இது தான் அவருடைய பெயர். வயசு முப்பதுக்குள் இருக்கும். மகளுக்கு கிளாஸ் டீச்சர். எல்.கே.ஜி. B செக்சன் என்று பதினைந்து நாட்களுக்கு முன்னர் பணம் கட்டியபோதே சொன்னார்கள்.

அவரை முதன்முதலில் சந்தித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. மகளை முதல் நாள் பள்ளிக்கு விடச்சென்ற அதே நாள். வகுப்புக்கு வெளியே நின்று பென்சிலால் பெயர்களை டிக் செய்துகொண்டே ஒவ்வொருவராய் உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தார். என் முறை வந்தபோது, “கற்பகாஸ்ரீ” என்றேன். “ஆர்.கற்பகாஸ்ரீ?” என்றார். “இல்லை, எஸ்.கற்பகாஸ்ரீ” என்றேன். “ஓ, ஆபிஸ்ல இனிஷியலை தப்பா எழுதிருக்காங்க. எஸ் தானே” என்று திருத்திக்கொண்டார்.

மகனையும் மகளையும் பள்ளியில் கொண்டுபோய் விடுவது மட்டுமே என்னால் சாத்தியம். மற்றபடி மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவது, பள்ளியில் நடக்கும் விஷயங்களைக் கேட்டறிவது எல்லாம் என் மனைவி தான். என்றைக்காவது அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்திருந்தால் மட்டும் அந்த வேலைகள் எனக்கானது. சிவகாமி, வித்யா, சுந்தரி, இன்னும் சிலர் என் மகன் / மகள் படிக்கும் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் என் மனைவிக்கு தோழியர். தினமும் பள்ளி முடிந்து குழந்தைகள் வரும் வரை சில நிமிடங்கள் இவர்களது அரட்டை நடக்கும். அவ்வப்போது பாடங்கள் பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும் அலைபேசி வாயிலாக பரிமாறப்படும்.

நான் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் நாட்களில் நானே தான் இருவரையும் வீட்டுக்கு அழைத்துவருவேன். பத்து நிமிடங்களுக்கு முன்னதாகப் போய்விடுவேன். காத்திருக்கும் அந்த நேரத்தில் என்னையே சில கண்கள் குறுகுறுவெனப் பார்ப்பதுபோல் இருக்கும். ஒருநாள் அவர்கள் பேசுவது கூட எனக்குக் கேட்டுவிட்டது, “ஏய், இவர்தான்டி பிரபா வீட்டுக்காரர், அப்படியா? நான் கூட யாரோன்னு நினைச்சேன்”. நான் இங்கே எழுத்து வாயிலாக அதிகம் பேசுவேனே தவிர நேரில் பூஜ்யம். புதியவர்களிடம் அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதற்கு அவ்வளவு தயங்குவேன். பழகிவிட்டால் சகஜமாகிவிடுவேன். சிறு வயதிலிருந்தே இப்படித்தான் என்பதால் மாற்றிக்கொள்ள அதிகம் முயற்சித்ததில்லை.

ஓவர் டு ஷர்மிலி மிஸ். கடந்த செவ்வாய்க்கிழமை என்று நினைவு. அலுவலகத்திலிருந்து வந்ததும் என் மகள் என்னிடம் ஓடிவந்து, “அப்பா, என்னை மிஸ் அடிச்சிட்டாங்க” என்றாள். எனக்கோ கடும் கோபம். “ஏன் அடிச்சாங்க?” என்றேன். என் மனைவியோ, “இவ என்ன செஞ்சான்னு கேளுங்க” என்றாள். “என்ன செஞ்சே?” என்றேன். “கிளாஸ்ல இடம் மாறி உக்காந்தேன்பா, அதுக்கு அடிச்சிட்டாங்க” என்றாள்.

