எழுதுகிறேன் ஒரு கடிதம்:

அன்புள்ள ஞானகுரு,



இறைவன் மடியில் இளைப்பாறிக்கொண்டிருப்பாய் என்று நம்புகிறேன். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே என்று கூறுவதுபோல், கணினியை நாம் கண்ணால் பார்ப்பதற்கு முன்னரே அஞ்சலுறையில் கடிதம் எழுதிப் பழகியவர்கள் நாம். அந்தப் பதின்ம வயதில், அரும்பு மீசை முளைக்கத் தொடங்கி கண்டதையும் மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கும் பருவத்தில், படிக்கவும் வேண்டும், நாம் விரும்பும் எழுத்தையும் வாசிக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டில் நிலையாக நின்றவர்கள் நாம்.

உனக்கு நினைவிருக்கிறதா? நடிகர் வடிவேலு சற்று வெளியே தெரியத் தொடங்கியிருந்த காலம் அது. நீயும் பார்ப்பதற்கு அவரைப் போலவே இருப்பாய் என்பதால், அவர் நடித்த படத்தின் சுவரொட்டி ஏதேனும் தென்பட்டால், 'ஏய், ஞானகுருடா' என்று கிண்டல் செய்திருந்த காலம். நமது ஊரில் 'வளைசல்' என்ற சொலவடை உண்டு. அதாவது, சிறு சிறு சந்து இருக்கும் தெருக்களை, அந்தத் தெருவில் வசிக்கும் பிரபலர் ஒருவரின் பெயரால் அழைப்பது வழக்கம். நீ இருந்த தெருவின் பெயர், 'கொக்கூட்டு வளசல்'. அதாவது, நீ கொக்கு போல நடக்கும் காரணத்தால், உன் குடும்பம் இருக்கும் தெருவிற்கு 'கொக்கு வீட்டு வளைசல்' என்ற பெயர் வந்து, நாளடைவில் அது 'கொக்கூட்டு வளசல்' என்று மருவிவிட்டது.

நீயும், நானும் நேரில் பார்த்துப் பேசியதைவிட, கடிதத்தின் மூலம் அதிகம் பேசியிருக்கிறோம். 1997 தொடங்கியதில் இருந்து, நேரில் சந்திப்பது அருகி, கடிதம் மூலம் மட்டுமே பேசத் தொடங்கினோம். அந்தக் காலம் முதல், நீ இறக்கும் முன்பு வரை, நீ அனுப்பிய 22 கடிதங்களில் 21 கடிதங்கள் இன்னும் என்னிடத்தில் இருக்கின்றன. கால ஓட்டத்தில் காகிதங்கள் சேதமாகும் என்பதால், அனைத்தையும் ஸ்கேன் செய்து மின்னூலாக்கி வைத்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் உன் கடிதம் வரும் நாள் ஒரு சிறந்த நாள் என்று என் டைரியில் குறித்து வைத்திருக்கிறேன். பதில் மடல் அனுப்புவதற்கு ஒரு வாரம் எடுத்துக்கொள்வேன். நீ உன் கடிதத்தில் கேட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்து, விளக்கம் கொடுக்கவும் கேள்வி கேட்கவும் செய்திருக்கிறேன். 'தலைப்புச் செய்தி'  ஞாபகம் இருக்கிறதா? பத்திரிகைகளில் வரும் பெட்டிச் செய்தி போல இருபது, முப்பது வார்த்தைகளில் எழுதுவோம். நீ எழுதும் தலைப்புச் செய்தி ஒரு புதிர் போல இருக்கும். சமயங்களில், தலைப்புச் செய்தியில் இருக்கு விஷயத்தை யார், யாரிடம் கூறினார் போன்ற எளிதில் ஊகிக்க இயலாத கேள்வியையும் கேட்டு வைத்திருப்பாய். சில நேரங்களில் விடை கிடைத்தும், பல நேரங்களில் கிடைக்காமல் நான் உன்னிடம் சரண் அடைந்ததும் உண்டு.

