பக்கத்து வீட்டம்மணியின் குணாதிசயம் இப்படித்தான். ஆரம்ப காலத்தில், அவருக்கு எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை என வியந்து, அவருக்குத் தேவையான விவரங்களை நாங்கள் வெள்ளந்தியாகச் சொல்லியிருக்கிறோம். சில நாட்களுக்குப் பிறகுதான் தெரிகிறது, அவரது பண்பே இப்படித்தான் என்று. அவரைப்பற்றி ஓரளவுக்கு நாங்கள் புரிந்துகொண்ட பிறகு, தவிர்க்க ஆரம்பித்துவிட்டோம். இருந்தாலும், குழந்தைகள் மூலமாக அவருக்குத் தேவையான விவரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார். அவரது மகள்கள் இருவருமே அவரைப்போலவே வருகிறார்கள் என்பது வேறு கதை.


நேற்று மனைவியின் தோழி ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். வரும் முன்னர், தன் தந்தையுடன் வருவதாகக் கூறியிருந்தார். அவரது தந்தையை எனக்குத் தெரியும். ஒருநாள் பள்ளிக்கு மகளை அழைத்து வரச் சென்றபோது அவரை சந்தித்தேன். வகுப்புகள் முடிந்து குழந்தைகள் வெளியே வரக் காத்திருந்த நேரம் அது. முதல் சந்திப்பிலேயே ஏகப்பட்ட விவரங்களைக் கேட்டார். எனக்குக் கூச்சமாக இருந்தது. எங்கே வேலை, என்ன சம்பளம், வாடகை எவ்வளவு உள்ளிட்ட பல விவரங்களைக் கேட்டார். வயது முதிர்ந்தவராயிற்றே என்று நான் அமைதியாக பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் சொன்ன விவரங்களை வைத்து, நான் பணி ஓய்வு பெறும் வயதில், என்னிடம் எவ்வளவு சொத்து இருக்கும், எனக்கு என்னென்ன வியாதிகள் வந்திருக்கும், என் மக்களுக்குத் திருமணம் ஆகியிருக்குமா உள்ளிட்ட விவரங்களைக் கணித்திருப்பார். நல்லவேளையாக அதிக நேரம் எடுக்காமல் வகுப்புகள் முடிந்து மணி அடித்துவிட்டார்கள். அந்த உரையாடல் அப்போதே முடிந்துவிட்டது.



மனைவியின் தோழியுடன் அவரும் நேற்று மாலை வீட்டுக்கு வந்திருந்தார். அவர் வருவார் என்று தெரிந்திருந்ததால், என்னுடைய பணிகளை மாலை நேரத்திற்கு மாற்றி வைத்திருந்தேன். அவர்கள் வந்ததும், 'எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, தப்பா எடுத்துக்காதீங்க' என்று கூறி மடிக்கணினியில் அமர்ந்துவிட்டேன். நிச்சயமாக அவரையும், அவர் கேட்கப்போகும் கேள்விகளையும் தவிர்ப்பதற்குத்தான் இதைச் செய்தேன். வேறு வழியில்லை. நானும் அந்த உரையாடலில் கலந்துகொண்டு, அவர் கேட்கும் விவரங்களைக் கூறவும் முடியாமல், கூறாமல் இருக்கவும் முடியாமல், எரிச்சலில் ஏதாவது திட்டிவிட்டால்? மனைவிக்கும், மனைவியின் தோழிக்கும் இடையே இருக்கும் நட்பு விட்டுப்போய்விடக் கூடாது. ஒரு பெரியவரை அவமானப்படுத்திவிடக் கூடாது, அறிவுரை சொல்லக்கூடாது என்பன உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்சனைகள்.

முகநூலில் நண்பர் ஒருவர் இருக்கிறார். முகநூல் மூலமாகத்தான் பழக்கம். அவ்வப்போது கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன் என்றாலும் அதிகம் பேசியதில்லை. முதல்முறையாக அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். 'வேலையை விட்டுட்டுப் படிக்கிறேன் என்கிறாயே, வருமானத்துக்கு என்ன செய்றே? பணம் வச்சிருக்கியா?' என்று ஒரு தர்மசங்கடமான கேள்வி ஒன்றைக் கேட்டார். ஆனால், அவரது கேள்வியில் அக்கறை இருந்தது. என்னிடம் பதிலை எதிர்பார்க்காமல், 'ஏதாவது உதவி வேணும்னா தயங்காம என்கிட்டக் கேளுப்பா. நான் இருக்கேன்கிறதை மறந்துடாதே' என்றார். அவர் அப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தாலும், அதில் அக்கறை இருந்தது. உண்மையான அன்பும், உதவி செய்யவேண்டும் என்ற மனப்பாங்கும் இருந்தது.

