Showing posts with label முருகதாஸ். Show all posts
Showing posts with label முருகதாஸ். Show all posts
வத்திக்குச்சி - சினிமா விமர்சனம்
Saturday, March 16, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வத்திக்குச்சி - சினிமா விமர்சனம்
நேற்று வெளியான தமிழ்ப்படங்கள் இரண்டு. ஒன்று பாலாவின் பரதேசி, இன்னொன்று வத்திக்குச்சி. பரதேசி பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் "அவன் இவன்" கொடுத்த அடியின் வலியே இன்னும் மறக்காத நிலையில் வத்திக்குச்சி போவதென தீர்மானிக்கப்பட்டது. ஏ ஆர் முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் இரண்டாவது படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் படம் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.
படத்தின் நாயகனான திலீபன் சொந்தமாக ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். பல்லாவரம் பகுதியிலிருந்து தாம்பரத்துக்கும் வேளச்சேரிக்கும் செல்லும் அஞ்சலியை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஒரு நாள் இவர் ஏடிஎம் மில் இருந்து பணம் எடுத்துவிட்டு வெளியேறும்போது சம்பத் தலைமையிலான சிலர் கத்தி முனையில் பத்தாயிரம் ரூபாயை பறித்துவிடுகின்றனர். அவர்களைக் கண்காணித்து, அவர்களுடைய இடத்துக்கே சென்று அடித்துத் துவைத்து பறிகொடுத்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு வந்துவிடுகிறார். போதாததற்கு சம்பத்தையும் நையப் புடைத்துவிடுகிறார். இந்த விஷயம் தெரிந்தவுடன் சம்பத்தை வைத்து காரியம் சாதிக்கும் முதலாளிகளும் சம்பத்தின் நண்பர்களும் அவரை விட்டு விலகிவிடுகிறார்கள். வேலை இல்லாததால் ஏழையாகும் சம்பத் திலீபனைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறார்.
ரோட்டில் யாரோ யாரையோ கொல்வதைப்பற்றி போனில் பேசுவதைக் கேட்கும் ஹீரோ திட்டமிட்டு செய்யப்படப்போகும் கொலையை திட்டமிட்டு சமயோசிதமாக செயல்பட்டு சண்டைபோட்டு தடுக்கிறார். இதனால் பெரும் நஷ்டம் அடையும் நகை வியாபாரியான ஜெயப்பிரகாஷ் ஹீரோவைக் கொல்லத்துடிக்கிறார்.
ஒரு பெரிய பணக்காரரின் மகனைக் கடத்தத் திட்டமிடும் ஜெகன் தலைமையிலான கும்பலுக்கு ஹீரோ முட்டுக்கட்டையாக இருக்க ஹீரோவைக் கொல்லத் திட்டம் தீட்டுகிறார் ஜெகன்.
ஆக மொத்தத்தில் ஹீரோவை மூன்று கும்பல் கொல்லத் துடிக்கின்றன. அந்த மூன்று கும்பல் அவரை எப்படிக் கொல்லத் திட்டமிடுகிறார்கள், அவர்களிடமிருந்து ஹீரோ தப்பித்தாரா என்பதுதான் வத்திக்குச்சி படத்தின் கதை.
இன்ஃப்ளுயன்ஸ் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகிவிடலாம் என்பதற்கு இணங்க தன் தம்பியையே நடிக்கவைத்து படம் தயாரித்திருக்கிறார் ஏஆர் முருகதாஸ். திலீபன் நம்ம பக்கத்து வீட்டுப் பையன் போல இருக்கிறார். ஆனால் ஹீரோ ரோலுக்குப் பொருத்தமான முக அமைப்பு இல்லை. இயக்குநர்களே, தயவு செய்து படத்தின் கதைக்கேற்ற ஹீரோவைத் தேர்வு செய்யுங்கள். திலீபன் இனி அண்ணன், தம்பி, அடியாள், அமெரிக்க மாப்பிள்ளை போன்ற கேரக்டர்களில் நடிக்கலாம்.
