பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2

பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2










நண்பகல் 12 மணிக்கு ஓடத்துவங்கிய படகு இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தது.   இடையே சிக்கன் கடையில் மட்டுமே கொஞ்ச நேரம் நிறுத்தினார்கள்.  படகை நிறுத்துவது நம்முடைய விருப்பம் என்றாலும் நாங்கள் அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை.  மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அவர்களுக்கு உணவு இடைவேளை என்பதால் அந்த நேரம் மட்டும் ஓரம் கட்டிவிட்டார்கள்.  அந்த நேரத்தில் நாங்கள் அருகில் உள்ள வயல்வெளிகளை ஒரு ரவுண்ட் அடித்தோம்.  ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் ஆடு மாடு கோழிகள் எல்லாம் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தன.  இதே சென்னை என்றால் அங்கேயே காலி செய்து விடுவார்கள்.








பின்னர் மீண்டும் ஓடத்துவங்கிய படகு ஓடிக்கொண்டே இருந்தது.  எங்கெங்கு காணினும் தண்ணீர், பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் என அருமையாக இருந்தது.  வாகனங்கள் இல்லை, புகை இல்லை, இரைச்சல் இல்லை, அவ்வளவு அமைதி.  எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் மிக மிக உற்சாகமாக உணர்ந்தோம்.








மாலை ஆறு மணி வரை மட்டுமே படகுகள் ஓடுவதற்கு அனுமதி உண்டு என்பதால் ஆறு மணிக்கு ஏதோ ஒரு ஊரில் படகை நிறுத்திவிட்டார்கள்.  இஞ்சின் அணைக்கப்பட்டது.  படகுக்கு வேண்டிய கரண்ட் அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது.  விசாரித்ததில் அது படகு ஓனரில் வீடாம்.  இருட்டுவதற்குள் அந்த கிராமத்தை சுற்றிப்பார்த்து விடலாம் என்று கிளம்பினோம்.








அழகான கிராமம். குறைந்த அளவிலே வீடுகள்.  அமைதியான சூழ்நிலை. வாகனங்கள் இல்லை.  நீரப்பரப்பை கடக்க ஒரு பெரிய பாலம்.  அனைவரும் நடந்தே செல்கிறார்கள்.  மறு கரையில் ஒரு பெரிய சர்ச்.  மாலை வேளை என்பதால் அந்த இடமே ரம்மியமாக காட்சியளித்தது.  நான் எடுத்த புகைப்படங்கள் கீழே...




சர்ச்.. பின்னணியில் நிலா




பாலத்திலிருந்து



நெடுஞ்சாலை போலச் செல்லும் நீர்ப்பாதை




படகு, தென்னைமரங்கள், பின்னணியில் நிலா




கொஞ்சம் இருட்டியதும்




சந்திரன்



அந்த ஊரிலேயே உள்ளூர் படகு சேவையும் இருக்கிறது.  ஒரு கிராமத்திலிருந்து வேறு ஊருக்குச் செல்பவர்களுக்கென்றே இந்தப் படகு போக்குவரது.  இதற்கென தனியா பஸ் ஸ்டாப் போல ஒரு ஷெட் போட்டு வைத்திருக்கிறார்கள்.  உள்ளூர் படகுகள் அங்கு வந்து மக்களை இறக்கி ஏற்றிச் செல்கின்றன.




உள்ளூர் பஸ் ஸ்டாப்



இரவு 9 மணிக்கு சுடச்சுட சப்பாத்தி, சாதம், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 என அருமையாக சமைத்திருந்தனர். என்ன கொஞ்சம் காரம் தான் தூக்கலாக இருந்தது.  ஆனாலும் அருமை. ஒரு கட்டு கட்டினோம்.  (போட்டோ எடுக்கலையே!)



கொசுக்கடி அதிகம் இருந்தது.  அதனால் நாங்கள் படுக்கை அறையிலேயே அடைந்து விட்டோம்.  ஏசி இருந்ததால் மிகவும் வசதியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கிவிட்டோம்.  மீண்டும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டோம்.  படகு 9 மணிக்குத்தான் புறப்படும் என்பதால் நாங்கள் அங்கேயே குளித்துவிட்டோம்.








