அனைவருக்கும் வணக்கம்,


மேலே காணும் படத்தை அழகாக டிசைன் செய்து தந்த திரு.பாலகணேஷ் அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லியிருந்தாலும் பொதுவில் சொன்னால் அதற்கு மதிப்பு இன்னும் அதிகம்.  நிறைய படங்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து பொறுமையாக வெட்டி ஒட்டி எனக்காக முக்கால் மணி நேரம் செலவு செய்திருக்கிறார்.  இடையில் ஆலோசனை என்ற பெயரில் என்னுடைய இம்சைகளையும் தாங்கி படத்துக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார்.  மீண்டும் நன்றி.




நான் பொதுவாக எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்பதை பிளாக்கர் நண்பர்கள் யாரிடமும் சொல்வதில்லை.  கேட்டாலும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்றுதான் சொல்வேன்.  இருந்தாலும் பல இடங்களில் மறைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.  முக்கியமாக சீருடை காட்டிக் கொடுத்துவிடுகிறது.  இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா?  நான் வேலை செய்யும் நிறுவனத்துக்கு நான் பிளாக் எழுதுவதோ (என்னத்த எழுதிக் கிழிச்சே!) முகநூல் அரட்டையில் இருப்பதோ தெரியாது.  தெரிந்தாலும் குற்றமில்லை, ஏதாவது சிறு பிரச்சனை வந்தால் கூட "ஆமா சார், இவன் எப்ப பாத்தாலும் பேஸ்புக்கில பிசியா இருக்கான், ப்ளாக் படிக்கிறான்" என்று "போட்டுக்கொடுக்கும்" கூட்டம் உண்டு.  எனது சொந்தப் பெயரிலும் எனக்கு முகநூல் ஐடி இருக்கிறது, ஆனால் அங்கே அனைவரும் அலுவலக நண்பர்களே இருக்கிறார்கள், பெருந்தலைகள் உட்பட.  அதனால் அலுவலக ஒழுக்கத்துடனே அந்த நட்பு வட்டம் இயங்கி வருகிறது.  ஆகவே ஸ்கூல் பையன் என்னும் முகமூடி அணிந்துகொண்டே நான் பதிவுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறேன்.  தெரிந்தவர்கள் பொதுவில் சொல்லாதீர்கள் நண்பர்களே.


கடந்த வாரம் பதிவர் ஜோதிடர் சித்தூர் முருகேசன் ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார்.  ஒரு அரைமணி நேரம் எனக்காக ஒதுக்க முடியுமா என்று கேட்டிருந்தேன்.  அவரை சந்திக்க இன்னொரு நண்பருடன் செல்லலாம் என்று நினைத்திருந்தேன்.  இந்த நண்பர் திரைத்துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார், ஜோதிடத்தில் கரை கண்டவர், பல புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவர், பல பிரபலங்களுக்கு ஜாதகம் பார்த்தவர்.  ஒரே ஒரு பிரச்சனை, இரவு பகல் பாராது எப்போதும் "மகா தியானத்தில்" இருப்பவர்.  அண்ணன் முருகேசன் அழைத்தபோது நண்பருக்கு தொலைபேசினேன்.  கோவிலில் இருப்பதாகத் தெரிவித்தார், வார்த்தைக் குழறல்கள் இல்லை, பின்னணியில் கோரஸாய் பக்திப் பாடல் பாடும் சப்தம் வேறு.  சரி இன்று இவர் சுத்தபத்தமாகத்தான் இருக்கிறார், இவரையும் அவரையும் பேசவிட்டு வேடிக்கை பார்க்கலாம் என்று அவரை தி.நகர் பேருந்து நிலையம் அருகே வரச்சொல்லிவிட்டுக் காத்திருந்தேன்.  வந்தார், ஆஹா, செம வாடை.  காலை முதல் குடித்துக் கொண்டிருக்கிறாராம்.  தெரியாமல் கூப்பிட்டு விட்டோமே என்று என்னை நானே நொந்துகொண்டு பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றேன்.  சித்தூர் முருகேசனிடம் பேசும்போது ஜோதிடம் சம்பந்தப்பட்ட சிலவற்றுக்கு தர்க்க ரீதியாக வாதிக்கத் தொடங்கினார்.  அய்யோடா, இந்த ஆளைக் கூப்பிட்டிருக்கவே கூடாது என்று நினைக்கையில் அவருக்கு இன்னொரு நண்பரிடமிருந்து அழைப்பு.  பக்கத்தில் இருக்கும் ஒயின் ஷாப்பில் அவரது நண்பர் வருவதாகக் கூற, அவர் என்னையும் அழைத்தார்.  யோவ், உம்மை எப்ப வேணும்னாலும் பாத்துக்கலாம், இவரை இப்போ பாத்தாதான் உண்டு, சீக்கிரம் கிளம்புங்க, நண்பர் வெயிட் பண்றாரு என்று அடிக்காத குறையாக அவரை விரட்டினேன்.  அதன்பிறகு சித்தூர் முருகேசனுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது.

பதிவர் சந்திப்பில் சித்தூர் முருகேசனுடன்



நேற்று மாலை புனித தோமையார் மலைக்கு பாலகணேஷ், கோவை ஆவி, திடங்கொண்டு போராடு சீனு மற்றும் ஆவியின் உறவினர் ஒருவருடன் சென்றிருந்தேன்,  அங்கே ஜெப வீட்டின் முன் நெற்றி நிறைய சந்தானம், குங்குமம் விபூதியுடன் என் போஸ்.  முரண்பாடாக இல்லை?




கோவை ஆவி சென்னை வந்திருப்பதால் கடந்த ஒரு வாரமாக அலுவலகத்திலும் வீட்டிலும் சிறு சிறு இடைவேளைகள்.  சிலபல வேலைகள் பெண்டிங் ஆகியிருப்பதால் அதை இந்த வாரத்தில் சமன் செய்யவேண்டும்.  அச்சச்சோ, நான் ஆவியைக் குறை சொல்லலை.


ஐஞ்சுவை அவியல், மொறுமொறு மிக்சர், கொத்து புரோட்டா, ஜஸ்ட் ரிலாக்ஸ், கரம், அஞ்சறைப் பெட்டி, ஒயின்ஷாப் என்று நம் நண்பர்கள் கலந்துகட்டி அடிக்கிறார்கள்.  நானும் அவ்வப்போது எழுதலாம் என்று நினைக்கிறேன், ஆனால் என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை.  கோவை ஆவி "ஸ்டேஷனரி" என்று வைக்கலாம் என்கிறார், பாலகணேஷ் "பலப்பம்" என்று வைக்கலாம் என்கிறார்.  என்ன பெயர் வைக்கலாம் என்று குழப்பமாக இருக்கிறது.  ஸ்கூல் பையன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல பெயர் பரிந்துரையுங்களேன்.