இடம் மாறி அமர்ந்ததற்காகவா அடித்தார்கள்? இதெல்லாம் ஒரு காரணமா? எனக்கு கோபம் தலைக்கேறியது. என் மகள் பிறந்ததிலிருந்து எவ்வளவோ சேட்டைகள் செய்திருக்கிறாள். அடம் பிடித்து எங்களைத் தொந்தரவு செய்திருக்கிறாள். எல்லாவற்றுக்கும் பொறுமையாகவே போயிருக்கிறேன். ஒரு நாள் கூட அவளைக் கைநீட்டி அடித்ததில்லை. ஸ்கூல் மிஸ், அதுவும் ரெண்டு மாசம் கூட ஆகலை, அதுக்குள்ளே அவருக்கு கைநீட்ட தைரியம் வந்துவிட்டதோ? அவர் அடித்தபோது என் மகள் என்ன நினைத்திருப்பாள்? இதுக்குத்தான் அம்மா அப்பா நம்மை ஸ்கூலில் விடுறாங்க போல என்று நினைத்திருக்க மாட்டாள்?

என் முகத்தில் தெரிந்த கோபத்தை என் மனைவி புரிந்துகொண்டாள். “நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க? லேசா தான் அடிச்சாங்களாம். கிளாஸ் விட்டு வெளிய வந்தவுடனேயே பாப்பா சொல்லிட்டா” என்றாள். “நீ மிஸ் கிட்ட கேக்கலையா?” என்றேன். “அவ சொன்னவுடனேயே மிஸ் நாக்கை கடிச்சிக்கிட்டாங்க, இடம் மாறி உக்காந்ததால லேசா கன்னத்தில தட்டினேன், அதை அடிச்சேன்னு சொல்றான்னு சொன்னாங்க” என்றாள். “அவங்க அப்பா கிட்ட சொல்லிராதீங்க-ன்னும் சொன்னாங்க” என்றாள் முத்தாய்ப்பாக.

எனக்கு இன்னும் டென்ஷன் தலைக்கேறியது. “செய்றதையும் செஞ்சிட்டு என்கிட்டே சொல்லாதீங்கன்னு வேற சொன்னாங்களா? நாளைக்கே என்னன்னு கேக்கறேன்” என்றேன். மன சமாதானம் ஆகவில்லை. மனைவியிடம் கடிந்துகொண்டேன், “நீ கேக்க வேண்டியதுதானே, என் பிள்ளையை அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்னு?”.


அடுத்த நாள் புதன்கிழமையன்று காலை நேரத்தோடேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன். ஷர்மிலி மிஸ் சரியாக எட்டரை மணிக்குத்தான் வகுப்புக்கு வருவார். மகளை வகுப்புக்குள் அமரவைத்துவிட்டு வெளியே காத்திருந்தேன். நேரம் சரியாக எட்டரை. வேறு ஒரு மிஸ் வந்தார். “நீங்க போங்க நான் பாத்துக்கறேன்” என்றார். “ஷர்மிலி மிஸ்” என்றேன். “அவங்க லீவு” என்றார். கொஞ்சம் ஏமாற்றத்துடன் திரும்பினேன். அடுத்த நாள் வியாழக்கிழமை இதேபோல் நேரத்தோடு சென்று வகுப்புக்கு வெளியே காத்திருந்தேன். முந்தைய தினம் வந்திருந்த அதே மிஸ். அதே கேள்வி, அதே பதில். ஒருவேளை நான் கோபமாக இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டு பள்ளிக்கு விடுப்பு எடுத்துவிட்டாரோ மனம் சந்தேகப்பட்டது. இப்படியே போனால் என் மனதிலிருக்கும் கோபம் தணிந்துவிடும், விடக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாள், வெள்ளிக்கிழமை – அன்றைக்கும் ஷர்மிலி மிஸ் வரவில்லை. இந்த முறை கேட்டேவிட்டேன். “அவங்கப்பா இறந்துட்டாங்களாம்” என்ற பதிலில் திடுக்கிட்டேன். வெகு காலமாக படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார், செவ்வாயன்று இரவு உயிர் பிரிந்துவிட்டது. திங்கட்கிழமை வந்தாலும் வருவாங்க என்றார்கள்.


இதோ, காத்திருக்கிறேன். என் மகளை ஏன் அடித்தார் என்று சண்டை போடுவதற்காக அல்ல, அவரது தந்தை இறந்த துக்கம் கேட்பதற்காக.