காலை சிற்றுண்டியாக பிரெட், ஆம்லெட், இட்லி, சட்னி சாம்பார் கொடுத்தார்கள்.  அருமை.  கேரளாவில் பொதுவாக யாருக்கும் இட்லி சமைக்கவே தெரியாது.  ஆனால் இவர்கள் அருமையாக சமைத்திருந்தார்கள்.  இட்லி மிகவும் மிருதுவாக இருந்தது.  பிரெட், ஆம்லெட் என அனைத்தும் உள்ளே போனதும் பசி அடங்கியது.  பின்னர் சூடான காபி.  நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே படகு கிளம்பியது.  காலை வேளையின் இயற்கையை ரசித்துக்கொண்டே சாப்பிட்டது அருமையான உணர்வு.








நாங்கள் படகுத்துறையை நெருங்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.  அடடா இந்த மாதிரியான வாய்ப்பு மீண்டும் எப்போது கிடைக்கும் என்ற உள்ளுணர்வு.















படகை விட்டு இறங்க மனமே இல்லை என்றாலும் எங்களது அடுத்த பயணத்து நேரமாகி விட்டிருந்ததால் படகுக்கு பிரியா விடை கொடுத்தோம்.







கட்டுரை பிடித்திருந்தால் பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள்.  என்னைப்போன்ற புதியவர்களை நீங்கள் கொடுக்கும் ஊக்கம் உற்சாகப்படுத்தும்.

நன்றி

ஸ்கூல் பையன்...


பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 1

பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 1





கேரளா என்றதும் நம் நினைவுக்கு வருவது தென்னை மரங்களும் பச்சைப் பசேலென்ற நிலப்பரப்பும் தான்.  சிலருக்கு நீண்ட கூந்தலுடைய பிகர்கள் தான் நினைவுக்கு வரும் என்பது வேறு விஷயம்.  இந்தப் பசுமையான நிலப்பரப்பில் படகு சவாரிக்கென்றே ஒரு நீர்ப்பரப்பு இருப்பது பலருக்கு தெரியாது.  கொச்சின் (எர்ணாகுளம்) முதல் கொல்லம் வரை சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தை இந்த நீர்ப்பரப்பு இணைக்கிறது.  இந்தப் பகுதியில் சுமார் 24 மணிநேரம் படகு சவாரி செய்த அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.









படகு சவாரிக்கென்றே டூர் ஆப்பரேட்டர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  அவர்களில் நாங்கள் தேர்ந்தெடுத்தது லேக்ஸ் & லாகூன்ஸ் (Lakes & Lagoons) என்ற ஆப்பரேட்டரைத்தான். நாங்கள் என்பது ஐந்து பேர்.  சென்னையில் இருந்து நாங்கள் முன்னரேயே தொலைபேசி மூலமாக முன்பதிவு செய்து வைத்துக் கொண்டோம்.  இதற்காக அவர்கள் பணம் எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை.  நாங்களாகத்தான் அவர்களுடைய வங்கி கணக்கு எண் சொன்னால் பணத்தை டெப்பாசிட் செய்து விடுகின்றோம் என்று சொன்னதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள்,  வரும்போது கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.  நாங்கள் ஐந்து பேர் என்பதால் எங்களுக்கு இரண்டு படுக்கையறை கொண்ட படகு முன்பதிவு செய்யப்பட்டது.







சென்னையில் இருந்து ஒரு சுபதினமான வெள்ளிக்கிழமையன்று இரவு 8.45 மணிக்கு புறப்படும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டோம்.  காலை 10.45 மணிக்கு சென்றடைய வேண்டிய ரயில் அரை மணிநேரம் தாமதமாகவே சென்றது.  ரயில் பயணம் ஒன்றும் அத்தனை சுவாரஸ்யம் இல்லை.  காலை அலுவலகத்துக்குச் செல்லும் மக்கள் திருச்சூரில் மளமளவென்று முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி அமர்ந்து எங்களையும் தள்ளி உட்காரச்செய்தார்கள்.  இந்தப்பிரச்சனை எர்ணாகுளம் வரை மட்டுமே.  எர்ணாகுளம் வந்ததும் அனைவரும் இறங்கிக்கொண்டார்கள்.








