடுகிறார்கள், அவர்களிடமிருந்து ஹீரோ தப்பித்தாரா என்பதுதான் வத்திக்குச்சி படத்தின் கதை.
இன்ஃப்ளுயன்ஸ் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகிவிடலாம் என்பதற்கு இணங்க தன் தம்பியையே நடிக்கவைத்து படம் தயாரித்திருக்கிறார் ஏஆர் முருகதாஸ். திலீபன் நம்ம பக்கத்து வீட்டுப் பையன் போல இருக்கிறார். ஆனால் ஹீரோ ரோலுக்குப் பொருத்தமான முக அமைப்பு இல்லை. இயக்குநர்களே, தயவு செய்து படத்தின் கதைக்கேற்ற ஹீரோவைத் தேர்வு செய்யுங்கள். திலீபன் இனி அண்ணன், தம்பி, அடியாள், அமெரிக்க மாப்பிள்ளை போன்ற கேரக்டர்களில் நடிக்கலாம்.
ஹீரோயினாக அஞ்சலி. குண்டாக உயரமான ஒரு பெரிய மாமிச மலை போல் இருக்கிறார். அவரது குரல் வேறு இரண்டு சில்வர் பாத்திரங்களை வைத்து தேய்த்ததுபோல் கீச் கீச் என்று இருக்கிறது. அவர் வசனம் பேசும்போது நமக்கு முடி சிலிர்த்துக்கொள்கிறது. இனியாவது படங்களில் சொந்தக்குரலில் பேசாமல் இருக்கவேண்டும். ஒரு அட்வைஸ், இப்படியே போனால் மொத்தத் தமிழகமும் தங்களைப் புறக்கணிக்க நேரிடும். திருத்திக்கோங்க அம்மணி...
படம் முழுவதும் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்தல், துரத்தல், சண்டை என்றே செல்கிறது. படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை பரபரப்பாகச் செல்லவேண்டும் என்பதற்காக இயக்குநர் கின்ஸ்லின் ரொம்பவும் மெனக்கெட்டு உழைத்திருப்பது தெரிகிறது. ராஜசேகரின் சண்டைக்காட்சிகள் பிரமாதமான இருக்கின்றன. முக்கியமாக வேளச்சேரி பஸ் ஸ்டாப்பில் நடக்கும் சண்டையும் கிளைமாக்ஸில் பரங்கிமலையில் நடக்கும் சண்டையும் அதிர வைக்கின்றன. துரத்தல் காட்சிகளில் ஜெகன் கும்பல் ஹீரோவை வீட்டில் பூட்டிவைத்துவிட்டுக் காத்திருக்கும் காட்சிகள் திக் திக்.
நிறைய லாஜிக் ஓட்டைகள். உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று. ஹீரோவை சம்பத் கோஷ்டி கொலை செய்வதற்காக பைக்கில் கூட்டிச்செல்கிறார்கள். போகும் வழியில் போக்குவரத்துப் போலிஸ் மடக்குகிறார்கள். ஹீரோ அங்கேயே போலீசிடம் சொல்லித் தப்பித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு மூச்சிரைக்க ஓடிப்போய் சாப்பிட்டுவிட்டு எக்சர்சைஸ் செய்து சண்டைக்குத் தயாராகிறார். கடவுளே!
வத்திக்குச்சி - பத்திக்கவில்லை.
அருண் O -ve (சிறுகதை)
Monday, March 11, 2013
Posted by கார்த்திக் சரவணன்
அருண் O -ve
என் பெயர் அருண். நான் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது ரத்த வகை ஓ நெகட்டிவ். ரொம்பநாள் வரை எனக்கு என் பிளட் குரூப் என்னவென்றே தெரியாது. அதற்கான அவசியமும் வந்ததில்லை. காரணம் ஆண்டவன் எனக்கு ஆரோக்கியமான உடலைக் கொடுத்திருக்கிறான். கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து ரத்ததானம் கேட்டு வந்திருந்தார்கள். ரத்தம் கொடுக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அம்மா மறுத்துவிட்டதால் கொடுக்கவில்லை.
