இன்றைய நவநாகரீக இளைஞர்களின் செயல்பாடுகளை உள்ளது உள்ளபடியே திரையில் தந்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.



கதை - ஒரே காலேஜில் படிக்கும் நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள்.  இவர்களுக்குள் காதல் ஏற்படுவதை இரண்டு காட்சிகளின் மூலம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.  யாருக்கும் தெரியாமல் எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொள்கிறார்கள், பேசுகிறார்கள், பீச், பார்க் என்று ஊர் சுற்றுகிறார்கள், மகாபலிபுரம் சென்று ரூம் எடுக்கிறார்கள், தப்பும் செய்துவிடுகிறார்கள்.  நாயகி கர்ப்பமாகிவிட இந்த விஷயம் வீட்டுக்குத் தெரிகிறது.  அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை திரையில் காணுங்கள்.





படத்தின் ஹைலைட் சந்தேகமேயில்லாமல் கதையும் இயக்குனரும் தான். இன்றைய இளைஞர்களின் மனப்போக்கை பளிச்சென்று நம்மில் புகுத்திவிடுகிறார்.  காதலுக்காக நாயகன் பஸ்சிலிருந்து குதிப்பதுமுதல் பிரச்சனை என்று வந்தவுடன் கர்ப்பத்தைக் கலைக்க ஆஸ்பத்திரிக்கு அலையும் வரை என்ன நடக்கும் என்பதை யதார்த்தமாக சொல்லிவிடுகிறார்.  

நாயகன் புதுமுகம் சந்தோஷ்.  ஆள் மிகவும் சுமாராகவே இருக்கிறார், ஆனால் கதைக்கேற்ற முக அமைப்பு.  நாயகி மனீஷா, வழக்கு எண் 18/9 படத்தில் பார்த்திருப்பீர்கள்.  அழகாக இருக்கிறார், ஈறுகள் தெரிய சிரிக்கிறார். வயிற்றில் குழந்தை உருவானதும் அதைக் கலைக்க போராடுவதும் என சிக்கலான நடிப்பில் அபாரமாக மிளிர்கிறார்.  இவரது அம்மாவாக வரும் பூர்ணிமா சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.  அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷை வீனடித்துவிட்டார்களோ என்று நினைக்கையில் அவர் பேசாமலே வரும் ஒரு காட்சியில் அவரது நடிப்பை பறைசாற்றிவிட்டுப் போய்விடுகிறார்.


இன்றைய காதலர்களுக்கு எப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்யலாம் என்று கேட்காமலே சொல்லிக்கொடுக்கிறார்கள்.  பெற்றோருக்கு இளைஞர்கள் எப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்கிறார்கள் என்று காட்டிக்கொடுக்கிறார்கள்.  யாருக்கும் தெரியாமல் போனில் பேசுவது, தெரிந்ததும் சமாளிப்பது, வீட்டில் யாரும் இல்லாதபோது காதலனை வீட்டுக்கு வரச்செய்வது, அதே நேரம் உறவினர் வர அந்த நிலைமையை சமாளிப்பது என்று முதல் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகளுடன் கதை நகர்கிறது.


பிரச்சனை என்பது இடைவேளையின்போது வர பின் பாதிப் படம் முழுவதும் சற்று வேகமாகவே நகர்கிறது.  ஜாதியின் பெயரைக் கேட்பதும், போலீசில் மாற்றி மாற்றி புகார் கொடுப்பதும் ஊரைவிட்டு ஓடிப்போவதும் என பரபரப்பாகவே செல்கிறது.  நாயகன் ஒரு மனநிலையில் இருக்கும்போது நாயகி முரணாக இருப்பதும் நாயகி ஒரு மனநிலையில் இருக்கும்போது நாயகன் தன் பெற்றோர் பேச்சைக்கேட்டு நடப்பதும் யதார்த்த நிகழ்வின் உச்சம்.


கிளைமாக்சில் கல் மனம் கொண்டவர்களையும் கரையவைத்து கைதட்டல்களை அள்ளிச்செல்கிறார் இயக்குனர்.  கடைசிப்பாடலையும் அதற்கேற்றாற்போல் தந்திருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.  


ஆதலால் காதல் செய்வீர் - அனைவரும் பார்க்கவேண்டிய "பாடம்".


மற்றவர்களின் விமர்சனங்களைப் படிக்க