காலை 11.15 மணிக்கு ஆலப்புழை ரயில் நிலையம்.  அங்கிருந்து படகுத்துறைக்கு 57 ரூபாய் ஆட்டோ கட்டணம்.  நாங்கள் ஐந்து பேர் என்பதால் இரண்டு ஆட்டோக்களை எடுத்துக்கொண்டோம். சுமார் பதினைந்து நிமிடத்தில் படகுத்துறை அடைந்தோம்.  படகுத்துறையின் அருகிலேயே டூர் ஆப்பரேட்டர்களின் அலுவலகமும் உள்ளது.  அங்கு சென்று எங்களது பெயர் மற்றும் முகவரியைக் கேட்டார்கள். புகைப்படச் சான்று ஒன்றை வாங்கி அதன் நம்பரை எழுதிக்கொண்டார்கள்.  சவாரிக்கான மொத்த பணத்தையும் முன்னரே வாங்கிக்கொண்டார்கள்.  அதிகமில்லை, 11,000 மட்டுமே.  அவர்களுடைய‌ கிரெடிட் கார்ட் மிஷின் வேலை செய்யாததால் மொத்தப்பணத்தையும் ரொக்கமாகவே கேட்டார்கள்.  நாங்கள் அனைவரும் எங்களுடைய பர்ஸில் இருந்த மொத்தப்பணத்தையும் எடுத்துக்கொடுத்தோம், அதில் மொத்தம் 11,000 மட்டுமே இருந்தது.  எங்களுடன் வந்த நண்பர் ஒருவர், "டேய் என்னடா போற வழியில் செலவுக்கு என்ன செய்ய?" என்றார். அதற்கு நான், "டிரிப் முடியுற வரைக்கும் தண்ணிக்குள்ள (அந்தத் தண்ணி இல்லை) இருக்கப்போறோம், என்ன செலவு இருக்கப்போவுது, நாளைக்கு ரயில்வே ஸ்டேஷனில் போய் எடுத்துக்கலாம்" என்று சொல்லிவிட்டேன்.  இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த அலுவலக ஊழியர் ஒருவர், "இட்ஸ் ஓகே சார், போற வழியில் ஏடிஎம் இருக்கு, பணம் எடுக்கலாம்" என்றார்.  போற வழியில ஏடிஎம்‍‍-மா, எப்படி என்று யோசித்துக்கொண்டே படகு நோக்கி கிளம்பினோம்.






படகுக்கு செல்லும் பயணிகள்


படகு என்றால் நான் கூட ரொம்பச் சின்னதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.  உள்ளே ஏறியவுடன் பெரிய லாபி.  ஓட்டுநர் அமர்ந்து படகை செலுத்துவதற்கு ஒரு இடம், அதன் பின்னால் பெரிய சோபா செட்டுகள், டைனிங் டேபிள், டிவி, வீடியோ பிளேயர் என அனைத்து வசதிகளும் இருக்கின்றன.  







நாங்கள் படகில் ஏறியதும் எங்களை அந்த அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவர் வரவேற்றார், குடிப்பதற்கு வெல்கம் டிரிங்க் என்று சொல்லி இளநீர் கொடுத்தார், படகு சவாரி பற்றி விளக்கமாக ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர் அந்தப் படகில் எங்களுடன் பயணிக்கப்போகும் மூன்று பேர் அதாவது ஒரு ஓட்டுநர், ஒரு சமையல்காரர் மற்றும் இஞ்சினியர் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார்.  பின்னர் அவர் கிளம்பிவிட்டார்.  அவர் கிளம்பியதும் படகில் இருந்த கட்டுகள் அவிழ்க்கப்பட்டன, படகின் இஞ்சின் இயக்கப்பட்டு கிளம்பத்தொடங்கியது.





படகை செலுத்தும் ஓட்டுநர் ஷோபன்


பெரிய லாபி ஒன்று, அதைத் தாண்டியவுடன் ஒரு சிறு சந்து செல்கிறது அருகிலேயே லைப் ஜாக்கெட் வைத்திருக்கிறார்கள்.  பக்கவாட்டில் ஒரே மாதிரியான‌ இரண்டு படுக்கை அறைகள், இரண்டிலும் குளியலறை கழிப்பறை வசதி, பின்னால் சமையல் அறை ஒன்று.  மேலே மாடி ஒன்று அங்கும் சோபா செட் போட்டு அழகாக வைத்திருக்கிறார்கள்.  மேல்மாடியை பிளாஸ்டிக் திரை போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். தேவைப்பட்டால் திறந்துகொள்ளலாம். மாடியிலிருந்து பார்க்கும்போது நீர்ப்பரப்பு அழகு.




சந்து, லைப் ஜாக்கெட்கள்





படுக்கையறை





மேல் மாடி





சுமார் 200 மீட்டர் அகலம் கொண்ட நீர்ப்பாதை ஒரு மிகப்பெரிய ஆறுபோல் காணப்படுகிறது.  ஆனால் நீரோட்டம் இல்லை, குட்டை மாதிரி இருக்கிறது.  நாங்கள் அன்று காலை பல் மட்டுமே தேய்த்திருந்தோம், அதனால் காலைக்கடன்களை படகிலேதான் முடித்தோம். வெஸ்டர்ன் டாய்லெட், ஷவர் என்று எல்லா வசதிகளும் இருந்தது.  ஆனால் தண்ணீர் தான்... கக்கா போய்விட்டு ஃப்ளஷ் செய்வதும் அதில் தான், குளிப்பதும் அதில் தான், வாஷ் பேசினில் வரும் தண்ணீரும் அதுவேதான்.









