அது இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு என்று நினைவு. அலுவலக நண்பர் ஒருவர் திடீரென்று வேலையை விட்டுவிட்டார். தொன்னூறு நாட்கள் Notice Period உண்டு. அதையும் இறுதிக் கணக்கில் கழித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார். அவர் வேலையை விடுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே சரியாக வருவதில்லை. ஏதோ சொந்தத் தொழிலில் இறங்கிவிட்டார் என்று கேள்விப்பட்டிருந்தேன். "இப்பவே அவருக்கு நாப்பதாயிரம் வருதாம், அடுத்த வருஷம் ஒரு லட்சம் வருமாம்" என்று பலர் பொறாமைப்பட்டிருந்தனர்.


அவர் வேலையை விட்டு ஒரு மாதம் இருக்கும். திடீரென்று ஒரு நாள் எனக்கு அவரிடமிருந்து போன். "சரவணன், ப்ரீயா இருந்தா சாயங்காலம் நுங்கம்பாக்கம் வரை வரமுடியுமா?" என்றார். என்ன விஷயம் என்றேன். "ஒண்ணும் இல்ல, சும்மா சின்னதா ஒரு படம் பாக்கத்தான் கூப்பிட்டேன்" என்றார். அந்த நேரத்தில்தான் எனக்கு ஒரு பிரச்சனை இருந்தது. வண்டியில் செல்லும்போது பூச்சி ஒன்று கண்ணில் விழுந்து உள்ளேயே தங்கிவிட்டது.  அதற்காக அலுவலகம் போகாமல் வீட்டிலேயே சொட்டுமருந்து விட்டு ஒய்விலிருந்தேன். தவிர டாக்டர் வேறு என்னை சினிமா, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் என எதையும் பார்க்கக்கூடாது என்று சொல்லியிருந்தார். இதை நான் அவரிடம் சொல்லவும் பரவாயில்லை, இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்றார்.

அடுத்த வாரமே அவரிடமிருந்து போன். "இன்னிக்கு சாயங்காலம் படம் போடுறோம், கோடம்பாக்கம் சிக்னலுக்கு முன்னாடி லெப்ட் சைட்ல MM தியேட்டர் இருக்கும் அங்க வந்திருங்க" என்றார். நானும் சரி என்று சென்றுவிட்டேன். VCAN நெட்வொர்க் நிறுவனத்தின் விளம்பரம் அது. MLM என்று அழைக்கப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் பிசினஸ் அது. படத்தில் பல விஷயங்களை சொன்னார்கள். பணம் கட்டி உறுப்பினர் ஆகவேண்டும். இரண்டு பேரை நமக்குக் கீழ் சேர்த்துவிடவேண்டும். இவ்வளவே. நமக்குக் கீழ் இருப்பவர்கள் அவர்களுக்குக் கீழ் இரண்டுபேரை சேர்க்கவேண்டும். இந்த வேலை மட்டும் செய்தால் நமக்குக் கிடைக்கப்போகும் தொகை முதல் மாதத்தில் இவ்வளவு, ஆறு மாதங்களில் இவ்வளவு, இரண்டு வருடங்களில் இவ்வளவு என்று கணக்கு சொல்லி வாயைப் பிளக்கவைத்தனர். தவிர, இந்த நிறுவனத்தின் மேல்மட்டத்தில் இருக்கும் புள்ளிகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்றும் சொல்லி பிளந்த வாயை மேலும் பிளக்கவைத்தனர். போதாக்குறைக்கு உலகநாயகன் கமல்ஹாசன் வேறு இந்த நிறுவனத்தின் எம்டிக்கு நெருங்கிய நண்பராம். படத்தில் கமலும்  நாலு வார்த்தை பேசிவிட்டுப் போனார்.

அரை மணி நேரம்தான். படம் விட்டு வெளியே வந்ததும் அந்த நண்பர் அவரை சேர்த்துவிட்ட நண்பரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். "பாஸ், சேந்துக்கறீங்களா?" என்று கேட்ட அவர் அப்போதுதான் கார் வாங்கியிருந்தார். இது போனமாசம் எனக்கு வந்த பணத்துல வாங்கியது பாஸ் என்று பெருமையுடன் சொல்ல, எனக்கு நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி "நாளைக்கே செக் வாங்கிக்கோங்க" என்று சொல்லிவிட்டேன்.

