பயணக்கட்டுரை - ஆலப்புழை படகு சவாரி - 2










நண்பகல் 12 மணிக்கு ஓடத்துவங்கிய படகு இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தது.   இடையே சிக்கன் கடையில் மட்டுமே கொஞ்ச நேரம் நிறுத்தினார்கள்.  படகை நிறுத்துவது நம்முடைய விருப்பம் என்றாலும் நாங்கள் அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை.  மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அவர்களுக்கு உணவு இடைவேளை என்பதால் அந்த நேரம் மட்டும் ஓரம் கட்டிவிட்டார்கள்.  அந்த நேரத்தில் நாங்கள் அருகில் உள்ள வயல்வெளிகளை ஒரு ரவுண்ட் அடித்தோம்.  ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் ஆடு மாடு கோழிகள் எல்லாம் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தன.  இதே சென்னை என்றால் அங்கேயே காலி செய்து விடுவார்கள்.








பின்னர் மீண்டும் ஓடத்துவங்கிய படகு ஓடிக்கொண்டே இருந்தது.  எங்கெங்கு காணினும் தண்ணீர், பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள் என அருமையாக இருந்தது.  வாகனங்கள் இல்லை, புகை இல்லை, இரைச்சல் இல்லை, அவ்வளவு அமைதி.  எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் மிக மிக உற்சாகமாக உணர்ந்தோம்.








மாலை ஆறு மணி வரை மட்டுமே படகுகள் ஓடுவதற்கு அனுமதி உண்டு என்பதால் ஆறு மணிக்கு ஏதோ ஒரு ஊரில் படகை நிறுத்திவிட்டார்கள்.  இஞ்சின் அணைக்கப்பட்டது.  படகுக்கு வேண்டிய கரண்ட் அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது.  விசாரித்ததில் அது படகு ஓனரில் வீடாம்.  இருட்டுவதற்குள் அந்த கிராமத்தை சுற்றிப்பார்த்து விடலாம் என்று கிளம்பினோம்.








அழகான கிராமம். குறைந்த அளவிலே வீடுகள்.  அமைதியான சூழ்நிலை. வாகனங்கள் இல்லை.  நீரப்பரப்பை கடக்க ஒரு பெரிய பாலம்.  அனைவரும் நடந்தே செல்கிறார்கள்.  மறு கரையில் ஒரு பெரிய சர்ச்.  மாலை வேளை என்பதால் அந்த இடமே ரம்மியமாக காட்சியளித்தது.  நான் எடுத்த புகைப்படங்கள் கீழே...




சர்ச்.. பின்னணியில் நிலா




பாலத்திலிருந்து



நெடுஞ்சாலை போலச் செல்லும் நீர்ப்பாதை




படகு, தென்னைமரங்கள், பின்னணியில் நிலா




கொஞ்சம் இருட்டியதும்




சந்திரன்



அந்த ஊரிலேயே உள்ளூர் படகு சேவையும் இருக்கிறது.  ஒரு கிராமத்திலிருந்து வேறு ஊருக்குச் செல்பவர்களுக்கென்றே இந்தப் படகு போக்குவரது.  இதற்கென தனியா பஸ் ஸ்டாப் போல ஒரு ஷெட் போட்டு வைத்திருக்கிறார்கள்.  உள்ளூர் படகுகள் அங்கு வந்து மக்களை இறக்கி ஏற்றிச் செல்கின்றன.




உள்ளூர் பஸ் ஸ்டாப்



இரவு 9 மணிக்கு சுடச்சுட சப்பாத்தி, சாதம், சிக்கன் குழம்பு, சிக்கன் 65 என அருமையாக சமைத்திருந்தனர். என்ன கொஞ்சம் காரம் தான் தூக்கலாக இருந்தது.  ஆனாலும் அருமை. ஒரு கட்டு கட்டினோம்.  (போட்டோ எடுக்கலையே!)



கொசுக்கடி அதிகம் இருந்தது.  அதனால் நாங்கள் படுக்கை அறையிலேயே அடைந்து விட்டோம்.  ஏசி இருந்ததால் மிகவும் வசதியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கிவிட்டோம்.  மீண்டும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டோம்.  படகு 9 மணிக்குத்தான் புறப்படும் என்பதால் நாங்கள் அங்கேயே குளித்துவிட்டோம்.








காலை சிற்றுண்டியாக பிரெட், ஆம்லெட், இட்லி, சட்னி சாம்பார் கொடுத்தார்கள்.  அருமை.  கேரளாவில் பொதுவாக யாருக்கும் இட்லி சமைக்கவே தெரியாது.  ஆனால் இவர்கள் அருமையாக சமைத்திருந்தார்கள்.  இட்லி மிகவும் மிருதுவாக இருந்தது.  பிரெட், ஆம்லெட் என அனைத்தும் உள்ளே போனதும் பசி அடங்கியது.  பின்னர் சூடான காபி.  நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே படகு கிளம்பியது.  காலை வேளையின் இயற்கையை ரசித்துக்கொண்டே சாப்பிட்டது அருமையான உணர்வு.








நாங்கள் படகுத்துறையை நெருங்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.  அடடா இந்த மாதிரியான வாய்ப்பு மீண்டும் எப்போது கிடைக்கும் என்ற உள்ளுணர்வு.















படகை விட்டு இறங்க மனமே இல்லை என்றாலும் எங்களது அடுத்த பயணத்து நேரமாகி விட்டிருந்ததால் படகுக்கு பிரியா விடை கொடுத்தோம்.







கட்டுரை பிடித்திருந்தால் பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள்.  என்னைப்போன்ற புதியவர்களை நீங்கள் கொடுக்கும் ஊக்கம் உற்சாகப்படுத்தும்.

நன்றி

ஸ்கூல் பையன்...