விழிப்பு வந்தபோது நான் எங்கிருக்கிருக்கிறேன் என்பதை மறந்துபோனேன்.  ஓ, குமாரின் வீடு.  கைவலி அதிகமாக இருந்தது.  மாத்திரைகளின் வீரியம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  மணி பார்த்தேன், மாலை ஐந்து ஆகியிருந்தது.  காலை எட்டு மணிக்கு நடந்த சம்பவம்.  டி.வி.யில் செய்தி சேனலில் பார்க்கலாமா, மனம் துடித்தது.  ஹாலுக்கு வந்தேன்.  டி.வி.யை ஆன் செய்தேன்.சிலபல அரசியல் செய்திகளுக்குப் பின்னர் வந்த செய்தி: "சென்னையில் பிரபல ரவுடி சுரேஷ் பட்டப்பகலில் வெட்டிக்கொலை, மர்ம நபருக்கு போலிஸ் வலை". எதிர்பார்த்ததுதான்.  கண்டுபிடித்து விடுவார்களோ, முடியாது.  இவ்வளவு தூரம் நாய் மோப்பம் பிடிக்க வாய்ப்பில்லை.  நான் அங்கு சென்றதற்கான எந்த அறிகுறியும் இல்லை. தடயங்களையும் அழித்தாயிற்று. இந்த விஷயம் தெரிந்த குமார் காட்டிக்கொடுத்தால்தான் உண்டு.  அவன் அப்படிச் செய்பவன் இல்லை. இனிமேல் என்ன?  சமாதானம் ஆக முடியாத மனத்தை சமாதானம் செய்துகொண்டிருந்தேன். குமார் வரும் நேரம் ஆயிற்று. போன் செய்து பார்க்கலாமா?  காலிங் பெல் அடித்தது. குமார் வந்துவிட்டான்.


கதவைத் திறந்தேன். வெளியே போலீஸ்.


"மிஸ்டர் குமார்?"

"அவரு வெளிய போயிருக்கார் சார்"

"நீங்க மிஸ்டர் அருண்?"

"அ...ஆமா சார்"

உள்ளே நுழைந்தார், அவருடைய தோள்பட்டையிலிருந்த மூன்று நட்சத்திரங்கள் அவர் ஒரு இன்ஸ்பெக்டர் என்று அடையாளம் காட்டியது.  அவருடன் இரண்டு கான்ஸ்டபிள்களும் உள்ளே நுழைந்தனர்.

"நான் இன்ஸ்பெக்டர் குணசேகரன்"

அவருடைய சீருடையிலிருந்த பெயர்ப் பட்டையைப் பார்த்தேன், "தெ... தெரியுது சார்"

"நீங்க காலைல ரவுடி சுரேஷை வெட்டிக் கொன்னுருக்கீங்க"

எல்லாம் முடிந்தது, நான் கைது செய்யப்படப் போகிறேன், கொலை செய்ததற்கு, கொலையை மறைத்ததற்கு, ஆயுதங்களை அழித்ததற்கு, தலைமறைவானதற்கு என்று பல பிரிவுகளில் வழக்கு போடுவார்கள்.  போதாதற்கு எனக்கு சிகிச்சை அளித்ததற்கும் தங்க இடம் கொடுத்ததற்கும் குமாரையும் கைது செய்வார்கள்.

"என்ன, எங்களுக்கு எப்படித் தெரியும்னு பாக்கறீங்களா"

" "

"கொலை நடந்த இடத்துக்கு எதிர் வீட்டில ஒரு சிசிடிவி கேமரா இருக்கு, அதில பதிவானதை வச்சி உங்க முகத்தைப் பிடிச்சோம், அப்புறம் உங்க போன் நம்பரை வச்சி யாருக்கெல்லாம் கால் பண்ணியிருக்கீங்கன்னு பாத்ததில குமாரோட அட்ரசப் பிடிச்சோம். இங்க வந்திட்டோம்"

" "

"அருண், இன்னைக்கு நடந்தது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம்" 

" "

"ஆக்சுவலா, சுரேஷ் உங்களை வெட்ட வரலை, வேற ஒரு ரவுடிய வெட்டத்தான் வந்திருந்தான். இவன் இதுவரை அவனைப் பாத்ததில்ல, நீங்க போட்டிருந்த டிரெஸ் அடையாளம், ஷோல்டர் பேக் எல்லாம் ஒத்துப்போச்சு.  நீங்க இன்னைக்கு செத்திருக்க வேண்டியவர்.  கொலைகாரனா நிக்கறீங்க"

" "

"நான் அந்த வீடியோவை ஆராய்ச்சி பண்ணினதில நீங்க வேணும்னு அவனைக் கொலை செய்யலை, தற்காப்புக்காகத்தான் அரிவாளை வீசியிருக்கீங்க, அது அவன் கழுத்தை பதம் பாத்திருச்சு"

" "

"சம்பந்தமே இல்லாம நீங்க வந்து மாட்டிக்கிட்டீங்க.  என் கைல ஆதாரமே இருக்கு"

" "

"ஆனா நான் உங்களைக் கைது செய்யப்போறதில்லை.  நம்பர் ஒன் - இதில நீங்க தெரியாம மாட்டிட்டீங்க, அவனுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நம்பர் டூ - நீங்க அவனைக் கொல்லணும்னு கொல்லல, நம்பர் த்ரீ - அந்த ரவுடி சுரேஷை நாங்களே என்கவுண்டர்ல கொல்லணும்னு பிளான் பண்ணிட்டிருந்தோம், நம்பர் போர் - நீங்க ஒரு இளைஞர், உங்க வாழ்க்கைய சீரழிக்க நான் விரும்பல, நம்பர் பைவ் - என் மனசாட்சி உங்களைக் கைது செய்ய இடம் கொடுக்கல"

" "

"நீங்க தான் கொலை செஞ்சீங்கன்னு உறுதி செய்றதுக்குத்தான் நான் உங்களை விசாரிக்க வந்தேன்"

என் மனதிலிருந்த பயம் அனைத்தும் விலகியது.  நான் இங்கு எப்படி வந்தேன், தடயங்களை எவ்வாறு மறைத்தேன் என்கிற அனைத்து விஷயங்களையும் இன்ஸ்பெக்டர் கேட்டுக்கொண்டார்.

இரவு எட்டு மணி செய்திகளில்:

"பிரபல ரவுடி சுரேஷ் கொலை, மற்றொரு ரவுடி கும்பலுக்கு வலைவீச்சு, இது தொடர்பாக பிரபல ரவுடிகளான முருகன், சேகர் உள்ளிட்ட பத்து பேரை போலீஸ் வலைவீசித் தேடிவருகிறார்கள்"


முற்றும்...