ஆயிற்று. இந்த பிப்ரவரி வந்தால் சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் முடியப்போகின்றது. இப்போது இருப்பது ஏழாவது வீடு. இந்த வீட்டில் இப்போது இரண்டரை வருடங்கள். இதற்கு முன் இருந்த ராயப்பேட்டை வீட்டில் நான்கு வருடங்கள் போக மூன்று வருடங்களில் ஐந்து வீடுகள் மாறியிருக்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனைகள்.




கும்மிருட்டு, கரப்பான் பூச்சி, எலி, பூனை, தண்ணீர் உள்ளே வரும் பிரச்சனை, தண்ணீர் வெளியே போகாத பிரச்சனை, வோல்டேஜ் சரியில்லாமை, வீட்டு ஓனர் டார்ச்சர், இத்யாதி இத்யாதிகளாய் பலமுறை வீடு மாற்றியாயிற்று. ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் இது ஒரு படிப்பினை, இதுபோன்ற தவறை அடுத்த வீடு பார்க்கையில் செய்யக்கூடாது என்று பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்.


வீடு மாறுதல் என்பது மிகப்பெரிய தொல்லை பிடித்த வேலை. முக்கியமாக சென்னையில். எங்கே போனாலும் பத்து மாத வாடகையை அட்வான்சாக கொடுக்கவேண்டும். வீட்டை காலிசெய்கையில் ஓனர் உடனடியாக அட்வான்ஸைத் திருப்பித்தர மாட்டார். அடுத்த டெனன்ட் வந்து அட்வான்ஸ் கொடுத்ததும் தரேன் என்பார். மாதம் தொடங்கிய இரண்டு நாட்களே வீட்டில் இருந்திருந்தாலும் காலி செய்யும்போது பாதி மாத வாடகை கொடுத்தாக வேண்டும். தவிர போகும் வீட்டுக்கும் அட்வான்ஸ் கொடுத்த தேதியிலிருந்து வாடகை கொடுத்தாக வேண்டும். நானே பலமுறை ஒரே மாதத்தில் இரண்டு வீடுகளுக்கு வாடகை கொடுத்திருக்கிறேன்.


இது ஒருமாதிரியான தொல்லை என்றால் பொருட்களை பத்திரமாக அடுத்த வீட்டுக்கு எடுத்துச் செல்லுதல் வேறு மாதிரியான தொல்லை. அட்டைப் பெட்டியில் அடுக்கி டேப் ஒட்டி எந்தெந்த பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை தனியாக எழுதிவைத்துக்கொண்டு வண்டி பிடித்து அடுத்த வீட்டில் இறக்கி அங்கு பேக் செய்யப்பட பொருட்களை மீண்டும் வெளியே எடுத்து அந்தந்த இடத்தில் வைக்கும்வரை, ஸ்ஸ்ஸ் அபா.... இது ஒரே நாளில் முடியக்கூடிய வேலையும் அல்ல. இந்த வேலைகள் முடியும் வரை வெளியே தான் சாப்பாடு. முக்கியமான விஷயம் – குழந்தைகளையும் பார்த்தாக வேண்டும். அடிக்கடி வீடு மாற்றிய சென்னைவாசிகளுக்கு இது நன்றாகப் புரியும்.


மேற்சொன்னவை அவசரம் அவசரமாக முடித்தாக வேண்டிய வேலைகள். அடுத்ததாக வீடு மாறியதும் நிதானமாக செய்யக்கூடிய ரேஷன் கார்டு மாற்றுதல், கேஸ் கனெக்ஷன் மாற்றுதல், கேபிள், போன் இணைப்பு, வங்கிகளுக்கும் மற்றவர்களுக்கும் கடிதம் கொடுத்து முகவரி மாற்றுதல் போன்றவை. இவையெல்லாம் செய்து செய்து போதும் என்கிற நிலையில்தான் இப்போது இருக்கும் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.


இப்போதிருக்கும் வீடு நெருங்கிய நண்பருடைய அக்காவின் வீடு. கட்டி முடித்து ஐந்து ஆண்டுகளே ஆன இரண்டு படுக்கையறை கொண்ட வீடு. எட்டு வீடுகள் கொண்ட இரட்டை பிளாட். நண்பர் ஒரு வீடையும், நண்பருடைய மனைவியின் தம்பி அதற்கு எதிர் வீடையும் பக்கத்து பிளாட்டில் வாங்கியிருக்கிறார்கள். நான் இருப்பது பக்கத்து பிளாட். பல நாட்களாக பூட்டி வைத்திருந்த வீடுதான். வீட்டு ஓனரான நண்பரின் அக்கா வெளி மாநிலத்தில் இருக்கிறார். கடைசியாக எப்போது சென்னைக்கு வந்தார் என்பது தெரியாது. இவ்வளவு ஏன், நானே ஓரிரு முறை தான் அவருடன் போனில் பேசியிருக்கிறேன்.


