போன பதிவு நிறைய பேருக்கு புரியவில்லை போலும். தமிழ்வாசி பிரகாஷ் போன் செய்து ‘சுத்தமா புரியலை’ என்றார். இந்தப் பதிவு நிச்சயம் அனைவருக்கும் புரியும்படி எழுதுகிறேன்.


அண்ணன் தம்பி இரண்டு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இது பார்த்திபன் வடிவேலு கணக்கல்ல. மொத்தமாக இரண்டே பேர் தான். அண்ணன் திருப்பூர் பனியன் கம்பெனி ஓனர். தம்பி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் வைத்திருக்கிறார். இவருடைய நிறுவனங்களும் கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்பட்டு பங்குகள் வெளியிடப்பட்டுள்ள நிறுவனங்கள்.

அண்ணனுடைய நிறுவனம் நல்ல லாபத்தில் கொழிக்கிறது. தம்பியுடைய நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருகிறது. காரணம் பிசினஸ் இல்லை. மற்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களை நம்புவது போல வாடிக்கையாளர்கள் தம்பியுடைய நிறுவனத்தை நம்புவதில்லை என்று வைத்துக்கொள்வோம். பங்கு வர்த்தகத்திலும் இவருடைய நிறுவனத்தின் மதிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. இனி சில ஆண்டுகளுக்கு இப்படித்தான் இருக்குமென்று கணிக்கிறார் தம்பி.

அண்ணனும் தம்பியும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். மாதம் ஒரு கோடி வீதம் வருடத்துக்கு பன்னிரெண்டு கோடிகள் வேண்டும் என்று தம்பி கோரிக்கை வைக்கிறார். அண்ணனும் உடன்படுகிறார். இதை எப்படி நடத்துவது?

இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. சந்தானம் ஒரு படத்தில் வேலையாட்களை வேலை வாங்குவதற்காக சிலரை வீட்டிலிருக்கும் அரிசி மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லுமாறும் வேறு சிலரை குடோனிலிருக்கும் அரிசி மூட்டைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறும் சொல்வார். அதே கதை தான். அதாவது அண்ணனின் மில்லிலிருந்து குடோனுக்கும் குடோனிலிருந்து மில்லுக்கும் உற்பத்தியான பொருட்களை எடுத்துச்செல்வது என்பது தான் அந்த ஒப்பந்தம்.

ஆனால் உண்மையில் இது எதுவும் நடக்கப்போவதில்லை. தம்பி சில லாரிகளை வாங்கி சும்மா நிறுத்தி வைக்கிறார். ஆனால் அந்த லாரிகள் தினமும் மில்லுக்கும் குடோனுக்கும் சென்று வந்தது போல் ஆவணங்களை உருவாக்குகிறார். அந்த ஆவணங்களின் அடிப்படையில் அண்ணனுடைய நிறுவனத்துக்கு மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு பில்லும் அனுப்புகிறார். அண்ணனுடைய நிறுவனத்திலும் தம்பியின் ஆவணங்களை ஏற்றுக்கொண்டது போல் லாரிகள் வந்துபோனதுக்கான ஆவணங்களை உருவாக்குகிறார்கள். ஆக, உண்மையில் எந்தச் சம்பவமும் நடக்காமல் பொருட்கள் மில், குடோன் என பயணித்திருக்கிறது.

நடக்காத இந்தப் பயணத்துக்காக தம்பியின் நிறுவனம் அண்ணனின் நிறுவனத்தின் மீது ஒரு கோடி ரூபாய்க்கு பில் எழுதுகிறது. அண்ணனின் நிறுவனமும் தம்பியின் நிறுவனத்துக்கு காசோலையாகவோ வங்கிப் பணப் பட்டுவாடா மூலமாகவோ பணத்தைக் கொடுத்துவிடுகிறது. இந்த பில்லுக்கான சேவை வரி மற்றும் வருமான வரி போன்றவை சட்டப்படி அரசுக்கு செலுத்தப்படுகிறது.

நஷ்டக் கணக்கு எழுதிவந்த தம்பிக்கு லாபக்கணக்கு எழுதும்போது அவ்வளவு குஷி. அண்ணனுக்கோ நூறு கோடி சம்பாதிப்பதில் கொஞ்சம் குறைகிறது. அவ்வளவுதான். ஆனால், தம்பியின் நிறுவனப் பங்கு விலை மிகக் குறைவாக இருக்கும்போது அண்ணனும் தம்பியும் நிறைய வாங்கி வைத்துக்கொண்டு பன்னிரண்டு கோடி லாபம் வரும்போது நல்ல விலைக்கு விற்று அதிலும் நல்ல லாபம் பார்த்துவிடுகிறார்கள். தம்பியும் சும்மா நிறுத்திவைத்திருக்கும் லாரிகளுக்கு எரிபொருள் நிரப்பியதாகவும் பழுது பார்த்ததாகவும் கள்ளக்கணக்கு எழுதி அதிலும் லாபம் பார்த்துவிடுகிறார்.

#business_tactics