பணம் கட்டியாயிற்று. ஆறாயிரத்து சொச்சம். இரண்டாயிரத்து சொச்சம் மதிப்புள்ள ஒரு பிலிப்ஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் கொடுத்தார்கள். மீதி பிராசசிங் கட்டணமாம். ஆள் சேர்க்கவேண்டுமே! எல்.ஐ.சி. ஏஜன்ட்கள் எப்படித்தான் அவர்களின் முதுகுக்குப் பின்னால் அறைந்து சாத்தப்படும் கதவுகளைப் பொறுத்துக்கொள்கிறார்களோ. நண்பர்கள் உறவினர்கள் என்று தேடி அலைந்ததில் செலவு தான் ஆனது. யாரும் நம்பி வரவில்லை. இரண்டு மாதங்கள் தான் இருக்கும். வெறி பிடித்தவன் போல சுற்றினேன். ஒருவர் கூட சேர முன்வரவில்லை. இதற்கு மேல் இதன் பின்னால் சுற்றினால் பைத்தியம் பிடித்துவிடும் என்று அத்தோடு தலை முழுகிவிட்டேன்.

இப்போது அந்த நிறுவனமே இல்லை. பெருந்தலைகளுக்கு மத்தியில் பிரச்சனையாம். மொத்தமாக இழுத்து மூடிவிட்டார்கள். சம்பாதித்தவர்களும் வந்தவரை லாபம் என்று விட்டுவிட்டார்கள். கடைசியாக பணம் கட்டியவர்களும் அவர்களை சேர்த்துவிட்டவர்களும்  பாவம். இதில் எத்தனை பேர் செய்த வேலையை விட்டுவிட்டு வந்தார்களோ தெரியவில்லை.

--------------

என் உடன் படித்த நண்பன் ராஜேஷின் தம்பி அவன். பெயர் சுரேஷ். ஒரே வயது தான். படிக்கும் காலத்திலிருந்தே வாடா போடா என்று பேசிப் பழக்கம். வளசரவாக்கத்தில் வசிக்கிறான். திடீரென்று ஒருநாள் எனக்கு போன் செய்தான். "அந்தப்பக்கம் வரவேண்டிய வேலை இருக்கு, சாயங்காலம் உங்க வீட்டுக்கு வரட்டுமா?" என்றான். விருந்தோம்பல் தான் தமிழர் பண்பாடு ஆயிற்றே. "தாராளமா வா" என்றேன். குடும்பத்துடன் வந்தான். இரண்டு குடும்பங்கள் சந்தித்தால் குதூகலமாக இருக்குமே என்று நினைத்திருந்த எனக்கு அதிர்ச்சி. குழந்தைகள் மட்டும் விளையாடிக்கொண்டிருக்க கணவன் மனைவி இரண்டு பேரும் எங்கள் இருவரையும் கேன்வாஸ் செய்வதில் குறியாக இருந்தார்கள். AMWAY நிறுவனத்தில் ஏஜண்டாம். "எனக்கு கம்பெனி பத்தி தெரியும், அவர்களது பொருட்களையும் தெரியும், உனக்கு என்னால் ஏதாவது லாபம் வரும்னா உன்கிட்ட பொருள் வாங்கிக்கிறேன், ஆனா மெம்பரா மட்டும் ஆகமுடியாது" என்று சொல்லிவிட்டேன்.அவன் எவ்வளவோ எடுத்துக்கூறியும் நான் மசியவில்லையே.

---------------

முகநூலில் ஒருவர் நட்பு அழைப்பு விடுத்திருந்தார். பெயர் வேண்டாமே. அழைப்பை ஏற்றுக்கொண்டேன். உடனடியாக chat-இல் வந்து நான் யார், எங்கே என்ன வேலை செய்கிறேன் போன்ற விவரங்களைக் கேட்டார். நான் அதற்கு ஏன் கேட்கிறீர்கள் என்று திருப்பிக்கேட்டேன். அதற்கு அவர் என்னிடம் வீட்டிலிருந்தே சொந்தமாக தொழில் செய்து முன்னேறலாம். என்னிடம் அதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் நான் உங்களுக்கு விவரங்கள் தருகிறேன் என்றார். ஐயா சாமி எனக்கு அந்த அளவுக்கு நேரமெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டேன்.

