என் தாத்தாவை எனக்கு எப்போதிலிருந்து பரிச்சயம் என்று தெரியாது. ஆனால் அம்மா சொல்லுவார், நான் பிறந்ததும் முதல்முறையாக என் தாத்தாவின் கையில் தான் கொடுக்கப்பட்டேன் என்று. என்னைக் கையில் வாங்கியதும், "பேரப்புள்ள" என்று மகிழ்ந்து கொஞ்சியவர். அவருடைய மகிழ்ச்சிக்கு நான் தான் முதல் பேரக்குழந்தை என்பது கூட காரணமாக இருக்கலாம்.


தாத்தாவின் பெயர் ரெங்கநாதன். ஊரில் எல்லோரும் அவரை ரெங்கநாத xxxxxx என்று சாதியையும் சேர்த்து அழைப்பார்கள். சிறு வயதில் என்னை எங்காவது கூட்டிச்சென்றால் இது என் மகபுள்ள பேரன் என்று பெருமை பொங்கச் சொல்லுவார். என் அம்மா மட்டும்தான் அவருக்கு ஒரே பெண், மற்றும் மூன்று ஆண்கள் (எனது தாய்மாமன்கள்). என் அம்மாவை அவருக்கு மிகவும் பிடிக்கும் - ஒரே பெண் என்பதால் மட்டுமல்ல, அதிர்ஷ்டம் நிறைந்த பெண்ணாக அவர் கருதியதால். காரணம் என் அம்மா பிறந்த அன்று தான் அவருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டது. அவரே சொல்லுவார், "வேலை முடிஞ்சு கிளம்பிக்கிட்டிருந்தேன், மேஸ்திரி வந்து மேனேஜர் உன்னைக் கூப்பிட்டார்னு சொன்னாரு, போய்ப் பாத்தா இன்னிலேருந்து உனக்கு வேலை பெர்மன்டு-னு சொன்னாரு. வீட்டுக்கு வந்தா ஆச்சிக்கு இடுப்பு வலின்னு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய்ட்டாங்க. ஆஸ்பத்திரிக்குப் போனா, உங்கம்மா அழுதுக்கிட்டிருக்கா" என்பார்.

தாத்தா மிகவும் தைரியசாலி. பிரச்சனை என்றால் அடிதடிக்கு பயப்படமாட்டார். அதேபோல் அவருடைய வாதமும் சரியாக இருக்கும், யாராலும் மறுத்துக் கூறமுடியாது. ஒருமுறை ஸ்கூலில் வாத்தியார் ஒருவர் என் அம்மாவை அடித்துவிட வெகுண்டு எழுந்த என் தாத்தா அவரை ஓட ஓட விரட்டி அடித்தார். அவர் பெயர் குற்றாலம். பயந்து ஓடிய அவர் வகுப்பறையின் உள்ளே சென்று தாளிட்டுக்கொண்டார். பின் என் தாத்தாவை தலைமை ஆசிரியரும் சக ஆசிரியர்களும் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.


வீட்டின் முற்றத்தில் கயிற்றுக்கட்டில் ஒன்றும் நீளமான பெஞ்ச் ஒன்றும் எப்போதும் இருக்கும். மாலை நேரங்களில் தாத்தா அவருடைய நண்பர்களுடன் அங்கு அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருப்பார். சில நேரங்களில் அரட்டை புதிய தொழில் தொடங்குவது, நிலம் வாங்குவது போன்ற முக்கிய முடிவு எடுக்கக்கூடிய அளவுக்குப் போய்விடும். அப்போது அவர், "ஏல, சம்முவலெச்சிமி" என்று என் அம்மாவை அழைத்து, "நான் கேக்கிறதுக்கு சரி வேண்டாம்னு மட்டும் பதில் சொன்னா போதும்" என்று சொல்லி அவர்கள் செய்த முக்கிய விவாதங்களையும் எடுத்திருக்கும் முடிவுகளையும் சொல்லி, "தாயீ என்ன சொல்லுத?" என்று குறி கேட்பார். என் அம்மாவோ விபரம் புரியாத வயதில் சரி என்றோ வேண்டாம் என்றோ மாற்றி மாற்றி சொல்லிவிடுவார். என் தாத்தா எடுக்கும் முடிவுகளும் அவ்வாறே இருக்கும்.


