கிண்டியில் ஸ்பிக் நிறுவன கட்டிடம் தெரியுமா? அதற்கு நேர் எதிரில் தான் அந்த விபத்து நடந்தது. சனிக்கிழமையன்று காலை இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது மிக அகலமான சாலை. ஸ்பிக் நிறுவனம் தாண்டி கொஞ்ச தூரம் சென்றதும் சைதாப்பேட்டைக்கு இடதுபுறமும் அடையாறுக்கு வலதுபுறமுமாக இரண்டாகப் பிரியும் சாலை. எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இடதுபுறம் திரும்ப முற்பட அருகில் வந்துகொண்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் இடித்துவிட்டார். இடித்ததில் இருவருமே நிலை தடுமாறி கீழே விழுந்தனர். மிதமான வேகத்தில் சென்றதால் அதிக அடி இல்லை. பின்னால் வந்துகொண்டிருந்த நான் சட்டென பிரேக் பிடித்து நின்றுவிட்டேன். வேகம் அதிகமாக இருந்திருந்தால் விழுந்தவர் மீதோ அவருடைய வண்டி மீதோ மோதி நானும் விழுந்திருக்கக் கூடும்.


நல்லவேளையாக இருவருமே ஹெல்மெட் அணிந்திருந்தனர். அதிலும் எனக்கு முன் விழுந்தவர் விழுந்ததும் சாலையில் மோதியது அவரது தலை தான். இல்லையென்றால் என்னவாகியிருக்கும்? இருவருக்குமே கை கால்களில் லேசான சிராய்ப்பு காயங்கள். உடனடியாக சிலர் வந்து இருவரையும் தூக்கி ஓரமாக அமரவைத்தனர். அவர்களது வாகனங்களையும் தூக்கி நிறுத்தினர். நானும் என் வண்டியை நிறுத்திவிட்டு சிதறிய செல்போனை எடுத்துக் கொடுத்தேன். அதற்குள் ஒருவர் தண்ணீர் கொடுத்தார். இரண்டு நிமிடங்கள் தான். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அடிபட்ட இருவரும் உன் தப்பு என் தப்பு என்று விவாதிக்கவில்லை. எழுந்து அவரவர் வாகனங்களைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

எனக்கு மட்டும் கால் கிடுகிடுவென்று நடுங்கிக் கொண்டிருந்தது. அதிர்ச்சி தான். இதற்கு முன்னர் இதேபோல் கால் நடுங்கிய விபத்து ஒன்று. இரண்டு மாதங்களுக்கு முன் நடந்தது. அன்றைய தினம் அசோக் பில்லர் அருகே கோவை ஆவியையும் வாத்தியாரையும் சந்தித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் கடந்ததும் இதேபோன்று இரண்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்தனர். விழுந்து வெகு தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அது நல்ல வேகம். சுமார் அறுபது கிலோமீட்டர் வேகமாவது இருக்கும். என்னால் அப்போது வண்டியை நிறுத்தக் கூட முடியவில்லை. நிறுத்த முயற்சித்திருந்தால் பின்னால் வந்துகொண்டிருந்த வாகனம் என்மீது இடிக்கும் அபாயம் வேறு. இந்த சம்பவத்திலும் இருவருமே ஹெல்மெட் அணிந்திருந்தார்கள்.  இல்லையென்றால் அடுத்த நாள் தினசரியில் படத்துடன் வந்திருப்பார்கள்.

இந்த இரு விபத்துகளுமே என் கால்களை கடகடவென்று ஆட்டிவிட்டது. ஆனால் இவையும் ஏற்கனவே கண்டிருந்த பல விபத்துகளும் அடிக்கடி மனத்திரையில் ஓடி ஓடி ஒரு பக்குவத்தைக் கொண்டுவந்து விட்டது. இனி இம்மாதிரி எதுவும் நேர்ந்தால் செய்வதறியாது திகைத்தல் என்பார்களே, அப்படி திகைத்து நிற்காமல் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வதென்று கணநேரத்தில் முடிவெடுக்கவேண்டிய சமயோசிதம் வந்துவிட்டது.

