ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான். பெயர் ராமசுப்பிரமணியன். ஏழாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தோம். அருகருகே அமர்ந்திருந்ததாலோ என்னவோ சீக்கிரமே நட்பாகிவிட்டோம். ஒன்றாகவே படிப்பது, சாப்பிடுவது, நம்பர் ஒன் போவது என பள்ளியில் எப்போதும் சேர்ந்தே இருப்போம். ஆனால், அது பள்ளியின் பிரதான வாயில் தாண்டி வெளியே கடந்து வந்ததில்லை. வாசலின் இடதுபுறம் நான் திரும்பிவிட, அவன் வலதுபுறம் திரும்பி அவனுடைய வீட்டுக்குச் சென்றுவிடுவான்.


ஒரேயடியாக நெருக்கமாகப் பழகியதால் கருத்து வேறுபாடுகளும் அதிகமாகவே இருந்தன. சிறுவர்கள்தானே? அடிக்கடி முகத்தைத் திருப்பிக்கொள்ளுதலும் முறைத்தலும் நடந்தன. சில நாட்கள் பேசாமல் இருந்தோம். பின் மீண்டும் நட்பாகிக்கொண்டோம்.

மீண்டும் வளர்ந்த நட்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஏதோ ஒரு வாய்த்தகராறு முற்றி, நான் அவனுடைய வயிற்றில் குத்தும்வரை சென்றுவிட்டது. ஒரே குத்துதான். வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்தான். பின் சுதாரித்துக்கொண்டு எழுந்து சென்றுவிட்டான். அதன்பிறகு, இடம் மாறி அமர்ந்துகொண்டான். பேச்சுவார்த்தைகள் நின்றுவிட்டன.

எட்டாம் வகுப்பில் அவன் வேறு பிரிவுக்குச் சென்றுவிட்டான். அதனால், அவனைப் பார்ப்பதுகூட அரிதாகிவிட்டது. என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பானோ என்றுகூட நான் நினைத்துப் பார்க்கவில்லை. சில நாட்கள் கழித்து, தமிழாசிரியர் ஒரு பாடம் கற்றுக்கொடுக்கும்போது, அடுத்தவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வருத்துவது தவறு, அதற்குப் பரிகாரமாக மனமுருகி அழவேண்டும், வருத்தப்பட்ட நபரிடம் நாம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அறிவுரை கூறினார். அவர் அதைக் கூறும்போது, எனக்கு ராமசுப்பிரமணியன் ஞாபகம்தான் வந்தது. எத்தனையோ நாட்கள் அவனை வார்த்தைகளாலும், ஒரே நாளில் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதை நினைத்து வருந்தினேன். எங்காவது வெளியே பார்த்தால் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிடவேண்டும் என்றும் தோன்றியது. ஆனால், அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை அமையவில்லை.

ஒன்பதாம் வகுப்பில் அவன் என்னுடைய பிரிவுக்கே வந்துவிட்டான். அவரவர் அமர்வதற்கான இடம் பிரிக்கும் பணி முதல் நாள் நடந்தது. மாணவர்களின் உயரம் பார்த்து வகுப்பாசிரியர் இருக்கையில் அமரவைத்தார். அன்று நானும் ராமசுப்பிரமணியனும் அருகருகே அமர வைக்கப்பட்டோம். நான் இன்னும் அதே கோபத்தில் இருக்கிறேனோ என்று நினைத்து, அவன் என்னிடம் எதுவும் பேசவில்லை. நான்தான் அவனைப் பார்த்து சிரித்தேன். பதிலுக்கு அவனும் சிரித்தான். அன்றைக்கே மனதுக்குள் ஒரு சபதம் எடுத்துக்கொண்டேன், இனிமேல் அவனை எந்தக் காரணத்தைக் கொண்டும் அடிக்கக்கூடாது என்று.

ஒன்பதாம் வகுப்பில் இன்னும் நெருக்கமானோம். பள்ளி கடந்து எங்கள் நட்பு விரிந்தது. படிப்பதற்காக ஒருநாள் வீட்டுக்கு அழைத்திருந்தான். நானும் போனேன். அவனுடைய அம்மாவிடம் என்னை அறிமுகப்படுத்தினான். அம்மா என்னிடம், ‘ஓ, நீதானா அது?’ என்றார். எனக்குப் புரிந்தது. எனக்கு அப்போதும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றவில்லை.

இன்றுவரை எங்கள் நட்பு தொடர்கிறது. போனில் பேசுவதெல்லாம் இல்லை. ஊருக்குச் சென்றால் அவனைப் பார்ப்பேன். அவனுடைய தந்தை நடத்திய அரிசிக்கடையை அவன் எடுத்து நடத்திவருகிறான். நல்லா இருக்கியா, நல்லா இருக்கேன் என்ற அளவில் மட்டும் எங்கள் நட்பு தொடர்கிறது.


சிறு வயதில் நடந்தவற்றை நினைத்தால் சில நேரங்களில் சிரிப்பாகவும், சில நேரங்களில் இவ்வளவு அறியாமையில் இருந்திருக்கிறோம் என்றும் தோன்றுகிறது. இவ்வளவு ஏன்? கடந்த வருடம் நடந்ததை நினைத்தால் கூட, இந்த விஷயத்தில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த உலகம் நமக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாடம் கற்றுக்கொடுக்கிறது. நாம்தான் சில நேரங்களில் அவற்றை சரியாக அணுகுவதில்லை என்றும் புலப்படுகிறது.