இந்நிலையில் நான் படித்து முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூவில் பிரபல தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எல்லா தகுதிச் சுற்றுக்களும் முடிந்த பின்னர் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வதற்கு அவர்களே ஒரு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் வேலைக்குச் சேர்வதாகத் தெரிவித்தேன். அன்றே அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்தார்கள். ஜாயின் செய்யும் நாள் அன்று எச் ஆர் டிப்பார்ட்மென்டில் மதுரைப்பாண்டியன் என்பவரைப் பார்க்குமாறு சொன்னார்கள்.
நிறுவனத்தில் சேரும் நாளன்று எச் ஆர் டிப்பார்ட்மென்டின் காத்திருக்கும் அறையில் அமர்ந்திருந்தேன். "மிஸ்டர் அருண்" என்று ஒருவர் அழைத்தார். பார்ப்பதற்கு ஒல்லியாக வெள்ளையாக இருந்தார். மீசை இல்லை, முகத்துக்கும் உருவத்துக்கும் சம்பந்தமில்லாத கண்ணாடி அணிந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் எனக்குப் பிடிக்கவில்லை. "ப்ளீஸ் கம்" என்று தனது அறைக்கு அழைத்துச் சென்றார். "மிஸ்டர் அருண், ஐயாம் மதுரைப்பாண்டியன்" என்றார். நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். "என்ன மிஸ்டர் அருண், மதுரைப்பாண்டியன்னா பெரிய மீசையோட கையில அருவாளை வச்சிருப்பேன்னு கற்பனை பண்ணிருந்தீங்களா" என்றார். ஆச்சரியத்தை மறைத்துக்கொண்டு, "நோ சார்" என்றேன்.
வேலையில் சேர்வதற்கான பார்மாலிட்டிகளை ஒரு அரை மணி நேரத்தில் முடித்துக் கொடுத்தார். "மிஸ்டர் அருண், உங்களுக்கு தம், தண்ணி இந்தமாதிரிப் பழக்கம் இருக்கா?" என்றார். "நோ சார்" என்றேன். "நீங்க இருந்தாலும் இல்லன்னுதானே சொல்லுவீங்க" என்று சொல்லி ஏதோ உலகமகா ஜோக் சொன்னதுபோல் சத்தமாகச் சிரித்தார். அதன் பிறகு நான் வேலை பார்க்கப் போக வேண்டிய டிப்பார்ட்மென்ட் பற்றி சொன்னார். என்னுடைய டீம் லீடரை சந்திக்க வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார். என்னுடைய டிப்பார்ட்மென்டுக்கு ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருந்தது. போகும்போது லொடலொடவென்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கோ எப்படா நம்ம டிப்பார்ட்மென்ட் வரும் என்றிருந்தது. நமக்கு வர்ற பாஸும் இவரை மாதிரியே இருக்கக்கூடாதென்று கடவுளை வேண்டிக்கொண்டே நடந்தேன்.
ஒருவழியாக என் டிப்பார்ட்மென்டை அடைந்தோம். என்னுடைய டீம் லீடரைப் பார்த்தேன். நல்ல மனிதராகத்தான் இருந்தார். "மிஸ்டர் கணேஷ், ஹீ இஸ் மிஸ்டர் அருண், நியூலி ஜாயிண்ட்" என்று அறிமுகப்படுத்தி வைத்தார் மதுரைப்பாண்டியன். "வெல்கம் மிஸ்டர் அருண்" என்றார் என் டீம் லீடர். "ஹலோ சார்" என்றேன். "நோ நோ, கால் மீ கணேஷ், இங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவங்களை சார்னோ மேடம்னோ கூப்பிடக்கூடாது. பேர் சொல்லித்தான் கூப்பிடணும், இதுதான் உங்களுக்கு முதல் பாடம்" என்றார். "ஓகே, கணேஷ்" என்றேன். மதுரைப்பாண்டியன், "கணேஷ், அருண் வில் பி ஆன் லீவ் டுடே, ஓகே?" என்றார். கணேஷ் அவரை கேள்விக்குறியுடன் பார்த்தார். "யெஸ் கணேஷ், ஹி இஸ் ஓ நெகட்டிவ்" என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிளட் குரூப்புக்கும் ஜாயின் பண்ற அன்னைக்கே லீவ் போடுவதற்கும் என்ன சம்பந்தம் என்றே யோசித்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் லேட்டாகப் புரியவரவே, அடப்பாவிகளா அப்படின்னா என்னைக் கூட்டிட்டுப் போய் ரத்தம் எடுக்கப் போறீங்களா, நீங்க நல்லா வருவீங்கடா என்று மனதுக்குள்ளேயே திட்டினேன். மதுரைப்பாண்டியன் கணேஷிடம் பேசிவிட்டு, "கமான் அருண், நான் லெட்டர் தர்றேன், அந்த ஹாஸ்பிட்டல் போய் பிளட் டொனேட் பண்ணிடுங்க, இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு ஆபிஸ் வந்தா போதும்" என்று அழைத்துச் சென்றார். ஆடு கூட தலையை சிலுப்பினாத்தானேடா வெட்டுவாங்க, இங்க என்னடான்னா என்னன்னுகூட சொல்லாம கூட்டிட்டுப் போறாரே என்று உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டிருந்தேன்.
