இந்திய முழுவதும் கிளைகள் பரப்பியிருக்கும் அந்த நிறுவனம் அவனை திடீரென்று ஒரு நாள் கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையிலிருக்கும் தொழிற்சாலைக்கு பணி மாற்றம் செய்தது. இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த அவன் தனது வேலையை ராஜினாமா செய்துவிடலாம் என்று முடிவு செய்திருந்த சமயம் அது. அவனது அம்மா ஒரு நாள் அவனை அழைத்து உனக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றார். திருமணம் பற்றியும் மணவாழ்க்கை பற்றியும் அதிகம் அறிந்திருந்தாலும் அனுபவப்பட்டிராத அவனுக்கு உள்ளூர மகிழ்ச்சி இருந்தாலும் அன்றைய வயதையும் பணி நிலையையும் கருத்தில் கொண்டு இப்ப என்னம்மா அவசரம் என்று தன் தாயிடம் கூற, அவரோ அதை வழக்கமாக எல்லா வயசுப்பையன்களும் சொல்வதுபோலவே எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்.


ஒரு பெண் பார்க்கும் படலம் எப்படி இருக்கும்? பெண்ணின் வீட்டு வாசலில் பெரிதாய் வண்ணக்கோலம் ஒன்று இன்முகம் காட்டி வரவேற்கும் அல்லது வரவேற்பதாய்த் தோன்றும். குறைந்தபட்சம் பெண் வீட்டார் சார்பில் இருபதுக்கும் மேற்பட்டோர் இருந்திருப்பார்கள்.  ஆனால் அன்றைக்கு அப்படி இல்லை. வீட்டில் பெரியவர்களும் ஐந்தாறு குழந்தைகளும் மட்டுமே இருந்திருந்தார்கள். பெண் பார்க்கச் சென்றவர்களும் மொத்தமாக ஆறு பேர் மட்டுமே. அவர்களுமே வேண்டா வெறுப்பாகத்தான் போயிருந்தனர். காரணம் இருக்கிறது. அந்தப் பெண் வீட்டார் ஆரம்பம் முதலே “பெண் பார்ப்பது” என்பதைத் தவிர்த்து வந்திருந்தார்கள். அவளுடைய சித்தப்பாவும் பையன் வீட்டாரிடம் வந்து பார்க்குமாறு சொல்லிக்கொண்டே இருந்தார் – ஆனால் எங்கே எப்போது என்பதை சொல்லவேயில்லை. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகக் கூறிவிட்டார்.

“எங்க அண்ணன் பொண்ணு தான். மூத்தவ. பொறந்தது ஸ்ரீவில்லிபுத்தூர்ல. அண்ணன் மிலிட்டிரிங்கிறதால நிறைய ஊர்ல இருந்திருக்கிறாங்க. முக்கியமா வடக்கு பக்கம். தமிழ் பேச மட்டும் தான் தெரியும். கொஞ்சம் கொஞ்சம் படிப்பா. எழுதத் தெரியாது. ஆனா ஹிந்தி நல்லா பேசுவா, படிப்பா. முக்கியமான விஷயம். அவளுக்கு சின்ன வயசுல ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணிருக்கு. இப்போ ஒண்ணும் பிரச்சனையில்லை. ஆனா அவ பயப்படுறா, எனக்கு மாப்பிள்ளை பாக்கிறதா இருந்தா முதல்ல இந்த விஷயத்தை சொல்லித்தான் கேக்கணும், கல்யாணத்துக்கு அப்புறம் இந்த விஷயம் தெரிஞ்சா மாப்பிள்ளை சண்டை போடுவார், இவ்வளவு பெரிய தழும்பை உடம்பில வச்சிக்கிட்டு நாளைக்கு ஏதாவது பிரச்சனைனா தாங்க முடியாதுனு சொல்லிருக்கா” என்றார்.

ஆரம்பத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை. ஆனால் பெண்ணின் சித்தப்பா அடிக்கடி இவர்களுடைய வீட்டுக்கு வந்து என்றைக்குப் பார்க்கலாம் என்கிற ரீதியில் கேட்கத் தொடங்க, இவர்களும் ஒரு வழியாக பெண் பார்ப்பதற்கு சம்மதித்தார்கள்.


அவளுக்கு சிறு வயதிலேயே இருதயத்தில் ஏதோ பிரச்சனை. ஏதோ ஒரு சிண்ட்ரோம் என்று அன்றைய தேதியிலிருக்கும் மருவத்துவ சான்றிதழ் கூறுகிறது. அதை சரி செய்வதற்காக எண்பத்து நான்கின் இறுதியில் புனேயிலுள்ள மிலிட்டரி மருத்துவமனையில் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்தார்கள். அந்தக் காலத்தில் இது மிகப் பெரிய அறுவை சிகிச்சை – இப்போது இருக்கும் தொழில்நுட்பம் அப்போது இல்லை. மருத்துவருக்கும் அது முதல் சிகிச்சை வேறு. யாருக்கும் நம்பிக்கை இருந்திருக்கவில்லை. ஆனால் தான் சாதிக்க வந்ததை சாதித்துவிட்டுத்தான் போவேன், மாய்ந்து போய்விட மாட்டேன் என்று போன ஜென்மத்திலோ அல்லது இந்த ஜென்மத்தின் தொடக்கத்திலோ சபதம் எடுத்திருப்பாள் போல. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆறு மாதங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தாள்.