நேரம் ஆகிவிட்டிருந்ததால் ஒரேய‌டியாக மதிய உணவு சமைத்துத் தருவதாக சொன்னார்கள்.  நாங்களும் சரியென்றோம்.  சுமார் 2.30 மணிக்கு சாப்பாடு தயாராக இருந்தது.  நம்ம ஊர் பச்சரிசி சாதம், சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, இரண்டு வகை பொரியல் மற்றும் பொரித்த மீன், குடிப்பதற்கு மினரல் வாட்டர்.  நான்வெஜ் வேறு எதுவும் வேண்டுமென்றால் நம்மை வாங்கிக் கொடுக்கச் சொல்கிறார்கள். இனிமே எப்படி வாங்கிக் கொடுப்பது என்றால் போற வழியில் வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள்.   அதேபோல் ஒருபக்கம் படகை ஓரம் கட்டினார்கள்.  அங்கே சுமார் ஐந்தாறு கடைகள் இருந்தன.  சிடி கடை, இறைச்சிக் கடை, பெட்டிக்கடை, பிஸ்கெட், சிப்ஸ் விற்கும் கடை என்று எல்லாம் இருந்தது.









இறைச்சிக்கடை
 


நாங்கள் வந்த படகு தென்னை மரத்தில் கட்டப்பட்டுள்ளது


இரவு உணவு மெனுவில் சிக்கன் இருந்த‌தாலும் இங்குள்ள கடைகளில் மிகவும் விலை அதிகமாக இருந்ததாலும் நாங்கள் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை.  படகில் கொடுத்த மதிய சாப்பாட்டைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.  ஒவ்வொன்றும் அருமை. என்ன காரம்தான் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.  கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் நாங்கள் ஐந்து பேரும் அனைத்தையும் சாப்பிட்டு விட்டோம்.   இயற்கை அழகை ரசித்துக்கொண்டே சாப்பிட்டது ஒரு வித்தியாசமான அனுபவம்.



மாலை ஐந்து மணிக்கு சுடச்சுட பக்கோடாவும் டீயும் கொடுத்தார்கள்.  மிகவும் மிருதுவாக எண்ணெய் அதிகம் குடிக்காத பக்கோடா சாப்பிடுவதற்கு அருமை.  நல்ல சூட்டில் டீ குடித்தது அதைவிட அருமை.




பக்கோடா











பதிவு மிகவும் நீளமாகச் செல்வதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.  மேலும் ஆலப்புழை தகவல்கள் மற்றும் படங்கள் நாளை...

நன்றி

ஸ்கூல் பையன்.





துப்பாக்கி ‍- சினிமா விமர்சனம்


துப்பாக்கி ‍- சினிமா விமர்சனம்





விஜய் இந்த மாதிரியான படங்களில் நடித்து ரொம்ப நாளாயிற்று.  சமீப காலமாக ஆவரேஜ் ஹிட்டும் ப்ளாப்பும் கொடுத்தவருக்கு துப்பாக்கி ஒரு திருப்புமுனை.  பொதுவாக அவரது படங்கள் தோல்வியடைவதற்குக் காரணம் சரியான கதையைத் தேர்ந்தெடுக்காதது தான்.  ஆனால் இந்தப்படம் அவருடைய இமேஜை தக்க வைக்கும் விதமாகவும் அவருடைய நடிப்புக்கு சவாலாகவும் இருப்பது மகிழ்ச்சி. விஜய்க்கு மட்டுமல்ல, ஏழாம் அறிவு(அறுவு) படத்தின் மூலம் தன் பெயரை கொஞ்சம் கெடுத்துக்கொண்ட இயக்குநர் ஏ ஆர் முருகதாசுக்கும் இந்தப்படம் ஒரு திருப்புமுனை தான்.  கதை ஜெய்சங்கர் காலத்தியதாக இருந்தாலும் திரைக்கதையில் நேர்த்தி செய்து நீட்டாக கொடுத்திருக்கிறார்.