----------------

குடும்பத்தோடு ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றிருந்தோம். அங்கே நாங்கள் அமர்ந்திருந்த டேபிளுக்குப் பக்கத்து டேபிளில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் அவரது கணவரும் அமர்ந்திருந்தனர். என் மகனும் மகளும் அடித்த லூட்டியைக்கண்டு சிரித்துக்கொண்டிருந்தனர். நானும் அதை கவனித்திருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் என் மனைவி கை கழுவச்சென்றாள். கூடவே அந்தப் பெண்மணியும் சென்றார். கைகழுவும் அந்த ஒரு நிமிடத்துக்குள் பேச்சு கொடுத்து என் மனைவியின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு தனது அலைபேசியிலிருந்து ஒரு missed call கொடுத்திருக்கிறார். இதை என் மனைவி என்னிடம் வீட்டுக்கு வந்ததும் சொல்ல, நான் "எதுக்கு கண்டவங்க கிட்டல்லாம் நம்பர் கொடுக்குறே" என்று கடிந்துகொண்டேன். சில நாட்களுக்குப் பின் அந்தப் பெண்மணியிடமிருந்து என் மனைவிக்கு போன் வந்தது. சும்மா பேசினாராம். இப்படி அடிக்கடி சும்மா சும்மா போன் செய்து பின் ஒருநாள் ஒரு நல்ல பிசினஸ் இருக்கிறது, வீட்டிலிருந்தே செய்யலாம், தினமும் இரண்டு மணி நேரம் உழைத்தால் போதும் என்று ஆரம்பித்திருக்கிறார். அதற்கு என் மனைவி எதையுமே என் கணவரிடம் கேட்டுத்தான் செய்வேன் என்று கூறிவிட்டார். நான் அன்று வீட்டுக்கு வந்ததும் என் மனைவி இந்த விஷயத்தை சொல்ல, நானே அவருக்கு போன் செய்து "மேடம், நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. நல்லா பேசி பழகுறீங்க. நல்லது. நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. நாங்களும் உங்க வீட்டுக்கு வர்றோம். என்னால ஏதாவது உதவி வேணும்னா செய்றேன். பதிலுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்யுங்க. ஒரு நல்ல பிரென்ட்ஷிப் வளரட்டும். பிசினஸ் அது இதுன்னு போன் பண்ற வேலை மட்டும் வச்சுக்காதீங்க" என்று தெளிவாகப் பேசிவிட்டேன். அன்றிலிருந்து அந்த அம்மா போன் செய்வதேயில்லை.

-------------------

போன மாதம் கூட எனக்கு சுரேஷ் போன் செய்திருந்தான். "வீட்டுக்கு வரட்டுமா" என்றான். "தாராளமா வா, ஆனா ஆம்வே அது இதுன்னு பேசறதா இருந்தா தயவு செஞ்சு வராதே" என்று கறாராகக் கூறிவிட்டேன். இதுகுறித்து உடன் படித்த வேறு ஒரு நண்பரிடம் பேசுகையில் அவர் சொன்னது எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். அவரிடமும் சுரேஷ் இதேபோல பேசியிருக்கிறார். இது அடிக்கடி தொடரவே, ஒரு நாள் அவரது மனைவி அவரிடமிருந்து போனை பிடுங்கி முகத்திலறைந்தால்போல நாலு வார்த்தை கேட்க, ஆள் கப் சிப். அதன் பிறகு தொடர்புகொள்ளவே இல்லையாம்.

அவரது மகன் எல்.கே.ஜி. படிக்கிறான். தினமும் மாலை ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு கூட்டிச்செல்வார். அதுவரை ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் காத்திருப்பார். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவருடைய மகனுடன் படிக்கும் குழந்தையின் தாய் ஒருவர் இவரிடம் தினமும் பேச்சு கொடுத்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் கைநிறைய பேப்பர்களை எடுத்துவந்து நான் ஆம்வே பிசினஸ் பண்றேன், நீங்க கண்டிப்பா சேரணும் சார் என்று உரிமையோடு கேட்டிருக்கிறார். என்ன மேடம் இவ்வளவு உரிமையா கேக்கறீங்க என்று நண்பர் கேட்டதற்கு "சார், உங்க பையனும் என் பொண்ணும் ஒரே கிளாஸ்ல படிக்கிறாங்க, அந்த உரிமை போதாதா?" என்று உரிமையாகக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், இதுக்கெல்லாம் நான் சரிப்பட மாட்டேன் என்று சொல்லி ஒதுங்கிவிட்டாராம்.

கடன் அன்பை முறிக்கும் என்று சொல்வார்கள். அதில் ஓரளவு உண்மை இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் என் மூலமாக பிசினஸ் செய் என்று காகிதங்களைத் தூக்கிக்கொண்டு வரும் நண்பர்களைப் பார்க்கும்போது ஓடிவிடலாம் போல இருக்கிறது. திடீரென்று பொத்துக்கொண்டு வரும் பாசமும் போலியான அன்பும் வேண்டாம் நண்பர்களே. அன்பைக்கூட சந்தேகக் கண்ணோடு பார்க்க வைக்காதீர்கள். ஒரு முறை முடியாது என்றால் விட்டுவிடுங்கள்.