அலுவலகத்திற்குப் பின்னால் ஒரு பெரிய மாமரம் இருக்கிறது. பின்னால் என்றால் பின்னாலுள்ள கட்டடத்தில் வேரூன்றி இருக்கும் மரம். எங்கள் அலுவலகக் கட்டடம், தரைத்தளம் தவிர்த்து மூன்று மாடிகள். அந்த மூன்று மாடிகளையும் கடந்து ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும். அந்த மரத்தின் ஒரு பகுதி எங்கள் கட்டடத்தின்மீது சாய்ந்தவாறு இருக்கும். அதில் விளையும் மாங்காய்கள் மிகவும் சுவையாக இருக்கும். சமயங்களில் நாங்கள் மொட்டை மாடிக்குச் சென்று கைக்கு எட்டும் தொலைவிலுள்ள காய்களைப் பறித்துக்கொள்வோம்.

 

கடந்த வெள்ளியன்று, மொட்டை மாடியில் மழையை வேடிக்கை பார்க்கலாம் என்று சென்றபோதுதான் அந்த மரத்தில் சில மாங்காய்கள் காய்த்துத் தொங்குவதைக் கண்டேன், அதுவும் கைக்கு எட்டும் தொலைவில். ஐந்தாறு காய்கள் தேறின. பறித்துக்கொண்டேன். அவற்றுள் ஒன்றைக் கழுவி, தோல் நீக்கி சாப்பிட்டுப் பார்த்தேன். இனிக்கவும் இல்லை; புளிக்கவும் இல்லை. இது ஏன் இப்படிப்பட்ட சுவையில் இருக்கிறது என்ற குழப்பம் எனக்கு. இருக்கட்டும், இவற்றை எடுத்துச் சென்றால் வீட்டில் அம்மா ஊறுகாய் போட்டுக் கொடுப்பார் என்றெண்ணி எடுத்து வைத்துக்கொண்டேன்.

 

சனிக்கிழமை. காலை முதலே விட்டு விட்டு மழை பெய்துகொண்டிருந்தது. பள்ளியில் கட்டணம் கட்ட வேண்டும். பள்ளி இருக்கும் தெரு முழுவதும் ஆறாகத் தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது. வண்டியை எடுத்துக்கொண்டு சென்று ஓரிரு தெருக்கள் கடந்து நிறுத்திவிட்டு, பாய்ந்தோடும் வெள்ளத்தில் நடந்தபடியே பள்ளிக்குச் சென்று கட்டணத்தைக் கட்டிவிட்டு, மீண்டும் பாய்ந்தோடும் வெள்ளத்தில் நடந்தபடி வண்டிக்கு வந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். அதன்பிறகு, பெருங்குடி பகுதியில் ஒருவரைத் தேடிச் சென்று, அங்கும் மழைத் தண்ணீரில் கை, கால், வண்டி எல்லாம் நனைந்து, நான் தேடிச் சென்றவரையும் பார்க்க முடியாமல் திரும்பிவிட்டேன். நான் பறித்துச் சென்ற மாங்காய்கள் ஊறுகாயாக மாறியிருந்தன. ஊறுகாய் சாப்பிடுவதில் நான் ராமராஜனைப் போல். தொட்டுக்கொண்டெல்லாம் சாப்பிட மாட்டேன்; அப்படியே அள்ளித் தின்பதுதான்.

 

அன்றிரவு கடுமையான மூட்டுவலி, முதுகுவலி. லேசான காய்ச்சல் வேறு. கால் விரல் நகக் கண்களுக்குள் நுண்ணிய பூச்சி ஊர்வதுபோன்ற உணர்வு. 2015 வெள்ளத்தின்போது வாத்தியார் கணேஷ் பாலாவின் வீட்டிற்குச் சென்று அவருடைய வீட்டை சுத்தம் செய்து கொடுத்த அன்று இதே உணர்வு இருந்தது. அன்று சாக்கடைத் தண்ணீரில் நீண்ட நேரம் உழன்றதால் ஏற்பட்டிருந்தது. பலமுறை சோப், டெட்டால் போட்டுக் கழுவிய பிறகுதான் அது நீங்கியது. ஆனால், இது தெள்ளிய மழைத் தண்ணீர். மாத்திரை போட்டுக்கொண்டேன். மனைவியிடம் காலுக்குத் தைலம் தேய்த்துவிடச் சொன்னேன். தேய்த்துவிட்டார். ஆனால், அவர் தொட்டதன் வலி மூட்டுவலியை விட அதிகமாக இருந்தது. தூங்கிப் போனேன்.

 

ஞாயிறன்று காலையில் எழுந்தபோது சற்றுத் தெளிவாக இருந்தது. மூட்டுவலி பெரிதாக இல்லை; முதுகுவலி முற்றிலும் இல்லை. மதியம் சாப்பிடும்போது அமேசான் பிரைமில் படம் பார்த்தேன். நீண்ட நேரம் உட்கார முடியவில்லை. மீண்டும் காய்ச்சல் அடிப்பதுபோல் இருந்தது. உறங்கிப் போனேன். மாலையில் எழுந்தபோது மீண்டும் மூட்டுவலி. என்னவாக இருக்கும் என்று யோசித்தபோதுதான் புலப்பட்டது. இது மாங்காய் விளையும் பருவம் அல்ல. இந்தப் பருவத்தில் விளையும் மாங்காயை உண்டதால் ஏற்பட்டிருக்கும் வயிற்றுக் கோளாறு. அத்துடன் மழையில் அலைந்ததும் சேர்ந்துகொண்டு வாட்டுகிறது. ஐயோ! அடுத்த நாள் அலுவலகம் போக வேண்டுமே? மருத்துவரைக் காண்பதுதான் நல்லது என்று பட்டது.

