படக்கதை படிக்கும் காலம்
பழக்கமாயிருந்தது!
நாவல்களின்போது
நட்பாய் மலர்ந்தது!
கவிதை வாசிப்பின்போது
காதலாய்க் கனிந்தது!
ஆம்! காதலாய்க் கனிந்தது!



காமம் கலவா நட்பும்
காதல் தான்!

இதயத்துக்கு நான்கு அறைகளாம்!
ஒன்றில் எனக்கே எனக்கான நான்!
அடுத்ததில் சிந்துபாத் தோளேறிய
குள்ளக்கிழவனாய் குடும்பம்!
மூன்றாவதில்
முடியரசனும் முட்டாளாகும் காதல் - என் காதலி
நாலாவதில் நீ!

நாலாவதா நான்? பொருமாதே!
முதல் படியை விட மூன்றாம் படி உயரம்!
மூன்றாவதை விட நான்காம்படி உயரம்!
என்னுள் உயர்ந்தவன் நீ!

படிகள் பலவாயினும்
பாதை ஒன்றே!
என் எல்லாப் பாதையும் நீ!
எங்கு நின்றாலும் நீ நிற்கிறாய்!
எங்கு நடந்தாலும் நீ நடக்கிறாய்!
இதில் நீ எது நான் எது?

உலகில் உறவுகளுக்கெல்லாம்
எல்லை உண்டு!
உண்மையான நட்பு சுகம்
உறவுகளிடமில்லை!

வெற்றி பாராட்டும் தாய்!
தோல்விக்கு தோள் கொடுக்கும் மனைவி!
நல்வழி காட்டும் ஆசான்! நண்பா
எனக்கான உன் அவதாரங்கள்
இன்னும் எத்தனை எத்தனை!

விதி உரைக்கும் முன்னுரை
கொடி அறுத்த தாய்!
அது முடிந்த முடிவுரை
கொள்ளி வைக்கும் மகன்!
பொருள்? அது என் பொறுப்பு!
என் எழுத்து என்றும்
உன்னைச் சுற்றும்

ஊடல் கொள்ளும் காதலெல்லாம்
கூடலுக்காகத் தான் என்றால்
பிரிவு கொள்ளும் உயிர்களெல்லாம்
உறவு கொள்ளத்தான் என்றால்
ஊடலுக்கும் பிரிவுக்கும் வந்தனம்!