"மிஸ்டர் அருண், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியுது. என்னடா ஒண்ணுமே சொல்லாம பிளட் டொனேட் பண்ண கூட்டிட்டுப் போறாரேன்னு தானே" என்றார். மனசுக்குள்ளகூட நினைக்க விடமாட்டீங்கறீங்களே என்று நினைத்துக்கொண்டு, "அ.. ஆமா சார், இ.. இல்ல சார்" என்று வழிந்தேன்.
"அருண், ஓ நெகட்டிவ் ரொம்ப ரேர் டைப், கிடைக்கிறது கஷ்டம்"
"இல்லையே சார், ஏபி நெகட்டிவ் தானே ரேர்னு சொல்லுவாங்க"
"யு ஆர் ரைட் அருண், ஏபி நெகட்டிவ் தான் ரொம்ப ரேர், இந்தியாவில 0.2% மக்கள்ட்ட மட்டும்தான் இருக்கு, ஆனா அவங்களுக்கு ஓ நெகட்டிவ், ஏ நெகட்டிவ், பி நெகட்டிவ் பிளட்டும் கொடுக்கலாம், ஆனா உன்ன மாதிரி ஓ நெகட்டிவ் மக்களுக்கு ஓ நெகட்டிவ் பிளட் மட்டும்தான் கொடுக்க முடியும். அதனால தான் நம்ம கம்பெனியில ஜாய்ன் பண்றவங்கள்ல ஓ நெகட்டிவ் பிளட் இருக்கிறவங்களை நான் வலுக்கட்டாயமா பிளட் டொனேட் பண்ண வச்சிடறேன்" என்றார்.
ஆஸ்பத்திரியில் அந்த ஏசி அறையை அடைந்ததும் எனக்கு மனதில் கொஞ்சம் ஓரமாக பயம் மின்னல் போல வந்துபோனது. ஆனால் அங்கே ஏற்கனவே இரண்டு பேர் ரத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் மனம் ஆசுவாசமானது. முதலில் ஒரு நர்ஸ் வந்தாள்.
"சார் உங்க பேரு" என்றாள்.
"அருண்" என்றேன்.
"எங்கிருந்து வர்றீங்க?"
கம்பெனி பெயரைச் சொன்னேன்.
"ஓ, மதுரைப்பாண்டியன் சார் அனுப்பி வச்சாரா" என்றாள்.
"ஆமா"
ஒரு ஃபார்ம் கொடுத்தாள். பூர்த்தி செய்து கொடுத்தேன். "காலைல என்ன சாப்பிட்டீங்க?" என்று கேட்டாள். "இட்லி" என்றேன்.
இன்னொரு நர்ஸ் வந்தாள், கையில் ரப்பர் போன்ற ஒன்றை வைத்து இறுக்கமாகக் கட்டினாள். தட்டித் தட்டி ஒரு நரம்பைத் தேடிக் கண்டுபிடித்தாள். ஒரு சிறிய சிரிஞ்சில் கொஞ்சம் ரத்தம் எடுத்துக் கொண்டாள்.
