பதிவர் திருவிழா 2013 - துளிகள்


இந்த வருட பதிவர் சந்திப்பில் என் கண் முன் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே.  இல்லையென்றால் சிலவற்றை மறக்கக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.






  • சனிக்கிழமை மதியம் நான்கு மணிக்கே பதிவர்கள் தங்கும் மசாபி விடுதிக்குச் சென்றேன்.  எந்த அறையில் நம் மக்கள் தங்கியிருக்கிறார்கள் என்று அலுவலகத்திலிருந்த அரசனுக்கு தொலைபேசியில் அழைத்து விசாரித்தேன்.  அவர் சொன்ன அறை உள்பக்கமாக பூட்டியிருந்தது.  காலிங் பெல் அடித்தேன், கதவைத் தட்டிப்பார்த்தேன், உத்தேசமாக சிலருக்கு போன் செய்தும் பார்த்தேன், ம்ஹூம், அனைவரும் பரவசநிலையைக் கடந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்ததால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

  • பதிவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றொரு விடுதியான Raag Residency க்குச் சென்றேன்.  அங்கே சங்கவி, ராஜபாட்டை ராஜா, கற்போம் பிரபு கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே வந்திருந்தார்கள்.  அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு திரும்பினால் நல்ல வாட்டசாட்டமான ஒரு ஆள் என்னிடம் தான் வரலாற்றுச் சுவடுகள் என்று அறிமுகம் செய்துகொண்டார்.  அவரிடம் கை குலுக்கியதில் பட்டென்று எனக்கு ஒரு சந்தேகம், இரும்புப் பிடியாக இருக்கிறதே, அட, நம்ம தீவிரவாதி சதீஷ் என்று உணர்ந்துகொண்டேன்.

  • சதீஷ் மனைவி மகனுடன் காரில் வந்திருந்தார்.  அவர்கள் தங்கியிருந்த அறைக்கு என்னை அழைத்துச் சென்று தன் மனைவி திருமதி.ரேவதியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.  இவர் தான் ஸ்கூல் பையன், என்ன திட்டணுமோ திட்டிக்கோ என்று சொன்னார், வாங்க வேண்டிய டோஸ் அனைத்தும் வாங்கிக்கொண்டு அப்படியே அவர்கள் தந்த காபியையும் குடித்துவிட்டு வெளியே வந்தேன்.

  • தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் மதுரை சரவணன் ஆகியோர் வந்துவிட்டதாக எனக்கு தொலைபேசியில் அழைத்துச் சொல்ல, நான் வெளியே சென்று அவர்களுக்கு வழிகாட்டி விடுதிக்கு அழைத்துவந்தேன்.

  • சிறிது நேரத்தில் திண்டுக்கல் தனபாலன் வந்துவிட்டதாக போன் வர, நான் எனது பைக்கில் வடபழனி பேருந்து நிலையம் சென்று அவரை விடுதிக்கு அழைத்து வந்தேன்.

  • சிறுது நேரத்தில் மதுரை சரவணன் அகநாழிகை செல்லவேண்டும் என்று சொல்ல, நானும் அவரும் எனது வண்டியிலும் கே.ஆர்.பி.செந்தில், பிரபு கிருஷ்ணா ஒரு வண்டியிலும் கிளம்பிச் சென்றோம்.  நூறு அடி சாலையையோ அண்ணா சாலையையோ தொடாமல் சந்து பொந்துக்குள் புகுந்து கே.ஆர்.பி.செந்தில் முன்னே செல்ல எனது வண்டி அவரைப் பின்தொடர்ந்தது.  மனிதர் என்னமாய் ரூட் தெரிந்து வைத்திருக்கிறார்.  ஆச்சரியப்பட்டுவிட்டேன், கேட்டேவிட்டேன்.



  • நான், சீனு, அரசன், சதீஷ், ராஜபாட்டை ராஜா மற்றும் இரவின் புன்னகை வெற்றிவேல் ஆகியோர் இரவு பத்தரை மணிக்கு அருகிலிருந்த மணி டிபன் சென்டரில் சாப்பிட்டோம், நேரமாகி விட்டதால் கோவை ஆவியுடன் கோடம்பாக்கத்தில் தங்கிவிட்டேன்.


  • காலை அடையாள அட்டை வழங்கும் இடத்தில் நிறைய நண்பர்களை சந்தித்தேன், அவர்களுடன் அளவளாவும் ஆவல் இருந்தாலும் அடுத்த்தடுத்து நண்பர்கள் வந்துகொண்டிருந்ததால் அடக்கிக்கொண்டேன்.


  • காலை உண்மைத்தமிழன் பேசி முடித்ததும் பதிவர் அறிமுகத்தை கோவை அகிலா மற்றும் எழில் அருள் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.  பதிவர் அறிமுகம் முடிந்ததும் நிகழ்ச்சிகளை சுரேகா தொகுத்து வழங்கினார்.


  • பதிவர் அறிமுகத்தின்போது மேடையில் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.  அப்போது என்னுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் பலத்த கைதட்டல் மற்றும் விசில் சத்தம் காதைக் கிழித்தது.  மேடையை விட்டு இறங்கியதும் முன்வரிசையில் அமர்ந்திருந்த வீடு திரும்பல் மோகன் குமார் என்னிடம் "என்ன ஸ்கூல் பையன், உங்களுக்கு இவ்வளவு ரசிகர்களா" என்று வியந்து கூறினார்.


