அன்புள்ள நண்பா,

பக்கத்து வீட்டம்மா யாரென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். மறந்திருந்தால் கீழே லின்க் கொடுக்கிறேன். நாங்கள் இப்போதிருக்கும் பிளாட்டுக்கு அவர் சொல்லித்தான் வந்தோம். போகும் இடத்தில் குறைந்தபட்சம் ஒரு பிடிமானமாவது வேண்டும் இல்லையா?



வந்த புதிதில் அவர் சற்று ஆச்சர்யப்பட்டார். 'ஏ.சி.யெல்லாம் வச்சிருக்கீங்க! நானும் எங்க வீட்டுக்காரர் கிட்ட கேட்டுப் பாக்கிறேன்' என்றார். ஆனால் அவருடைய கணவரோ, 'சொந்த வீட்டுக்குப் போனால்தான் ஏ.சி. வாங்க முடியும்' என்று கறாராகச் சொல்லிவிட்டார். அவர்களும் இப்போது சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இருப்பதால் ஏ.சி. பற்றி எதுவும் இப்போது பேசுவதில்லை.

Water Purifier. கடைகளில் வாங்கும் தண்ணீர் கேன்களில் எனக்கு அதிகம் நம்பிக்கை இருந்ததில்லை. சில வருடங்களுக்கு முன் வந்த சர்ச்சைகளும் அதன்பிறகான இழுத்துமூடல்களும் 'இத்தனை கஷ்டப்படுவதற்கு சொந்தமாக ஒரு purifier வாங்கி வைத்துக்கொள்ளலாம்' என்ற நிலைக்குத் தள்ளிவிட்டது. பல வருடங்களாக whirlpool நிறுவனத்தின் RO purifier-ஐப் பயன்படுத்திவந்தேன். இப்போது வேறு ஒன்றுக்கு மாறிவிட்டோம். இதைப் பார்த்த பக்கத்து வீட்டு அம்மணி, தனக்கும் ஒன்று வாங்கவேண்டும் என்று கேட்டதற்கிணங்க, எங்களுக்கு விநியோகித்த நிறுவனத்தின் ஆளையே அழைத்து அவர்களுக்கும் கொடுக்கச் சொன்னேன்.

coolpad என்ற கைபேசி புதிதாக வந்திருக்கிறது. மனைவியின் கைபேசி பழுதடைந்ததால், ஆன்லைனில் ஒரு coolpad ஒன்றை வாங்கினேன். பக்கத்து வீட்டம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, எங்கெங்கோ விசாரித்திருக்கிறார். அது ஆன்லைனில் மட்டும்தான் கிடைக்கும் என்பதை அறிந்து, ஒன்றை ஆர்டர் செய்து வாங்கிவிட்டார். இதற்குமுன் தற்காலிகப் பயன்பாட்டுக்கு என மனைவிக்கு வாங்கித்தந்த லாவா நிறுவனத்தின் 1500 ரூபாய் மதிப்புள்ள கைபேசியையும் நாங்கள் வாங்கிய அதே கடையில் வாங்கினார் என்பது தனிக்கதை.

ஜியோ கைபேசி. வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் யுனிவெர்செல்லில் மூவாயிரம் மதிப்புள்ள அம்பானி போனையும் சிம்மையும் வாங்கியிருந்தேன். அதன் பயன்பாடு வெறும் 'ஹாட்ஸ்பாட்' என்பதாக மட்டும்தான். தன்னுடைய கைபேசியில் புதிதாக ஒரு ஹாட்ஸ்பாட் என் பெயரில் இருப்பதைப் பார்த்த அந்த அம்மணி, அவருக்கும் இதேபோன்ற ஒன்றை வாங்கிக்கொண்டார்.

கம்ப்யூட்டர்! இன்றைக்கு கணினி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். 'ஒரு லேப்டாப் வாங்கணும், எந்த கம்பெனி வாங்கலாம் அண்ணா?' என்று தொடங்கி, கடைசியாக ரிச்சி தெருவில் assemble செய்யப்பட ஒரு நல்ல தரமான கணினியை வாங்கிவிட்டார்கள்.

மேற்கூறியவை அனைத்தும் மின்னணு சாதனங்கள். கணினி, ஜியோ கைபேசி போன்ற வஸ்துக்களாவது அவர்களுக்குப் பயன்பாடு இருக்கிறது. சமீபத்தில் மனைவி நெற்றியில் வைத்திருக்கும் பொட்டு போலவே கடையில் வாங்கியிருக்கிறார். இது தவிர, பேனா, பர்ஸ், குழந்தைகளின் லஞ்ச் டப்பா உள்ளிட்ட ஏராளமான சாதனங்களின் duplicate அவர்களது வீட்டில் உண்டு. நாங்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. சமீப காலமாக அவர்கள் dish tv-யிலிருந்து tata sky-க்கு மாறப்போவதாக காதுகளில் செய்தி வந்தவண்ணம் உள்ளன.

வாட்ஸ்அப் - மனைவியின் வாட்ஸ்அப் dp மாறினால், அங்கேயும் மாறும். குழந்தைகள் படம் வைத்தால் அங்கும் குழந்தைகள் படம் வரும். 'nice dp' என்று அவருக்கு என் மனைவி செய்தி அனுப்பவேண்டும். இல்லையென்றால், வேறு ஏதோ பேசுகிற சாக்கில் 'வாட்ஸ்அப்ல போட்டோ மாத்திருக்கேன், பாத்தியா?' என்று வினவுவார். இதாவது பரவாயில்லை, நாங்கள் கடைக்குச் சென்று ஏதாவது வாங்கிவந்தால், பையில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று கண்களாலேயே ஸ்கேன் செய்துவிடுவார்.

சில நேரங்களில் கோபம் வந்தாலும் நாங்கள் காட்டிக்கொள்வதில்லை. பக்கத்து வீடு எனும் அடையாளமான உணவுப் பரிமாற்றங்களும் வழக்கம்போலவே நடந்துகொண்டிருக்கின்றன.

நேற்று காலையில் முகச்சவரம் செய்துகொண்டிருந்தேன். கிருதாவின் அளவை சரிசெய்த பிறகுதான் கவனிக்கிறேன், மீசை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கிறது. வலதுபுறம் சரிந்திருந்த மீசையை மழித்ததில் இடதுபுறத்தைவிட சற்று ஏற்றமாகிவிட்டது. மீண்டும் இடதுபுறம் சரிசெய்ததில் கோளாறாகி பூனை அப்பம் பிரித்த கதையாகிவிட்டது. சரி விடு, உயிரா போகிறது என்று மொத்தத்தையும் மழித்துவிட்டேன். இதற்குமுன் பலமுறை மீசையை எடுத்திருந்தாலும் இப்போதிருக்கும் வீட்டுக்கு வந்தபிறகு இது முதன்முறை. வெளி வேலையாக வெளியே செல்லும்போது அந்த அம்மணி மீசையில்லாத என்னைப் பார்த்துவிட்டார். அவசரமாகக் கிளம்பும் என்னிடம் எதுவும் கேட்கமுடியாத ஏக்கத்தை நான் கவனித்துவிட்டேன்.

வேலை முடிந்து வீட்டுக்கு வர மதியம் ஆகிவிட்டது. சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் மனைவி சொன்னார், 'நீங்க மீசை எடுத்ததும் அந்த நடிகர் மாதிரி இருக்கீங்களாம், சொன்னா. சாயங்காலம் அவ வீட்டுக்காரர் வந்ததும் அவர் கிட்ட சொல்லி அவரையும் மீசையை எடுக்கச் சொல்லப்போறாளாம்'