மேடைப் பேச்செல்லாம் வாய்த்ததே இல்லை. அப்படியே அமைந்தாலும் மிகச் சுருக்கமாகப் பேசிவிட்டு ஓடிவிடுவது வழக்கம். ஆனால், ஏதேனும் விஷயம் குறித்து எழுதச் சொன்னால் எழுதிவிடுவேன். அதற்கான தரவுகள் இருக்கவேண்டும், நேரமும் வேண்டும். கூடவே கொஞ்சம் அமைதியான சூழல். அவ்வளவுதான்.


ஜப்பானிய மொழி படிப்பதால் வகுப்பிலும், பேச்சுப்போட்டி போன்ற இடங்களிலும் பேசச் சொல்வார்கள். அங்கு பேசுவதென்பதில் பெரிய அளவில் பயம் இருந்ததில்லை. தவிர, அங்கே குழுமியிருப்பவர்கள் அனைவரும் நன்கு தெரிந்தவர்களே. பரஸ்பரம் மொழியறிவையும், பேச்சுத் திறனையும் நன்கு அறிந்தவர்களே. ஆகையால், அங்கெல்லாம் பேசுவதற்கு பதற்றப்பட்டதில்லை.

இரண்டு நாட்கள் வகுப்பில் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறேன். முதல்முறையாக கற்றுக் கொடுக்கச் சென்றபோது பயம் இருந்தது. ஆனால், வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. வேறு பிரிவு ஒன்றைக் கற்றுக் கொடுப்பதற்கு ஒரு பெண் வந்திருந்தார். பெண் என்றால் பெரிய பெண்ணெல்லாம் இல்லை. இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். அவர் பதற்றப்படுவது எனக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. ‘வீரம்னா என்னன்னு தெரியுமா? பயப்படாத மாதிரி நடிக்கிறது’ என்று கமலஹாசன் வசனமெல்லாம் கூறி ஆசுவாசப்படுத்தினேன்.

கடந்த வாரம் வாசகசாலையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஞாயிறன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பேசவேண்டும். ஏற்கனவே அசோக் நகர் வட்டார நூலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அதனால், துணிந்து பெயரைக் கொடுத்துவிட்டேன். கிடைக்காது என்று எதிர்பார்த்தேன்; கிடைத்துவிட்டது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் பெருவழி குறித்துப் பேசவேண்டும். கதையை மட்டும் மூன்று, நான்கு முறை ஆழ்ந்து படித்து வைத்திருந்தேன். கூடவே சில குறிப்புகளும். அதாவது, எந்தெந்த இடங்களில் என்ன மாதிரியான வார்த்தைப் பிரயோகித்திருக்கிறார்,  கதையை நகர்த்துவதற்கு என்னென்ன மாதிரியான உத்திகளைக் கையாண்டிருக்கிறார் உள்ளிட்ட பத்து குறிப்புகள்.



அந்த அறை மிகுந்த அமைதியைக் கொண்டிருக்கிற அறையாக இருந்தது. நான் போகும்போதே இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தார்கள். நானும் ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்துகொண்டேன். மார்ட்டினா குழந்தையுடன் வந்திருந்தார். எனக்கு அவரைப் பார்த்ததும் அடையாளம் தெரிந்துவிட்டது. அவருக்கு என்னையும். போகப்போக கூட்டம் கூடிக்கொண்டே சென்றது.

முதலில் பேசுவதற்காக அழைக்கப்பட்ட பவானி, மைக்கை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். மைக் இருந்தால் நெர்வஸா இருக்கும் என்றார். அவர் அங்கே வார்த்தைகளாகக் கூறியது இங்கு எனக்கு மனதில் பற்றிக்கொண்டது. ஏனென்றால், அடுத்து பேச வேண்டியது நான். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அன்றைய சிறப்பு அழைப்பாளர் அவரது வாசகர்கள் புடைசூழ உள்ளே நுழைந்தார். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம். அவர்களைப் பார்த்ததும் இன்னும் பதற்றம் அதிகமாகியது. அந்தப் பதற்றத்தில் என்னால் பவானியின் பேச்சைக் கவனித்துக் கேட்க முடியவில்லை.

என் முறை வந்தது. ஏதோ பேசினேன் என்றுதான் கூறுவேன். கதையை மிகச் சுருக்கமாகச் சொன்னேன் எனலாம். இடையிடையே ஏகப்பட்ட இடங்களில் திக்கித் திணறினேன். யாரைப் பார்த்துப் பேசுவது என்ற பயம் வேறு. மனைவி தவிர்த்து, தெரிந்தவர்கள் யாரும் இல்லை. எப்போதோ யாரோ கூறியிருக்கிறார்கள் - மேடையில் பேசும்போது யாருடைய முகத்தையும் பாராமல், எதிரே உள்ள சுவரைப் பார்த்துப் பேசு, அது பேச்சைக் கேட்பவர்களைப் பார்க்கும் பொதுவான பார்வையாக இருக்கும் என்று. ஆனால், அதெல்லாம் வரவில்லை. முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் என் பேச்சைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். நான் பேசுவதற்குத் தலையாட்டியும், அடடா, அடப்பாவமே என்றும் தன்னுடைய எதிர்வினைகளை ஆற்றிக்கொண்டிருந்தார். அப்போது என் கவனம் முழுவதும் அவருக்குக் கதை சொல்வதாக இருந்தது.

அவ்வப்போது நிறுத்தினேன், குறிப்புகளைப் பார்த்துக்கொண்டேன். சிலவற்றைப் பேசாமல் விட்டிருந்தேன். தேவையில்லாததைப் பேசியிருந்தேன். ஆத்தூர், ஆலங்குளம் என்று உளறினேன். நான் திக்கிய நேரங்களில் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் வார்த்தைகளை எடுத்துக் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘நன்றி’ என்று முடித்துக்கொண்டேன்.


தெரிந்தவர்களிடமும், ஓரளவுக்குப் பேசிப் பழகிவிட்டவர்களிடமும் நான் நன்றாகப் பேசுவேன். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமும் பேசுவதற்கு இப்போதெல்லாம் கூச்சப்படுவதில்லை. மனைவியின் தோழி ஒருவரது வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்கே பெண்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, மனைவியின் தோழியின் கணவருடன் பேசவேண்டிய கட்டயாத்தில் தள்ளப்பட்டேன். அவரும் என்னைப்போல Man of few words. அவரிடம் என்னென்ன பேசமுடியுமோ, பேசினேன். அடுத்தநாள் மனைவியிடம் அவரது தோழி நான் நன்றாகப் பேசியதாக அவரது கணவர் கூறியதாகக் கூறினாராம். நன்கு பழக்கமானவர்களிடம் கூட ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசும் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நானெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. ஆனாலும், இன்னும் பேசவேண்டும். செந்தமிழும், எம்மொழியும் நாப்பழக்கம்தானே.