பட்டாசில்லை, புகையில்லை. அமைதியாகக் கழிந்தது தீபாவளி.


வழக்கம்போல் புதிய உடைகள், இனிப்பு மட்டும். சாமி கும்பிட்டு, சாப்பிட்டுவிட்டு செல்வி அக்காவின் வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டோம். குடும்பத்துடன் அவ்வளவு தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது என்பது மிகுந்த சிரமமான காரியம். ஒடுக்கிக்கொண்டு அமர்ந்து ஓட்ட வேண்டும். முன்னால் அமர்ந்திருக்கும் மகனிடம், ‘குனிடா, குனிடா’ என்று அவ்வப்போது ஆணையிட வேண்டும். மனைவியும் மகளை மடியில் அமரவைத்துக்கொண்டு நீண்ட நேரம் வண்டியில் உட்கார வேண்டும். ஓலாவில் டாக்சி வரவழைத்து, பயணித்தோம்.



எனக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. டாக்சியில் செல்வதானால் ஓட்டுனரிடம் பேசிக்கொண்டே செல்வேன். ஒன்று, ஓட்டுநரைத் தாழ்வாக நினைக்காமல், சரிசமமாகப் பேசிக்கொண்டே பயணிப்பவர் வருகிறார் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படும். மற்றொன்று, சக பயணிகளுடன் பேசிக்கொண்டே வந்தால், ஓட்டுநருக்குத் தேவையில்லாத விஷயங்களை நாமே தெரிவித்ததுபோல் ஆகிவிடும். ஆனால், இன்று வந்தவர் மிகவும் வெள்ளந்தியாக இருந்தார். லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னலில் நிற்கும்போது, கார்களில் பொருத்தப்படும் தலையாட்டி பொம்மைகளை விற்றுக்கொண்டு வந்த பெண்ணிடம், கண்ணாடியை இறக்கிவிட்டு, ‘வேண்டாம்’ என்றார். அவருடைய கண்ணியத்தைப் பார்த்த அந்தப் பெண்மணி, தலையாட்டும் நாய்க்குட்டி பொம்மைகள் இரண்டை உள்ளே வைத்துவிட்டு, ‘ரெண்டு நூறு ரூவான்னு வச்சிக்கோ’ என்றார். கவுண்ட் டவுன் டைமரைப் பார்த்துவிட்டு, ‘சிக்னல் போடப்போறாங்க’ என்று நான் சொன்னதும், ஓட்டுநர் அவற்றை எடுத்து அந்தப் பெண் கையில் கொடுத்தார்.

‘ஏன் இவங்க கிட்ட கண்ணாடியை இறக்கி வேண்டாம்னு சொல்றீங்க? உள்ளருந்தே வேண்டாம்னு சொல்லிட்டு திரும்பிட்டீங்கன்னா வரமாட்டாங்கள்ல?’ என்றேன். ‘அவமானப்படுத்தற மாதிரி இருக்கும். நாம அவங்களை மதிக்கிறோம்னு தெரியணும்ல?’ என்றார். ‘இதுக்கெல்லாம் அவங்க கவலைப்பட மாட்டாங்க. நீங்க முகத்தைத் திருப்பிட்டீங்கன்னா , அவங்க அடுத்த வண்டிக்குப் போயிடுவாங்க. அவங்க ஒருவேளை வாங்கினாலும் வாங்குவாங்களே. இன்னிக்கு அவங்க சிக்னல் போடுற வரை பேசியும் வியாபாரம் ஆகலையே. அதனால கண்டுக்காதீங்க’ என்றேன். வெள்ளந்தியாக சிரித்துவைத்தார்.

காசி தியேட்டர்


செல்லும் வழியெங்கும் மெர்சல் மயம். காசி தியேட்டர் மற்றும் உதயம் தியேட்டர்களில் நிறைந்து வழியும் கூட்டம். கூட்டம் மட்டுமின்றி, பட்டாசு வெடித்தலும், கூக்குரல்களும். போலீசாரும் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக வழியமைத்துக் கொடுத்தார்கள். தியேட்டர்கள் தவிர்த்து சாலைகளில் வாகன நெரிசல் துளியும் இல்லை.