நண்பர் மிக நெருக்கமானவர் என்பதால் அட்வான்ஸ் எதுவும் கொடுக்கவில்லை.  வாடகை என்ற பெயரில் ஒரு தொகை கொடுத்தாக வேண்டும் என்பதற்காக வாடகை. அதுவும் மாதம் தொடங்கியதும் ஓனரின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவேன். மற்றபடி வீட்டு உரிமையாளருக்கு என்னவெல்லாம் உரிமை இருக்கிறதோ அத்தனையையும் எனக்குத் தந்திருக்கிறார் நண்பர்.


இங்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன. பிரபாவுக்கு இந்த வீட்டை எப்படியாவது சொந்தமாக்கிவிட வேண்டும் என்பது லட்சியமாகிவிட்டது. ஏதாவது பெரிய பொருள் வாங்கவேண்டும் என்றால் இந்த வீட்டை வாங்கினதுக்கு அப்புறம் வாங்கலாம் என்று திட்டமிடும் அளவுக்குப் போய்விட்டாள். பல விஷயங்களில் இப்படி இருந்தாலும் இதை வாடகை வீடாகப் பாவிக்காமல் சொந்த வீடு போலவே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.


இதுவரை வாடகை ஏற்றியதில்லை. வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளி, ரேஷன் கடை, சூப்பர் மார்க்கெட், பேருந்து நிலையம், நன்றாகப் பழகும் மக்கள், அருகிலேயே அலுவலக நண்பர்கள் என எல்லாமே பழகிவிட்டது.


முதன் முதலில் பிரபா என்னிடம் “இந்த வீட்டை நாமளே சொந்தமாக்கிட்டா?” என்று கேட்டபோது வடிவேலு காமெடியாக நினைத்து சிரிக்கத்தான் செய்தேன். ஆனால் அவளுக்குள் – அவளுடைய மனதுக்குள் சுழன்றுகொண்டிருக்கும் பேராசை – இல்லை நியாயமான ஆசை - கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. “சின்னதா ஒரு கணக்கு போட்டுப் பாரு, இந்த வீடு எண்ணூறு சதுர அடி. ஒரு சதுர அடி ஐயாயிரம் ரூபாய்னு வச்சுக்கோ, நாப்பது லட்சம் ஆச்சு, நாம வாங்குற நேரத்துல எவ்வளவு இருக்கப்போகுதோ, யாருக்குத் தெரியும்? எனக்கு வர்ற சம்பளத்தை வச்சு இவ்வளவு பணம் புரட்டுறது நடக்கவே நடக்காது” என்றிருக்கிறேன்.


இப்போது அவளும் என்னுடன் நிஹோங்கோ படிப்பது கூட இதற்காகத்தான். “நானும் சம்பாதிக்கிறேன், ரெண்டுபேரும் வேலைக்குப் போய் லோன் போட்டு இந்த வீட்டை எப்படியாவது வாங்கிருவோம்” என்றிருக்கிறாள். அவளுக்கு இருக்கும் மனவுறுதி என்னை ரொம்பவே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. சில நேரங்களில் பரிதாபமாகக் கூட இருக்கும். திடீரென்று ஒரு நாள் வீட்டு ஓனர் வீட்டைக் காலிசெய்யும்படிக் கூறினால்? அவளுடைய அப்போதைய நிலையை நினைக்கவே முடியவில்லை.


இத்தனைக்கும் இது அவ்வளவு ராசியான வீடு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. பெரிய முன்னேற்றமோ சறுக்கலோ இன்றி எங்களுடைய வாழ்க்கை அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறது. சலனமற்ற குளத்தை உதாரணமாகக் கொள்ளலாமா? தெரியவில்லை. முக்கியமான விஷயம் - சமீபத்தில் பெய்த மழைக்கு எங்கள் தெருவில் கொஞ்சம் கூட நீர் தேங்கவில்லை. அடுத்த தெருவுக்குச் சென்றுவிட்டால் முழங்கால் அளவுக்குத் தண்ணீரில் நடந்தாகவேண்டும்.