நான் இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படித்துக் கொண்டிருக்கும்போது தான் தாத்தா வீடு கட்டினார். அவர் நிலம் வாங்கியபோதே அந்த நிலத்துக்கு நேர் எதிரில் இருந்த நிறைய இடங்களில் கொஞ்சம் வாங்கச் சொன்னார். வாங்குவது என்று தீர்மானித்த பின்னர் ஒவ்வொரு இடத்தையும் பார்வையிட்டு, "இது அவன் இடம், நொரநாட்டியம் புடிச்சவன், இதுக்குப் பக்கத்து இடம் வேண்டாம், நாளைக்கு வீடு கட்டும்போது பிரச்சனை பண்ணுவான்" என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அவருடைய வீட்டுக்கு நேர் எதிரில் மூன்று நிலங்கள் தள்ளி வாத்தியார் பாலகிருஷ்ணனுடைய நிலத்தை ஒட்டிய நிலத்தை வாங்கித் தந்தார். ஸ்கூல் வாத்தியார் என்றால் படித்தவர் என்பதாலும் ஒருவகையில் அவர் எங்களுக்கு தூரத்து சொந்தம் என்பதாலும் அந்த இடமே வாங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.


தாத்தா அடிக்கடி பயன்படுத்தும் கெட்ட வார்த்தை - கண்டார XXX - என்பதுதான். நண்பர்களுடனான சம்பாஷணைகளினூடே நான் அடிக்கடி அந்த வார்த்தையைக் கேட்டதுண்டு. ஒருமுறை நான் அவரிடம் அதற்கான அர்த்தத்தைக் கேட்க, அன்று முதல் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையே விட்டுவிட்டார். அவருக்கு இருக்கும் இன்னொரு கெட்ட பழக்கம் பீடி வலிப்பது. நாளொன்றுக்கு இரண்டு சிகரெட்டுகளும் இரண்டு பாக்கெட் பீடியும் வாங்கிவிடுவார். இரவு நேரத்தில் மட்டுமே வீட்டிலிருந்து பீடி வலிப்பார். மற்ற நேரங்களில் வெளியே தான்.


ஒருமுறை பள்ளியில் விடுகதைகள் சொல்லித் தந்தார்கள். வீட்டுக்கு வந்ததும் தாத்தாவிடம், "தாத்தா, நான் அஞ்சு விடுகதை கேப்பேன், சரியா பதில் சொல்லணும்" என்று கூறி அனைத்து விடுகதைகளையும் கேட்டேன். சரியாக பதில் சொன்னார். "பதிலுக்கு நான் ஒரே ஒரு விடுகதை கேப்பேன் சொல்லுதியா?" என்று என்னிடம் கேட்டார். "என்ன?" என்றேன். "கந்தன் கிணத்துல கயறு அந்து அந்து விழுகுது, அது என்ன?" என்றார். நான் பேந்தப் பேந்த விழிக்க, அம்மாவும் ஆச்சியும் ஒருபுறம் சிரிக்க, பதிலே சொல்லாமல் வெளியே கிளம்பிவிட்டார் தாத்தா.


நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தாத்தாவுக்கு பணிநிறைவு வந்தது. அதன்பின் சும்மா இருக்கப் பிடிக்காமல் அடுத்த தெருவில் இருக்கும் பெரிய வீட்டில் வாச்மேன் வேலைக்குச் சென்றார். வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் கூட ஆகியிருக்காத நிலையில் திடீரென்று ஒருநாள் ரோட்டில் மயங்கி விழுந்தார். மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பது தெரியவந்தது. அதன்பின்னர் சில நாட்கள் பீடி வலிப்பதை நிறுத்திவிட்டு ஒழுங்காக மாத்திரைகளை உட்கொண்டு நடை பயிற்சி மேற்கொண்டார். அப்படி ஒருநாள் நடைபயிற்சியின்போது காலில் கல் ஒன்று தடுக்க, பெருவிரலில் சிறு புண் ஏற்பட்டது. அந்த சிறு புண்ணானது சர்க்கரை வியாதியின் உதவியோடு ஆற மறுத்து பெரிதாகத் தொடங்கியது. விளைவு - ஒருநாள் அறுவை சிகிச்சை செய்து அந்த விரலையே எடுக்கவேண்டியதாயிற்று.


