"முருகா, எனக்கு வேலை கிடைச்சிருச்சுடா" மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் ரவி. இந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என் முகம் மாறியதை அவன் கவனித்திருந்தான். "அப்போ இனிமே நீ வரமாட்டியா?" என்றேன். "டேய், வேண்டாம்டா நீயும் ஏதாவது வேலை தேடிக்கோ, அதுவரைக்கும் நான் உனக்கு சோறு போடுறேன். எவ்வளவு நாளானாலும் சரி. நான் பாத்துக்கறேன்" என்றான்.


எனக்கு சமாதானம் ஆகவில்லை. விஸ்கி பாட்டிலை எடுத்து கிளாசில் கவிழ்த்தேன். தண்ணீரை ஊற்றி மடமடவெனக் குடித்தேன். விஸ்கியின் காட்டமும் தண்ணீரின் குளிர்ச்சியும் சேர்ந்து தொண்டை வழியாக குடலுக்குள் இறங்கியது. "இப்ப நாம நல்லாத்தானே சம்பாதிக்கிறோம்? உனக்கு வேலை தேடணும்னு எப்படி மனசு வந்தது?" என்றேன். "முருகா அது தப்பு, பாவம். அப்படி சம்பாதிக்கிற பணம் நமக்கு வேணாம்டா" என்றான். எனக்கு இன்னும் கோபம் வந்தது. இம்முறை வெறும் விஸ்கியை பாட்டிலுடன் கவிழ்த்தேன். நாக்கிலிருந்து தொண்டை வழியாக வயிறு வரை அது பயணித்த பாதையெங்கும் எரிந்தது.

"பாவமா? தப்பா? இத்தனை நாளா இப்படித்தானடா சம்பாதிச்சோம்? அப்ப உனக்கு பாவமா தெரியலையா"

"முருகா உனக்கே தெரியும், நான் எத்தனை நாள் உன்கிட்ட பெண்பாவம் பொல்லாததுன்னு புலம்பியிருப்பேன். எத்தனை பெண்கள் நம்மளை சபிச்சிருப்பாங்க"

"என்னடா பெரிய ஞானி மாதிரி பேசற, உனக்கு இத்தனை நாள் சோறு போட்டதே இந்த பாவப்பட்ட பொழப்புதான். மனசுல வச்சுக்கோ. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துராதே, எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் என்று குழறியபடியே சொல்லிவிட்டுப் படுத்தேன். மின்விசிறி சுழன்றுகொண்டிருந்தது. நான் படுத்திருந்த அறையும். மெல்ல கண்ணயர்ந்தேன்.

ரவியை எனக்கு இரண்டு வருடங்களாகத் தான் தெரியும். திருவல்லிக்கேணி மேன்ஷனில் என் ரூம்மேட். எனக்கு திருநெல்வேலி அவனுக்கு தூத்துக்குடி. இருவருக்குமே வேலையில்லை. அவன் ஒரு பல்சர் பைக் வைத்திருக்கிறான். வேலை தேடி அதில்தான் சுற்றுவோம். ஒரு நாள் மாலை விரக்தியுடன் வண்டியில் திரும்பிக்கொண்டிருந்தோம். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் தனியாக ஒரு பெண். கழுத்திலிருந்த சிறு சங்கிலி சூரிய ஒளி பட்டு மின்னியது. "டேய், மெதுவாப் போடா" என்றேன். "அந்த பிகரு சைட்டடிக்கிற மாதிரியா இருக்கு" என்றான். "கொஞ்சம் கிட்டப் போடா" நான் சொன்னதைத் தட்டாமல் செய்தான்.

அருகே நெருங்கியதும் திடீரென்று அவள் கழுத்தில் என் கைவைத்து இழுத்தேன். சிறிய சங்கிலிதான். பட்டென்று கையேடு வந்துவிட்டது. ரவியும் சரி, அந்தப்பெண்ணும் சரி, கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. "அத்துட்டேன், ஓட்ரா, ஓட்ரா". ரவி பதட்டத்திலும் பட் பட்டென்று கியரை மாற்றி ஓட்ட ஆரம்பித்தான். நான் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் கழுத்தில் கைவைத்தபடி பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருந்தாள். இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை. அடுத்தடுத்து இரண்டு மூன்று திருப்பங்களில் திரும்பி பிரதான சாலையை அடைந்து மக்களுடன் மக்களாகக் கலந்துவிட்டோம்.