பக்கத்து வீட்டம்மணி வீடு வாங்கிவிட்டார். இந்த மாதத்திலேயே அங்கு குடிபெயர்கிறார். எந்த இடத்தில், எவ்வளவு? இவை மட்டும்தான் நாங்கள் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட விவரங்கள். இதுவே நாங்கள் வீடு வாங்கியிருந்தால், இந்த இரண்டு கேள்விகள் மட்டுமல்லாது, வங்கிக்கடன் எவ்வளவு, மீதி பணத்திற்கு என்ன செய்தீர்கள், நகையை விற்றீர்களா, நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கைமாற்றாக எவ்வளவு வாங்கினீர்கள் என்று குடைந்து குடைந்து கேள்வி கேட்டிருப்பார். அவர் வீடு மாறுவதால், எங்களைக் கண்காணிக்கும் பணி அவருக்கு இருக்காது. நல்லது. இருந்தாலும், வீடு மாறிய பிறகு, தொலைபேசி மூலமாக எவ்வளவு விவரங்கள் சேகரிக்க முடியுமோ, சேகரிக்கத்தான் செய்வார்.

இந்த அளவுக்கு விவரங்களை சேகரித்துக்கொண்டு இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? என்ன சாதிக்கப்போகிறார்கள்? சர்வநிச்சயமாக இவர்களுக்கு நம்மீது அக்கறை என்பது கிடையாது. இவை நம்மீது இருக்கும் அன்பால் கேட்கப்படும் கேள்விகளும் அல்ல. நேற்றைய உரையாடலில் நானும் கலந்துகொண்டிருந்தால், நிச்சயமாக அந்தப் பெரியவர் ஏகப்பட்ட கேள்விக்கணைகளைத் தொடுத்திருப்பார். 'இல்லை, ஐயா. இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை' என்றா அவரிடம் சொல்லமுடியும்? இது என்ன பத்திரிகை பேட்டியா? அப்படி இருந்தும், மனைவியிடம் ஏகப்பட்ட விவரங்களைக் கேட்டிருக்கிறார். ஒரு வீட்டிற்குச் சென்றால், என்ன கேள்வி கேட்பார்கள்? வாடகை எவ்வளவு, மெயின்டெனன்ஸ் எவ்வளவு வருகிறது? அவ்வளவுதானே? இவர் கேட்டவை என்னவென்றால், கரண்ட் பில் எவ்வளவு வருகிறது, பெற்றோருக்கு என்ன வருமானம் வருகிறது என்பன போன்ற கேள்விகள். நம் மனநிலை எப்போதும் ஒரேவிதமாக இருக்காதே. எரிச்சலில் 'ஏன், நீங்க கொடுக்கப்போறீங்களா?' என்று கேட்டுவிடக்கூடாது பாருங்கள். முதலிலேயே தவிர்த்துவிட்டேன். ஆனாலும், மனைவியின் தோழிக்கு நான் உரையாடலில் கலந்துகொள்ளவில்லை என்ற வருத்தம் இருந்திருக்கும். ஏனென்றால், மனைவியின் தோழியரில் ஒரு பேச்சு உண்டு. 'பிரபா வீட்டுக்குப் போனால், அவ ஹஸ்பெண்டும் நல்லா பேசுவார்' என்று. பரவாயில்லை, அடுத்த முறை பார்க்கும்போது சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்.


ஒருவருடைய விவரங்கள் என்பது அவரவர் விருப்பப்பட்டு வெளியே கூறுவது. கேள்விகள் கேட்பது என்பது ஓரளவு விவரங்களைத் தெரிந்துகொள்வதற்குத்தான். முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் யாராவது கேள்வி கேட்டார்கள் என்றால், பதில் சொல்லாமல் தவிர்த்துவிடலாம். அந்தப் பெரியவர் போன்று நேருக்கு நேராக அமர்ந்துகொண்டு இருக்கும்போது பதில் சொல்வதெல்லாம் ஒரு கலை. கற்றுக்கொள்ள வேண்டும்.