 

மருத்துவரிடம் சென்றேன். அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் கொரோனா வைரஸ் நோயைச் சுற்றியே இருந்தன. "இல்லை, டாக்டர். நான் மழையில் நனைஞ்சுட்டேன்; ஜில்லுன்னு மழைத் தண்ணில நடந்தேன்; மாங்கா சாப்பிட்டேன்" என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'மழையில் நனைஞ்சானாம், மாங்கா தின்னானாம்' என்று மனதுக்குள் திட்டியிருப்பார். நான் சோர்வாக இருப்பதைப் பார்த்து, ஓர் ஊசியைப் போட்டார். இடுப்பில். அதை வேறு அவர் பார்த்துத் தொலைத்துவிட்டார். மூன்று நாட்களுக்கு மாத்திரை கொடுத்திருந்தார். மழையில் வெளியே போகாதே என்று அறிவுரை கூறினார். அப்படிப் போவதாக இருந்தால், காதில் பஞ்சு வைத்துக்கொள்ளச் சொன்னார். அவர் சொல்லும்போது வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும் வியர்த்துவிட்டது. ஊசியின் விளைவு. அடுத்த நாள் நிச்சயம் அலுவலகத்திற்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. மாத்திரையை உட்கொண்டுவிட்டு உறங்கிப்போனேன்.

 

அடுத்த நாள், திங்கட்கிழமை. காலை எழுந்திருக்கும்போதே கடுமையான உடல்வலி. ஒவ்வோர் எலும்பும் 'விண் விண்' என்று தெறித்தன. லேசான காய்ச்சலும் இருந்தது. கூடவே இருமலும். எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. ஒருவேளை, அதுவாக இருக்குமோ? அலுவலகத்திற்கு விடுப்பு வேண்டுமென்று அலுவலக வாட்சப் குழுவில் செய்தி அனுப்பினேன். அங்குள்ளவர்களும் நலம் விசாரித்தார்கள். சிலர் குழுவிலேயே; சிலர் தனிப்பட்ட முறையில்; சிலர் தொலைபேசி அழைப்பு வாயிலாக. அவர்கள் கேட்டது எனக்கு இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது. பார்க்கலாம், சரியாகவில்லை என்றால் அடுத்த நாள் நாமே நேராகச் சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

 

செவ்வாயன்று காலையில் எழுந்தபோது லேசான காய்ச்சல் இருந்தது. லேசான இருமலும் இருந்தது. அலுவலகம் செல்வதற்கு மனம் வரவில்லை. சரியல்ல. வேளச்சேரி ஆர்த்தி ஸ்கேன்ஸ்-க்குச் சென்று என் விவரங்களைக் கூறி, கட்டணத்தைக் கட்டினேன். என் ஆதார் அட்டையின் நகல் கேட்டார்கள். இல்லை. மெயிலில் எப்போதோ யாருக்கோ அனுப்பியிருந்தேன். தேடிப் பிடித்து அதை அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். பரிசோதனை விவரங்களை அரசாங்கத்திற்கு அனுப்புவார்களாம். பரிசோதனை செய்பவர் என்னிடம் கேட்டார், "ஏன் சார்? கொரோனா வந்தவங்க கூட நீங்க இருந்தீங்களா? ஏன் செக் பண்றீங்க?" என்றார். "இல்லை சார். நான் ஆபிஸ் போகணும். அங்க எல்லாருக்கும் என்மேல டவுட் வந்திருச்சு. பிரெக்னன்ட் ஒய்ஃப், சின்னக் குழந்தைக, ரொம்ப வயசானவங்க எல்லாம் இருக்காங்க. ஒருவேளை எனக்கு இருந்து, என்கிட்டருந்து வாங்கிட்டுப் போய், அவங்க குடும்பத்தில யாருக்காவது குடுத்திட்டா? அந்த பயம்தான் சார். நெகட்டிவ்னு தெரிஞ்சிட்டா அவங்களும் நிம்மதியா என்கூடப் பேசுவாங்கல்ல?" என்றேன். "ஆமாமா, சரிதான்" என்றவர் மூக்குக்குள் குச்சியை விட்டுக் குத்தி எடுத்தார். சிறு வயதில் நண்பர்களுடன் சண்டை போட்டு சில்லு மூக்கை உடைத்துக்கொண்டிருப்போம். அப்போது ஏற்பட்ட வலியின் ஒருபகுதியை உணர முடிந்தது. தொண்டையில் இருந்து எடுத்ததில் வலி இருக்கவில்லை. வாந்தியோ தும்மலோ வந்துவிடுமோ என்று நினைத்திருந்தேன். வரவில்லை.

 

அன்றிரவே பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன. "Detected" என்றிருந்தது. ஆமாம், எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மாங்காய் மீதும், மழையின் மீதும் கொண்டிருந்த காரணம் பொய்யென்று தெளிவானது.