உதயம் தியேட்டர்



செல்வி அக்காவின் வீட்டுக்கு வந்து இறங்கியதும், ஓலா ஓட்டுனர்களின் வழக்கமான கோரிக்கையை இந்த ஓட்டுனரும் முன்வைத்தார். ‘சார், ஸ்டார் கொடுத்திருங்க’ என்பதுதான் அது. வழக்கம்போல் ஐந்து ஸ்டார் கொடுத்து, ஆள் நல்ல மனுஷன், வண்டி நல்லாருக்கு என்பன போன்ற கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் சொல்லிவிட்டேன்.

சுடச்சுட வடை, முறுக்கு, இனிப்பு, அமர்க்களமான சாப்பாடு. அதை விட அதிகமாக பேச்சு என்று நாள் முழுவதும் கழிந்தது. வெளியில் சென்று படம் எடுத்துக்கொண்டோம்.



திரும்பி வருவதற்கு ஓலா இல்லை. வேறு டாக்சிகளில் வந்து பழக்கம் இல்லை என்பதால், மெட்ரோவில் பயணிப்பது என்று முடிவானது. இரண்டு பேர் ஆளுக்கு ஒரு வண்டியாக எடுத்துவந்து திருமங்கலம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்கள். அங்கு அவர்களிடமிருந்து விடைபெற்று, கீழே இறங்கி, பயணச்சீட்டுகளை வாங்கிவிட்டு நடைமேடையில் இறங்கினோம். ஐந்து நிமிடத்தில் ரயில் வந்துவிடும் என்று அறிவிப்பு வந்தது.



சுரங்க ரயிலில் ஏறுவது இதுவே முதல் முறை. ரயில் ஏறும் இடம் முழுவதையும் கண்ணாடிக் கதவுகளால் அடைத்திருந்தார்கள். ரயில் வந்ததும் திறந்துகொள்ளும் வகையில் இருந்தது. பாப்பா அந்தக் கண்ணாடிக் கதவைத் தொட முயன்று, அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவர் விசிலடித்து விரட்ட, மிரண்டு எங்களுடன் அமர்ந்துவிட்டாள்.



பதினைந்து நிமிடங்களில் பரங்கிமலை ரயில் நிலையம் வந்துவிட்டோம். அங்கிருந்து கடற்கரை-தாம்பரம் ரயில்கள் செல்லும் ரயில் நிலையம் வழியாக வெளியே வந்தோம். மனைவிக்கு மிகுந்த வியப்பு. ‘அட, இப்படி வச்சிருக்காங்களா?’ என்று வாய்விட்டே கேட்டுவிட்டார். அங்கிருந்து ஒரு ஆட்டோ. வரும் வழியில்தான் கவனித்தேன். ஆதம்பாக்கத்தில் மூடியிருந்த மதுக்கடை திறந்திருந்தது. அங்குதான் அந்தக் குறும்படத்தை எடுத்தேன். உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுகிறார்களா? அல்லது இது பிரதான சாலை என்பதை மாற்றிவிட்டார்களா?.

வீடு வந்தாயிற்று. தெருவெங்கும் ஒரே குப்பை, மருந்தின் மணம், புகை. வாகனங்கள் வருவதைக்கூட மதிக்காமல் பலரும் பட்டாசு வெடிப்பதில் மும்முரமாக இருந்தார்கள். மகளுக்கு பட்டாசு என்றால் பயம். காலை நான்கரை மணிக்கெல்லாம் பட்டாசுச் சத்தம் தாளாமல் எழுந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தபிறகுதான் ஞாபகம் வந்தது. பால் இல்லை. பக்கத்துக் கடையில் பால் இல்லை. பிரதான சாலைக்குச் சென்றேன். அங்கும் மக்கள் வாகனங்களை மதிக்காமல் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். புகைப்படம் எடுக்கலாமா என்று யோசித்தேன். பையில் போன் இல்லை. அவர்களிடம் ‘சாலையில் பட்டாசு வெடிப்பது குற்றம் என்று தெரியாதா?’ என்று கேட்கலாமா என்று நினைத்தேன். ‘மெயின் ரோட்ல மூடின கடைகளைத் திறந்துட்டாங்க, பெரிசா பேச வந்துட்டான்’ என்று கேட்டுவிட்டால்? பாலை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.