ஒட்டன்சத்திரத்தில் அஜித்தும் அவரது தம்பிகள் நான்கு பேரும் திருமணம் செய்யவேண்டாம் என்ற முடிவுடன் பிரம்மச்சாரிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். காரணம்  பெண் ஒருத்தி வீட்டுக்குள் வந்தால் அவள் ஒற்றுமையாக வாழும் ஐந்து பேரையும் பிரித்துவிடுவாள் என்று நினைக்கிறார்கள். அவர்களில் இரண்டு தம்பிகள் இரண்டு வேறு பெண்களைக் காதலிக்க அவரியாகது காதலுக்கு அஜித் பச்சைக்கொடி காட்டவேண்டும் என்றால் அவர் யாரிடமாவது காதல்வயப்படவேண்டும் என்று கோவில் வேலையாக ஊருக்கு வந்திருக்கும் தமன்னாவைக் கோர்த்துவிடுகிறார்கள். அஜித்தும் சகோக்களும் பொதுவாகவே வந்த சண்டைக்கு வாள் எடுப்பவர்கள். பக்கா அகிம்சாவாதியான தமன்னாவிடம் தான் சண்டை சச்சரவுக்குப் போகாதவன் என்று சொல்லி காதலிக்கிறார்.






தமன்னா ஊரில் இருக்கும் தன் தந்தை நாசரிடம் போனில் அழைத்து விஷயத்தைச் சொல்ல அவரும் அஜித்தை ஊருக்கு அழைத்து வரச்சொல்கிறார். நிற்க, இங்கே அஜித்தைப் பார்த்ததும் நாசர் அதிர்ச்சி அடைவார் என்றோ Flashback வரும் என்றோ நீங்கள் நினைத்தால் தவறு. ஊருக்குப் போகும்போதே ரயிலில் ரவுடி கும்பல் துரத்த தமன்னாவின் கண் முன்னே அனைவரையும் அடித்து துவம்சம் செய்கிறார். இடைவேளை.


ஊரில் இருக்கும் தமன்னாவின் வீட்டுக்கு இரண்டு நாட்களுக்குப்பின் சென்று தான் தன்னை மாற்றிக்கொள்வதாக உறுதியளிக்கிறார். ஒரு வாரம் தங்கியிருந்து திருவிழா முடிந்ததும் செல்லுமாறு நாசர் பணிக்க அண்ணன் தம்பிகள் ஐந்துபேரும் அங்கேயே தங்கிவிடுகிறார்கள். இந்த ஊருக்கும் சில ரவுடி கும்பல்கள் தேடிவர அவர்கள் துரத்துவது தன்னை அல்ல நாசரை குடும்பத்துடன் தீர்த்துக்கட்டுவதற்காக என்று தெரிந்துகொள்கிறார். அகிம்சாவாதியாக மாறியிருக்கும் அவர் எப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறார், எப்படி நாசரின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் என்பது கிளைமாக்ஸ்.



படம் முழுவதும் அஜித் நிறைந்திருக்கிறார். அவர் கண்ணசைத்தாலோ காலரைத் தூக்கிவிட்டாலோ ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். காமெடி காட்சிகளாகட்டும், செண்டிமெண்ட் ஆக்சன் காட்சிகளாகட்டும், நடிப்பில் பின்னுகிறார். விதார்த் உட்பட நான்கு தம்பிகளுக்கும் ஒரே மாதிரியான பாத்திரப்படைப்பு. யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் எல்லாருக்கும் ஒரே மாதிரியான நடிப்பு ஸ்கோப் மட்டுமே. நாயகியாக வரும் தமன்னா காது வரை சிரிக்காமல் அடக்கி வாசித்திருக்கிறார், அதுவே போதும்.


காமெடிக்கு சந்தானம். கொஞ்ச நாட்களாய் தொய்வடைந்திருந்த கவுன்டர் காமெடி என்றென்றும் புன்னகையைத் தொடர்ந்து இதிலும் களைகட்டுகிறது. அஜீத் தவிர அனைத்து கதாபாத்திரங்களையும் உருட்டிப் புரட்டி எடுத்திருக்கிறார்.


நடிகர் தம்பி ராமையா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:- தாங்கள் ஒரு தேசிய விருது பெற்ற ஆகச் சிறந்த நடிகர் என்பதை மறந்து இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளீர்கள். தங்களுக்கு இருக்கும் திறமைக்கு நல்ல பாத்திரப்படைப்பைத் தேர்ந்தெடுத்து நடித்தல் நலம். இதே மாதிரியான ஒன்றுமில்லாத காமெடியானாக நடித்தால் ஒற்றை விருதுடன் தங்கள் நடிப்பு வாழ்க்கை முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.


இடைவேளை வரை கலகல காமெடி, சண்டை என்று போகும் படம் இடைவேளைக்குப்பின் குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன், அம்மா அப்பா, பாட்டி, குழந்தைகள் மற்றும் அரிவாள் என்று நாம் ஹரி படத்துக்கு வந்துவிட்டோமோ என்று எண்ண வைக்கிறது. ஏற்கனவே பாடல்கள் ஹிட் என்றாலும் படத்துக்காக வலிந்து திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. மசாலா படங்களுக்கே உரிய லாஜிக் மிஸ்டேக் இதிலும் நிறைய இருக்கிறது.


மொத்தத்தில் வீரம் - அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து, மற்றவர்களுக்கு மாஸ் Entertainment, குடும்பத்துடன் காணக்கூடிய திரைப்படம்.