ஹோட்டல் - பார்க் ஷெரட்டன் ஹோட்டல்ஸ் & டவர்ஸ், சென்னை








சென்னையில் எவ்வளவோ ஸ்டார் ஹோட்டல்கள் இருந்தாலும் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் பார்க் ஷெரட்டன் ஹோட்டல் மிகவும் பிரசித்தமானது.  காரணம் அவர்களுடைய தரமான சேவை, அருமையான உணவு வகைகள், எங்கெங்கு காணினும் சுத்தம், அழகான ஆம்பியன்ஸ் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.   இந்த ஹோட்டலுக்கு அடையார் கேட் என்ற பெயரும் உண்டு.



சென்னையில் நடக்கும் எந்த கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் வீரர்கள் இந்த ஹோட்டலில் தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.  முக்கியமாக சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் இங்கேதான் நடத்துகிறார்கள்.  அந்த அளவுக்கு கலைத்துறையினரின் நன்மதிப்பைப் பெற்ற ஹோட்டல் இது.  இந்த ஹோட்டலில் 24 மணி நேரமும் இயங்கும் ரெஸ்டாரென்ட் பெயர் "கேப்பச்சினோ".    இங்கு நான் சில முறை சென்று சாப்பிட்டிருந்தாலும் பதிவில் ஏற்றவேண்டும் என்ற எண்ணம் இப்போதுதான் தோன்றியது.  இங்கு சென்று நான் ஒரு நாள் காலை சிற்றுண்டி சாப்பிட்ட அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.



ஹோட்டலின் உள்ளே நுழையும்போதே நம்முடைய பர்ஸ், போன் போன்ற சமாச்சாரங்களை ஸ்கேன் செய்து அனுப்புகிறார்கள்.  அதுமட்டுமில்லாமல் நம்மையும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு செக் செய்கிறார்கள்.  இந்த சோதனைக்குப்பிறகே நாம் உள்ளே செல்ல முடியும்.  உள்ளே நுழைந்தவுடன் அழகான ரிசப்ஷன்.  இடதுபுறமும் வலதுபுறமும் ரிசப்ஷனிஸ்ட் இருக்கிறார்கள்.  நம்மை நோக்கிப் பார்த்தபடி விநாயகர்.  அவரைச் சுற்றி பவுண்டன் அமைக்கப்பட்டு தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது.  இரண்டு பெரிய குத்துவிளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன.  அங்கிருந்து இடதுபுறம் திரும்பிச் சென்றால் வலதுபுறத்தில் அழகான "பார்" இடதுபுறத்தில் பாத்ரூம்.  பாத்ரூம் சுத்தமோ சுத்தம்.  விநாயகருக்குப் பின்புறம் கொஞ்சம் நடந்து சென்றால் "கேப்பச்சினோ".









நாங்கள் மொத்தம் மூன்று பேர்.  எங்களைக் கூட்டிச்சென்றவர் இந்த ஹோட்டலில் மெம்பர்.  மெம்பர் என்றால் வருடத்திற்கு எட்டாயிரம் ரூபாய் கட்டி மெம்பர்ஷிப் கார்டு வாங்கி வைத்திருக்கிறார்.  இரண்டு பேராகச் சென்றால் பில்லில் 50%, மூன்று பேராகச் சென்றால் 33%, நான்கு பேராகச் சென்றால் 25%, ஐந்து பேர் மற்றும் அதற்கு மேலாகச் சென்றால் 20% டிஸ்கவுண்ட் தருகிறார்கள்.



முதலில் நாங்கள் ஆர்டர் செய்தது மாதுளை ஜூஸ் மற்றும் வடை.  அரைமணி நேரம் கழித்து தான் வந்தது.  கொண்டுவந்தவரிடம் "என்ன பாஸ், இவ்வளவு லேட்டாகக் கொண்டுவர்றீங்க‌" என்று கேட்டால் "சாரி சார், கூட்டம் அதிகமாக இருக்கிறதுனால‌ கொஞ்சம் லேட்டாய்டிச்சி" என்றார்.  மாதுளை ஜூஸ் பிரமாதம்.  சுத்தமான மாதுளம்பழத்தை உரித்து கொஞ்சம் கூட தண்ணீர் கலக்காமல் அப்படியே அரைத்திருக்கிறார்கள்.  சர்க்கரை சேர்க்காமல் இருந்ததால் மாதுளை விதையின் சுவை நாக்கில் ஒட்டிக்கொண்டது.