இவ்வளவுதான். இதுதான் எங்கள் முதல் திருட்டு. சிறிய சங்கிலிக்கே பல ஆயிரங்கள் கிடைத்தது. ரவிக்கு இதில் துளியும் விருப்பமில்லை. இருந்தாலும் நான் செய்த மூளைச்சலவையில் கொஞ்சம் மயங்கித்தான் போனான். அடுத்தடுத்து திட்டமிட்டோம். இல்லத்தரசிகளாகக் குறிவைத்தோம். தாலிச்செயின் மட்டுமே எங்கள் இலக்கு. மூன்று முதல் ஐந்து சவரன் வரை தேறும். ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்கள் தான் எங்கள் தேர்வு. சாதாரண வேகத்தில்தான் சென்றுகொண்டிருப்போம். தனியாக நடந்துசெல்லும் பெண்கள் அருகே சென்றதும் வேகம் குறையும், "உஷ்ஷ்ஷ்ஷ்" என்று சப்தம் எழுப்புவேன். திரும்பும் பெண்ணிடமிருந்து பட்டென்று நகையைப் பிடுங்குவேன். உடனே ரவி படபடவென வேகமேடுப்பான். செய்வதறியாது திகைத்து நிற்கும் அவர்கள் சுய நினைவுக்கு வருவதற்கே ஒரு நிமிடம் ஆகும். அதற்குள் நாங்கள் வெகுதூரம் கடந்திருப்போம்.

இப்படியாக திரில்லாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென குண்டைத் தூக்கிப்போட்டான். கைகட்டி வேலை செய்தோ கஷ்டப்பட்டு தொழில் செய்தோ சம்பாதிக்கும் பணத்தில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை. அறுத்தோமா, கடையில் கொடுத்தோமா, பணத்தை வாங்கினோமா என்றிருக்கவேண்டாம்? முடிவு செய்துவிட்டேன். இவன் இல்லையென்றால் என்ன? எனக்கு என்மீது நம்பிக்கை இருக்கிறது. என் பிழைப்பை நானே முடிவு செய்துகொள்கிறேன்.

அடுத்த நாள் - ரவி வேலைக்குப் புறப்பட்டான். அவனுக்கு அலுவலகம் தரமணியில். மின்சார ரயில்தான் அவனுக்கு வசதி, எனக்கும். வண்டி இருக்கிறது. இன்றைய களவை நானே தனியாகப் பார்த்துக்கொள்கிறேன். அவன் கிளம்பிய சற்று நேரத்தில் பல்சரைக் கிளப்பினேன். இரண்டு மூன்று தெருக்கள்தான் சுற்றியிருப்பேன். அதோ, தூரத்தில் ஒரு பெண். நாற்பது வயதிருக்கலாம். கொஞ்சம் நெருங்கியதும் தெரிந்தது. நான்கு சவரன் தேறும். வேகத்தைக் குறைத்து அருகில் சென்றேன். சப்தம் எதுவும் எழுப்பவில்லை. கழுத்தில் கைவைத்து பட்டென்று இழுத்தேன். நிலைகுலைந்து விழப்போனாள். செயின் கையேடு வந்துவிட்டது. வேகமெடுத்தேன். அதே சமயம் பின்னல் "திருடன், திருடன்" என்ற சப்தம். கத்தியபடியே ஒருபெண் ஸ்கூட்டியில் என்னைத் துரத்தினாள். எனக்கு உள்ளூர ஓர் உதறல் எடுத்தது. இன்னும் வேகமெடுத்தேன். அந்த ஸ்கூட்டி பெண் என்னை வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தாள். அவள் கத்துவதைப் பார்த்து யாராவது என்னைப் பிடித்தால் நான் காலி. ஆனால் என் பல்சரின் வேகத்துக்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆங்காங்கே பல திருப்பங்களில் திரும்பி அவள் கண்களிலிருந்து மறைந்தேன். தனியாக செயின் அறுப்பது இயலாத காரியம் என்று முடிவெடுத்தேன்.