கதை என்ன?  மாவு என்னமோ பழசுதான்.  அதை வார்த்த விதத்தில் புதுமை காட்டியது புதுசு.  விஜய் ஒரு மிலிட்டரி ஆபிசர்.  அது என்னமோ இன்டலிஜென்ட் ஏஜன்ட் என்று யாருக்கும் தெரியாத ஒரு வேலையும் இந்திய அரசுக்காக செய்கிறார்.  ஒரு வேலையாக மும்பை சென்றிருக்கும் அவர் எதேச்சையாக ஒரு தீவிரவாதியை போலிசில் பிடித்துக் கொடுத்துவிடுகிறார்.  அந்த தீவிரவாதி போலிஸ் கஸ்டடியில் இருந்து தப்பிக்க அவனை மீண்டும் பிடித்து தன் கஸ்டடியில் வைத்துக்கொள்கிறார்.  அவனை தப்பிக்க விட்ட சீப் செக்யூரிட்டி ஆபிசரை தற்கொலை செய்ய வைக்கிறார்.




அந்த தீவிரவாதி தனது கூட்டாளிகளுடன் மும்பையில் மொத்தம் 12 இடங்களில் தாக்கப்போவதை அறிந்த விஜய், அவனை யார் இயக்குகிறார்,  அவன் தன் கூட்டாளிகளுடன் என்ன செய்யப்போகிறான் என்று  கண்டுபிடிக்க அவனை தன் வீட்டிலிருந்து தப்பவிடுகிறார், கூடவே தன் மிலிட்டரி நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் அனைவரையும் போட்டுத்தள்ளுகிறார்.




இதை அறிந்த தீவிரவாதி தலைவன் வித்யுத் ஜாம்வால் டென்ஷனாகிறார்.  தன் குழுவினரை தீர்த்துக்கட்டிய அனைவரையும் பழி வாங்கப் புறப்படுகிறார்.  அவர் பழிவாங்க என்ன முயற்சி எடுத்தார், அதை விஜய் எப்படி முறியடித்தார் என்பதை தியேட்டரில் சென்று பாருங்கள்.
விஜய் செம அழகு.  அதிலும் அவரது காஸ்ட்யூம் சூப்பர்.  ஒவ்வொரு சீனிலும் ஒவ்வொரு டிரெஸ்ஸில் கலக்கலாக இருக்கிறார்.  லேசான ஆட்டு தாடியுடன் வரும் அவர் சன் கிளாசில் மிக ஸ்டைலிஷ்.  அதிலும் இந்தப்படத்தில் அவருக்கு ஸ்டைலான நடிப்பும் வசன உச்சரிப்பும் கை கொடுக்கின்றன. மனிதர் சாதாரணமாக நடித்திருக்கிறார்.





காஜல் அகர்வால் வழக்கம்போல் எல்லா படங்களிலும் வருவதுபோல் வருகிறார், ஆடுகிறார், பாடுகிறார், ரொமான்ஸ் பண்ணுகிறார்.  அவர் வரும்போதெல்லாம் பாடல் ஒன்று உறுதியாகி விடுகிறது.  பார்ட்டி வெயிட் போட்டதுபோல் தெரிகிறது, கொஞ்சம் உடம்பைக் குறைங்க அம்மணி...




கொஞ்ச நேரமே வந்தாலும் ஜெயராம் சிரிக்க வைக்கிறார்.  அவர் இன்ட்ரோ ஆகும் காபி டே காட்சியில் அப்ளாஸை அள்ளுகிறார்.  சப் இன்ஸ்பெக்டராகவும் விஜயின் நண்பராகவும் வரும் சத்யன் கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.  த‌ன் மாமியாரை திட்டிக்கொண்டே அவ‌ர் பேசும் வ‌ச‌ன‌ங்க‌ள் க‌ல‌க‌ல‌ ர‌க‌ம்.




இசை ஹாரிஸ் ஜெய‌ராஜ்.  பாட‌ல்க‌ள் ஏற்க‌ன‌வே சூப்ப‌ர்ஹிட்.  அதிலும் அண்டார்ட்டிகா பாட‌லிலும் கூகிள் கூகிள் பாட‌லும் கேட்க‌ இனிமை.  கூகிள் பாட‌லை விஜ‌ய் பாடியிருப்ப‌தால் தியேட்ட‌ரில் விசில் ச‌த்த‌ம் காதைப் பிள‌க்கிற‌து.  பிண்ண‌னி இசையும் அருமை.  அதிலும் விஜய் தன் வீட்டுக்குச் சென்று தீவிர‌வாதியை அடைத்து வைத்திருக்கும் தன் அறைக்குச் செல்லும்போது ஒலிக்கும் த‌ம்புரா ஒலியும் ஒற்றை வ‌ய‌லினும் ந‌ம்மை ம‌ய‌க்குகின்றன. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே தங்கள் பங்குக்கு நன்றாகவே செய்திருக்கிறார்கள்.





மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று (நிச்சயமாக) காணக்கூடிய ஒரு தரமான திரைப்படமாக வந்திருக்கிறது "துப்பாக்கி".


டிஸ்கி:  இது ஒரு கமர்சியல் முயற்சி.  சினிமா விமர்சனத்துக்கு எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்தப் பதிவு.  நண்பர்கள் தயவு செய்து தங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும். 

ஸ்ரீ சக்ரகாளி வழிபாட்டு மையம்

ஸ்ரீ சக்ரகாளி வழிபாட்டு மையம்
 
உலக அமைதிக்காகவும் சமாதானத்துக்காகவும் ஒரு காளி கோவில்
.
இது கோவில் இல்லை, வழிபாட்டு மையம் என்றே இதன் நிர்வாகத்தினர் குறிப்பிடுகின்றனர். அர்ச்சனை இல்லை, உண்டியல் இல்லை, தனிப்பட்ட எவருக்கும் சிறப்பு பூஜைகள் இல்லை, ஆனாலும் கூட்டம் அலைமோதுகிறது. காரணம் இந்த வழிபாட்டு மையத்தில் வீற்றிருக்கும் காளியின் சக்தி தான். இங்கு சென்று நாம் வேண்டினால் கண்டிப்பாக நடக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் ஐதீகம். 
 
இந்த வழிபாட்டு மையம் எப்போது நிறுவப்பட்டது? 
செப்டம்பர்
1, 2005 அன்று திரு. வைத்தியநாதன் என்பவரால் நிறுவப்பட்டது. இது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவதில்லை. 
 
நிறுவப்பட்டதன் காரணம்
? 
உலக அமைதி, உலக சமாதானம் மற்றும் மனிதநேயத்தைக் காப்பாற்றுவதற்காக நிறுவப்பட்டது. 
 
பூஜைகள் எவ்வாறு நடைபெறுகின்றன?
 
தினந்தோறும் காலை 8.30, 9.30, 10.00 மற்றும் 12.00 மணிக்கும் மாலையில் 5.00, 6.00, 7.00 மற்றும் 8.00 மணிக்கு தீபாரதனைகள் பூஜைகள் நடைபெறுகின்றன. தனிப்பட்ட பூஜைகள் என்று எதுவும் கிடையாது, தீபாராதனை காட்டி ஆரத்தி தட்டை அங்கேயே வைத்துவிடுகின்றனர். தட்டை வெளியே கொண்டுவந்ததும் தீபத்தை கண்களில் ஒற்றிக்கொண்டு தட்டில் காசுபோடும் சம்பிரதாயமெல்லாம் இல்லை. நவராத்திரி நாட்கள் மிகவும் விசேஷமாகும். இந்த ஒன்பது நாட்களும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. தவிர மாசி மாத சிவராத்திரி தினத்திலும், இந்த வழிபாட்டு மையம் நிறுவப்பட்ட செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. முக்கியமாக அம்மன் அவதரித்த அஷ்டமி தினத்தில் (வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டு நாட்களும்) சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பொதுவாக தமிழிலேயே வழிபாடு நடக்கிறது. இந்த மையத்தின் நிறுவனரான திரு. வைத்தியநாதன் அவர்களே தமிழில் அம்மன் துதி பாடல்கள் பாடுகிறார்.
 
 
சிறப்பு தரிசனம் உண்டா?
 
நம்மூர் கோவில்களில் உள்ளதுபோல் 10 ரூபாய்க்கு சிறப்பு தரிசனம், 100 ரூபாய் கொடுத்தால் விஐபி தரிசனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னால் இடம் கிடைக்கும், பிறகு வருபவர்களுக்கு பின்னால், அதன்பிறகு வருபவர்கள் நின்றுகொண்டு தரிசனம் செய்யவேண்டும்.
 
 
பிரசாதம்?
 
பொதுவாக அம்மன் கோவில் என்றால் குங்குமம் கொடுப்பது வழக்கம். இங்கு பூஜைகள் அனைத்தும் முடிந்து பக்தர்கள் வெளியே செல்லும்போது மட்டுமே குங்குமம் கொடுக்கிறார்கள். மதியம் நடைசாத்தும் நேரம் மட்டும் சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் தருகிறார்கள். அதுவும் வரிசையில் நிற்க வேண்டும். சூடாகவும் சுவையாகவும் இருக்கிறது
. 
 