அடுத்ததாக வடை.  குட்டி குட்டியாக பத்து மசால் வடைகள்.  கொஞ்சம்கூட எண்ணெய் இல்லை.  மிக மிக மிருதுவாக இருந்தது.  தொட்டுக்கொள்ள காரமே இல்லாமல் தேங்காய் சட்னி. ஆஹா அற்புதம்.  நாங்கள் வடை சாப்பிடும்போதே எங்களுக்கு ஆரஞ்ச் ஜுஸ் வந்தது.  இது எதுக்கு என்று கேட்டதற்கு மாதுளை ஜூஸ் லேட்டானதால் இது ப்ரீ என்றார். கேட்டால் கிடைக்கும் என்று தெரியும். இங்கு மெதுவா கேட்டாலே கிடைக்குதே.







அடுத்ததாக காலிபிளவர் பரோட்டா.  காலிபிளவரை நன்றாக அரைத்து மசாலா சேர்த்து பரோட்டாவின் உள்ளே சிறு லேயராக சேர்த்து நன்றாக சுடச்சுட கொண்டுவந்தார்கள்.  தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கும், பட்டாணியும் கலந்த குருமா.  சூடான பரோட்டாவை கொஞ்சூண்டு பிய்த்து வாயில் போட்டால் வாவ்.  தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம்.  அவ்வளவு அருமை.  கொஞ்சம் குருமாவும் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அருமை.  அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் பாஷையில் சொன்னால் டிவைன்.  நான் மட்டும் பணக்காரனாக இருந்திருந்தால் தினம் தினம் இங்கேயே வந்து சாப்பிடுவேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.



சாப்பிட்டு முடித்ததும் கை கழுவுவதற்கு ஃபிங்கர் பவுல் தருகிறார்கள்.  கை துடைக்க நாப்கின்.  காபி கொண்டு வரலாமா என்று கேட்டுவிட்டு கொண்டுவருகிறார்கள்.  நல்ல சூட்டில் நுரை பொங்க வந்தது காபி.  ருசித்துக் குடிப்பதற்குத் தான் காபி என்றால் இங்கே கொடுக்கப்படும் காபி பார்த்து ரசிக்கவே அருமை.  சர்க்கரை கலக்கவில்லை.  சிறு சிறு பாக்கெட்களில் சர்க்கரையை தனியாகத் தருகிறார்கள்.  சுகர்ப்ரீ சர்க்கரையும் கொடுக்கிறார்கள்.  இரண்டு பாக்கெட் சர்க்கரையை காபியில் கலந்து கலக்கிக் குடித்தால்... காபின்னா அடையார் கேட் காபிதான், பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு என்று சொல்லத் தோன்றுகிறது.  எந்த ஹோட்டல் காபியும் பக்கத்தில் நிற்க முடியாது.  அவ்வளவு அருமை.








எல்லாவற்றையும் இங்கே லேட்டாகவே கொடுப்பதால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது.  அதனால் காபி வந்தவுடனே பில் கொண்டுவரச் சொல்லிவிட்டோம்.  என்னவோ அதுவும் லேட்டாகவே வந்தது.  மொத்தம் டிஸ்கவுண்ட் போக 1392 ரூபாய்.  இரண்டு மாதுளை ஜூஸ், மூன்று ஆரஞ்ச் ஜூஸ், வடை, ஒரு பிரேக்பாஸ்ட் (ஒன் பை டூ) மற்றும் காபி இவ்வளவுக்கும் சேர்த்து இந்தத் தொகை என்றால் பரவாயில்லை என்றே தோன்றியது.








சென்னை நண்பர்கள் நேரம் இருந்தால், வசதி இருந்தால் தாராளமாக இங்கு சென்று சாப்பிட்டு வரலாம்.  ஸ்டார் ஹோட்டலாச்சே என்று பயப்பட வேண்டியதில்லை.


நன்றி....