ஹீரோயினாக அஞ்சலி. குண்டாக உயரமான ஒரு பெரிய மாமிச மலை போல் இருக்கிறார். அவரது குரல் வேறு இரண்டு சில்வர் பாத்திரங்களை வைத்து தேய்த்ததுபோல் கீச் கீச் என்று இருக்கிறது. அவர் வசனம் பேசும்போது நமக்கு முடி சிலிர்த்துக்கொள்கிறது. இனியாவது படங்களில் சொந்தக்குரலில் பேசாமல் இருக்கவேண்டும். ஒரு அட்வைஸ், இப்படியே போனால் மொத்தத் தமிழகமும் தங்களைப் புறக்கணிக்க நேரிடும். திருத்திக்கோங்க அம்மணி...
படம் முழுவதும் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்தல், துரத்தல், சண்டை என்றே செல்கிறது. படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை பரபரப்பாகச் செல்லவேண்டும் என்பதற்காக இயக்குநர் கின்ஸ்லின் ரொம்பவும் மெனக்கெட்டு உழைத்திருப்பது தெரிகிறது. ராஜசேகரின் சண்டைக்காட்சிகள் பிரமாதமான இருக்கின்றன. முக்கியமாக வேளச்சேரி பஸ் ஸ்டாப்பில் நடக்கும் சண்டையும் கிளைமாக்ஸில் பரங்கிமலையில் நடக்கும் சண்டையும் அதிர வைக்கின்றன. துரத்தல் காட்சிகளில் ஜெகன் கும்பல் ஹீரோவை வீட்டில் பூட்டிவைத்துவிட்டுக் காத்திருக்கும் காட்சிகள் திக் திக்.
நிறைய லாஜிக் ஓட்டைகள். உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று. ஹீரோவை சம்பத் கோஷ்டி கொலை செய்வதற்காக பைக்கில் கூட்டிச்செல்கிறார்கள். போகும் வழியில் போக்குவரத்துப் போலிஸ் மடக்குகிறார்கள். ஹீரோ அங்கேயே போலீசிடம் சொல்லித் தப்பித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு மூச்சிரைக்க ஓடிப்போய் சாப்பிட்டுவிட்டு எக்சர்சைஸ் செய்து சண்டைக்குத் தயாராகிறார். கடவுளே!
வத்திக்குச்சி - பத்திக்கவில்லை.
துப்பாக்கி - சினிமா விமர்சனம்
Tuesday, November 13, 2012
Posted by கார்த்திக் சரவணன்
துப்பாக்கி - சினிமா விமர்சனம்
விஜய் இந்த மாதிரியான படங்களில் நடித்து ரொம்ப நாளாயிற்று. சமீப காலமாக ஆவரேஜ் ஹிட்டும் ப்ளாப்பும் கொடுத்தவருக்கு துப்பாக்கி ஒரு திருப்புமுனை. பொதுவாக அவரது படங்கள் தோல்வியடைவதற்குக் காரணம் சரியான கதையைத் தேர்ந்தெடுக்காதது தான். ஆனால் இந்தப்படம் அவருடைய இமேஜை தக்க வைக்கும் விதமாகவும் அவருடைய நடிப்புக்கு சவாலாகவும் இருப்பது மகிழ்ச்சி. விஜய்க்கு மட்டுமல்ல, ஏழாம் அறிவு(அறுவு) படத்தின் மூலம் தன் பெயரை கொஞ்சம் கெடுத்துக்கொண்ட இயக்குநர் ஏ ஆர் முருகதாசுக்கும் இந்தப்படம் ஒரு திருப்புமுனை தான். கதை ஜெய்சங்கர் காலத்தியதாக இருந்தாலும் திரைக்கதையில் நேர்த்தி செய்து நீட்டாக கொடுத்திருக்கிறார்.
கதை என்ன? மாவு என்னமோ பழசுதான். அதை வார்த்த விதத்தில் புதுமை காட்டியது புதுசு. விஜய் ஒரு மிலிட்டரி ஆபிசர். அது என்னமோ இன்டலிஜென்ட் ஏஜன்ட் என்று யாருக்கும் தெரியாத ஒரு வேலையும் இந்திய அரசுக்காக செய்கிறார். ஒரு வேலையாக மும்பை சென்றிருக்கும் அவர் எதேச்சையாக ஒரு தீவிரவாதியை போலிசில் பிடித்துக் கொடுத்துவிடுகிறார். அந்த தீவிரவாதி போலிஸ் கஸ்டடியில் இருந்து தப்பிக்க அவனை மீண்டும் பிடித்து தன் கஸ்டடியில் வைத்துக்கொள்கிறார். அவனை தப்பிக்க விட்ட சீப் செக்யூரிட்டி ஆபிசரை தற்கொலை செய்ய வைக்கிறார்.