"இவ்வளவுதானா?" என்றேன்.
"இல்ல சார், இது சாம்பிள்" என்றாள்
"சாம்பிளா, எதுக்கு?"
"உங்களுக்கு ரத்த சோகை, கேன்சர், எச் ஐ வி ஏதும் இருக்கான்னு பார்க்க"
உள்ளே சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து வேறு ஒரு நர்ஸ் வந்தாள். ஒரு படுக்கையில் சாய்வாக படுக்க வைத்தாள். மீண்டும் ரப்பர் கொண்டு கையில் கட்டு, ஒரு ஊசிக்குத்தல். இந்தமுறை கடுமையாக வலித்தது. ஏதேதோ ட்யூப்களை எடுத்து சொருகினாள். பின் ரப்பரின் இறுக்கத்தைத் தளர்த்தினாள். என் கை வழியாக சூடான ரத்தம் ட்யூபுக்குப் பாய்வது எனக்கே நன்றாகத் தெரிந்தது. என் கையில் ஒரு பந்தைக் கொடுத்தாள். "சார், முடியும் வரை இதை அமுக்கிட்டே இருங்க" என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்தாள். "சிஸ்டர், என்னை விட்டுட்டுப் போறீங்களே" என்று பரிதாபமாகக் கேட்டேன். "இருக்கட்டும் சார், கொஞ்சம் டைம் ஆகும்" என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். மூக்கு உடைந்ததோ, இருந்தால் என்ன, என் ரத்தம் வீணாகக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தாள். என் பக்கத்தில் நின்று ரத்தம் ட்யூப் வழியாக பையில் சேருவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். நானாக இருந்தால் மயங்கி விழுந்திருப்பேன்.
"எவ்வளவு எடுப்பீங்க?" என்றேன்
"ஒரு யூனிட்" என்றாள்
"ஒரு யூனிட்னா?"
"350 மில்லி"
அதற்குள் பை நிரம்பிவிட்டது போலும். கையில் குத்தியிருந்த ஊசியை எடுத்து அந்த இடத்தில் ஒரு பஞ்சை வைத்து கையை மடக்கச் சொன்னாள். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கச்சொன்னாள்.
"சிஸ்டர், நான் கொடுத்த பிளட் எப்போ இன்னொருத்தருக்கு ஏத்துவீங்க?"
"சார், உங்க ரத்தத்தை வாங்கி நாங்க வேஸ்ட் பண்றோம்னு நினைக்கிறீங்க. ஒரு நாளைக்கு எங்களுக்கு மட்டும் 5000 யூனிட் ரத்தம் தேவைப்படுது. ஆனா இங்க வந்து டொனேட் பண்றவங்கள்ட்ட இருந்து 1000 யூனிட் மட்டும்தான் கிடைக்குது. பத்தாததுக்கு வெளியில நிறைய பிளட் பேங்க்லருந்து வாங்கறோம். ஆனாலும் பத்த மாட்டங்குது. உங்க ரத்தம் இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ளயே ஆப்பரேஷனுக்கோ ஆக்சிடென்ட் ஆனவங்களுக்கோ போயிடும். ஏன்னா, உங்களுது ஓ நெகட்டிவ். கிடைக்கறது கஷ்டம். உங்க ரத்தத்தை வச்சு மூணு பேரக்கூட காப்பாத்துவோம், இன்னைக்கு நீங்க கொடுத்த ரத்தத்தை ரெண்டு நாள்ல உங்க உடம்பு திரும்பவும் உற்பத்தி பண்ணிடும். ரெண்டு மாசத்துல ரெட் செல்ஸ் சரியான அளவுக்கு வந்திரும். அதனால திரும்பவும் நீங்க மூணாவது மாசம் ரத்தம் கொடுக்கலாம்" என்று விளக்கத்தைக் கொடுத்தாள்.