வேறு என்ன சிறப்பம்சங்கள்? 
இந்த வழிபாட்டு மையத்தின் அருகிலேயே ஷீரடி சாய்பாபா கோவிலும் குபேரர் கோவிலும் இருக்கிறது. மேலும் இதன் அருகில் அரைக்காசு அம்மன் கோவில் ஒன்று உள்ளது.


இந்த அம்மனை நினைத்து வழிபட்டால் காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். மேலும் இந்தக் கோவிலைச் சுற்றி 108 அம்மன் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. குலதெய்வம் கோவிலுக்குப் போக முடியாதவர்கள் இங்கு சென்று வழிபட்டால் நல்லது என்று சொல்கிறார்கள்.



மேலும் ராகுதசை அல்லது
மற்ற தசைகளில் ராகு புத்தி அல்லது செவ்வாய் தசை அல்லது மற்ற தசைகளில் செவ்வாய் புத்தி நடப்பவர்களும், ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் செவ்வாய் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் இங்கு சென்று வழிபடுதல் நலம். 
 


எங்கே இருக்கிறது?
 
வண்டலூரில்ருந்து இடதுபுறம் திரும்பி கேளம்பாக்கம்
(ECR) செல்லும் வழியில் கொலப்பாக்கம் என்னும் ஊரைத் தாண்டி ரத்தினமங்கலம் என்னும் சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் அங்கு சென்றுவிட்டால் கூட்டம் வரும் முன்னரே எல்லா கோவில்களிலும் தரிசனம் முடித்துவிடலாம். நான் அங்கு மதியம் 12 மணிக்கு சென்றதால் என்னால் சக்ரகாளியைத் தவிர வேறு எந்த கோவிலுக்கும் செல்ல முடியவில்லை. 
 
அவசியம் சென்று வழிபட வேண்டிய இடம். 
 
நன்றி
 
 
ஸ்கூல் பையன்
.. 

திருமலா திருப்பதி பாதயாத்திரை

திருமலா திருப்பதி பாதயாத்திரை


திருப்பதி வெங்கடேசப் பெருமாளைப் பார்ப்பது என்பது நாம் நினைத்தவுடன் நடந்துவிடக்கூடிய காரியம் அல்ல
.
பல நாட்களுக்கு முன்பே நாம் போக்குவரத்துக்கும் தரிசனத்துக்கும் டிக்கட் புக் செய்து வைத்தாலும் கடைசி நேரத்தில் போகமுடியாமல் கேன்சல் செய்யப்படும் நிகழ்வுகள்தான் ஏராளம்.

எனது நண்பர் திரு. வெங்கடாசலபதி மாதந்தோறும் திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்று வருகிறார். அதாவது, மாதத்தில் ஏதாவது ஒரு சனிக்கிழமை மதியம் அல்லது மாலை திருப்பதிக்கு ரயிலில் பயணம். பின்னர் அங்கிருந்து படிக்கட்டுகளில் ஏறிச்சென்று தரிசனம் செய்வது அவரது வழக்கம். திரும்பி வரும்போது பேருந்தில் வந்துவிடுவார். அவர் கேட்டுக்கொண்டதாலும் என்னுடைய வேண்டுதலுக்காகவும் மூன்று முறை அவருடன் பாதயாத்திரை சென்று வந்திருக்கிறேன்.

கடந்த சனிக்கிழமையன்று (15.09.2012) நான், திரு
. வெங்கடாசலபதி மற்றும் இன்னொரு நண்பர் திரு சுந்தர் அவர்களுடன் மதியம் 4.30 மணிக்கு சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பினோம். சுமார் ஏழு மணியளவில் ரேணிகுண்டா சென்றடைந்தோம். அங்கிருந்து எஞ்சின் மாற்றி (சென்னை முதல் ரேணிகுண்டா வரை எலக்ட்ரிக் அதன் பிறகு டீசல் எஞ்சின்) திருப்பதிக்கு அந்த ரயில் 8.00 மணிக்குமேல் தான் புறப்படும் என்பதால் நாங்கள் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்து பேருந்தில் கிளம்பினோம். அங்கிருந்து திருப்பதிக்கு 20 நிமிட பயணம் தான்.

