வீட்டில் ஏ.ஸி. அவ்வப்போது நின்றுவிடுகிறது. வோல்ட்டேஜ் பிரச்சினை. ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் - திடீரென்று நின்றுவிடும். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று அமைதியாக இருந்துவிட்டு பிறகு தன் பணியை செவ்வனே செய்ய ஆரம்பிக்கும். இத்தனைக்கும் டபுள் பூஸ்டர் ஸ்டெபிலைசர்தான் பயன்படுத்துகிறேன். நான் வசிக்கும் ஏரியா நண்பருடன் சேர்ந்துதான் ஏ.ஸி. வாங்கினேன். “நம்ம ஏரியா கரண்ட் பிரச்சனைக்கு டபுள் பூஸ்டர்தான் செட்டாவும்” என்று கூறியிருந்தார். அவருடைய ஆலோசனையின்படி வாங்கிவிட்டேன். ஐந்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை பிரச்சினை இருந்ததில்லை.



இப்போது தொடங்கிவிட்டது. நானும் அடுத்த மாதம் வரை சமாளித்துக்கொண்டால் போதும் என்று சகித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த சீதோஷ்ண நிலை சரியில்லை. இரவிலும் வியர்த்து ஊற்றுகிறது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று முறையாவது குளிக்க வேண்டியிருக்கிறது. மனைவி, மக்கள் உறக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். பகலில் தூங்கி வழிகிறார்கள். வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்துக்குத்தான் போகிறது, அதுகூட நிம்மதியாகக் கிடைக்காதா என்கிறார் மனைவி. அவரது நிலைப்பாடும் சரிதான்.

பக்கத்து பிளாட் ஏ.ஸி.க்கு கேஸ் நிரப்ப வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரை அழைத்து விசாரித்தேன். டிரிபிள் பூஸ்டர் ஸ்டெபிலைசர் வாங்கிப் போடுங்க. பிரச்சனையே வராது என்றார். கடைகளிலும் இணையத்திலும் விசாரித்ததில் பத்தாயிரம் ரூபாய் சொல்கிறார்கள். அவ்வளவு விலை கொடுத்து அப்படி என்ன வேண்டியிருக்கிறது என்றும் தோன்றுகிறது. இருந்தாலும், மனைவியின் கோரிக்கைக்கிணங்கி முகநூலில் இருக்கும் “மூர் மார்க்கெட்” என்ற குழுவில் செகண்ட் ஹேண்ட் ஸ்டெபிலைசர் கிடைக்குமா என்று ஒரு நிலைத்தகவலைத் தட்டிவிட்டேன். ஒரு வாரமாகியும் ஒரு லைக் கூட வராததால் அதை அழித்துவிட்டேன் என்பது வேறு கதை.

அந்த நிலைத்தகவலைப் பதிவு செய்த நாள் முதல் ஏதேனும் குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என்று messenger-இல் ஆராய்ந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு புதிய செய்தி வந்திருந்தது. பள்ளியில் படித்த நண்பன் ஒருவனிடமிருந்து மூன்று மாதங்களுக்கு முன்பே messenger-இல் என்னிடம் தொடர்பு கொண்டிருக்கிறான். அவனும் நானும் முகநூலில் நண்பர்களாக இல்லாததால் message request என்ற பகுதியில் மூன்று மாதங்களாகக் கிடந்திருக்கிறது. நாம்தான் பெயரைத் திருப்பி வைத்திருக்கிறோமே – அதுவும் தமிழில் – இவன் எப்படிக் கண்டுபிடித்தான் என்று வியந்தவாறே அவன் கொடுத்திருந்த தொலைபேசி எண்ணில் அழைத்து அவனிடம் பேசினேன்.

அவன்தான். திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறான். உடன் படித்த பலருடைய பெயர்களைக் கூறி ஞாபகம் இருக்கிறதா என்றான். ஓரிருவரைத் தவிர எனக்கு வேறு யாரையும் ஞாபகம் இல்லை. ஆனால், ஒருவருடைய பெயர் மட்டும் ஞாபகம் இருந்தது. சுகன்யா. சுகன்யாவை அவன் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தான் – ஒருதலையாக. அது அவளுக்கும் தெரிந்திருந்தது. ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. அவள் அப்போதே அவ்வளவு மனமுதிர்ச்சி கொண்டவளாக இருந்திருக்கிறாள் என்பதை இப்போது யோசித்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அவளுடன் தொடர்பில் இருக்கிறாயா என்று கேட்டேன். சில நாட்களுக்கு முன் சுகன்யாவே இவனைத் தேடி வந்திருக்கிறாள். இவனை மட்டுமல்ல, எங்களுடன் படித்த எல்லோரையும். நான் உட்பட ஒரு சிலரைத் தவிர அனைவரையும் பிடித்துவிட்டாள். அவளுடைய மகளுக்குத் திருமணமாம். அதற்குள்ளாகவா என்று அதிர்ச்சியடைந்திருக்கிறான். அதற்கு அவள், ‘உனக்குத் தெரியாதா, எங்கள் குடும்பத்தில் பெண்ணுக்கு பதினெட்டு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று? இப்போ நமக்கு முப்பத்தெட்டு வயசு, என் மகள் ஒரு வருஷம் லேட்டா பிறந்ததால இப்ப வந்திருக்கேன். இல்லேன்னா போன வருஷமே உன்னைத் தேடி வந்திருப்பேன்’ என்றிருக்கிறாள்.

எனக்குத் தலை சுற்றுகிறது. இதே ரீதியில் போனால் தன் பேத்தியின் திருமணத்தையும் நிச்சயம் கண்டுகளிப்பாள். இன்னும் சில ஆண்டுகள் உயிருடன் இருந்தால், கொள்ளுப்பேத்தியின் திருமணத்தையும் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிட்டும். இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், அவளது குடும்பத்தில் வழிவழியாக பெண் குழந்தைதான் முதலில் பிறக்கிறது. சுகன்யாவின் அம்மாவும், பாட்டியும் இன்னும் இருக்கிறார்கள்.