மால்குடி ரெஸ்டாரன்ட் - ஹோட்டல் சவேரா







சென்னைவாசிகளுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.  ஜெமினி பாலத்திலிருந்து கடற்கரை செல்லும் வழியில் சோழா தாண்டியதும் இடதுபுறத்தில் பாலத்தை ஒட்டி அமைந்துள்ளது "ஹோட்டல் சவேரா".  ஐந்து நட்சத்திர ஹோட்டலான இதில் ஒரு நாள் மதிய உணவு சாப்பிட்ட அனுபவமே இன்று.





இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பல உணவகங்கள் இருந்தாலும் நாங்கள் தேர்ந்தெடுத்தது "மால்குடி ரெஸ்டாரன்ட்" எனப்படும் உணவகம் தான்.  







நாங்கள் சைவம், அசைவம் என ஒரு இருபது பேர் சென்றிருந்தோம்.  அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று மீல்ஸ் ஆர்டர் செய்தோம்.  இருபது பேரில் ஐந்து பேருக்கும் சைவமும் பதினைந்து பேருக்கு அசைவமும் ஆர்டர் செய்தோம்.  அசைவத்துக்கு சிறு கப்பில் பிரியாணி, ஒரு சிக்கன் குழம்பு, மட்டம் குழம்பு, மீன் குழம்பு தருகிறார்கள்.  சைவத்துக்கு சாம்பார், ரசம், மோர்க்குழம்பு போன்றவை.


மேலும், அனைவருக்கும் வேண்டும் என்கிற அளவுக்கு புரோட்டா, சப்பாத்தி, ஆப்பம், கல் தோசை, என்று கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.  இந்த ஐட்டங்களை சாப்பிட்ட பின்னர் தான் நாம் மீல்ஸ்-க்கு தயாராக வேண்டும்.







மீல்சைப் பொறுத்தவரையில் சாதத்தை போதும் போதும் என்கிற அளவுக்கு கொட்டுகிறார்கள்.  குழம்பு வகைகளை வேண்டும் என்கிற அளவுக்கு கொடுக்கிறார்கள்.  வேறு எந்த காய்கறி வகைகளையும் கேட்டால் கொடுக்கிறார்கள்.  ஆனால் இவையனைத்தும் கேட்டால் மட்டுமே.  நாங்கள் இருபது பேர் மட்டுமே அமர்ந்திருந்த அந்த உணவகத்தில் அவர்களால் எங்களை திருப்திப்படுத்தவே முடியவில்லை.  அனைவரும் புரோட்டா, சப்பாத்தி, கல்தோசை என்று ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு அடுத்த ஆர்டர் கொடுப்பதற்காக கை காயக்காய காத்திருந்தோம்.  சாப்பிடுபவர்களின் வேகம் சமைப்பதிலும் பரிமாறுவதில் இல்லை.






சுவையைப் பொறுத்தவரையில் எதுவுமே குறை சொல்லும் அளவுக்கு இல்லை. அனைத்துமே அருமையாக இருந்தன.  பணியாளர்களின் "பொறுமையான" உபசரிப்பால் எங்களுக்கு சாப்பிட்டு முடிக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.  மீல்ஸ் முடிந்தவுடன் ஜூஸ் வேண்டுபவர்களுக்கு ஜூசும், ஐஸ்கிரீம் வேண்டுபவர்களுக்கு ஐஸ்கிரீமும் கொடுக்கிறார்கள்.  அதுவும் எத்தனை வேண்டுமானாலும் கொடுக்கிறார்கள்.


விலையைப் பொறுத்தவரை சைவ சாப்பாடு ஒரு ஆளுக்கு 550 ரூபாய் ப்ளஸ் வரிகள், சர்விஸ் சார்ஜ், மற்றும் சர்விஸ் டாக்ஸ்.  அசைவ சாப்பாடு ஒரு ஆளுக்கு 750  ரூபாய் ப்ளஸ் வரிகள், சர்விஸ் சார்ஜ், மற்றும் சர்விஸ் டாக்ஸ்.  இடத்துக்கும் சுவைக்கும் இந்த விலை சரிதான் என்றாலும் சேவை ஆமை வேகத்தில் இருப்பதால் சவேரா ஹோட்டலில் "மால்குடி ரெஸ்டாரன்ட்" தவிர்ப்பது நலம்.






முன்பெல்லாம் ஒருவர் இந்த இடத்தில் அமர்ந்திருந்து கிளி ஜோசியம் பார்த்துக்கொண்டிருப்பார்.  ஆனால் சில நாட்களாக அவர் இங்கு காணப்படுவதில்லை.



நன்றி.