அந்த 22-வது கடிதத்தில் நீ கேட்டிருந்த புதிருக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை, நண்பா. பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இனியும் கிடைக்கப் போவதில்லை. பரவாயில்லை. நீ அனுப்பிய ஒரு கடிதம் எனக்குக் கிடைக்கவே இல்லை என்று சொன்னேன், நினைவிருக்கிறதா? அது துரதிர்ஷ்டவசமாக வேறு முகவரிக்குச் சென்று, அங்கிருந்து என் அம்மாவிடம் சென்றுவிட்டது. அவரும் சின்னப் பையன்கள் எழுதிக்கொள்ளும் கடிதம்தானே என்று பிரித்துப் படித்துவிட்டார். அதில் நீ எழுதியிருந்த விஷயங்களும், என்னுடைய கேள்விகள், விவாதங்களும் அவருக்கு சில விஷயங்களை உணர்த்திவிட்டன. அதனால், அந்தக் கடிதத்தை என்னிடம் கொடுக்காமல் கிழித்துவிட்டார். இந்த விஷயம் எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறாயா? சில நட்களுக்கு முன், நான் எழுதிய வலைப்பதிவுகளை கணினியில் படிக்கக் கொடுத்தேன். நான் வலைப்பதிவிலும், முக நூலிலும் எழுதுவது அம்மாவுக்கு அப்போதுதான் தெரியும். பொறுமையாக எல்லாப் பதிவுகளையும் படித்த அவர், 'எனக்கு அன்னைக்கே தெரியும். நீ நல்லா எழுதுவேன்னு 'என்றார். என்னவென்று கேட்டபோதுதான் தெரிந்தது, அந்த நான்காவது கடிதம் அம்மா கையில் சிக்கியிருக்கிறது என்று. 'என்ன, சரவணா! அப்பவே கல்யாணம் முடிச்சு ரெண்டு பிள்ள பெத்தவங்க மாதிரி எழுதுறீங்க நீயும், அவனும்?' என்றார். இது எனக்குத் தெரிய வருகையில் உண்மையிலேயே எனக்குத் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

1999-ஆம் வருடம். கேரள மா நிலம் கோழிக்கோட்டில் நான் பணியில் இருந்த சமயம். கோவை பீளமேட்டில் இருக்கும் ஒரு கேஸ் வால்வு தயாரிக்கும் ஆலை ஒன்றில் நீ வேலை செய்துகொன்டு இருக்கும்போது, இயந்திரத்தில் சிக்கி நீ உயிர் இழந்தாய். கோழிக்கோட்டில் இருந்து ஓடோடி வந்தும் இறுதியாக உன் முகத்தைக் காண முடியாத அவல நிலை. 'உடம்பு வீசிப் போயிரும்னு உடனே எரிக்கச் சொல்லிட்டாங்கய்யா' என்று உன் தந்தை கதறியது இன்னும் நினைவில் இருக்கிறது. இதைவிடக் கொடுமை, நீ எனக்கு அனுப்பியிருந்த கடைசிக் கடிதத்தில் தலைப்புச் செய்தியாக, 'இந்த உறவு எனக்குப் பிடிச்சிருக்கு. இனிமேல் நாம பாக்காம லெட்டர்லயே பேசுவோமா?' என்று கேட்டிருந்தாய். உன் விருப்பத்தை நிறைவேற்றுவதாற்காகவே அந்தக் காலன் உன்னை அழைத்துக் கொண்டானோ என்றும் எனக்குத் தோன்றியிருக்கிறது.

இந்தக் கடிதத்தில் தலைப்புச் செய்தி இல்லை. ஏன் எழுதவில்லை என்று கேட்பதற்கு நீயும் இல்லை. எங்காவது மறுபிறவி எடுத்திருப்பின், தயவுசெய்து நேரில் தோன்றி குறிப்பால் உணர்த்து. இந்தக் கடிதத்திற்கு பதில் வராது என்று தெரிந்தாலும் என் உள்ளக் கிடக்கையைக் கொட்டித் தீர்த்துவிட்டேன்.

இன்றும் உன் நினைவில் வாழும், உன் சகா.