பேருந்து நிலையத்திலிருந்து பாதயாத்திரை படிக்கட்டுக்குச் செல்ல ஆட்டோவில் 50 ரூபாய். (ரயில் நிலையத்திலிருந்து என்றால் 40 ரூபாய் மட்டுமே). பாதயாத்திரை தொடங்கும் இடத்திலேயே பூ, பழம், தேங்காய் போன்ற பூஜை பொருட்கள் விற்கிறார்கள். அங்கேயே வாங்கிக்கொண்டு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி படிகளில் ஏற ஆரம்பித்தபோது மணி 8.45.



கீழ் திருப்பதியிலிருந்து மேலே செல்வதற்கு மொத்தம் 3550 படிக்கட்டுகள் ஏறவேண்டும். இளைஞர்கள் என்றால் மூன்று மணி நேரத்தில் ஏறிவிடலாம். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வருபவர்கள் என்றால் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஆகும். மிகவும் வயதானவர்கள், நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நலம்.


பாதயாத்திரையாக பெருமாளை தரிசிக்கச் செல்வோருக்கு அனுமதி இலவசம். அதற்கான போட்டோவுடன் கூடிய டிக்கட் ஆயிரம் படிகள் ஏறியவுடன் காலிகோபுரம் என்று அழைக்கப்படும் இடத்தை தாண்டியவுடம் கவுண்டரில் பெற்றுக்கொண்டோம்.


அங்கேயே சாப்பிடுவதற்கென்று நிறைய திறந்தவெளி ஹோட்டல்கள் இருக்கின்றன. நாம் சென்று சொன்னதும் சூடாக சமைத்து தருகிறார்கள். நாங்கள் சாப்பிட்டது மொத்தம் 12 இட்லி, 3 ஆனியன் தோசை மற்றும் 8 போண்டா (கொஞ்சம் ஜாஸ்தியோ?) மொத்தம் 160 ரூபாய் மட்டுமே.


போகும் வழியில் மான் பூங்கா ஒன்று இருக்கிறது. அங்கே நிறைய மான்கள் கம்பி தடுப்புக்குப் பின்னால் இருக்கின்றன. அவற்றுக்கு நாம் பழவகைகள் ஊட்டிவிடலாம். என் நண்பருக்கு அது ஒரு செண்டிமெண்டாகவே இருக்கிறது. அதாவது மான்களுக்கு பழங்கள் ஊட்டவில்லையென்றால் அவர் அந்த முறை தரிசனத்துக்கு படாத பாடு பட்டிருக்கிறார். அதனால், அவர் எப்போதும் மான்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டே செல்கிறார்.




திருமலை தேவஸ்தானம் சார்பில் ஆங்காங்கே இலவசமாக தண்ணீர், குளியல் அறை மற்றும் கழிவறை வசதி செய்து வைத்திருக்கிறார்கள். அனாவசியமாக யாரும் திறந்தவெளியில் "போக வேண்டிய" அவசியம் இல்லை. வழி நெடுகிலும் கடைகள இருக்கின்றன. தண்ணீர், குளிர்பானங்கள், குளுக்கோஸ் மற்றும் பழவகைகள் விற்கிறார்கள்.


நாங்கள் மெதுவாகவே நடந்து சென்றோம். பல இடங்களில் இளைப்பாறிவிட்டுச் சென்றதால் நாங்கள் மலை ஏறி முடிக்கும்போது இரவு 1 மணி ஆகிவிட்டிருந்தது. முன்னரேயே அறைகள் புக் செய்திருந்ததால் அங்கே போய் தூங்கிவிட்டு மறுநாள் காலை 6 மணிக்கு வி ஐ பி தரிசனத்திற்குச் சென்றோம் (அதற்கும் முன்னரேயே டிக்கட் புக் செய்து விட்டோம்). சரியான கூட்டம் இருந்ததால் பெருமாளைப்
பார்த்துவிட்டு வெளியே வர சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது.
திரும்பி வரும்போது திருமலையிலிருந்து திருப்பதிக்கு பேருந்தில் வந்தோம். ஓட்டுநர் அநாயசமாக மக்காச்சோளத்தை சாப்பிட்டபடியே வண்டி ஓட்டினார். நமக்குத்தான் பயமாக இருக்கிறது.






நண்பர்கள் திருப்பதிக்குச் செல்வதாக இருந்தால் ஒருமுறை பாதயாத்திரை சென்று பாருங்கள். குடும்பத்துடன் செல்வதாக இருந்தால் பேருந்திலேயே சென்றுவிடுங்கள். தனியாக ஆண் நண்பர்களுடன் செல்வதாக இருந்தால் நன்றாக இருக்கும்.


படித்துவிட்டு கருத்துக்களைக் கூறவும்.

நன்றி

ஸ்கூல் பையன்.