வணக்கம் நண்பர்களே,

பதிவர் சந்திப்பில் பாடல் பாடப்போவதாக பதிவு ஒன்று எழுதியதும் அன்றிலிருந்து "பாட்டு பாடலையா, பாட்டு பாடலையா" என்றும் பதிவர் சந்திப்பு முடிந்ததிலிருந்து இன்றுவரை "ஏன் பாடலை" என்றும் பலரும் அன்போடு (!) விசாரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.  அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  தொண்டை சரியில்லாத காரணத்தாலும் பயிற்சி எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதாலும் பாடுவது ரத்து செய்யப்பட்டது.  இருந்தும் கோவை ஆவியின் பாடலுக்கு கோரஸ் பாடியது மனதுக்கு திருப்தியாக இருந்தது.  இந்த நிகழ்வு கடந்த வருடம் நடந்த முக்கிய சம்பவத்தை நினைவுகூர்ந்தது.


ஜீ தொலைக்காட்சியில் சரிகமப சேலஞ்ச் என்ற நிகழ்ச்சி இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் விதமாக (விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் போட்டியாக) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திறமையான பாடகர்கள் ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச்சுற்று நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடத்தப்பட்டது.  முக்கிய ஸ்பான்சர் உதவியால் மூன்று வி.வி.ஐ.பி. டிக்கட்கள் கிடைத்தன.  சரி, குடும்பத்துடன் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பிவிட்டோம். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பார்வையாளனாகப் போய் மேடையில் பாடிய அனுபவமே இந்தப் பதிவு.


நிகழ்ச்சிக்கு மறைந்த பின்னணிப் பாடகர் திரு.P.B. ஸ்ரீநிவாஸ் முக்கிய விருந்தாளியாகக் கலந்துகொண்டார், மேலும் பாடகர்கள் மனோ, ஸ்ரீநிவாஸ், உன்னிமேனன், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், ஜி.வி.பிரகாஷ், ரெஹானா பாடகிகள் சித்ரா, பிரஷாந்தினி, மேலும் நிறைய பேர் கலந்துகொண்டனர்.  இந்த நிகழ்ச்சி நடந்து பல நாட்கள் ஆனதால் பலரின் பெயர் மறந்துவிட்டது. தொகுப்பாளர்கள் சமீனாவும் பாலாஜியும் தொகுத்துத் தந்தனர். விழாவில் பாடியவர்கள் பற்றியும் பாடல்கள் பற்றியும் நிறைய சொல்ல முடியும், இருந்தாலும் இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்ல என்பதால் தொடர்கிறேன்.

முதல் சுற்றில் பாடகர்கள் பாடி முடித்ததும் மேடைக்கு வந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அறிவித்தது, "First Round-ல நம்ம Contestant எல்லாரும் நல்லா பாடி அசத்தியிருக்காங்க, இப்போ இங்க மேடையில வந்து பாடப்போறது யார் தெரியுமா?" பலரும் தெரியாது என்று சத்தமாகச் சொன்னார்கள்.

"இங்க வந்து பாடப்போறது உங்கள்ல ஒருத்தர். யார் வர்றீங்க?" என்று அழைக்க ஆர்வக்கோளாரில் நான் கையைத் தூக்கிவிட்டேன்.  அந்த நேரத்தில் பலரும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் முன் வரிசையில் (F-Row) அமர்ந்திருந்ததால் பட்டென்று அடையாளம் காணப்பட்டேன். "மேல வாங்க" என்று அழைத்தனர்.  மனதில் ஒரு பயம் தொற்றிக்கொள்ள, மேடையேறினேன்.

"உங்க பேரு?"

"சரவணன்"

"OK, சும்மா ஒரு நாலு லைன் பாடுங்க, என்ன பாட்டு படப்போறீங்க?"

ஐந்து வினாடிகள் யோசித்தேன், "ஆடுகளம் படத்துல - அய்யய்யோ நெஞ்சு அலையுதடி" (அது நான் அடிக்கடி வீட்டில் கேட்கும் / பாடும் பாடல்)

"அது டூயட் சாங்காச்சே, கூட யார் பாடுவாங்க?"

"அதான் பிரஷாந்தினி மேடம் இருக்காங்களே? அவங்களையே பாடக் கூப்பிடுங்க"

இப்படிச் சொல்வேனென்று நானே எதிர்பார்க்கவில்லை, அவர்களும் தான்.  ஆனால் பாடகி பிரஷாந்தினி உடனே தன் இருக்கையை விட்டு எழுந்து மேடை நோக்கி வரத் தொடங்கியிருந்தார்.  அவரைக் கண்டவுடன், அதிர்ந்திருந்த  நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆசுவாசமானார்கள்.

"தப்பா நினைச்சிக்காதீங்க, ஒரு ஆர்வக்கோளாறு, அதான்..." என்று இழுத்தேன்.

"பரவாயில்லை, Start பண்ணலாமா?" என்று அவர் இசை அமைப்பாளரை பார்க்க அவரும் ரெடி என்பதுபோல் சைகை காண்பித்தார்.  இனி வருவது பாடல், பொறுமையாகப் படிக்கவும். சிவப்பு வண்ணத்தில் வரிகள் பிரஷாந்தினி பாடியவை, கருப்பு வண்ண வரிகள் நான் பாடியவை.

தனனன நானே நனனானா....
தன் நனனா தனனா தனனா....
தனனன நானே நனனானா....
தன் நனனா தனனா தனனா நானா நானானா தன நானானா
தன நானானா தானா...னா...

