பிச்சைக்காரன் - கவிதை








அன்றொரு நாள்.  என் இதயத்தை யாரோ இரு கையால் பிசைவது போன்றொரு இனம்புரியா வலியொன்று தோன்றியது - அந்தக் காட்சியைக் காணும் சமயம்.  ஒரு உணவு விடுதியின் வாசலில் எச்சில் இலைத் தொட்டி.  தொட்டியைத் தோண்டிக் கொண்டிருந்தான் ஒரு மனநிலை தவறிய பிச்சைக்காரன்.  அவனருகே நாக்கில் நீர் வடிய ஓர் நாய்.  அவன் துழாவிய கைகளில் கிடைத்தது சில பருக்கைகளுடன் ஓர் இலை.  அவசரமாய் பசியாறிய முகம் தெரியா ஒருவனின் எச்சில் இலை அது.  ஆனால் அவனுக்கோ அது அட்சயப் பாத்திரமாக விளங்கியது.  ஆறறிவாயினும் ஐந்தறிவாயினும் அடிவயிற்றுத் தீ ஒன்று தானே.  அத்தீயின் வெப்பம் தாளாது ஆறறிவு ஐந்தறிவு ஆனது.  ஆம்! எடுத்துண்ண இரு கரம் இருக்கையில் வாய் கொண்டே வயிற்றை நிரப்பினான் அவன்.  அந்நேரம் உணர்ச்சியளையால் உள்ளம் இறைச்சலிடும்போது கவிதை எழுத கை வரவில்லை. 






மற்றொரு நாள் மற்றொரு இடத்தில் இதே போன்று இன்னொரு சம்பவம்.  ஒரு டீக்கடை முன் இருவர் டீ அருந்திக்கொண்டிருக்க அவர்கள் அருகில் கொறிப்பதற்காக சீவல் பொட்டலம்.  இமைக்காமல் அவர்கள் இருவருவரையும் பார்த்துக் கொண்டேயிருந்தது அவர்கள் முன் நின்ற நாய் ஒன்று.  அவ்வப்போது அவர்களும் அதற்கு இரையிட்டுக் கொண்டிருந்தனர்.  சற்றே தள்ளி நின்று இவர்களையே கவனித்துக்கொண்டிருந்தான் அதே பிச்சைக்காரன்.  அவன் மனதில் அந்நேரம் என்ன தோன்றும்? என்ற என் கேள்விக்கு விடைகாணும் சிறு முயற்சியே இக்கவிதை.  "வர வர உன் thinking ரொம்ப advance ஆ போகுது" இக்கவிதையைப் படித்த நண்பன் ஒருவன் நவின்ற வார்த்தைகள் இவை! உங்களுக்கும் அவ்வாறே தோன்றினால் நான் ஜெயித்துவிட்டேன்.





நாக்கில் ஜலம்வடிய
நாய் நோக்கும்
நாயோடு சேர்ந்து
நானும் நிற்பேன்

நன்றி காட்ட நாய் வாலசைக்கும்
வார்த்தையில் சொல்ல
வாய் திறப்பேன் நான்

நக்கிய எலும்புத்துண்டு
நாய்க்கு வரும்
எனக்கோ வெறும்
ஏளனப் பேச்சுக்கள்

வார்த்தைகளை விட
வாலாட்டத்தின் வடிவத்திற்கே
வாக்குகள் எனில் -

இறைவா!
எனக்கும் வால் தா!