அவள் கொடுத்த ஜூஸைக் குடித்தேன். பிஸ்கட் சாப்பிட்டேன். மனதில் அவள் சொன்னதே மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. இன்று நான் செய்திருக்கும் காரியம் மூன்று பேர் உயிரைக் காப்பாற்றப் போகிறது என்ற திருப்தியே மனதில் மேலோங்கியிருந்தது. மதுரைப்பாண்டியன் சார் மீது எனக்கு ஒரு தனி மரியாதை வந்தது.
======
நண்பர்களே, படித்துவிட்டீர்களா.. கருத்தைச் சொல்லிட்டுப் போங்க... நீங்க சொல்லும் கருத்தை வைத்துத்தான் இதன் தொடர்ச்சியான "என் ரத்தத்தின் ரத்தமே" என்ற சிறுகதையை எழுதலாம் என்றிருக்கிறேன். நன்றி...
இவனை என்ன செய்யலாம்?
Thursday, March 07, 2013
Posted by கார்த்திக் சரவணன்
இவனை என்ன செய்யலாம்?
இரவு ஒன்பது மணி. நான் தொடரும் பதிவுகளைப் படித்து பின்னூட்டங்களை பதிப்பித்துக் கொண்டிருந்தேன். என் அலைபேசி ஒலித்தது. குமார் ஈயென்று சிரித்துக்கொண்டிருந்தான். அவன் என்னுடன் ஆலப்புழைக்கு வந்தவன். இந்த நேரத்தில் எதற்காக அழைக்கிறான் என்ற கேள்வி மனதில் ஓட போனை எடுத்து ஹலோ என்றேன்.
"ஹலோ, நான் தான் பேசறேன்"
"ம்.. சொல்லு, என்ன இந்த நேரத்தில"
"ஒண்ணுமில்ல, நாம ஆலப்புழா போனோமில்லையா, அந்த போட்டோவெல்லாம் வச்சிருக்கியா"
"ம், இருக்கே"
"அதை நாளைக்கு வரும்போது பென் டிரைவில காப்பி பண்ணி கொண்டு வர்றியா"
"கண்டிப்பா.."
"எதுக்குன்னு கேக்கலை"
"எதுக்குன்னு எதுக்கு கேக்கணும், இதெல்லாம் பொக்கிஷம். நாம போய்ட்டு வந்த நினைவுகளை அப்பப்ப ரீகலெக்ட் பண்ணிக்கலாம். ரொம்ப நாள் கழிச்சு பார்க்கும்போது நமக்கு ஏற்படற ஆனந்தமே அலாதி தான்"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை. எங்க ரிலேட்டிவ் ஒருத்தர் வந்திருக்கார். அவர் குடும்பத்தோட ஆலப்புழா போகணும்னு சொன்னார். அதனாலதான் கேட்டேன்"
"ஓ, அப்படியா.. ஒண்ணு பண்ணு, எல்லா போட்டோவும் கூகுள் டிரைவ்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன். என்னோட ஐடி தர்றேன், நீ இப்பவே பார்த்துக்கோ"
"கூகுள் டிரைவா? அப்படின்னா?"
"அது கூகுள் நமக்கு கொடுக்கிற ஒரு facility . அதில நம்முடைய முக்கியமான டாகுமென்டுகளை சேவ் பண்ணி வச்சிக்கலாம்."
"அதெல்லாம் எனக்கு ஓப்பன் பண்ணத் தெரியாதே"
"அது ரொம்ப ஈசி தான், நீ கொஞ்சம் டிரை பண்ணிப் பாரு"
"வேண்டாம், எனக்கு எல்லா போட்டோவும் தேவையில்ல. வந்திருக்கிறவருக்கு போட் ஹவுஸ் எப்படி இருக்கும்னு காட்டணும், அது போதும்"
"இவ்வளவுதானா, அப்போ என் வெப்சைட்டிலயே பாத்துக்கலாமே, நான் தான் நிறைய போட்டோ அப்லோட் பண்ணி வச்சிருக்கேனே"
"ஓ, உனக்கு வெப்சைட்டெல்லாம் இருக்கா, அட்ரஸ் சொல்லு"
"ஸ்கூல்பையன் 2012 டாட் ப்ளாக்ஸ்பாட் டாட் இன்"
"என்ன ஸ்பாட்?"
"ப்ளாக்"
"என்னது? க்ளாக்கா?"
