ரத்தம் பார்க்கின் - 1

அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நன்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது.  பொதுவாக ரயிலில் எனக்கு தூக்கமே வராது.  இருந்தும் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு கொஞ்சம் அயர்ந்ததில் தூங்கிப்போனேன்.நான் சென்றுகொண்டிருக்கும் ரயில் காலை ஆறு மணிக்கெல்லாம் தாம்பரம் சென்றுவிடும்.  மீண்டும் புரண்டு படுத்தேன்.  மனதில் நேற்றைய சந்திப்பு காட்சியாக ஓடிக்கொண்டிருந்தது.  மதுரைக்கு அறுகே இருக்கும் அந்த நிறுவனத்தின் முக்கியமான ஆர்டர் கிடைத்திருக்கிறது.  போனவாரம் தான் quotation கொடுத்திருந்தேன்.  ஒரு கோடி ரூபாய்க்கான ஸ்பேர் பார்ட்ஸ் இரண்டு மாதத்துக்குள் வாங்கிக் கொடுக்கவேண்டும்.


இதோ! தாம்பரம் வந்துவிட்டது.  லேசாக விடியத் தொடங்கியிருந்தது.  தோள்பையை மாட்டிக்கொண்டு இறங்கினேன்.  பல்லாவரத்தில் இருக்கும் என் வீட்டுக்குச் செல்லவேண்டும்.  பாலம் ஏறி இறங்கி அடுத்த பிளாட்பாரம் சென்று அங்கே கடற்கரை செல்லும் மின்சார ரயிலில் புறப்பட்டேன்.  என்னமோ தெரியவில்லை, சென்னையில் காலடி எடுத்துவைத்ததும் இனம்புரியாத பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.


ரயில் முன்னோக்கியும் என் மனம் பின்னோக்கியும் பயணிக்கத் தொடங்கின.  இந்த ஆர்டர் மட்டும் எந்தக் குறையுமின்றி அவர்களுக்கு செய்து கொடுத்தால் சுமார் இருபது லட்சம் வரை லாபம் கிடைக்கக்கூடும்.  மேலும் இதே நிறுவனத்தின் ஆர்டர்கள் இன்னும் கிடைக்கக்கூடும்.  கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றியாக வேண்டும்.


பல்லாவரம்! ஆட்டோக்கள் வரிசையாய் நின்றிருந்தன.  நான் எப்போதும் ஆட்டோவில் பயணிப்பதில்லை, வீடு நடந்து செல்லும் அளவுக்கு அருகில் இல்லை என்றாலும் நான் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  தவிர ஆட்டோக்காரர்களிடம் காலையிலேயே பேரம் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை.  பிரதான சாலையைக் கடந்து செல்வநாயகம் சாலையில் அரை கிலோமீட்டர். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி நான்கு தெருக்களைத் தாண்டினால் ஜெகதாம்பாள் காலனியில் என் வீடு.


இரண்டு பக்கமும் முரட்டு பங்களாக்கள். ஆள் நடமாட்டம் இல்லாத அந்தத் தெருவில் திரும்பினேன், என் நிழல் எனக்கு முன்னாள் நீண்டிருந்தது.  என்னைத் தொடர்ந்து வா என்றது.  டீக்கடை ஒன்றில் காலை FM ரேடியோ ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது.  என் நிழலைப் பார்த்தவாறே நடந்தேன்.


பக்கவாட்டில் இன்னொரு நிழல் என் நிழலைத் தொட்டது.  யாரோ என் பின்னால் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.  நடையை கொஞ்சம் எட்டிப்போட்டேன், அந்த நிழல் என் பின்னால் சென்றுவிட்டது.  மீண்டும் என் நிழலைப் பார்த்தவாறே நடக்கலானேன்.  மீண்டும் அதே நிழல் என் நிழலைப் பின்தொடர்ந்தது.  என்னை முந்திச்செல்ல நினைக்கிறார் போலும், வேனத்தைக் குறைக்காமல் நடந்தேன். இப்போது இந்த நிழல் கையைத் தூக்கியது, பின்னால் திரும்பினேன்.இரண்டடி நீளமுள்ள அரிவாள் ஒன்று அந்த நிழலுக்கு சொந்தக்காரனிடம் இருந்தது.  என்னை குரூரமாகப் பார்த்தான்.  எதையோ மென்று கொண்டிருந்தான்.  எனக்குப் புரிந்துவிட்டது...தொடரும்....