ஒரு வாரம் கழிந்தது. என்னால் சும்மா இருக்கமுடியவில்லை. ரவியுடன் ரயில் நிலையம் சென்றேன். அவன் போனதும் பிளாட்பாரத்திலிருந்த பெஞ்சில் அமர்ந்து யோசித்தேன். பத்து நிமிடத்துக்கு ஒருமுறை ரயில் அங்குமிங்கும் கடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அந்த ஐடியா உதித்தது. மகளிர் பெட்டி அருகே போய் போன் பேசுவதுபோல் நின்றுகொள்ளவேண்டும், ரயில் கிளம்பியதும் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் பெண்ணிடமிருந்து செயினைப் பறிக்கவேண்டும். அவர்கள் சுதாரித்து ரயிலை நிறுத்துவதற்குள் ஓடிவிடவேண்டும். வெரி சிம்பிள். அதோ, ரயில் வந்துகொண்டிருக்கிறது. நான் இப்போது மகளிர் பெட்டி நிற்கும் இடத்தில்தான் நின்றுகொண்டிருக்கிறேன். நான் அதிர்ஷ்டக்காரன். என் கைக்கெட்டும் தூரத்தில் ஒரு பெண் கனத்த சங்கிலியைப் பறிகொடுக்கப் போவதை அறியாமல் அமர்ந்திருந்தாள். மதிய வேளையாதலால் கூட்டமுமில்லை. முன்னும் பின்னும் சைரன் ஒலிக்க ரயில் கிளம்பியது.

ஜன்னலினூடே கையை நுழைத்தேன் - செயினைப் பிடித்தேன். அதற்குள் என் கையை இரண்டு கைகள் இறுகப் பற்றிக்கொண்டன. அவளே தான். "டேய், திருடவா பாக்கிறே" என்றாள். என் கையை அவளிடமிருந்து விடுவிக்க முயன்றேன். அதற்குள் ரயில் வேகமெடுத்துவிட, மற்றொரு கையால் ஜன்னலைப் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன். "எக்கா, எக்கா, என்னை விட்ருங்க" என்று பிதற்றினேன். அதற்குள் உள்ளிருந்த மற்ற பெண்கள் கூடிவிட யாரோ செயினைப் பிடிச்சு இழுங்க, இவனைப் போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கலாம் என்றார். "ஐயோ, வேண்டாம்கா, போலீசெல்லாம் வேண்டாம், விட்ருங்க" என்று கதறினேன். அதற்குள் ரயில் பிலாட்பாரத்தைக் கடந்துவிட்டிருந்தது. "விட்டுரவா, விட்டுரவா" என்றாள். "வேண்டாம்கா, விட்ராதீங்க, நான் செத்துருவேன், நல்லாப் பிடிச்சுக்கோங்க, என் உயிரே உங்க கைலதான் இருக்கு" என்று அழ ஆரம்பித்தேன். முழுதாய் இரண்டு நிமிடங்கள் ஏதேதோ உளறினேன். அடுத்த ரயில் நிலையம் வந்தது. "உனக்கு உயிர்ப்பிச்சை தரேன், இப்படி ஓடிப்போயிரு" என்று என் கையை அவள் கைகளிலிருந்து விடுவித்தாள்.

மறுநாள் காலை. தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ரவி அப்போதுதான் எழுந்தான். "அடடே, ஆச்சரியமா இருக்கே, என்ன பாக்கறே?" என்றான். "Opportunities பாக்கறேன்டா, நானும் வேலை தேடிக்கலாம்னு இருக்கேன்" என்றேன். "என்னடா ஆச்சு", "அது ஒண்ணுமில்லடா, நீ வேலைக்குப் போனதிலேருந்து உன் கண்ணுல ஒரு நிம்மதி தெரியுது. அதான் நானும் உன்னை மாதிரி நிம்மதியான வாழ்க்கை வாழலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்றேன்.

---------------------

அடுத்து வருவது: மனம் மயக்கும் மூணாறு