நேற்று வண்டி பஞ்சர் ஆகிவிட்டது. முக்கியமான வேலை இருந்ததால், வீட்டிலிருந்து ஆட்டோவில் சென்றாயிற்று. வேலை முடிந்து மதியம் வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு அக்கடா என்று ஒரு அரை மணி நேரம் படுக்கவேண்டும் போல் இருந்தது. காரணம், வெயிலும் அலைச்சலும். இதுதவிர, கடை வீட்டுக்கு அருகில்தான் என்றாலும் உச்சி வெயிலில் வண்டியைத் தள்ளிக்கொண்டு நடத்தல் என்பது மிகக்கடினம். ஆக, வண்டியை மாலையில் பஞ்சர் பார்ப்பதற்கு எடுத்துச் செல்லலாம் என்று விட்டுவிட்டேன்.


மாலை ஆறு மணி இருக்கும். வண்டியைத் தள்ளிக்கொண்டு கடை வரை சென்றேன். அங்கே கடைக்காரர் மிதிவண்டி ஒன்றுக்கு எண்ணெய் ஊற்றி, மிதியடியை கைகளால் சுற்றிக்கொண்டிருந்தார். முன்புறமாக மூன்று சுற்று, பின் பின்புறமாக மூன்று சுற்று. சுற்றும்போது எழும்பும் ஓசை மூலமாக எவ்வளவு சரியாக இருக்கிறது என்பதைக் கணித்துக்கொண்டிருந்தார். பின், ஆங்காங்கே இருக்கும் திருகுமரைகளை திருகியால் முறுக்கி இறுக்கமாக்கினார். ‘எவ்வளவு ஆச்சு?’ என்ற மிதிவண்டியின் உரிமையாளரிடம், ‘இது ஒரு பத்து, இருபது, இருபதும் பத்தும் முப்பது, இது ஒரு பதினைஞ்சு, இது ஒரு இருபத்தஞ்சு, எழுபது ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.

அந்த மிதிவண்டிக்கான பணிகள் முடிந்ததும்தான் என்னை ஏறிட்டார். ‘என்னண்ணா, பஞ்சரா?’ என்றார். விறுவிறுவென்று கடையின் உள்ளே சென்றவர், அங்கிருந்து நான்கைந்து ஆயுதங்களை எடுத்து வந்தார். ஒரு திருகியால் இடதுபுறம் பிடித்துக்கொண்டு, மற்றொரு திருகியால் வலதுபுறம் இருந்த திருகுமரையை சுழற்றிக் கழற்றினார். மொத்த பின்சக்கரத்தையும் வெளியே எடுத்தவர் ஒரு சிறு பலகையில் அமர்ந்து அதை சோதிக்கத் தொடங்கினார். அதோ, ஓரிடத்தில் மட்டும் பளபளவென்று மின்னியது. அட, அது ஒரு சிறிய ஆணி. ஒரு கம்பியால் அந்த ஆணியை நெம்பி எடுத்தார். எங்கோ சிறிய குழியிலோ, வேகத்தடையின் விளிம்பிலோ அது குத்துவதுபோல நேராக நின்றிருக்கவேண்டும்.

பலகையில் அமர்ந்த அவர், டயரைக் கழற்றி உள்ளிருந்த டியூபையும் வெளியே எடுத்தார். ஆணி குத்திய இடத்தை ஒரு உப்புத்தாள் கொண்ட கட்டையால் தேய்த்து அடையாளம் வைத்துக்கொண்டார். இப்போது, எனக்கு மாரியப்பன் மாமா நினைவுக்கு வந்துபோனார்.

மாரியப்பன் மாமா. ஊரில் மிதிவண்டிக் கடை வைத்திருந்தார். மிதிவண்டிக் கடை என்றால் மிதிவண்டி விற்கும் கடை அல்ல. பழுது நீக்குதல் மட்டும்தான் அவருடைய பணி. மிதிவண்டி விற்கும் கடை ஒன்றைத் தொடங்கவேண்டும் என்பது அவருடைய லட்சியமாகவும் கனவாகவும் இருந்தது. ஆனால், இறுதி வரை அவரால் இயன்றது மிதிவண்டி பழுது பார்க்கும் கடை மட்டுமே. இருந்தாலும், மனிதர் திறமைசாலி. மிதிவண்டியின் எந்தப் பகுதியில் பழுது ஏற்பட்டாலும் சட்டென்று சரிசெய்யும் திறமை வாய்ந்தவர்.

