பலமுறை வேளச்சேரி நூறு அடி ரோடு வழியாகப் போகும்போது கண்ணில் பளிச்சென்று தென்படுகிறது. என்றாவது ஒரு நாள் போயாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அந்த நாளும் வந்தது.





முழுவதும் குளிரூட்டப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் தளம். குடும்பத்துடன் ஒரு ஞாயிறு மதியம் சென்றிருந்தேன், அதிகம் கூட்டமில்லை. ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடி. அதன் வழியே நூறு அடி சாலையைப் பார்க்கும் விதமாக இருக்கை அமைப்பு. நல்ல வெளிச்சம்.

இங்கே ஆப்பம் ஸ்பெஷல் என்பதால் முதலில் மட்டம் கீமா ஆப்பம், சிக்கன் கறி ஆர்டர் செய்தேன். பையனுக்கு சிக்கன் பிரியாணி, மீன் பொரித்தது, மனைவிக்கு முட்டை ஆப்பம் மற்றும் பீஸ் மசாலா. மட்டம் கீமா ஆப்பம் நல்ல சுவை. மட்டனை நன்கு அரைத்து ஆப்பத்தில் கலந்திருக்கிறார்கள். துளியும் மட்டன் வாடை இல்லை. கொஞ்சூண்டு பிய்த்து சிக்கன் குழம்பில் முக்கி வாயில் போட்டதும் - ஆஹா அருமையான சுவை.  பின் சிக்கன் ஆப்பம் மற்றும் முட்டை ஆப்பம் ருசி பார்த்தேன்.



மனைவிக்கு இரண்டே இரண்டு முட்டை ஆப்பம் மற்றும் பீஸ் மசாலாவே போதுமானதாக இருந்தது.  மகனோ சிக்கன் பிரியாணியில் பாதியைக் காலி செய்துவிட்டு மீதியைக் கொடுக்க அதையும் காலி செய்தேன். பின் வயிற்றில் கொஞ்சம் இடம் மீதி இருக்க ஆளுக்கு ஒரு ஜூஸ் ஆர்டர் செய்தோம்.  சாத்துக்குடி மற்றும் ஸ்ட்ராபெரி. நல்ல சுவை.



பில் - மொய் வைத்தது போல 1001 ரூபாய். ஒரு மட்டன் கீமா ஆப்பம், ஒரு சிக்கன் கீமா ஆப்பம், மூன்று முட்டை ஆப்பம், ஒரு பிரியாணி, சிக்கன் கறி, மீன் பொரித்தது, கிரீன்பீஸ் மசாலா, இரண்டு ஜூஸ் - இவ்வளவு சாப்பிட்டும் ஆயிரம் ரூபாய் என்றால் நார்மல் என்று தோன்றுகிறது.










கூட்டம் அதிகமில்லை, நல்ல சுவை, நியாமான விலை என்பதால் கண்டிப்பாக ஒருமுறை சுவைக்கலாம்.