நான்கு நாட்களுக்கு முன்னர் பவன்குமார் வந்திருந்தார். மேல் பிளாட்டில் வசிக்கும் ஆந்திராக்காரர். புகழ்பெற்ற ஜப்பான் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நிஹோங்கோ முடித்ததும் இவருடைய சிபாரிசில் இவர் வேலை செய்யும் நிறுவனத்திலேயே புகுந்துவிடலாமா என்ற ஐடியா கூட இருக்கிறது. அவர் கேட்ட விஷயம் தான் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் அவர் கேட்டது மிக மிக நாகரீகமாக தெளிவாகக் கேட்டார். “இந்த வீட்டு ஓனர் இந்த வீட்டை விக்கிற  மாதிரி ஐடியால  இருக்காங்களா? அப்படி விக்கிற ஐடியால இருந்தால் நீங்க வாங்கற மாதிரி ஐடியால இருக்கீங்களா? அப்படி அவர் விற்கும் ஐடியாவில் இருந்து உங்களால் வாங்க முடியாத நிலையில் இருந்தால் எனக்கு விற்கச்சொல்லி சிபாரிசு செய்வீர்களா?” என்பதாகத்தான். காரணம் இல்லாமலில்லை. அவருடைய தங்கை சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்துவிடலாம் என்றிருக்கிறாராம். அப்படி வந்து ஒரே பிளாட்டில் குடியிருந்தால் பிரச்சனை இல்லை பாருங்கள்.


“எனக்குத் தெரியாது, நான் வேண்டுமென்றால் ஓனரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டேன். பிரபாவுக்கு இதைக் கேட்டதிலிருந்து கடும் கோபம் – எப்படி இவர் வந்து நம்மிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கலாம் என்று. அதற்கு என்ன செய்ய முடியும்? நம்மிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்? தவிர, இந்த வீட்டை நாம் வாங்காதபட்சத்தில் மட்டுமே அவர் வாங்குவதாகச் சொல்லியிருக்கிறார். இதைவிட நாகரீகமாக எப்படிக் கேட்கமுடியும்? என்று அவளுக்கு சமாதானம் சொல்லியிருக்கிறேன். இது வெறும் சமாதானம் தான். நிரந்தரத் தீர்வு என்பது வீட்டை சொந்தமாக்குவதில் தானே இருக்கிறது.  அவர் வந்து கேட்டுவிட்டுப் போனதிலிருந்து இந்த வீடு என் கையிலிருந்து ஒரு அடி தள்ளிப்போனது போன்ற உணர்வு. அவள் அளவுக்கு எனக்கும் மனதில் சங்கடமும் வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக இரண்டுபேரும் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துவிட முடியுமா?


நேற்று நான் நண்பரை ராதாகிருஷ்ணன் சாலை கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-க்கு அழைத்துச் சென்று பேசினேன். எங்களுக்கு அதுதான் மனம்விட்டுப் பேசக்கூடிய இடம். அலுவலகத்தில் நீ யாரோ நான் யாரோ என்றிருப்போம். ஆனால் எங்களுக்கிடையேயான நெருக்கும் நிறைய பேருக்குத் தெரியாது. எங்களுக்குள் முக்கியமான விஷயம் பேசவேண்டுமென்றால் சத்தமில்லாமல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-இல் இரண்டு மசாலா போளிகளும் ஒரு காபியும் சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம். நேற்றும் பேசினேன். பவன்குமார் வந்ததிலிருந்து அவர் கேட்ட ஒவ்வொன்றையும் அட்சரம் பிசகாமல் அப்படியே சொன்னேன். கூடவே எங்களுடைய வருத்தத்தையும் இயலாமையையும்.


தீர்க்கமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். “போன வாரம் கூட அக்கா பேசினா, இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல இந்த வீட்டையும் ஊர்ல இருக்கிற இடத்தையும் வித்துட்டு ஆழ்வார்பேட்டையில ஒரு பங்களா வாங்கலாம்னு நினைக்கிறா” என்றார். எனக்கோ தரை நழுவி பாதாளத்தில் விழுவதுபோன்ற உணர்வு. அந்தப் பார்வையை மட்டும் என்னிடமிருந்து விலக்காமல் சொன்னார், “கவலைப்படாதீங்க, அதுக்குள்ள நீங்களே இந்த வீட்டை வாங்குற அளவுக்கு முன்னேறிருவீங்க” என்றார்.