ராராரா ராரா ராரா தாராரா ராரா ரா
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
கொழம்புரேன் நானே
உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே
ஏன் சேவ கூவுற சத்தம் உன் பேர கேக்கிறதே

ஓ... அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி...

மேலுள்ள வரிகளைப் பாடும்போதே நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஏதேதோ பேசிக்கொள்வதும் இசை அமைப்பாளரிடம் அப்படியே முழுப்பாடலையையும் தொடர்வது பற்றியும் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.  பாடி முடிக்கவும் அவர்கள் அப்படியே தொடருங்கள் என்று எனக்கு சைகை காட்டினார்கள், ஆச்சரியம்.  நல்லவேளையாக எனக்கு முழுப்பாடலும் தெரியும் என்பதால் வார்த்தைகளை மறக்காமல் பாடினேன்.

உன்னை தொடும் அனல் காத்து
கடக்கையில பூங்காத்து
கொழம்பித் தவிக்குதடி ஏன் மனசு

ஓ.... திருவிழா கடைகளைப் போல
திணறுறேன் நான்தானே
எதிரில் நீ வரும் போது
மெரளுறேன் ஏன்தானோ
கண் சிமிட்டும் தீயே - என்ன
எரிச்சிப்புட்ட நீயே

தாராரா ராரா ராரா தாராரா தாராரா
ஓ அய்யய்யோ நெஞ்சு
அலையுதடி
ஆகாயம் இப்போ
வளையுதடி
என் வீட்டில் மின்னல்
ஒளியுதடி
ஓ... என் மேல நிலா
பொழியுதடி

ராரராரரே ரா... தாரராரரே ராரா..
ராரராரரே தாரா ராரா தாரா ராரே ரா...
ராரராரரே ரா... தாரராரரே ராரா..
தாரராரரே தாரா ராரா தாரா ராரே தரரர ரா...

தனனன நானே நனனானா....
தன் நனனா தனனா தனனா....
தனனன நானே நனனானா....
தன் நனனா தனனா தனனா நானா நானானா தன நானானா
தன நானானா தானா...னா...

மழைச்சாரல் விழும் வேள
மண் வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே
நான் மெதந்தேன்

ஓ... கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நனைச்சாயே
ஈரத்துல அணைக்கிற சொகத்த
பார்வையில கொடுத்தாயே
பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோடு வாழுற போதும் யாரோடும் சேரலல
   
ஓ... அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சி போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் செரிக்கவே இல்ல
கொழம்புரேன் நானே
உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே
ஏன் சேவ கூவுற சத்தம் உன் பேர கேக்கிறதே

ஏ... அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என் மேல நிலா பொழியுதடி

பாடி முடிக்கவும் பலத்த கரகோஷம், காதைப் பிளக்கும் விசில் சத்தம். என்னால் நம்பவே முடியவில்லை.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: "சரவணன், சூப்பரா பாடி அசத்திட்டீங்க. யாருமே எதிர்பார்க்கலை. இதைப்பத்தி என்ன சொல்றீங்க?"

நான்: "சரிகமப சேலஞ்ச் நிகழ்ச்சிக்கு பலபேர் கலந்துக்கிட்டு பல இடங்கள்ல ஜெயிச்சு இப்போ கடைசி ரவுண்டுக்கு வந்திருக்காங்க இந்த அஞ்சு பேர்.  ஆனா இது எதுவுமே இல்லாம நான் இந்த மேடையில பாடினது ரொம்ப சந்தோசம், அதுவும் ஒரு famous சிங்கர் கூட பாடினது ரொம்ப ரொம்ப சந்தோசம்."

OK, சரவணன், All the Best என்று கூறி மேடையிலிருந்து அனுப்பி வைத்தனர்.  இறங்கி இருக்கைக்குப் போகும் வரை கைதட்டல் ஓயவில்லை.  இருக்கையில் அமர்ந்ததும் பின்னால் இருப்பவர்கள் கூட "சூப்பர், சூப்பர்" என்று கைகொடுத்தனர்.  என் மனைவிக்கோ கண்ணில் கண்ணீர்.  என் மகனோ என்னிடம், "அப்பா, நல்லா பாடுனீங்கப்பா, காப்பி குடிக்கிறீங்களா?" என்று கேட்டான். "வேண்டாம்டா" என்றேன்.  

"அப்பா, காப்பி குடிங்கப்பா"

"அப்பா,காப்பி குடிங்கப்பா"

"அப்பா, எழுந்திருங்கப்பா, இன்னைக்கு உங்களுக்கு ஆபிஸ் இருக்கு, காப்பி குடிங்க"

எழுந்தேன், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமோ என்று தோன்றியது.  அந்தக் கனவை சிலாகித்துக்கொண்டே காபி குடிக்க ஆரம்பித்தேன்.

யாரப்பா அங்க கல்லெடுக்கிறது? அட, அது ஒன்னுமில்லீங்க, நம்ம வீட்டு பையனுக்கு ஒரு தங்கச்சி பாப்பா இருக்குங்க. அது போட்ட ஆட்டத்துலயும் சத்தத்துலயும் புரோகிராமே டிஸ்டர்ப் ஆச்சுன்னா பாத்துக்கோங்களேன்.  அதனால முதல் சுற்று முடிஞ்சதுமே நாங்க வீட்டுக்கு கிளம்பிட்டோம்.



நன்றி...