காதலனைப் பறிகொடுத்த காதலியும் காதலியைப் பறிகொடுத்த காதலனும் விருப்பமின்றி திருமணம் செய்துகொள்கிறார்கள்.  இவர்களுக்குள் என்ன நடக்கிறது, இருவரின் கடந்தகால காதல்கள் என்னென்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம்தான் ராஜா ராணி.  ப வடிவ காதல் கதையாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.  வாழ்த்துக்கள் அட்லி.




ஒரு சர்ச்சில் ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் நடக்கும் திருமணத்தில் படம் தொடங்குகிறது.  இருவருக்குமே விருப்பமில்லை என்பதை அதிகமாக விளக்காமல் பட்டென்று மனதில் நிற்கிற மாதிரி சொல்லிவிடுகிறார்கள்.  இருந்தாலும் நயன்தாராவின் அப்பாவான சத்யராஜ் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்து இது நடக்காமல் போனால் தான் இறக்க நேரிடும் என்று சொல்லாமல் சொல்கிறார், விளைவு - திருமணம் இனிதே நடந்து முடிகிறது.

திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணையாமலே ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.  ஒரே கட்டிலில் படுக்கிறார்கள்.  ஆர்யா டிவி சத்தத்தை அதிகமாக வைத்தும், தினமும் குடித்துவிட்டு வந்தும் நயன்தாராவை கடுப்பேற்றுகிறார்.  ஒரு கட்டத்தில் நயன்தாராவின் பழைய காதலை அறிகிறார் ஆர்யா. அன்றிலிருந்து அவருக்கு நயன் மீது காதல் தொடங்குகிறது.

ஒரு தொலைபேசி நிறுவனத்தின் கஸ்டமர் கேர் சென்டரில் வேலை செய்யும் ஜெய்க்கும் நயன்தாராவுக்கும் கலாய்த்தலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது.  கல்யாணம் என்று வரும்போது அப்பாவின் பேச்சைத் தட்டமுடியாமல் அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்லும் ஜெய் அங்கேயே தற்கொலை செய்துகொள்கிறார்.  இது நயன்தாராவின் காதல் தோல்வி.

ஒரு செக்கை வாங்குவதற்காக சந்தானத்துடன் செல்லும் ஆர்யா ஒரு வீட்டில் நஸ்ரியாவைக் கண்டதும்  காதல் கொள்கிறார்.  ஆரம்பத்தில் நஸ்ரியா விரும்பவில்லை என்றாலும் பின்வரும் ஆர்யாவின் செய்கைகளில் ஈர்க்கப்பட்டு காதலுக்கு சம்மதிக்கிறார்.  தமிழ் சினிமா வழக்கப்படி ஆர்யாவின் கண் முன்னே விபத்தில் இறந்துபோகிறார்.



படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் நான்கு பேர் என்றாலும் நடிப்பில் ஸ்கோர் செய்வது முதலில் நயன்தாரா பின் ஜெய் பின் நஸ்ரியா.  சாரி ஆர்யா.  நல்ல உடற்கட்டு இருக்கிறதே தவிர்த்து முகத்தில் பாவனைகள் கதைக்குத் தேவையான அளவுக்கு இல்லை.  இதுவரை எந்த இயக்குனரும் நயன்தாராவை ஒரு காட்சிப் பொருளாகவே பாவித்திருப்பதாலோ படமெங்கும் நடிக்கும் வாய்ப்பு இருப்பதாலோ நயன்தாரா மிளிர்கிறார்.  ஜெய்யுடனான கலாட்டா காட்சிகளிலும் வலிப்பு வரும் காட்சிகளிலும் தந்தை சத்யராஜுடன் காரில் அழும் காட்சியிலும் தனக்கும் நடிக்கத் தெரியும் என்று நிரூபிக்கிறார்.  கஸ்டமர் கேரில் கலாய்க்கப்படும் ஜெய் சில காட்சிகளே வந்தாலும் மனதில் நின்றுவிடுகிறார்.  அவரது குரல்தான் கொஞ்சம் அல்ல ரொம்பவே கரகரவென்று இருக்கிறது.  ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க தம்பி.  ஜெய்யை விட குறைந்த காட்சிகளே வந்தாலும் நஸ்ரியா தன் துறுதுறு நடிப்பால் நம் மனம் கவர்கிறார்.  விபத்தில் இறக்கும்போது எனக்கு கோவை ஆவியின் நினைவு வந்தது.



சந்தானம் படம் நெடுக வந்தாலும் அடக்கி வாசித்திருக்கிறார்.  சமீபத்திய சில படங்களில் ஹீரோ ரேஞ்சுக்கு வந்திருந்த இவர் இதில் தான் ஒரு காமெடியன் மட்டுமே என்று காட்டியிருக்கிறார்.  படம் முழுவதும் இவரது காமெடிக்கு பஞ்சமில்லை.  சத்யராஜ் வித்தியாசமான கெட்டப்பில் வந்துசெல்கிறார், தன் நடிப்பின் அக்மார்க் முத்திரையை பதித்துச் செல்கிறார்.


பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.  இசை GV.பிரகாஷ்.  பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார்.  இயக்குனரிடம் ஒரே ஒரு கேள்வி, அவ்வளவு பெரிய வீட்டில் ஒரே ஒரு படுக்கையறை மட்டும்தான் இருக்கிறதா?  தனக்கு தொந்தரவாக இருந்தால் நயன்தாரா வேறு ஒரு அறையில் படுத்துக்கொள்ளலாமே! இஷ்டமே இல்லாமல் இருவரும் ஒரே கட்டிலில்தான் படுக்கவேண்டுமா?


ஒரு பாடல் காட்சியில் பின்னி மில் முழுவதும் சினிமா போஸ்டர்களை ஒட்டி தான் ஷங்கரின் அசிஸ்டன்ட் என்பதை நிரூபிக்கிறார் இயக்குனர். எங்கேயும் எப்போதும், மௌன ராகம், அலைபாயுதே போன்ற படங்களின் நினைவு வந்தாலும் ஓரிரு லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் குடும்பத்துடன் காணக்கூடிய ஒரு ஹிட் படத்தைக் கொடுத்ததற்கு இயக்குனர் அட்லிக்குப் பாராட்டுக்கள்.