மனிதம் தேடி....







மாலை வேளை. இதமான வெயில், சுகமான காற்று. உறங்கினேன்.  கனவுதானா என்று உறுதிப்படுத்த முடியாத காட்சி கண்ணெதிரே விரிந்தது.  ஓங்கிய பெரும் மலையின் உச்சிப்பாறையொன்றின் மீது நின்றபடி உலகெங்கும் தழுவிடும் ஓர் பார்வையை வீசுகிறேன்.  அந்நேரம் மனதில் ஒரு கேள்வி.  "மனிதமா? மிருகமா?" என்ன ஏது என்று உணர்வதற்குள் நித்திரை கலைந்து நிகழ்காலம் வந்துவிட்டேன்.  ஆனால் கனவின் தாக்கம் என்னுள்ளே பல கேள்விகளை எழுப்புகிறது.  யோசிக்கையில் பதிலாய் மீண்டும் வேறு கேள்விகள். ஏன்? எதனால்? எப்படி? என்ன காரணம்? சொல்லத் தெரியவில்லை. ஆனால் உணர்ச்சிகள் மட்டும் உண்மை.  என்னுடைய கேள்விகளை இறைவனிடம் கேட்கிறேன்.  இறைவன் என்ன சொல்கிறான்? படிப்போமா...



மனிதத்தைத் தேடி
மரத்துப் போன மனத்திற்கு
மருந்து தேடி
மலை ஒன்றினை அடைந்தேன்


உயரத்தில் நின்று
உலகினைப் பார்த்தேன்
உச்சிப்பாறையில் நின்ற‌
ஒருவனைத் தவிர‌
ஒருவரும் இல்லை


தள்ளி நின்று
தயக்கத்துடன்
தங்கள் பெயரென்ன‌
என்று கேட்டேன்


இதழோரச் சிரிப்பு காட்டி
இறைவன் என்றான்
மலை ஏறிவந்த
மர்மம் என்ன?
மாறாச் சிரிப்புடன்
எனைக்கேட்டான்


மனிதன் ஒருவனை
மாநிலம் தனில் தேடி
மலைத்ததனால்
மலைதனை வந்தடைந்தேன்
மரிப்பதற்கு

உன்னுள்ளே இருக்கும்
உன்னத மனிதனை
உணராமல்
இறப்பதற்காகவா
இவ்விடம் வந்தாய்?


என்னுள்ளே இருக்கும்
எண்ணற்ற சக்திகளை
ஏறிட்டுப் பார்க்க‌
எவருமில்லை என்றுதான்
குன்று ஏறிக் குதிக்க வந்தேன்


மண்ணுலகில்
மனிதருக்கா பஞ்சம்?
இவனின்றேல் அவன்
அவனின்றேல் மற்றவன்
இன்றே செல்,
இதய உணர்வை
இதமாய்ச் சொல்!


இறைவா!
உயிர்களைப் படைத்தாய்
உலகத்தில், ஆனால்
உணர்வுகளைப் படைத்தாயா?
மனிதத்தோடு கூடிய‌
மனிதன் ஒருவனை
அறிமுகப்படுத்து எனக்கு!
அடிமையாவேன் நானுனக்கு!
மனிதனுக்கு
மனிதத்தை வைக்க‌
ம‌றந்து போனதால்
நீ படைத்தது
மனிதனையல்ல‌
மிருகங்களையே
மீண்டும் படைத்துள்ளாய்
காட்டில் வசிப்பவைக்கு
நான்கு கால்கள்
நாட்டில் வசிப்பவைக்கு
இரண்டு கால்கள்
இவ்வளவு தான் வேறுபாடு
இருவருக்கும்
படைத்தவனே
இன்னுமா புரியவில்லை?
மனிதம் மறைந்திருப்பது
மிருகத்தில் என்பது!

எடுத்துச்சொன்ன என்னை
ஏறிட்டுப் பார்த்த இறைவன்
இறங்கி வந்துவிட்டான் என்னுடன்
மனிதத்தைத் தேடி!