  • காணாமல் போன கனவுகள் ராஜி மேடை ஏறியதும் பலத்த கைதட்டல், கொஞ்சமா பேசுங்க என்று யாரோ கத்த, நான் அப்படித்தான் ஜாஸ்தி பேசுவேன் என்று சொல்லி நிறையவே பேசினார்.


  • கோவை ஆவி, ரூபக் ராம், ஜோதிஜி, திண்டுக்கல் தனபாலன், சிவகாசிக்காரன் ராம்குமார், வெங்கட் நாகராஜ், தமிழ்வாசி பிரகாஷ், நக்கீரன், சதீஷ் செல்லத்துரை, ஆபிசர் சங்கரலிங்கம் உள்ளிட்ட பல பதிவர்கள் சுருக்கமாகவே தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.


  • என்னுடைய அடையாள அட்டையைப் பார்த்த ஜாக்கி சேகர் என்னை தனியாக அழைத்துப் பேசினார்.  என்ன பேசினார் என்பது சஸ்பென்ஸ்.


  • பதிவர் அறிமுகத்தின்போது திடீரென்று கரண்ட் போய்விட புழுக்கம் அதிகமானது, சுமார் இருபது நிமிடங்கள் அளவுக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் வெளியேறினர்.


  • பதிவர் மதுமதியின் குறும்படம் மிகச்சிறப்பாக வந்திருந்தது.  அதிகம் வசனங்கள் இல்லாமல் பின்னணி இசையில் மிரட்டிய படம்.  சுமார் பத்து நிமிடங்கள் ஓடிய இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களும் வந்திருந்தனர். படத்தின் முன்னோட்டம் கீழே....




  • கவியாழி அவர்கள் காலை ஒரு உடையிலும் மதியத்துக்குப் பிறகு வேறு ஒரு உடையிலும் வந்திருந்தார்.


  • தென்றல் சசிகலா தான் எழுதிய தென்றலின் கனவுகள் புத்தகத்தை நிறையபேருக்கு வழங்கினார்.  அதில் எனக்கும் ஒரு புத்தகம் கிடைத்தது.


  • திடீரென்று அரங்கில் உதயமான ஜோதிடர் சித்தூர் முருகேசன் அனைவரையும் பார்த்து கைகுலுக்கிச் சென்றார்.  தான் கொண்டுவந்திருந்த ஜோதிடம் 360 என்ற புத்தகத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்கினார்.


  • ரமணி ஐயாவிடம் கவிதை எழுதுவது பற்றிய சந்தேகங்களை இரவின் புன்னகை வெற்றிவேல் கேட்டுத் தெளிந்துகொண்டார்.


  • மூத்த பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்கள் "ஸ்கூல் பையனைப் பார்க்கவேண்டும்" என்று சக பதிவர்களிடம் சொல்ல, நான் அவரிடம் சென்றேன், நான் எழுதிய ரத்தம் பார்க்கின் கதை தனக்கு மிகவும் பிடித்ததாகவும் அதனால் என்னைக் காண விரும்பியதாகவும் சொன்னார்.



  • மதிய சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது.  கேபிள் சங்கர் தானே முன்னின்று அனைவருக்கும் பரிமாறினார்.


  • சிறப்பு பேச்சாளர் பாமரன் அவர்கள் தான் பேசுவதற்காக குறிப்பு எடுத்து வந்திருந்தார்.  சுமார் அரை மணிநேரம் பேசினார்.  அரங்கமெங்கும் அவ்வப்போது கைதட்டல்.


  • குடந்தையூர் சரவணன் பாரதிராஜா போல் மிமிக்ரி செய்தார்.  கோவை ஆவி தான் எழுதிய பாடலைப் பாட, நான், ரூபக், சீனு மற்றும் குடந்தையூர் சரவணன் ஆகியோர் கோரஸ் பாடினோம்.


  • நன்றியுரை வாசிக்க சீனுவை அழைக்கும்போது "பதிவுலகின் காதல் மன்னன், நண்பர்களின் கண்ணாடி மச்சான்" என்ற வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சுரேகாவிடம் சொன்னேன். அவரோ, பதிவுலகின் காதல் மன்னன், நண்பர்களின் கண்ணாடிக் கண்ணன் என்று சொல்லிவிட, அருகிலிருந்த (அரசன் என்று நினைக்கிறேன்) ஒருவர் கண்ணாடி மச்சான் என்று அவருக்குத் தெரிவிக்க மீண்டும் மைக்கில் சரியாக அறிவித்தார்.


  • சேட்டைக்காரனின் மொட்டைத்தலையும் முழங்காலும், சங்கவியின் இதழில் எழுதிய கவிதைகள், வீடு திரும்பல் மோகன் குமாரின் வெற்றிக்கோடு, யாமிதாஷாவின் அவன் ஆண் தேவதை புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன், சுரேகாவின் எஸ்கேப் புத்தகம் கிடைக்கவில்லை.



இன்னும் நிறைய இருக்கின்றன, நினைவில் இருப்பவை மட்டும் முக்கியமானவை மட்டும் பகிர்ந்திருக்கிறேன்.  நன்றி.