எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வழக்கமான ஞாயிறாகவே அந்த நாள் விடிந்தது.  ஜிமெயிலையும் முகநூலையும் மேய்ந்துகொண்டிருந்த எனக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.  Truecaller அது கேரளத்து எண் என அடையாளம் காட்டிற்று.  எடுத்து "ஹலோ" என்றேன், எதிர்முனையில் உடைந்த தமிழில் ஒருவர் பேச பின்னணியில் பல வாகனங்களின் அலறல்கள் கேட்டன.  அதனிடைய அவருடைய பேச்சை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, அவர் தவறான எண்ணுக்குப் பேசுகிறார் என்று மட்டுமே புரிந்துகொண்டேன்.  "ராங் நம்பர்" என்று சொல்ல எத்தனித்தபோது "மனோஜ் சொல்லியிருக்கு இல்லையா" என்றதும் எனக்கு மண்டையில் உறைத்தது. அடடா, இவர் நாஞ்சில் மனோவின் நண்பராச்சே என்று.ஒரு மாதத்துக்கு முன் மனோ அண்ணன் முகநூலில் கேட்டிருந்தார், மதுரையில் சிறந்த கண் மருத்துவமனை எது என்று.  மதுரையைப் பொறுத்தவரை அரவிந்த் தான் மிகச்சிறந்த கண் மருத்துவமனை என்று பதிலளித்திருந்தேன்.  நண்பர் ஒருவர் பஹ்ரைனிலிருந்து வரவிருப்பதாகவும் தனது மகளுக்கு கண் சிகிச்சை இருப்பதாகவும் தெரிவித்து, அங்கே நல்ல மருத்துவரின் அப்பாயின்ட்மென்ட் வாங்கித்தர முடியுமா என்றும் கேட்டிருந்தார்.  நானும் அன்றே மதுரையில் இருக்கும் எனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொல்லி அப்பாயின்ட்மென்ட் வாங்க முடியும் என்பதை உறுதி செய்திருந்தேன்.  ஓ, வந்துவிட்டார் போலும். மேலும் விசாரித்ததில் அவர் சென்னையில் இருப்பதாகவும், எழும்பூரில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருப்பதாகவும், சங்கர நேத்ராலயாவில் சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.  சென்னையைப் பொறுத்தவரை சங்கர நேத்ராலயா நல்ல மருத்துவமனை தான்.  மொழி தெரியாத ஊரில் யாரும் துணைக்கு இல்லாமல் வந்திருக்கிறார்கள், கூடமாட ஒத்தாசைக்கு இருப்போம் என்று கிளம்பினேன், அதற்குள் மனோஜ் அண்ணன் வேறு போன் செய்து வந்துட்டாங்களாமே, இப்பதான் பேசினாங்க என்றும் சொல்ல, எட்றா வண்டிய என்று கிளம்பிவிட்டேன்.


அவரது பெயர், முகம்மது ஷாபி. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  பஹ்ரைனில் மனோ அண்ணன் வேலை செய்யும் ஹோட்டலில் ஆப்பரேஷன்ஸ் மேனேஜராக இருக்கிறார் (சரிதானே மனோ அண்ணே?). மனைவி, இரு மகள்கள் இங்கே சொந்த ஊரில் வசிக்கிறார்கள்.  குடும்பத்துடன் பஹ்ரைனில் இருந்தவர் மகள்களின் படிப்புக்காக அவர்களை இங்கேயே விட்டுவிட்டு தற்போது தனியாக இருக்கிறார்.  நான் வண்டியில் எழும்பூர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போதே அவரிடமிருந்து போன் வந்தது, அவர்கள் சங்கர நேத்ராலயா செல்வதாகவும் என்னை நேரடியாக அங்கேயே வரவும் சொன்னார்.  அதேபோல் நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயா சென்று பார்க்கிங் தேடி என் வண்டியை நிறுத்தும்போதே மீண்டும் போன் ஒலிக்க, அவரே.  "பார்க்கிங்ல இருக்கேன் சார்" என்றேன்.  "நான் உன்னைப் பார்த்துவிட்டேன்" என்றார்.  திரும்பினேன், ஒல்லியாக ஒருவர் என்னை நோக்கி கைகாட்டுவது போல் இருந்தது. "கை காட்டுறீங்களா?" என்றேன்.  "ஆமா" என்றார்.  அவரிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு நலம் விசாரித்தேன்.  அப்பாயின்ட்மென்ட் ஏற்கனவே வாங்கிவிட்டாராம்.  உள்ளே செல்வதற்காகக் காத்திருந்த தன் மகளையும் உடன் வந்திருந்த மனைவி, மற்றொரு மகளையும் அறிமுகப்படுத்திவைத்தார்.  


