துப்பாக்கி ‍- சினிமா விமர்சனம்

விஜய் இந்த மாதிரியான படங்களில் நடித்து ரொம்ப நாளாயிற்று.  சமீப காலமாக ஆவரேஜ் ஹிட்டும் ப்ளாப்பும் கொடுத்தவருக்கு துப்பாக்கி ஒரு திருப்புமுனை.  பொதுவாக அவரது படங்கள் தோல்வியடைவதற்குக் காரணம் சரியான கதையைத் தேர்ந்தெடுக்காதது தான்.  ஆனால் இந்தப்படம் அவருடைய இமேஜை தக்க வைக்கும் விதமாகவும் அவருடைய நடிப்புக்கு சவாலாகவும் இருப்பது மகிழ்ச்சி. விஜய்க்கு மட்டுமல்ல, ஏழாம் அறிவு(அறுவு) படத்தின் மூலம் தன் பெயரை கொஞ்சம் கெடுத்துக்கொண்ட இயக்குநர் ஏ ஆர் முருகதாசுக்கும் இந்தப்படம் ஒரு திருப்புமுனை தான்.  கதை ஜெய்சங்கர் காலத்தியதாக இருந்தாலும் திரைக்கதையில் நேர்த்தி செய்து நீட்டாக கொடுத்திருக்கிறார்.

கதை என்ன?  மாவு என்னமோ பழசுதான்.  அதை வார்த்த விதத்தில் புதுமை காட்டியது புதுசு.  விஜய் ஒரு மிலிட்டரி ஆபிசர்.  அது என்னமோ இன்டலிஜென்ட் ஏஜன்ட் என்று யாருக்கும் தெரியாத ஒரு வேலையும் இந்திய அரசுக்காக செய்கிறார்.  ஒரு வேலையாக மும்பை சென்றிருக்கும் அவர் எதேச்சையாக ஒரு தீவிரவாதியை போலிசில் பிடித்துக் கொடுத்துவிடுகிறார்.  அந்த தீவிரவாதி போலிஸ் கஸ்டடியில் இருந்து தப்பிக்க அவனை மீண்டும் பிடித்து தன் கஸ்டடியில் வைத்துக்கொள்கிறார்.  அவனை தப்பிக்க விட்ட சீப் செக்யூரிட்டி ஆபிசரை தற்கொலை செய்ய வைக்கிறார்.
அந்த தீவிரவாதி தனது கூட்டாளிகளுடன் மும்பையில் மொத்தம் 12 இடங்களில் தாக்கப்போவதை அறிந்த விஜய், அவனை யார் இயக்குகிறார்,  அவன் தன் கூட்டாளிகளுடன் என்ன செய்யப்போகிறான் என்று  கண்டுபிடிக்க அவனை தன் வீட்டிலிருந்து தப்பவிடுகிறார், கூடவே தன் மிலிட்டரி நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் அனைவரையும் போட்டுத்தள்ளுகிறார்.
இதை அறிந்த தீவிரவாதி தலைவன் வித்யுத் ஜாம்வால் டென்ஷனாகிறார்.  தன் குழுவினரை தீர்த்துக்கட்டிய அனைவரையும் பழி வாங்கப் புறப்படுகிறார்.  அவர் பழிவாங்க என்ன முயற்சி எடுத்தார், அதை விஜய் எப்படி முறியடித்தார் என்பதை தியேட்டரில் சென்று பாருங்கள்.
விஜய் செம அழகு.  அதிலும் அவரது காஸ்ட்யூம் சூப்பர்.  ஒவ்வொரு சீனிலும் ஒவ்வொரு டிரெஸ்ஸில் கலக்கலாக இருக்கிறார்.  லேசான ஆட்டு தாடியுடன் வரும் அவர் சன் கிளாசில் மிக ஸ்டைலிஷ்.  அதிலும் இந்தப்படத்தில் அவருக்கு ஸ்டைலான நடிப்பும் வசன உச்சரிப்பும் கை கொடுக்கின்றன. மனிதர் சாதாரணமாக நடித்திருக்கிறார்.

காஜல் அகர்வால் வழக்கம்போல் எல்லா படங்களிலும் வருவதுபோல் வருகிறார், ஆடுகிறார், பாடுகிறார், ரொமான்ஸ் பண்ணுகிறார்.  அவர் வரும்போதெல்லாம் பாடல் ஒன்று உறுதியாகி விடுகிறது.  பார்ட்டி வெயிட் போட்டதுபோல் தெரிகிறது, கொஞ்சம் உடம்பைக் குறைங்க அம்மணி...
கொஞ்ச நேரமே வந்தாலும் ஜெயராம் சிரிக்க வைக்கிறார்.  அவர் இன்ட்ரோ ஆகும் காபி டே காட்சியில் அப்ளாஸை அள்ளுகிறார்.  சப் இன்ஸ்பெக்டராகவும் விஜயின் நண்பராகவும் வரும் சத்யன் கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.  த‌ன் மாமியாரை திட்டிக்கொண்டே அவ‌ர் பேசும் வ‌ச‌ன‌ங்க‌ள் க‌ல‌க‌ல‌ ர‌க‌ம்.
இசை ஹாரிஸ் ஜெய‌ராஜ்.  பாட‌ல்க‌ள் ஏற்க‌ன‌வே சூப்ப‌ர்ஹிட்.  அதிலும் அண்டார்ட்டிகா பாட‌லிலும் கூகிள் கூகிள் பாட‌லும் கேட்க‌ இனிமை.  கூகிள் பாட‌லை விஜ‌ய் பாடியிருப்ப‌தால் தியேட்ட‌ரில் விசில் ச‌த்த‌ம் காதைப் பிள‌க்கிற‌து.  பிண்ண‌னி இசையும் அருமை.  அதிலும் விஜய் தன் வீட்டுக்குச் சென்று தீவிர‌வாதியை அடைத்து வைத்திருக்கும் தன் அறைக்குச் செல்லும்போது ஒலிக்கும் த‌ம்புரா ஒலியும் ஒற்றை வ‌ய‌லினும் ந‌ம்மை ம‌ய‌க்குகின்றன. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே தங்கள் பங்குக்கு நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று (நிச்சயமாக) காணக்கூடிய ஒரு தரமான திரைப்படமாக வந்திருக்கிறது "துப்பாக்கி".


டிஸ்கி:  இது ஒரு கமர்சியல் முயற்சி.  சினிமா விமர்சனத்துக்கு எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்தப் பதிவு.  நண்பர்கள் தயவு செய்து தங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும்.