"இல்ல, ப்ளாக். பி எல் ஓ ஜி"
"ப்ளாக்னா?"
"அதுவும் கூகுள் தர்ற ஒரு வசதி தான். அதை யூஸ் பண்ணித்தான் ஸ்கூல் பையன் கிற வெப்சைட் ஓப்பன் பண்ணிருக்கேன்"
"ஸ்கூல் பையன் யாரு"
"என் பையன்"
"அவன் ஸ்கூல் பையன்னு தான் எனக்குத் தெரியுமே, அத எதுக்கு வெப்சைட்டுக்கு பேரா வச்சிருக்க?"
"அட ஞானசூனியமே, உனக்கு போட்டோதானே வேணும், நான் சொன்ன அட்ரசில போய்ப்பாரு. இருக்கும்"
"நீ ரொம்ப கஷ்டமான அட்ரசா சொல்ற, வேற எதாவது வழி இருக்கா?"
"ஒண்ணு பண்ணு, கூகுள்ல போய் ஸ்கூல் பையன்னு தமிழ்ல டைப் பண்ணி சர்ச் கொடு, வந்திரும்"
"எனக்கு தமிழ் டைப்பிங் தெரியாதே"
"தமிழ் டைப்பிங் தெரியணும்னு அவசியம் இல்ல. யுனிகோட்ல டைப் பண்ணலாம்"
"யுனிகோட்னா?"
"தமிழை இங்கிலீஷ்ல டைப் பண்ணா போதும், அதுவே மாறிக்கும். இப்போ அம்மானு டைப் பண்ணனும்னா ஏ எம் எம் ஏ ஏ னு டைப் அடிச்சா போதும், அதுவே தமிழ்ல அம்மானு வந்திரும்"
"கூகுள்ல அதுவே மாறுமா?"
"மாறாது, உன் கம்ப்யூட்டர்ல செட்டிங் மாத்தணும். அதெல்லாம் இப்போ பண்ண வேண்டாம், தமிழ் எடிட்டர் டாட் ஓஆர்ஜினு ஒரு சைட் இருக்கு. அதில போய் ஸ்கூல் பையன்னு நான் சொன்ன மாதிரி டைப் பண்ணு, அதை காப்பி பண்ணி கூகுள்ல போய் பேஸ்ட் பண்ணு, ரிசல்ட்ல வரும், பாத்துக்கோ"
"என்னப்பா, ரெண்டு மூணு போட்டோ கேட்டா நீ இத்தனை வெப்சைட் சொல்ற"
"சரி, உன் மெயில் ஐடி கொடு. நாலஞ்சு போட்டோ இப்பவே அனுப்பறேன், சிம்பிளா முடிஞ்சிரும்"
"எனக்கு மெயில் ஐடியே கிடையாதே, ஆபிஸ் மெயில் மட்டும்தான் இருக்கு"
" "
"அதுக்குத்தான் சொன்னேன், பென் டிரைவில காப்பி பண்ணி நாளைக்கு ஆபிசுக்கு வரும்போது எடுத்துட்டு வான்னு"
" "
"பாரு இவ்வளவு நேரம் பேசி எனக்கு இருபது ரூபாய் போச்சு"
" "
"நாளைக்கு வரும்போது எடுத்துட்டு வந்திரு"
"சரி"
போனை வைத்துவிட்டேன். எனக்கு கோபம் அடங்க அரை மணி நேரம் ஆச்சு.
நீங்களே சொல்லுங்க. இவனையெல்லாம் என்ன செய்யலாம்?
டிஸ்கி:
இப்படி ஒரு பதிவு எழுதப் போவதாக சம்பந்தப்பட்ட குமாரிடம் நான் ஏற்கனவே விவாதித்துவிட்டேன். அவர் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்று தெரிவித்துவிட்டார். அதனால் நண்பர்கள் பின்னூட்டத்தில் என்னைத் திட்டவேண்டாம். உக்கும், அவருக்கு தெரியாம போட்டிருந்தா மட்டும் அவர் வந்து படிச்சிட்டு திட்டவா போறார்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது. வரட்டா...
Subscribe to:
Posts (Atom)