இங்கு நிறைய பேருக்கு ஹெல்மெட்டின் அவசியம் தெரிந்திருக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்ததும் முதலில் மோதுவது தலை தான். தலையில் அடிபட்டால் சாவு நிச்சயம் என்பதும் குறைந்த பட்சம் கோமா, மூளைச்சாவு போன்ற நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஹெல்மெட் அணிவதில் ஒரு அலட்சியம். அலுவலக நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருடைய பாலிசி என்னவென்றால் மெயின் ரோடுக்குச் செல்லும் வேலை இருந்தால் மட்டுமே ஹெல்மெட் அணிவார். பக்கத்தில் கடைக்குப் போவதென்றால் அணியமாட்டார். இன்னும் சிலர் இருக்கிறார்கள். ஹெல்மெட்டை பெட்ரோல் டேன்க் மீது வைத்திருப்பார்கள். சிக்னல் வரும்போது வண்டி ஓட்டிக்கொண்டே அணிந்துவிடுவார்கள். அபராதம் கட்டுவதிலிருந்து தப்பிக்கலாம் பாருங்கள். பெருமைக்காக சொல்லவில்லை, நான் வண்டி வாங்கிய காலத்திலிருந்தே ஹெல்மெட் அணிந்துதான் வண்டி ஓட்டுகிறேன். வடபழனியில் இருந்த சமயம். இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு. அப்போதெல்லாம் ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை. ஆனாலும் அணிந்துசெல்வேன். அங்குள்ள சிறிசுகள் என்னை ஹெல்மெட் அங்கிள் என்பார்கள்.

சனியன்று நடந்த விபத்துக்குப் பின்னான என்னுடைய அலுவலகம் நோக்கிய பயணம் அடிக்கடி காணக்கிடைக்கும் விபத்துகள் பற்றிய யோசனையிலேயே கடந்துகொண்டிருந்தது. நந்தனம் சிக்னல். யோசனையுடன் காத்திருந்த நேரம் அருகே ஒரு ஹோண்டா ஆக்டிவா வந்து நின்றது. என் வயதையொத்த ஒருவர், பின்னால் அவரது மனைவி, முன்னால் நின்றுகொண்டிருந்த அவர்களது மகளுடன் சிக்னலுக்குக் காத்திருந்தார். அவருடைய ஹெல்மெட்டை கண்ணாடியின்மீது மாட்டி வைத்திருந்தார். ஐந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் ஒரு விபத்தைப் பார்த்துவிட்டு வந்த எனக்கு இது உறுத்தலாகப் பட்டது. யோசிக்கவேயில்லை. “சார், ஒரு நிமிஷம்” என்றேன். தெரிந்தவராக இருக்குமோ என்று கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்தார். ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு அவரிடம் பேசினேன்.

“உங்க பொண்ணா? அழகா இருக்காளே! என் பிரெண்டு ஒருத்தன், உங்க வயசு தான் இருக்கும். அவருக்கும் இதே மாதிரி அழகான பொண்ணு” என்றேன்.

சிரித்தார். தொடர்ந்தேன்.

“ரெண்டு மாசம் முன்னாடி ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது வண்டி skid-ஆகி விழுந்துட்டான். விழுந்ததில அவனுக்கு தலைல பெரிய அடி. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போற வழியிலேயே செத்துப் போயிட்டான்”

“அச்சச்சோ” என்றார்.

“இன்சூரன்ஸ்ல அஞ்சு லட்சம் கிடைச்சது. அவன் வேலை பாக்கிற கம்பெனியில பைனல் செட்டில்மென்ட்னு நாலு லட்சம் வந்தது. இப்போ அவன் ஒய்ப் அதை வச்சிக்கிட்டுத் தான் வாழ்க்கையை நடத்துறாங்க. பொண்ணை கவர்மென்ட் ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க. அவங்க கூட இப்போ வேலைக்குப் போறதா கேள்விப்பட்டேன்”

அவர் சலமேயின்றி என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“முக்கியமான விஷயம். என் பிரண்டு, அதான் செத்துப்போனானே, அவன் ஆக்சிடன்ட் நடந்தப்போ இதே மாதிரி ஹெல்மெட்டை கண்ணாடில மாட்டிருந்தான்”

பட்டென்று அவர் ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டார். நந்தனம் சிக்னலில் பச்சை விளக்கு ஒளிரத்தொடங்கியது. பதிலேதும் சொல்லாமல் கிளம்பிவிட்டார். பரவாயில்லை.

நான் சொன்னது பொய். இருந்தாலும் இந்தப் பொய் ஒருவரைத் திருத்தியிருக்கிறதென்றால் அந்தப் பொய் நல்லதே. இனி ஆயுசுக்கும் அவர் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டமாட்டார். இந்தப் பதிவை வாசிக்கும் பலருக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் பழக்கம் இருக்கலாம். அவர்களில் ஒருவராவது இப்பதிவின் மூலம் திருந்தினால் எனக்கு சந்தோஷமே.