செந்நிற நாயொன்று தெருவோரக் குப்பைத்தொட்டியைக் கிளறிக்கொண்டிருந்தது. குப்பைத்தொட்டி முழுவதும் நிறைந்திருந்ததால், அந்த நாயால் சுலபமாக மேலே ஏறி நிற்க முடிந்திருந்தது. காலியாக இருந்திருந்தால், உள்ளே என்ன இருக்கிறது என்றுகூடத் தெரியாமல் போயிருக்கும். தவிர, உள்ளே குதித்த அந்த நாய் வெளியேற வழியின்றித் தவித்திருக்கும். பரவாயில்லை, நாய்களுக்கும் நம்மைப்போல மூளை இருக்கிறது. இங்கே நம்மைப் போல என்று நான் தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன். உங்களைப் போல என்று என்று குறிப்பிட்டு, என்னைத் தனித்துக் காட்டியிருக்கவேண்டும். ஏனென்றால், இந்தத் தெரு முழுவதும் என்னை தனித்துத்தான் பார்க்கிறார்கள்.



அந்த நாய் என்னைப் பார்த்ததும் மிரண்டது. உர்ரென்று பயமுறுத்தியது. ‘வள்வள்’ என்று குரைத்தது. அதற்கான இரை கிடைத்திருக்கவில்லை போலும். அந்த நாயுடன் நான் போட்டிக்குச் செல்வதால், தன்னுடைய இரை தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் என்னை விரட்ட முயன்றது. ‘இன்னும் சாப்பிடலையா? நான் அப்புறமா வரேன்’ என்று அந்த நாயிடம் கூறிவிட்டு, வேறு இடம் நோக்கி நகர்ந்தேன்.

அடுத்த தெருவிலும் இதே போன்ற குப்பைத்தொட்டி ஒன்று இருக்கிறது. அங்கு மீந்திருக்கும் உணவு தவிர்த்து, வடை, காய்கறிகளும், சமயங்களில் சில பொட்டலங்களில் பிரியாணி கூடக் கிடைக்கும். ஆனால், அங்கு போட்டி சற்று மிகுந்திருக்கும். நாய்கள் பலவுண்டு. என்னைப் பார்த்து பூனைகள் மிரண்டு ஓடினால், காக்கைகள் தலையில் கொத்துவதற்குத் தயாராகும். இதைப் பொருட்படுத்தினால், பட்டினி கிடக்க நேரிடும்.

சாலையைக் கடக்க முற்பட்டேன். ஒரு இருசக்கர வாகனத்தில், மூவர் வந்துகொண்டிருந்தார்கள். ஓட்டியவன் வாகனத்திலிருந்து எழுப்பிய ஒலி என் காதைப் பிளந்தது. இரு காதுகளையும் மூடிக்கொண்டு, சுவரோரமாய் நின்றுகொண்டேன். நான் இப்படி நிற்பதைப் பார்த்த ஒருவன், ஏளனமாகச் சிரிப்பது தெரிந்தது. சாலையைக் கடப்பது மட்டும் எனக்கு இத்தனை ஆண்டுகளாகக் கைகூடி வரவில்லை.

கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர், கையிலிருந்த குச்சியால் சாலையைத் தட்டித்தட்டி நடந்து வந்துகொண்டிருந்தார். போக்குவரத்துத் திரள் மிகுந்திருந்த இந்தக் காலை வேளையில், அவர் தெருமுனையைக் கடப்பதென்பது சிரமமான காரியம். அவருக்கு உதவும் பொருட்டு, அந்தக் குச்சியை என் கையில் பற்றிக்கொண்டு சாலையோரம் நடக்கத் தொடங்கினேன். அதை கவனித்திருந்த ஒரு முதியவர், ‘ஏய், விடு! நீ ஏன் கூட்டுனு போற? தள்ளு!’ என்று அடிக்காத குறையாக என்னை விரட்டினார். ‘ஏம்பா! கண்ணு தெரியாத நீ யார் இஸ்துகினு போனாலும் போய்டுவியா? வாயால கேக்கறதுதானே?’ என்று அவரிடம் கடிந்துகொண்டார். என் விதியை நொந்துகொண்டே அடுத்த தெருவை அடைந்தேன்.

