ஓரிரு ஆண்டுகளுக்கு முன், முகச்சவரம் செய்யும்போதுதான் தென்பட்டது அந்த ஒற்றை வெள்ளை முடி. கிருதாவினுள் பயிர்களுக்கிடையே வளர்ந்திருந்த களைபோலத் தெரிந்தது. மற்ற முடிகள் விலகியிருந்ததாலும், இந்த முடி சற்று நீளமாக, தடிமனாக இருந்தாலும் சட்டென்று கண்களில் தென்பட்டுவிட்டது. அந்த முடியை மட்டும் இரண்டு விரல்களால் பிடித்துக்கொண்டு ஒரு இழு இழுத்தால் கையேடு வந்துவிடும். ஆனால், வெள்ளை முடியைப் பிடுங்கினால் அது பக்கத்து முடிகளுக்கும் பரவும் என்று மற்றவர்களால் சொல்லப்படும் கூற்றுக்களால் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். மேலும், கிருதாவை இழுக்கும்போது ஏற்படும் வலியை பலமுறை எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியார் உணர்த்தியிருக்கிறார். ஆகவே, கண்ணாடியில் பார்த்து கத்தரிக்கோலால் அடி முடிவரை வெட்டிவிட்டேன். அதை வெட்டும்போது நான்கைந்து கறுப்பு முடிகளும் சேர்ந்து வெட்டப்பட்டன என்பது உபரித் தகவல். அதன்பிறகு, ஒவ்வொரு முறையும் முகச்சவரம் செய்யும்போது அந்த வெள்ளை முடியைத் தேடிப்பிடித்து வெட்டுவது வழக்கமாகிவிட்டது.

சில நாட்களுக்குப் பிறகுதான் கவனித்தேன். மீசையிலும் இதேபோன்று ஒரு வெள்ளை முடி எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தது. கட்டியாய், கருகருவென்று வளர்ந்திருக்கும் மீசைக்கிடையே ஒற்றை ஆளாய் அந்நியப்பட்டிருந்த அந்த வெள்ளை முடியை தயவு தாட்சண்யம் இன்றி வெட்டவேண்டியாதாயிற்று. இருக்கட்டும். சில நாட்கள் கழிந்தபின், இன்னொரு புறத்திலும் மீசையில் ஓர் வெள்ளை முடி எட்டிப்பார்த்தது. அடுத்தடுத்த சில நாட்களில், தலையிலும் ஆங்காங்கே வெள்ளி முடிகள் தென்படத் தொடங்கின.

கொஞ்சம் கலக்கம் வர ஆரம்பித்துவிட்டது. இப்படியே போனால் எல்லா முடிகளும் வெளுத்து, பார்ப்பதற்கு வயது முதிர்ந்தவன் போலத் தோற்றமளிப்பேனே என்ற எண்ணமும் வரத் தொடங்கியது. முடிக்கு சாயம் பூச வேண்டிவருமோ என்ற கலக்கம் வேறு. ஒரு முறை சாயம் பூசிவிட்டால், இருக்கும் அனைத்து முடிகளும் வெளுத்துவிடும் என்று பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை முடிச்சாயம் பயன்படுத்தும் நண்பர்கள் கூறிக் கேட்டதுண்டு.

இன்னும் சில நாட்கள்தான். இந்த பயத்திலேயே இருந்த எனக்கு தலைமுடி உதிர்வும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. சென்னைத் தண்ணீரின் வீரியத்திற்கு என்னுடைய தலை மயிர்க்கால்கள் தங்களது பலத்தை இழக்கத் தொடங்கிவிட்டன. இப்படி இழந்து இழந்து, தற்போது தலைமுடி அடர்த்தி குறைந்து, லேசான சொட்டை தென்படத் தொடங்கிவிட்டது. இந்த முடிக்காக இவன் இப்படி மாங்கு மாங்கென்று எழுதுகிறானே என்று பார்க்கிறீர்களா? இருபது, முப்பது வயதிலேயே முழு மொட்டையாக அலையும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா என்று கேட்கவேண்டும் போலத் தோன்றுகிறதா? முதன்முதலில் தங்களுக்கு வரும்போது அவர்களுக்கும் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நான் உணர்ந்துகொண்டே இருக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படத்திற்கும், இப்போதுள்ள புகைப்படத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் அழுகையாக வருகிறது. அவ்வை சண்முகியில் நாகேஷ் கேட்பது போல், “உசுரா போச்சு, மசுருதானே போச்சு” என்று விட்டுவிட மனம் வரவில்லை.