அவரை நான் ‘மாமா’, ‘மாமா’ என்று அழைத்தாலும், அவர் எனக்கு உறவினர் இல்லை. அவருடைய மகன் பாலகிருஷ்ணன் என்னுடன் படித்தவன். தந்தையை ஒத்த வயதுடையவர்களை மாமா என்று அழைப்பது ஊர் வழக்கம். அப்படித்தான் அவர் எனக்கு ‘மாரியப்பன் மாமா’ ஆனார். பள்ளிக்குச் செல்கையில் மிதிவண்டிக்குக் காற்றடிக்கும் வேலையிருந்தால், அவரிடம்தான் செல்வேன். அவரும் காற்றடித்துக் கொடுத்துவிட்டு, கறாராக நாற்பது பைசா வாங்கிக்கொள்வார். அவரை நான் மாமா என்று அழைப்பதாலோ அவருடைய மகன் என் பள்ளித்தோழன் என்பதாலோ அவர் என்னிடம் பணத்துக்கு பரிதாபம் பார்ப்பதில்லை. அந்த நாற்பது பைசாவை சேமிப்பதற்கு, நான் பல முறை அவர் இல்லாத நேரமாகப் பாரத்து சென்றிருக்கிறேன்.

மாரியப்பன் மாமா ஐந்தடி உயரம்தான். ஆனால், நூறு கிலோவுக்கு மேல் இருப்பார். வெள்ளை பனியனும் அரைக்கால் டிரவுசரும்தான் அவருடைய சீருடை. அந்த வெள்ளை பனியனும் பல இடங்களில் கறை வாங்கியிருக்கும். சிலவை கழுத்துப் பகுதியில் துளை விட்டிருக்கும். அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். தன் பணியிலேயே குறியாக இருப்பார். அடுத்தடுத்து தான் சரி செய்யவேண்டிய வண்டிகள் மட்டுமே தன் இலக்காகக் கொண்டிருப்பார்.

“Materials Management” என்று ஒரு பெரிய பாடமே உண்டு. வணிகம், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட துறைகளில் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதாவது, பொருட்களை உள்ளே அனுமதித்தல், பாதுகாத்து வைத்தல், வெளியே அனுப்புதல் என இதில் பல விஷயங்கள் உண்டு. அவர் அதைப் படிக்காமல், தன் அனுபவத்தில் தேர்ந்தவர். தன் கடை இருக்கும் இடத்துக்குள் எத்தனை வண்டிகள் வைக்க முடியும், மேற்கொண்டு வண்டிகள் வந்தால் எதை முதலில் அனுமதிப்பது, வெளியே அனுப்புவது என்பதெல்லாம் அத்துப்படி. “First in First Out” முறைதான் அவருடைய முக்கியக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

மாரியப்பன் மாமா பஞ்சர் ஒட்டும் அழகை நான் பலமுறை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். எங்கே முள் குத்தியிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அவர் எடுத்துக்கொள்ளும் நேரம், அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள்தான். இரண்டு கம்பிகளால் டயரை நெம்பி எடுத்து, உள்ளிருக்கும் டியூபையும் வெளியே எடுப்பார். பின், காற்றடித்து விடுவார். சில நேரங்களில், டியூபைத் தொட்டவுடன் கண்டுபிடித்துவிடுவார். ‘இஸ்’ என்று காற்று வெளியேறும் ஓசை அவருக்குக் காட்டிக் கொடுத்துவிடும். காற்றொலி வரவில்லை என்றால், தன் பெரிய உள்ளங்கையால் முழுவதும் மூடி, தடவிப் பார்ப்பார். அகலமான இரும்புச் சட்டி ஒன்றை வைத்திருப்பார். அதை ‘சாந்துச்சட்டி’ என்று சொல்வார்கள். கட்டிடம் கட்டுபவர்கள் சிமெண்டும் மணலும் கலந்த கலவையை அதில்தான் எடுத்துச்செல்வார்கள். அந்தச் சட்டியில் தண்ணீர் நிரப்பி, அதில் வைத்து அழுத்திப்பார்த்துக் கண்டுபிடிப்பார். கண்டுபிடித்ததும் அந்த இடத்தில் உப்புத்தாள் கொண்ட கட்டை ஒன்றால் தேய்த்து, வேறு ஒரு வட்டமான டியூப் துண்டில் சிவப்பு நிற களிம்பைத் தடவி அதில் ஒட்டி, அதே கட்டையால் டங்டங்கென்று தட்டுவார்.