அவளுக்குத்தான் இந்த பயம். தன்னைப் பெண் பார்க்க வந்துவிட்டு இதைக் காரணம் காட்டி நிராகரித்துவிட்டால் – அவளால் தாங்கிக்கொள்ள முடியாதென்று அவளது பெற்றோருக்குத் தெரிந்திருந்தது. அதனால் தான் அவளிடம் சொல்லாமலேயே மாப்பிள்ளை வீட்டாரிடம் வரச்சொல்லியிருந்தார்கள். அதனால் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லை. பெண்கள் உள்ளறையில் சென்று அங்கிருக்கும் மற்ற பெண்களிடம் பேசிக்கொண்டிருக்க ஆண்கள் மட்டும் வெளியறையில் அமர்ந்திருந்தனர். மாப்பிள்ளைப் பையனிடம் யாரோ ஒருவர் வந்து, “அதோ, அந்தா நடுவுல உக்காந்திருக்கா பாருங்க, அதான் பொண்ணு” என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஆட்காட்டி விரல் சுட்டிக்காட்டும் திசையில் பட்டென்று பார்க்கும் பழக்கம் இல்லாத அந்தப் பையன் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன். அவர் போய் சிறிது நேரம் கழித்து அவர் காட்டிய திசையில் நோக்க, அங்கே அங்கிருந்த பெண்கள் அனைவரும் இடம் மாறியிருந்தார்கள். இதை அவன் புரிந்துகொண்டுவிட்டான். கொஞ்ச நேரத்திலேயே அவனுடன் வந்திருந்த பெண்கள் அனைவரும் உள்ளறையிலிருந்து வெளியே வர, வெளியறையில் அமர்ந்திருந்த ஆண்களும் புறப்படத் தயாரானார்கள். போகலாமா என்று அவனுடைய தந்தை அவனிடம் கேட்க, நான் இன்னும் பொண்ணைப் பாக்கலை என்று அனைவர் முன்னாலும் சத்தமாகக் கூறிவிட்டான். அந்த வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த இவ்விஷயம் சிறு குழந்தைக்குப் புரியும்படி இவன் சத்தமாகக் கூறியதும் வீடே ஒரு நிமிடம் அமைதியானது. அங்கிருந்த பாட்டி ஒன்று, ‘சரி, சரி... இங்க உக்காருங்க தம்பி, ஏம்மா நீ இங்க வா, உக்காரு’ என்று கூறி மாப்பிள்ளைப் பையனையும் பெண் பிள்ளையையும் எதிரெதிரே அமர வைத்தார்.


தான் அந்தப் பெண்ணைப் பார்ப்பதை வீட்டிலுள்ள அனைவருமே பார்க்கிறார்களே என்று அந்தப் பையனுக்கோ வெட்கம் பிடுங்கித்தின்ன ஆரம்பித்தது. ஒரு வழியாய் நன்றாகவோ அரைகுறையாகவோ பார்த்திருந்தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இப்போது தான் தெரிந்துவிட்டதே. புறப்படும்போது போய் போன் பண்றோம் என்று சம்பிரதாயமாக சொல்லிவிட்டு வந்துவிட்டனர். அந்தப் பையனின் அம்மாவுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது போலும். “நல்லாருக்கால்ல, பல்லு நல்லாருக்கு, கலரா இருக்கா” என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார். அவனுக்கு மட்டும் அந்த அறுவை சிகிச்சை விஷயம் கொஞ்சம் நெருடலாக இருந்தது.  வீட்டுக்கு வந்ததும் அவனுடைய அம்மா அவனிடம், நாட்ல எவ்வளவோ பேர் எவ்வளவோ வியாதியை வச்சிக்கிட்டு வாழ்க்கையை ஓட்டிட்டுப் போறாங்க. இது என்ன வெறும் தழும்பு தானே, விடு” என்றார்.


அவ்வளவுதான். அடுத்த ஆறு மாதங்களிலேயே திருமணம். பதினோரு வருடங்கள் கடந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். ஒன்பது வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சமயத்தில் கூட மருத்துவர் ஸ்டெத்தெஸ்கோப் வைத்து சோதனை செய்யும்போது அவரது முகபாவங்கள் மாறுவதைக் காணமுடியும். அவளுடைய மகள் சில சமயங்களில் ‘ஏம்மா உனக்கு ஸ்டேன்டிங் லைன் போட்டிருக்கு’ என்று வெள்ளந்தியாகக் கேட்பதும் உண்டு.



அவளுக்கு என்ன தெரியும்? அது காலத்தின் கட்டாயத்தால் போடப்பட்ட ஒரு கோடு. சிலருக்கு ஐம்பது வயதில், சிலருக்கு அறுபது வயதில். இவளுக்கும் இவளைப்போன்ற சிலருக்கும் சிறு வயதிலேயே.