இந்த முடி கொட்டுதலும், இருக்கும் முடிகளின் நரைத்தலும் ஒரு விஷயத்தை மட்டும் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. ஒரு படத்தில் விவேக் சொல்வார், “காதோரம் ஒயிட் வந்தால் டிக்கட் வாங்கப்போறான்னு அர்த்தம்” என்று. அது என்னவோ சரிதான். இன்றுடன் அகவை முப்பத்தேழு முடிகிறது. கிட்டத்தட்ட வாலிபன் என்னும் நிலையிலிருந்து, நடுத்தர வயதினன் என்னும் நிலைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிகிறது. கல்லூரியில் படிக்கும் பெண்கள் அண்ணா, அண்ணா என்று அழைத்த காலம் போய், அங்கிள் அங்கிள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். பரவாயில்லை, வயது வித்தியாசம் பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருந்தால் அப்படி அழைப்பதில் தவறில்லை என்பது என் கருத்து.

இந்த முப்பத்தேழில் என்ன சாதித்திருக்கிறேன் என்றால், மிகப்பெரிய ‘எதுவுமில்லை’ என்ற ஒற்றை பதிலைத் கூறுவேன். காரணம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள். இப்போது வேலையில் இல்லை. முப்பத்து ஏழில் வேலையை விட்டுவிட்டு எனக்குப் பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இறங்கியிருக்கிறேன். இது மிகமிகத் தாமதமானது என்பதை நான் நன்கு அறிவேன். இந்த முடிவை நான் எப்போதோ எடுத்திருக்க வேண்டும். எனக்கு இதுவரை எந்த லட்சியமும் இருந்ததில்லை. சிறு வயதில் என் லட்சியம் என்னவென்று கேட்டால் என்னுடைய பதில் மருத்துவராக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், அது எல்லாரும் சொல்கிறார்களே என்று நானும் கூறியதுதான்.

நான் எடுத்திருக்கும் முடிவு பலருக்கும் வியப்பான விஷயமாக இருந்தாலும், எனக்கும் உள்ளுக்குள் பயத்தை மறைத்த வடிவேலுவின் மனநிலையே இருக்கிறது. நான் விரும்பும் விஷயத்தில் சாதிப்பதற்காக முழு முயற்சியுடன், தன்முனைப்புடன் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இதுவரை யாரிடமும் பொருளாதார ரீதியான உதவியை எதிர்பார்க்கவில்லை. கொடுத்துத்தான் பழக்கம். உதவி என்று மற்றவர்களிடம் நான் கையேந்தி நிற்கும் நிலைக்கு கடவுள் என்னைத் தள்ளிவிடவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், உதவும் உள்ளம் கொண்டுள்ளவர்கள் என்ன செய்கிறாய், பணம் வேண்டுமானால் கேள் என்று கேட்கிறார்கள். அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.


எழுத்தின் மூலம் என்னை நானே அவ்வப்போது சோதித்துக்கொள்கிறேன்,  உணர்ந்துகொள்கிறேன். உங்கள் பின்னூட்டங்கள் என்னைப் பண்படுத்துகின்றன. என் எழுத்துக்களை மெருகேற்றுகின்றன. என்னையும் என் எழுத்துகளையும் மேம்படுத்திக்கொள்ளும் ஒரு கருவியாக சமூக வலைத்தளங்களை நான் பார்த்துவருகிறேன். இந்தப் பிறந்த நாளில் வாழ்த்திய, வாழ்த்திக்கொண்டிருக்கும், வாழ்த்தவிருக்கும் அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.