அங்கே நான் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இருக்கவில்லை. ஒரு நாயும், சில காக்கைகளும் மட்டுமே இருந்தன. கொஞ்சம் தோண்டியதில் எனக்குத் தேவையான உணவும் கிடைத்தது. ‘பிரித்து மேய்ந்துகொண்டிருந்தேன்’ என்ற வாக்கியம் இந்தச் செயலுக்கு மிகப் பொருத்தமானதாக இருக்கும். நான் உண்டுகொண்டிருக்கையில், அருகிலிருந்த ஒரு மாடி வீட்டின் ஜன்னல் திறக்கப்பட்டு, அங்கிருந்து சர்ரென்று ஒரு பொதி பறந்துவந்து என் தலையைத் தாக்கியது. ஒரு நொடி நிலை குலைந்துபோனேன். நல்லவேளையாக, அதில் கனமான பொருட்கள் எதுவும் இல்லை. பொதி பறந்துவந்த திசையை நோக்கிப் பார்த்தேன். அந்த மாடி வீட்டு ஜன்னலின் உள்ளே ஒரு அம்மாள் ஓடி ஒளிவது தெரிந்தது. எனக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஏதாவது கூறினால், உனக்கு இங்கென்ன வேலை என்று துரத்தியடிப்பார்கள்.

உண்டுவிட்டேன். பழைய சாப்பாடுதான். சுவையாக இருந்தது. மீந்திருந்த உணவை குப்பைத்தொட்டி அருகே பரவலாகத் தூவி வைத்தேன். அங்கு சில எறும்புகள் தங்களுக்கான இரையைத் தூக்கிக்கொண்டு தங்களது இருப்பிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. குனிந்து அவற்றிடம், ‘நானும் கொஞ்சம் சாப்பாடு வச்சிருக்கேன், ரொம்ப தூரம் அலையாதீங்க. இதையும் எடுத்துக்கோங்க, எறும்புகளே!’ என்றேன். அவற்றுக்குப் புரிந்திருக்கவேண்டும். வரிசையைவிட்டு விலகிவந்த சில எறும்புகள், நான் தூவிவைத்திருந்த இரையை ஆராயும் செயலில் இறங்கி சுற்றிச்சுற்றி வந்தன. ‘நல்ல சாப்பாடுதான், நானே வயிறு நிறைய சாப்பிட்டேன். நீங்களும் சாப்பிடுங்க, எடுத்துட்டுப் போங்க’ என்றேன். எனக்குத் தெரியும். அவை இந்த உணவின் ஈரப்பதம் குறைந்ததும் எடுத்துக்கொள்ளும். நடையைக் கட்டினேன்.

போகும் வழியில் ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டைச் சுற்றிலும் நிறைய செடிகள் உண்டு. ஊதா நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் பூக்கள் பூத்திருக்கும் செடிகள் அவை. அந்த வீட்டிற்கு குட்டையான சுவர்தான். ஏறி மறுபுறம் குதித்தால், அந்தச் செடிகளிடம் பேசலாம். ஆனால், அந்த வீட்டார் விடமாட்டார்கள். நான் அங்கு கடந்து செல்கையில், அந்த வீட்டுக் குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருப்பார்கள். சில நேரங்களில், ஊட்டிவிடும் அந்தக் குழந்தையின் தாய் என்னைக் காட்டி ஏதோ சொல்வார். அந்தக் குழந்தையும் மிரண்டு விரைவாக உட்கொண்டுவிடும். கடந்த ஒரு வாரமாக அவர்கள் ஊரில் இல்லை. சுவரேறிக் குதித்தேன். வண்ணப் பூக்கள் பூத்திருந்த செடிகள் எனக்காகவே காத்திருந்ததைப் போல் இருந்தன. குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து செடிகளின் மீதும், மண்ணிலும் ஊற்றினேன். செடிகள் குதூகலித்திருக்கவேண்டும். தம்மீது தண்ணீர் பட்டதும் சிலிர்த்துக்கொண்டன. ‘என்னடா, ஒரு நாள் பூரா தண்ணியே ஊத்தலையா?’ என்று கேட்டுக்கொண்டே செடிகளைத் தடவிக்கொடுத்தேன். குழந்தையாக இருந்தால், கழுத்துக்கும் தோளுக்கும் இடையே மூக்கால் நிரடியிருக்கும். செடிகள்தானே? இருந்தாலும், அவற்றின் உணர்வு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன். ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது.