இந்த மருத்துவமனையின் உள்ளே யாரும் செல்ல முடியாது.  நோயாளி மற்றும் உடன் வந்தவர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி.  இருவருக்கும் கையில் ஒரு பட்டை (TAG) சுற்றி ஒட்டிவிடுகிறார்கள்.  மற்றவர்கள் வெளியேதான் காத்திருக்கவேண்டும்.  நேரமாகிவிட்டதால் தந்தையும் மகளும் உள்ளே செல்ல, நானும் காவலாளியிடம் அனுமதி பெற்று உள்ளே சென்றேன்.  அப்போதுதான் Register செய்கிறார்கள் என்பதால் தேவையான படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்தேன்.  பணம் கட்டி ரசீது வாங்கியதும் எதிரில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம்.  அவரிடம் பேசியதில் ஒன்று மட்டும் புரிந்தது.  நமக்கு இங்கேயும் ஆள் இருக்கிறார்கள் என்கிற தார்மீக ஆதரவு தேவைப்படுகிறது என்று.  "சீக்கிரம் வந்திருங்க சார், யாராச்சும் பாத்தாங்கன்னா திட்டுவாங்க" என்ற காவலாளியின் வார்த்தைக்காக ஷாபியிடம் சொல்லிவிட்டு வெளியேறினேன்.


அலுவலகத்தில் சிறு வேலை இருந்ததால் முடித்துவிட்டு போன் செய்கிறேன் என்றிருந்தேன், நான் கிளம்பும் முன்னரே அவர் எனக்கு போன் செய்தார்.  கண் பரிசோதனைகள் செய்துள்ளதாகவும் மீண்டும் அடுத்தநாள் (திங்கட்கிழமை) காலை எட்டு மணிக்கு வேறு ஒரு டாக்டரின் அப்பாயின்மென்ட் இருப்பதாகவும் தெரிவித்தார்.  எழும்பூரில் ஒரு சிறிய காம்ப்ளெக்சில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்த அவர்களை மீண்டும் நேரில் சந்தித்தேன்.  மேலும் நிறைய வாங்க வேண்டும் என்றும், சரவணா ஸ்டோர்ஸ் போத்திஸ் போன்ற கடைகளுக்குச் செல்லவேண்டும் என்றும் கேட்டார்கள்.  தாராளமாகச் செல்லலாம் என்று சொல்லி அவர்களை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டுப் பின்தொடர்ந்தேன்.


அவர்கள் போத்திஸ் வாசலில் காத்திருக்க நான் என் வண்டியை பார்க் செய்துவிட்டு சென்றேன்.  அப்போது ஷாபி என்னிடம், "சாப்பிட்டியா" என்று கேட்டார், "ம், சாப்பிட்டேனே" என்றேன்.  "நீங்க சாப்பிடலையா?" என்றேன், "இல்லை, உனக்காகத்தான் காத்திருந்தோம்" என்றார்.  எனக்கு லேசான குற்ற உணர்வு எட்டிப்பார்த்தது.  "இல்ல, நான் உங்களுக்கு லேட்டாகுமோன்னு நினைச்சு சாப்பிட்டேன்" என்றேன்.  "பரவால்லை, இங்க பக்கத்துல ஹோட்டல் எதுவும் இருக்கா" என்று கேட்டு அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன்.  போகும் வழியில் என் மனைவியிடமிருந்து அழைப்பு வரவே அதைப் புரிந்துகொண்ட அவர் என்னை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பினார்.