அந்த தீவிரவாதி தனது கூட்டாளிகளுடன் மும்பையில் மொத்தம் 12 இடங்களில் தாக்கப்போவதை அறிந்த விஜய், அவனை யார் இயக்குகிறார், அவன் தன் கூட்டாளிகளுடன் என்ன செய்யப்போகிறான் என்று கண்டுபிடிக்க அவனை தன் வீட்டிலிருந்து தப்பவிடுகிறார், கூடவே தன் மிலிட்டரி நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் அனைவரையும் போட்டுத்தள்ளுகிறார்.
இதை அறிந்த தீவிரவாதி தலைவன் வித்யுத் ஜாம்வால் டென்ஷனாகிறார். தன் குழுவினரை தீர்த்துக்கட்டிய அனைவரையும் பழி வாங்கப் புறப்படுகிறார். அவர் பழிவாங்க என்ன முயற்சி எடுத்தார், அதை விஜய் எப்படி முறியடித்தார் என்பதை தியேட்டரில் சென்று பாருங்கள்.
விஜய் செம அழகு. அதிலும் அவரது காஸ்ட்யூம் சூப்பர். ஒவ்வொரு சீனிலும் ஒவ்வொரு டிரெஸ்ஸில் கலக்கலாக இருக்கிறார். லேசான ஆட்டு தாடியுடன் வரும் அவர் சன் கிளாசில் மிக ஸ்டைலிஷ். அதிலும் இந்தப்படத்தில் அவருக்கு ஸ்டைலான நடிப்பும் வசன உச்சரிப்பும் கை கொடுக்கின்றன. மனிதர் சாதாரணமாக நடித்திருக்கிறார்.
காஜல் அகர்வால் வழக்கம்போல் எல்லா படங்களிலும் வருவதுபோல் வருகிறார், ஆடுகிறார், பாடுகிறார், ரொமான்ஸ் பண்ணுகிறார். அவர் வரும்போதெல்லாம் பாடல் ஒன்று உறுதியாகி விடுகிறது. பார்ட்டி வெயிட் போட்டதுபோல் தெரிகிறது, கொஞ்சம் உடம்பைக் குறைங்க அம்மணி...
கொஞ்ச நேரமே வந்தாலும் ஜெயராம் சிரிக்க வைக்கிறார். அவர் இன்ட்ரோ ஆகும் காபி டே காட்சியில் அப்ளாஸை அள்ளுகிறார். சப் இன்ஸ்பெக்டராகவும் விஜயின் நண்பராகவும் வரும் சத்யன் கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டுகிறார். தன் மாமியாரை திட்டிக்கொண்டே அவர் பேசும் வசனங்கள் கலகல ரகம்.
இசை ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் ஏற்கனவே சூப்பர்ஹிட். அதிலும் அண்டார்ட்டிகா பாடலிலும் கூகிள் கூகிள் பாடலும் கேட்க இனிமை. கூகிள் பாடலை விஜய் பாடியிருப்பதால் தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. பிண்ணனி இசையும் அருமை. அதிலும் விஜய் தன் வீட்டுக்குச் சென்று தீவிரவாதியை அடைத்து வைத்திருக்கும் தன் அறைக்குச் செல்லும்போது ஒலிக்கும் தம்புரா ஒலியும் ஒற்றை வயலினும் நம்மை மயக்குகின்றன. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே தங்கள் பங்குக்கு நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று (நிச்சயமாக) காணக்கூடிய ஒரு தரமான திரைப்படமாக வந்திருக்கிறது "துப்பாக்கி".
டிஸ்கி: இது ஒரு கமர்சியல் முயற்சி. சினிமா விமர்சனத்துக்கு எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்தப் பதிவு. நண்பர்கள் தயவு செய்து தங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும்.
Subscribe to:
Posts (Atom)















