இதன் முற்பகுதிகளைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்

பாகம் 1

பாகம் 2

இனி....


எனக்கு இப்போதுதான் உறைத்தது.  நான் கொலை செய்துவிட்டேன்.  இல்லை, அவன்தான் என்னைக் கொல்லவந்தான்.  நான் அவனைக் கொன்றாலும் அவன் என்னைக் கொன்றாலும் கொலை கொலைதான்.  மனம் என்னென்னமோ பிதற்றியது.



யார் இவன்? தெரியவில்லை. எதற்காக என்னைத் துரத்தினான்? தெரியவில்லை.  கொலை செய்யும் அளவுக்கு நான் யாருக்கும் துரோகம் இழைத்ததில்லையே.  மனம் இப்போது தான் யோசிக்க ஆரம்பித்தது.  இன்னும் சற்று நேரத்தில் ஆட்கள் வரக்கூடும்.  பிணம், ஆயுதங்களுடன் ரத்த உருவமாய் இருக்கும் என்னை போலீசில் பிடித்துக் கொடுக்கக்கூடும்.  யாரும் பார்ப்பதற்குள் இந்த இடத்தைவிட்டுப் போயாகவேண்டும்.





ஒரு நிமிடம் அமர்ந்து யோசித்தேன்.  இப்படியே வீட்டுக்குப் போனால் போகும் வழியில் யாரேனும் ரத்தக்கறையுடன் என்னைப் பார்க்கக்கூடும்.  கையில் மாற்று உடைகள் இருந்தன.  மாற்றிவிட்டுச் சென்றாலும் போலிஸ் நாய் என்னைக் கவ்விப்பிடிக்கும் வாய்ப்புண்டு.  என் தோள்பையை எடுத்தேன்.  அதிலிருந்த சிறு கண்ணாடியில் என் முகம் பார்த்து முகத்தில் குத்தியிருந்த பிளேடு துகள்களைப் பிய்த்து எடுத்தேன்.  நல்லவேளை, எதுவும் ஆழமாகக் குத்தவில்லை.  என் சட்டையைக் கழற்றினேன்.  வலது புஜத்தில் இப்போது ரத்தம் உறைய ஆரம்பித்திருந்தது.  அதே சட்டையாலே புஜத்திலும் முகத்திலும் துடைத்தேன்.  எல்லா ஆடைகளையும் களைந்துவிட்டு சிகப்பு நிற சட்டையையும் நீலநிற ஜீன்ஸ் பேன்ட்டையும் அணிந்துகொண்டேன்.  அங்கிருந்த பைப்பில் தண்ணீர் பிடித்து முகத்தையும் நன்கு கழுவினேன்.  அரிவாளையும் கத்தியையும் எடுத்தேன், அவற்றையும் நன்கு கழுவிக்கொண்டேன்.


ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்துகொண்டிருந்தது.  சிகப்பு நிற சட்டைதான், இருந்தாலும் ஒரு பாதுகாப்புக்காக குளிருக்கு அணியும் ஜெர்கினை சட்டைக்குமேல் அணிந்துகொண்டேன்.  அரிவாள், கத்தி, ரத்தக்கறை படிந்த என் ஆடைகள் அனைத்தையும் ஒரு பாலித்தீன் கவரில் போட்டுக்கொண்டேன்.  


செத்துக்கிடந்த அவனை காலால் புரட்டித் திருப்பினேன்.  என் செல்போனில் அவனைப் படம் எடுத்துக்கொண்டேன். பின் வெளியேறி தெரு முனையை அடைந்தேன்.  அங்கிருந்து ஒரு ஆட்டோ ஏறி, "பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் போப்பா" என்றேன்.


ரயில் நிலையத்துக்குள் நான் நுழையவும் கடற்கரை நோக்கிச் செல்லும் ரயில் வரவும் சரியாய் இருந்தது.  ஞாயிற்றுக்கிழமையாதலால் கூட்டமில்லை.  ஏறினேன், ரயில் புறப்பட்டது. போகும் வழியில் ஒரு ஆற்றுப்பாலத்தைக் கடக்கும்போது ரத்தக்கறை படிந்த ஆடைகளையும் ஆயுதங்களையும் கொண்ட பாளித்தீன் கவரை தூக்கி எறிந்தேன்.  கூவத்தில் விழுந்தது.


என் போனை எடுத்தேன், டயல் செய்தேன், "ஹலோ, குமார், சீக்கிரம் சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வா" என்றேன்.  என்ன ஏது விளக்கினேன். குமார் என் நண்பன்.


சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை அடையும்போது குமார் எனக்காகவே காத்திருந்தான்.  என்னுடைய தோள்பையை வாங்கிக்கொண்டான்.  வெளியேறி அவனுடைய காரில் ஏறிப் புறப்பட்டோம்.  இறங்கிய இடம், அவனுடைய வீடு.


எனக்கு அப்போது தான் உயிர் வந்தது.  நான் கொலை செய்ததை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.  குளித்தேன், புத்துணர்ச்சி கிடைத்தது.  குமார் காயம் பட்ட பின்முதுகில் மருந்து வைத்துக் கட்டினான்.  கத்தி குத்திய இடத்தில் தையலிட்டான்.  அவன் ஒரு டாக்டர்.  "எதுவா இருந்தாலும் நீ இப்போ வீட்டுக்குப் போகவேண்டாம், இங்கேயே படுத்து தூங்கு" என்றான். சாப்பிட்டுவிட்டு அவன் கொடுத்த மாத்திரைகளை விழுங்கிவிட்டு அவன் வீட்டிலேயே உறங்கிப்போனேன்.



தொடரும்....