அவர் சும்மா இருக்கும் நேரங்களில் என்ன செய்வார், தெரியுமா? அலுமினியத்தில் வட்டமான ஒரு சிறு தட்டு வைத்திருப்பார். பழைய இருபது பைசாவை விட சற்றுப் பெரிதாக இருக்கும். பயன்படுத்த முடியாத டியூப்களை வெட்டி, அந்த தட்டின் அளவுக்கு வெட்டுவார். அடுத்து பஞ்சர் ஒட்டுவதற்கு ஏதுவாக இருக்கும், அல்லவா? என் மிதிவண்டியில் ஏதேனும் பெரிய அளவில் பழுது இருந்தால், ‘அப்பாட்ட சொல்லிருடே, அப்புறம் காசு இல்லன்னு வந்து நிக்கக்கூடாது’ என்பார்.

காலங்கள் ஓடிவிட்டன. பாலகிருஷ்ணன் துபாய் சென்றுவிட்டான். மாரியப்பன் மாமா ஊரிலேயே ஒரு மிதிவண்டிக்கடை ஒன்றைத் தொடங்கிவிட்டார். இது உண்மையிலேயே மிதிவண்டி விற்கும் கடைதான். பாலகிருஷ்ணன் பெரிய அளவில் பணம் கொடுத்திருக்கிறான். பஞ்சர் மட்டும் ஒட்டி இவ்வளவு பெரிய கடை திறக்கமுடியுமா? அதுவும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவகையில், எல்லா விதமான வண்டிகளும் வைத்திருக்கிறாராம். நான் பார்க்கவில்லை, மருமகளுக்கு மிதிவண்டி வாங்குவதற்காகச் சென்ற அப்பா கூறினார்.

கடந்தமுறை ஊருக்குச் சென்றிருந்தபோது, ஒரு வேலையாக அந்தக் கடை இருக்கும் பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. சரி, வந்ததுதான் வந்துவிட்டோம். அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்துவிடுவோம் என்று அந்தக் கடைக்குள் சென்றேன். அப்பா சொன்னது சரிதான். விதம்விதமான வண்டிகள். ஐயாயிரம் ரூபாய்க்குக் குறைந்து வண்டிகளே இல்லை. இவ்வளவு பணம் கொடுத்து வாங்குவதற்கு இந்த ஊரில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே வியப்பாக இருந்தது.

கல்லாவில் மாரியப்பன் மாமா போலவே ஒருவர் அமர்ந்திருந்தார். அட, மாரியப்பன் மாமா தான். ஆனால், மிக ஒல்லியாக இருந்தார். கன்னங்கள் ஒடுங்கியிருந்தன, கழுத்தில் தொண்டைக்குழியின் இருபுறமும் கோடு போல தோல் தொங்கிக்கொண்டிருந்தது. முன்பு பார்க்கும்போது அவருடைய தலைக்குக் கீழ் கழுத்து இருப்பதே தெரியாது. கன்னச்சதைகளும், தோள்பட்டையும் மறைத்திருக்கும். ‘எப்படி இருக்கீங்க மாமா? பாலா போன் பண்ணினானா?’ என்று விசாரித்தேன். உடனே என்னை அடையாளம் கண்டுகொண்டார். ‘எங்கடே இருக்கே, எத்தனை பிள்ளைகள்?’ என்று நலம் விசாரித்தார். ‘என்ன மாமா இப்படி ஆயிட்டீங்க?’ என்றேன். ‘என்னடே பண்றது, வயசாயிருச்சுல்லா’ என்றார். ‘அது தம்பி, சுகர் வந்துருச்சு, எலும்பெல்லாம் உருகிப்போச்சு. போன வருசம், நெஞ்சு வலி வந்து ஆப்பரேஷன் பண்ணி, உள்ள ரெண்டு டியூப் வச்சிருக்காங்கடே’ என்று சொல்லி சத்தமாகச் சிரித்தார். பாலகிருஷ்ணனை துபாயிலிருந்து வரச்சொல்லிக்கொண்டிருக்கிறாராம். அவருடைய காலத்திற்குப் பிறகு அவனையே இந்தக் கடையை நிர்வகிக்கச் சொல்கிறாராம்.


மனம் கேட்கவில்லை. ஐந்து நிமிடத்தில், அவருடைய வாழ்க்கை முழுவதும் கண் முன் வந்துபோனது. இளமைக் காலம் முழுவதையும் சம்பாதிப்பதற்காகத் தொலைத்தவர். மகன் மூலம் லட்சியத்தை அடைந்தவர். இன்னும் சில நாட்களில் சாகப்போகிறேன் என்று சிரித்துக்கொண்டே எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர். எனக்குள் ஒரு சந்தேகம் இருந்தாலும், அவருக்கு என்னவோ தன் வாழ்க்கையை முழுதாய் வாழ்ந்த திருப்தி இருக்கிறது. அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டேன். இனி அவரை எப்போது சந்திப்பேன் என்று தெரியாது. சொல்லமுடியாது, இதுவே கடைசி சந்திப்பாகக்கூட இருக்கலாம்.