அடுத்த நாள் காலை அவர்கள் வரும் முன்னரே நான் ஆஸ்பத்திரியில் ஆஜர்.  இம்முறை ஷாபியும் அவரது மகளும் மட்டுமே, மனைவியும் மற்றொரு மகளும் வந்திருக்கவில்லை.  வந்திருந்தாலும் வெளியேதான் காத்திருக்கவேண்டும்.  எனக்கு அலுவலகம் இருந்ததால் பரிசோதனைகள் முடிந்ததும் போன் செய்யுமாறு கூறிவிட்டு புறப்பட்டேன்.  அதேபோல் அவரும் பரிசோதனைகள் முடிந்ததும் எனக்கு தொலைபேசினார்.  கண்களில் ஆபரேஷன் செய்யவேண்டும் என்றும் அதற்கான தேதி மூன்று வாரங்கள் கழித்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் அந்த சமயத்தில் மகளுக்கு பள்ளியில் தேர்வுகள் இருப்பதால் முடிவெடுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.  மாலை மெரீனா கடற்கரை செல்வதாகவும் எனக்கு அலுவலகம் முடிந்ததும் கட்டாயம் வரவேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.  


அதேபோல் மாலை அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி, கண்ணகி சிலை, கடற்கரையோர பானிபூரி என்று சுகமாய் கழிந்தது.  இடையிடையே அவர் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசினார்.  அடுத்த நாள் மாலை ஐந்து மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் ரயிலில் புறப்படுவதாகவும் அதற்கான டிக்கட்களை ஊரிலிருக்கும் தன் மகன் எடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.  அப்படின்னா நாளைக்கு வீட்டுக்கு வாங்களேன், என்றேன். கண்டிப்பா வரோம், நீ ஆபிஸ்ல பிரேக் எடுத்துக்கோ என்றார்.  சரியென்று அன்றைய சந்திப்பை அங்கேயே முடித்துக்கொண்டு கிளம்பினோம்.

மெரீனா கடற்கரையில்அடுத்த நாள் அவர்கள் மதியம் சாப்பிடும் வகையில் வருவார்கள் என்று முன்னரே சொல்லியிருந்ததால் நான் காலை வழக்கம்போல அலுவலகம் சென்றுவிட்டேன்.  அவர்கள் ஒரு கால் டாக்ஸி எடுத்துக்கொண்டு ராதாகிருஷ்ணன் சாலை வர நான் அங்கிருந்து ஏறிக்கொண்டேன்.  என் மனைவிக்கோ தமிழ், இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் தெரியாது.  அவர்களுக்கோ மலையாளம் தவிர வேறு மொழிகள் தெரியாது.  ஒருவாறாக பரஸ்பரம் பேசுவதைப் புரிந்துகொண்டு உரையாடினார்கள்.  அவரது மூத்த மகளின் பெயர் ரிஸானா (Rizana) என்றும் இளைய மகளின் பெயர் ரிஸ்வானா (Rizwanaa) என்றும் மனைவியின் பெயர் ...... (அச்சச்சோ மறந்துபோச்சே) அறிமுகப்படுத்தினார்.  என் மகன் அவர்களிடம், "நான் எத்தனையாவது படிக்கிறேன்னு சொல்லுங்க" என்று கேட்க அவர்கள் யு.கே.ஜி.யா என்று கேட்க, அவன் முகம் மாறிப்போனது.  "அவனுக்கு பொக்கம் குறவாணு என்னுள்ள விஷமம் உண்டு" என்றேன்.

தரையில் அமர்ந்து சாப்பிடுகிறோம்


சாப்பிட அமர்ந்தோம். வெஜிடபிள் பிரியாணியும் தயிர் சாதமும் மட்டுமே சமையல்.  அது போதும் என்று முன்னரே சொல்லியிருந்தேன்.  என் மகள்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டதே இல்லை, நான் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன், என்றார் ஷாபி.  எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமே சாப்பிட்டார்கள்.  கேரளா வந்தால் கண்டிப்பாக அவர்களது வீட்டுக்கு வரவேண்டும் என்று சொன்னார்கள்.  அவர்கள் ஐந்து மணி ரயிலைப் பிடிக்க வேண்டும் என்பதால் சாப்பிட்டு ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு கிளம்பிவிட்டார்கள்.


அவர்கள் வந்த வேலை முடியவில்லை என்றாலும், சந்திப்பு அவசரகதியில் இருந்தாலும் இன்னும் நினைவை விட்டு அகல மறுக்கிறது.