நாளாக நாளாக அவருக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகமானது. அவர் படுத்திருக்கும் கயிற்றுக் கட்டிலருகே மண் நிரப்பிய தகர டப்பா ஒன்று  குடிவந்தது. இரவு நேரங்களில் அவரது இருமல் சத்தம் அதிகமாக ஆரம்பித்தது. அறுவை சிகிச்சை செய்த புண்ணும் ஆற மறுத்தது. தன்னிச்சையாக அவர் தன் இயற்கை உபாதைகளைக் கழிக்கும் நிலையையும் மறந்திருந்தார். இது ரொம்ப நாளைக்குத் தாங்காது என்று உறவினர்களே பேசும் அளவுக்கு அவரது நிலைமை மோசமடைந்தது. ஒரு கட்டத்தில் அவர் தன் சுய நினைவை இழந்திருந்தார். அன்றொரு நாள் அவருக்கு ஆச்சியைத் தவிர யாரையும் நினைவிலில்லை. நான் பள்ளியிலிருந்து வந்தது என் தாய்மாமன்களில் ஒருவர் என்னை அழைத்து தாத்தாவிடம் பேசச்சொன்னார். நானும் தாத்தாவின் அருகே சென்று ஸ்டூலை இழுத்துப்போட்டு அமர்ந்தேன். உறங்கிக்கொண்டிருந்த அவரது தலையைக் கோதி கன்னத்தில் தட்டி, "தாத்தா, தாத்தா" என்று அழைத்தேன். விழித்துப்பார்த்த அவர் "யாரு?" என்றார். "நான் தான் தாத்தா, உங்க பேரன், சரவணன்" என்றேன். "பேரனா? தெரியலையே" என்று கூறி மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். பட்டென்று என் கண்களில் பொங்கிய கண்ணீர் பொலபொலவென கன்னங்களில் உருண்டோடியது.


திடீரென்று ஒரு நாள் அவருக்கு உடல்நிலை தேறியது. தானாக எழுந்து அமர்ந்து ஒவ்வொருவருவரிடமும் பேசத்தொடங்கினார். அனைவருக்கும் மகிழ்ச்சி. என்னைக் கேட்டிருப்பார் போலும், என் தாய்மாமன் ஓடிவந்து, "சரவணா, உன்னை தாத்தா தேடுதாங்கடா" என்று அழைக்க ஓடினேன். என்னைக் கண்டதும் தாத்தா "சரவணே, வா வா" என்றார். நான் அருகில் அமர்ந்து "எப்படி இருக்கீங்க தாத்தா?" என்றேன். "நல்லருக்கேண்டா, தாத்தா உன் மடியில படுத்துக்கவா?" என்று கூறி என் பதிலுக்குக்கூட காத்திராமல் படுத்துக்கொண்டார். திடீரென்று அவருக்கு ஒரு இருமல் வர, அவரது தலையைப் பிடித்துக்கொண்டு நெஞ்சில் தடவிக்கொடுத்தேன். இரண்டுமுறை இருமிய அவர் மொத்தமாக தன் இருமலை நிறுத்திக்கொண்டார். கண்கள் ஒரே இடத்தை வெறிக்க அசைவற்றுப் படுத்துக்கிடந்தார். நான் "தாத்தா, தாத்தா" என்றழைக்க என் தாய்மாமா வெளியே ஓடினார். ஓடியவர் இரண்டு நிமிடத்தில் நான்கு வீடுகள் தள்ளியிருக்கும் நர்ஸ் ஒருவரைக் அழைத்துவந்தார். அந்த நர்ஸ் ஸ்டெத்தஸ்கோப்பினால் சோதனை செய்துவிட்டு "போய்ட்டாரு" என்றார். என் அம்மாவும் ஆச்சியும் ஓவென்று அழத்தொடங்க தாத்தா இறந்துவிட்டார் என்று என் மனம் நம்பத் தொடங்கியது.


தாத்தா, என் தாத்தா நான் பிறந்த அன்று என்னை தன் கைகளால் வாங்கி என்னைக் கொஞ்சிய என் தாத்தா, என்னைத் தன் மடியில் படுக்கவைத்துப் பேசிக்கொண்டிருக்கும் என் தாத்தா, இப்போது என் மடியில் படுத்து உயிரை விட்டிருந்தார். "தாத்தா" என்று அவரது கன்னங்களைத் தட்டி அழைத்தேன். அவரது கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் உதிர, எனக்கு அழுகை பீறிட்டு வெடித்தது.


என் தாத்தாவின் பதினெட்டாவது நினைவு தினம் இன்று.