செடிகளிடம் விடைபெற்று என் தெருவை நோக்கி வந்தபோது, என்னை விரட்டிய அந்த செந்நிற நாய் அங்கேயே நின்றுகொண்டிருந்தது. இந்த முறை குரைக்கவில்லை. குப்பைத்தொட்டியிலிருந்த ஒரு பொதியின் கைப்பிடி அதன் பின்னங்காலில் சுற்றிக்கொண்டுவிட்டது. அந்த நாய் எங்கே நடந்தாலும், ‘இஸ்க், இஸ்க்’ என்று அந்தப் பொதியும் கூடவே வந்துகொண்டிருந்தது. நீண்ட நேரமாக இந்தப் பிரச்சனையில் சிக்கி, சோர்ந்துவிட்டிருந்தது. ‘அச்சச்சோ, கால்ல மாட்டிருச்சா? இரு. நான் எடுத்துவிடுறேன்’ என்று கூறி அதனை விடுவித்தேன். தடை விலகிய அந்த நாய்க்கு இருப்புக்கொள்ளவில்லை. தெருமுனை வரை ஓடிவிட்டு என்னிடம் வந்தது. வாலாட்டிக்கொண்டு என்னை நக்க முயன்றது.

அருகிலிருக்கும் கடைக்குச் சென்றால், தேநீர் கிடைக்கும். எல்லா நாட்களிலும் தரமாட்டார்கள். கூட்டம் இல்லையென்றால் தருவார்கள், ஆட்கள் மிகுந்திருந்தால் கடைக்காரர் கண்டுகொள்ள மாட்டார். இன்று கூட்டம் குறைவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் நடந்தேன். அந்த நாயும் கூடவே வந்தது. அது ஓடி வரும் வேகம், வாலாட்டும் தொனி, அதன் முகபாவம் ஆகியவற்றைப் பார்க்கையில், அதற்கு சுதந்திரம் கொடுத்ததற்கான பிரதி உபகாரமாக உடனடியாக ஏதாவது செய்தாகவேண்டும் என்ற உத்வேகம் தெரிந்தது. சாலையில் செல்வோர் என்னையும், நாயையும் ஒரு விதமாகப் பார்ப்பதுபோல் தெரிந்தது. என்னை நாள்தோறும் பார்க்கிறார்கள்தானே?


கடையில் கூட்டம் மிகுந்திருந்தது. ‘என்ன, டீயா? அப்புறம் வா’ என்றார் கடைக்காரர். நாயைக் காட்டி ஏதோ கூற முயன்றேன். ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை. ‘உனக்கு டீ தர்றதே தண்டத்துக்கு, நாய்க்கு வேற கொடுக்கணுமா, போடா அங்கோட்டு’ என்று மலையாளம் கலந்து விரட்டினார். ‘பிஸ்கட்’ என்றேன். ‘போடா, பைத்தியக்காரப் பயலே!’ என்று கூறி ஏதோ எடுத்து ஏறிய முற்பட்டார். எனக்கு முன், அந்த நாய் ஓடத் தொடங்கியது. நான் அமைதியாக, மெதுவாகத் திரும்பினேன். மனிதர்களைத் திட்டும் அளவுக்கு எனக்கு அறிவில்லை. நான் பிறகு வருகிறேன்.